உச்சபட்ச வளர்ச்சியடைந்த நகரங்களில், குற்றப் பின்னணிகளின் கூடாரமாக, வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளாத – நாகரிகமற்ற மனிதக் கூட்டத்தின் வசிப்பிடமாக சமூகத்தில் உற்றுநோக்கப்படுகின்றன

சேரிகள். சென்னை நகரத்தில் மாசுபட்ட கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் ஆற்றின் கரையோரங்களில் சேரிகளைப் பார்க்கிறோம். பெருத்த நகரம் ஆற்றில் வெளிவிடும் சாக்கடையும், அதன் உயிர் புரட்டும் நாற்றமும், தோல் துளைக்கும் கொசுக்களும் சேரிமக்களுடைய பிழைத்திருக்கும் பெருவலியின் முன்பு வலுவிழந்து போகின்றன. சென்னைக்குள் வசதியாக வாழ வழியில்லையென்றாலும், அன்றாட வாழ்க்கையை கடப்பதற்கு ஏதுவான அனைத்தையும் நகரங்கள் அளிக்கின்றன.

ஆனால் உலகமயமாக்கல், தாராளமயமாக்கலின் கண்ணிகளை தமிழக அரசு இருகரம் கூப்பி வரவேற்றது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கார் மற்றும் செல்போன் நிறுவனங்கள் என அடுத்தடுத்து சென்னைக்குள் அடியெடுத்து வைத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்காக தொழிலாளர் சட்டங்களே வளைந்து கொடுத்தன. வளர்ச்சிஎன்ற பெயரில் நடைபெற்ற இக்

கொண்டாட்ட ஆரவாரங்களுக்கிடையே தூக்கி வீசப்பட்ட குடிசை வாழ்மக்களின் அழுகுரல்கள் காற்றில் கரைந்தன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மய்யம் கொண்டுள்ள பழைய மாமல்லபுரம் சாலைக்கு எளிதாகச் செல்ல பறக்கும் ரயில் நிலையம் அமைக்கப்பட்டபோது தொடங்கின, குடிசை வாழ் மக்களை அப்புறப்படுத்தும் பணி. சேரி மக்கள் காலங்காலமாக குடியிருந்த இடங்கௌல்லாம் அரசின் கண்களுக்கு ஆக்கிரமிப்புகளாகத் தெரிந்தன. ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் திருவான்மியூர் ஜவகர் நகர் மற்றும் எழில் நகரிலுள்ள 500 குடும்பங்கள் அரசு எந்திரத்தால் வேரோடு பிடுங்கி எறியப்பட, இன்று வரையிலும் அத்துயரிலிருந்து மீள முடியாமல் அம்மக்கள் தவிக்கின்றனர்.

சென்னை நகருக்குள் கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நிலை கொண்டுள்ள சேரிகள், வளர்ச்சித் திட்டப்பணிகளுக்காக, நகருக்கு வெளியே தூக்கியெறியப்படுவதைப் பற்றி உருக்கமாகவும், உக்கிரமாகவும் பேசுகிறது – "யாருக்காக சிங்காரச் சென்னை?' என்ற ஆவணப்படம். 30 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப் படத்தை "குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்' தயாரித்துள்ளது. பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களை திடீரென கொடூர முகம் காட்டி, ஆக்கிரமிப்பாளர்கள் என்ற அவதூறோடு நகருக்கு வெளியே அடித்து விரட்டுகிறது அரசு. "இன்று வரை சென்னை நகரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தங்களை யாருக்காக ஏறி மிதிக்கிறது அரசு?' என பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக, வலுவான கேள்விகளை முன்வைக்கிறது இந்த ஆவணப்படம். எந்தெந்த திட்டங்களுக்காக குடிசை வாழ் மக்கள் அகற்றப்படுகின்றனர், அவர்களுக்கு எங்கெங்கு மாற்று இடங்கள் தரப்பட்டுள்ளன, அவற்றின் தரம் என்ன என்பது பற்றியும் விரிவாகப் பேசுகிறது இப்படம்.

மதுரவாயல் முதல் துறைமுகம் வரை அமையவுள்ளது அதிவிரைவு சாலைத் திட்டம். இதற்காக முதலில் பூந்தமல்லியிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவு வரை வரையறுக்கப்பட்டது. ஆனால், அந்தப் பாதையில் பணமுதலைகளின் வீடுகள், அரசியல்வாதிகளின் பங்களாக்கள் இருப்பதால், அத்திட்டம் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை என மாற்றப்பட்டது. இப்பõதையில்தான் குரலற்ற குடிசை வாழ் மக்களின் குடியிருப்புகள் உள்ளன. இத்திட்டத்திற்கான நோக்கம், கார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விரைவாக எடுத்துச் சென்று லாபம் பார்க்கவே. இதற்காக கூவம் கரையோரத்தில் உள்ள 12 ஆயிரம் குடிசைகள் அகற்றப்பட உள்ளன.

