'பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்' கட்டுரைக்கான எதிர்வினை

                தருமபுரி - நாய்க்கன்கொட்டாய் சாதி வெறியாட்டம் ஒரு குறிப்பிட்ட பகுதியின் சிக்கலாக முடியப் போவதில்லை. சாதிய வன்முறை இனியும் நிகழா வண்ணம் தடுக்கும் பணி இது வரை முடிந்து விடவில்லை. இந்நிலையில் சாதி வெறியாட்டத்தின் மூலம் அதிகாரத்தை நிறுவத் துடிப்பவர்களின் அணி சேர்க்கை சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ramadoss_castehindus_640

                அதே நேரத்தில் ஆதிக்க சாதிகளின் தாக்குதலை முறியடிக்க வேண்டிய தலித் இயக்கங்களின் போக்கு விசித்திரமாக உள்ளது. முதலில் தலித் மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் தலித் இயக்கங்கள் தங்களுக்குள்ளாகவே கூட ஒரு கூட்டணியை ஏற்படுத்தவில்லை. தலித் மக்களுக்கு துணை நிற்கும் சிறுபான்மை சமூகங்களை அரவணைக்கும் வகையில் ஒற்றுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. தலித் மக்களுக்காக உயிரைக் கொடுத்துப் போராடும் புரட்சிகர இயக்கங்களோடு கரம் கோர்க்கவில்லை. தேர்தல் பாதையானாலும் சாதிய வன்முறைகளுக்கு எதிராகப் போராடும் கம்யூனிஸ்டுகளை கூட அணி சேர்க்க முயலவில்லை. மாறாக கம்யூனிஸ்டுகளை குறிப்பாக புரட்சிகர இயக்கங்களைத் தாக்கவும், அவர்களை தலித் மக்களிடமிருந்து பிரிக்கவுமான அணுகுமுறைகளை திருமா முதல் ரஜினி வரையிலானவர்கள் மேற்கொள்கின்றனர். தலித் மக்களை மேலும் மேலும் தனிமைப்படுத்தி பலவீனமாக்கும் பணிகளையே செய்து வருகின்றனர்.

                சாதிவெறியர்களின் பரம எதிரிகளான நக்சல் புரட்சியாளர்களையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தியாகம் புரிந்த கம்யூனிஸ்டுகளையும் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் இப்போக்கு புதிதான ஒன்றல்ல. இந்த மார்க்சிய விரோத தலித்திய அரசியலுக்கு நீண்ட வேர்களும், வரலாறும் உண்டு.

                ஏகாதிபத்தியங்களும், ஃபோர்டு பவுண்டேஷன்களும், கிருத்துவ திருச்சபைகளும், பின்நவீனத்துவ பின்புலமும் கொண்ட தலித் இயக்கங்களின் இவ்வரலாறு ஒரு கிரைம் த்ரில்லர் கதைக்கு ஒப்பானதாகும்.

ஃபோர்டு பவுண்டேசனும் - தலித்தியமும்:

                அமெரிக்காவின் மாபெரும் கார்ப்பரேட் நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் ‘சமூக சேவைக்கென' தொடங்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான் ஃபோர்டு பவுண்டேசன். இது முதன் முதலாக கால்பதித்த வெளிநாடு இந்தியாதான். 1950களின் தொடக்கத்தில் இவ்வாறு இந்தியாவுக்கு வந்தபோது பவுண்டேசனின் தலைவர் பால்ஹர்ப்மேன் ‘சீனாவை இழந்து விட்டோம். இந்தியாவை இழக்க மாட்டோம்' என வெளிப்படையாக அறிவித்தார்.

                அப்போது சீனா கம்யூனிச நாடாக மாறியிருந்தது. இந்தியாவில் வீரம் செரிந்த தெலுங்கானப் போராட்டம் நசுக்கப்பட்டிருந்தாலும் கம்யூனிசம் வளருவதற்கான கூறுகள் நிறைந்திருந்தது. இந்தியாவின் சமூகச் சூழல்களை ஆய்வு செய்த பவுண்டேசன் தலித்துகள், பெண்கள், பழங்குடியினங்கள் ஆகிய பிரிவினரிடையே கம்யூனிசம் எளிதாக காலூன்றும் என அனுமானித்தது. ஆளும் வர்க்கத்தை தூக்கியெறியும் கம்யூனிசத்துக்கு மாறாக, இவர்களிடையே ஆளும் வர்க்கத்துக்கு சேவை புரியும் சீர்த்திருத்த அரசியலையும், அதற்கான இயக்கங்களையும் கொண்டு சேர்க்க முடிவு செய்தது.

