இலக்கியம் மற்றும் திரைப்படத் துறையினரால் நன்கு அறியப் பட்டவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது முதல் நாவல் உபபாண்டவம் ஆகும். இதிகாசமாக எழுதப்பட்டுவிட்ட மகாபாரதக் கதையை, நிகழும்போதே சொல்லப்படும் வாய்வழிக் கதையாக உபபாண்டவம் சொல்கிறது. இரு சூதர்கள் ஒரு பயணிக்காகப் பாரதக்கதையைச் சொல்கின்றனர். ராமகிருஷ்ணன் பாரதக் கதாபாத்திரங்களின் உணர்வாழங்களையே தன் எழுத்து நிற்கும் களமாகக் கொண்டிருக்கிறார். மகாபாரதத்தில் கூறப்படும் தர்க்கக் கூறுகளைச் சிதைக்காமல், கதாபாத்திரங்களின் அடிப்படைக் குணாம்சங்களை மாற்றாமல் அவர்களை உளவியல் முறையில் ராமகிருஷ்ணன் அணுகியிருக்கிறார். அதே சமயம் இவர் தன் விருப்பத்துக்கேற்பவோ, பாத்திரங்களின் சார்பாகவோ எதையும் திரித்துச் சொல்லவில்லை.

ராமகிருஷ்ணன் கால அடுக்கைக் குலைத்துப்போடுவதன் மூலம் கதை கேட்கும்/வாசிக்கும் மனதில் காலவெளி அனுபவத்தை முன்னும் பின்னுமாகக் களைத்துப் போடுகிறார்.

சந்தனு ராஜனின் நகரமும் அவன் கொள்ளுப் பேரனான அர்ஜூனன் நிர்மாணித்த இந்திரபிரஸ்தமும் அடுத்தடுத்துக் கிடக்கின்றன. இதேபோல் அர்ஜூனன் காலத்திய மாயசபையும் அவன் பேரன் பரீட்சித்து காலத்திய நாகசபையும் அடுத்தடுத்துக் கிடக்கின்றன. இதன் மூலம் காலம் என்ற கருத்துருவம் வெறும் மனஉணர்வே என உணர்த்துகிறது. சம்பவங்களின் கால அடுக்குமுறையிலிருந்து கதை விடுவிக்கப்பட்டு உணர்ச்சிகளைப் பின் தொடர்கிறது. எனவே, ஒவ்வொரு உபதலைப்பின்கீழ் வருவனவும் தன்னளவில் முழுமை பெறுகிறது.

மகாபாரதத்தை இரண்டு குழுக்கள், குடும்பங்களுக்குள் நடைபெற்ற சண்டையாகவே இதுவரை அறிந்துள்ளோம். இதில் பஞ்ச பாண்டவர்கள், அவர்களுக்கு ஆதரவளிக்கும் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும், கௌரவர் அவர்களுக்கு உதவும் கர்ணன், சகுனி உள்ளிட்டோர் மற்றொரு குழுவாகவும் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவே அறிவோம். ஆனால், இந்நாவலில் மனிதர் அனைவருமே ஆதரவற்றவர்களாகவும் தனியர்களாகவும் மனவாசிகளாகவும் உருப்பெறுகிறார்கள். அரசனான திருதராஷ்டிரனும் வேடுவனான ஏகலைவனும் பாண்டவர்களுக்குத் தாயான குந்தியும் ஒரே விதமான தனிமைக்கு ஆளாகின்றனர்.

“புதிய நகரங்களுக்கு மனிதர்களை வரச் செய்துவிடுவதுபோலப் பறவைகளை வரச் செய்வது இயல்பானதில்லை” எனும் வார்த்தை உலகியல் இயற்கையையும் மனித அதிகாரத்தின் இயலாமையையும் உணர்த்துகிறது. அர்ஜூனன் ப்ருஹன்னனை என்ற பேடியாக மாறுவது, ஊர்வசியின் சாபத்தினால்தான் என்று ஒரு புராண கதை உள்ளது. ராமகிருஷ்ணனின் விவரிப்பிலோ விழைவின் தீவிரம் சார்ந்த தியான நிலையின் பயனாகவே அவன் பேடியுருக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு மகாபாரத சம்பவங்களை, பாத்திரங்களைக் கொண்டு அதில் சொல்லப்படாத உணர்வுகளை ராமகிருஷ்ணன் தனக்கேயான மொழியில் சித்திரித்துள்ளார்.

Pin It