போரூர் புறவழிச்சாலை திட்டத்திற்காக போரூர் ஏரிக்கரையிலிருந்த 5 ஆயிரம் குடிசைகள், நந்தம்பாக்கத்திலிருந்த 106 குடிசைகள் மற்றும் திருவேற்காடு ஏரியில் ஆக்கிரமிப்பு செய்திருந்ததாகக் கூறி 6 ஆயிரம் குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்களின் போராட்டம், மக்களின் ஆர்ப்பாட்டம் என எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரும்பாக்கத்தில் உள்ள பகுதியில் வீடுகளை இடிக்கக்கூடாது என்று அங்குள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் கூடி, “தாத்தா எங்கள் வீடுகளை இடிக்க வேண்டாம், நாங்கள் இங்கேயே கல்வி பயில விரும்புகிறோம்'' என்று தங்கள் விருப்பத்தை ஊடகங்களில் பதிவு செய்தும் முதல்வர் மனமிறங்கவில்லை. சில இடங்களில் அரசுக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டுள்ளதால், குடிசைகளை அகற்றும் பணி தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசின் அத்துமீறல்களுக்கு அடிபணியாமல் வெளியேற மறுத்து அடம்பிடிக்கும் சேரிப் பகுதிகளில் நிகழும் தீ விபத்துகள் குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது இந்த ஆவணப்படம். புதுப்பேட்டை, அடையாறு, சேப்பாக்கம், வியாசர்பாடி, போரூர், புளியந்தோப்பு, கொருக்குப்பேட்டை, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவொற்றியூர், ஆதம்பாக்கம், மேடவாக்கம் என 2009 ஆம் ஆண்டில் மட்டும் 22 குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த 1328 வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் சில உயிர் பலிகளும் அடக்கம். அரசின் கட்டளைகளை ஏற்காத குடிசைப் பகுதிகள் தொடர்ந்து திடீரென தீப்பற்றி எரிவதைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இழப்பீடு மட்டும் கொடுத்து விட்டு அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்? தீப்பற்றிய இடங்கள் இப்போது யார் வசம் உள்ளன? போன்ற கேள்விகளை இப்படம் எழுப்புகிறது. மேலும், தற்போதைய சட்டமன்ற தேர்தலில் முதல்வர், துணை முதல்வரின் தொகுதி மாற்றத்திற்கான காரணத்தையும் நமக்கு சொல்லாமல் சொல்கிறது.

இதில் கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது, கூவம் மறுசீரமைப்புத் திட்டம். சென்னையை சிங்காரமாக்கும் முயற்சியில் துணை முதல்வரின் ஆசியோடு மீண்டும் கையிலெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்காக 9 ஆயிரம் குடிசைகள் அகற்றப்படவுள்ளன. கைப்பற்றப்பட்ட இடங்கள் வேகமாக சுத்தப்படுத்தப்பட்டு, பூங்காக்களாக மாறியுள்ளன. சிங்காரச் சென்னை என்ற பெயருக்கு பின்னால் இத்தனை கொடூரங்களும், அழுகுரல்களும் மண்டிக்கிடக்கின்றன.

சென்னையின் மயிலாப்பூரிலோ அண்ணாநகரிலோ சாதி இந்துக்களின் ஒரு வீட்டை அகற்றும் துணிவு இந்த அரசிற்கு வருமா? அப்படியே வந்தாலும் அதற்கான இழப்பீடுகளை கோடிகளில் கொட்டிக் கொடுப்பதோடு, மாற்று இடங்களையும் அதுவே தந்துதவும். ஆனால், சேரிகளில் இருக்கும் மக்கள் மட்டும் எவ்வித முறையான மாற்று ஏற்பாடுகளுமின்றி பிய்த்தெறியப்படுகின்றனர். இழப்பீடுகளோ, குடியேறுவதற்கான இடமோயின்றி வாழ்வதற்கான வாய்ப்புகள் முற்றிலுமாக சேரி மக்களுக்கு மறுக்கப்படுகின்றன.

நகரத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு கொடுக்கப்படும் மாற்று இடம், வாழ்வதற்கு ஏற்ற வகையில் இல்லை என்கிறது ஆவணப்படம். கண்ணகி நகர், செம்மஞ்சேரி, கன்னடப்பாளையம், என ஆங்காங்கே தூக்கியெறியப்படுகின்றனர் இம்மக்கள். தாம்பரத்திலிருந்து – கிஷ்கிந்தா செல்லும் சாலையில் உள்ளது கன்னடப்பாளையம். நந்தம்பாக்கம், போரூர் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். சொல்லியது போல ஒரு சென்ட் நிலம் தந்தாகிவிட்டது, அத்துடன் எங்களின் வேலை முடிந்துவிட்டது என சென்றுவிட்டனர் அதிகாரிகள். மழைகாலத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிற்பதை இங்கு காணமுடிகிறது. பாம்புகளும் , பூச்சிகளும் குடிசைகளுக்குள் புகுந்துவிடுவதாக பரிதவிக்கின்றனர் குடிசைவாசிகள்.

வாழ்வு களவாடப்பட்ட துயரிலும் அதிர்ச்சியிலும் தங்களில் சில பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும், சில குடும்பங்கள் சென்னை நகருக்குள்ளேயே பிச்சையெடுத்துக் கொண்டு திரிவதாகவும் கூறுகின்றனர் அவர்கள். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மயான வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூடம் என கன்னடப்பாளையத்தில் எதுவுமில்லை. வேலைக்கு வரவேண்டுமென்றால், பல கிலோமீட்டர் பயணம் செய்துதான் நகருக்கு வந்தாக வேண்டும். சுனாமியால் வீடிழந்தவர்கள் செம்மஞ்சேரியில் உள்ளனர். இது ஒரு மேய்க்கால் புறம்போக்கு நிலம். கன்னடப்பாளையத்தை போலவே எந்த அடிப்படை வசதியையும் அது கொண்டிருக்கவில்லை.

புதுப்பேட்டை, அரும்பாக்கம் பகுதியில்இருந்து சென்றவர்கள், பெரும்பாலும் சுனாமியால் வீடிழந்தவர்கள் என கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன கண்ணகி நகரில். செம்மஞ்சேரி, கன்னடப்பாளையத்தை ஒப்பிடும்போது, கண்ணகிநகரில் கல்வீடு என்பது மட்டுமே ஆறுதலாக மிஞ்சுகிறது. 140 சதுர அடி கொண்டது ஒரு வீடு. இங்கு குடிநீர் இணைப்பு இல்லை, மின்சார வசதி முழுமையடையவில்லை, 25 ஆயிரம் குழந்தைகளுக்கு ஒரே ஓர் உயர் நிலைப் பள்ளி என மூச்சு முட்ட வைக்கிறது கண்ணகிநகர் குடியிருப்பு. தண்ணீர் இல்லாததால் காலியாகக் கிடக்கும் வீடுகள் கழிப்பறைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. குப்பைகள் சரிவர அகற்றப்படாததால், குடியிருப்பைச் சுற்றிலும் குப்பைக் கூளங்கள். வேலைக்காகவும், குழந்தைகள் கல்விக்காகவும் அதிகாலையிலேயே எழுந்து, பல கிலோ மீட்டர் கடந்து நெடும்பயணமாக நகருக்குதான் வரவேண்டும். அது மட்டுமின்றி கந்துவட்டி, கொலை, தற்கொலை என ஒட்டுமொத்த சமூகமும் சிதைந்து கொண்டிருக்கிறது.

சேரிகள்தான் தலித்துகளுக்கென விட்டு வைக்கப்பட்ட ஒரே இடம் எனினும், இன்று அதையும் பறித்துக் கொள்கிறது – நகரங்களை வேட்டையாடும் ஆதிக்க வர்க்கம். துரத்தப்படும் வேகத்தில் எங்கு ஓடினாலும் அங்கும் தங்களுக்கான வாழ்வை

உருவாக்குவது ஒடுக்கப்பட்டவர்களின் இயங்கியல். அதனடிப்படையில், இப்பொழுது எறியப்பட்ட இடத்திலும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர்கள் குறையுள்ளதே எனினும் ஒரு வாழ்வியல் சூழலை உருவாக்குவார்கள். அதோடு முடிந்து விடுமா அவர்களின் ஓட்டம். இந்த நகரம் வளர்ந்து வளர்ந்து தன் பெருவாயை திறந்து அவ்விடங்களையும் விழுங்கக் கேட்கும். ஆக்கிரமிப்பு என்று சொல்லி மீண்டும் அடித்து விரட்டும்.

இடம்பெயர்க்கப்படுதலின் வலிகளையும், பிய்த்தெறியப்படும் வேகத்தில் விழுந்த இடத்தில் வேர் பிடிக்க இயலாமல் தவிக்கும் மக்களையும், காற்றில் கரையும் அவர்களின் அழுகுரல்களையும் – அரைமணி நேரத்திற்குள் மனதில் பதிய வைக்கிறது யாருக்காக சிங்காரச் சென்னை ஆவணப்படம்.

விலை ரூ.30. பேசி: 97106 53734

Pin It