                இதற்காக ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் அறிவுஜீவிகளை உருவாக்கும் பணி முதன்மையாக்கப்பட்டது. இந்தியப் பல்கலைகழகங்கள் அமெரிக்கப் பல்கலைகழகங்களோடு இணைக்கப்பட்டன. ஃபோர்டு பவுண்டேசனின் தயவில் ஏராளமான இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கு படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் தலித் மாணவர்களாவர். வேறு வழியில்லாத இவர்கள் இந்த உதவிகளை ஏற்றுக் கொண்டனர் என்று அருந்ததிராய் எழுதுகிறார். இம்மாணவர்களில் பலரும் பின்பு எவாஞ்சலிக்கல் திருச்சபை உதவியால் முன்னிறுத்தப்பட்ட தலித் அரசியலின், பின் நவீனத்துவ அரசியலின் மையமாக மாறினர்.

dalit_resource_centre_380                1980-களில் பவுண்டேசன் தனது பணியை மாற்றியமைத்துக் கொண்டது. நேரடியாக இல்லாமல் தொண்டு நிறுவனங்களை நிறுவி அவைகளுக்கு ஏராளமாக நிதியுதவிகள் செய்தது. தொண்டு நிறுவனங்கள் தங்களை தனி அமைப்புகளாக, அரசு சாரா நிறுவனங்களாக காட்டிக் கொண்டன. இது குறித்து இஜாஸ் அகமது தனது 'ஆன் போஸ்ட்மார்டனிசம்' என்ற நூலில் ‘இந்தியாவில் பின்நவீனத்துவம் சமூக இயக்கங்கள், சிவில் சொஸைட்டி அமைப்புகள், பணம் பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகிய வடிவங்களில் இயங்கியது. அரசியல் என்ற சொல்லுக்குப் பதிலாக சமூகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் இவை அனைத்தும் தங்களை அரசு சாரா நிறுவனங்கள் என அழைத்துக் கொண்டன. ஃபோர்டு பவுண்டேசன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இவை நிதி உதவிகள் பெற்றன' எனத் தெளிவாக கூறுகிறார்.

                அடுத்து ஃபோர்டு பவுண்டேசனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஓர் அமைப்பு தமிழ்நாடு தியாலாஜிகல் செமினரி (Tamilnadu Theological Seminary TTS) ஆகும். இந்த எவாஞ்சலிக்கல் கிருத்துவ நிறுவனம், தலித் ஆதார மையங்களை உருவாக்கியது. 1989-ல் மதுரையில் அரசரடியில் ஒரு தலித் ஆதார மையம் உருவாக்கப்பட்டது

                தலித் ஆதார மையத்திற்கு பவுண்டேசன் வாரி வழங்கும் நிதியினை அறிந்து கொள்ள Ford Foundation என இணையத்தில் தொடர்பு கொண்டால் போதும். முடிவில்லா நீண்ட பட்டியல் படையெடுத்து நம்மை மிரட்டும்.

                 இப்படி கிருத்துவ திருச்சபையால் உருவாக்கப்பட்ட ஒரு போலி புரட்சிகர இயக்கம்தான் பாதர் சேவியர் அருள்ராஜ் நடத்திய உழைக்கும் மக்கள் இயக்கமாகும். என்.ஜி.ஒவான இந்த அமைப்பு தன்னை ஒரு அரசியல் கட்சி போலக் காட்டிக் கொண்டது.

                தலித் ஆதார மையத்தைப் போலவே World Vision என்ற N.G.O. அமைப்பும் தலித் மக்களை குறி வைத்து செயல்பட்டு வருகிறது. இது அமெரிக்க உளவுத்துறை C.I.A-வுக்காக வியத்நாமில் செயல்பட்டதை தாமே ஒத்துக் கொண்டுள்ளது. C.I.A-வுக்கும் ஃபோர்டு பவுண்டேசனுக்கும் உள்ள நெருங்கிய உறவை ஜேம்ஸ் பெட்ராஸ் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஆதாரத்துடன் ஏராளமாக எழுதியுள்ளார்.

                தலித் ஆதார மையம் அம்பேத்கரையும், இரட்டைமலை சீனிவாசனையும், அயோத்திதாசரையும் முன்னிலைப்படுத்தியது; தலித் தலைமை, தலித் அரசியல் என பிரகடனப்படுத்தியது; தலித் கலைவிழாக்கள் பிரமாதப்படுத்தப்பட்டன; தலித் இலக்கியங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. இது போன்ற செயல்பாடுகளுக்கு ஃபோர்டு பவுண்டேஷன் ஏராளமாக நிதி உதவி வழங்கியது. அதே நேரம் 'கலை கலைக்காக' என்று பேசும் அறிவுஜீவிகளுக்கும் நிதி வழங்கியது. இவர்கள் அதே தலித் மக்களின் போராட்டங்களைப் பேசும் புரட்சிகர கலை இலக்கியங்களுக்கு 'பிரச்சார இலக்கியங்கள்' என்று பட்டம் சூட்டினர்.

dalit_kalai_vizha_500

                இவ்வாறு ஃபோர்டு பவுண்டேசன் நேரடியாகவும், தென்னிந்திய திருச்சபையின் மூலமாகவும், தலித் ஆதார மையத்தின் வாயிலாகவும் கட்டியமைக்கப்பட்ட தலித்தியம் தொடக்கத்திலேயே தன்னை கம்யூனிசத்துக்கு மாற்று என்றே பிரகடனப்படுத்தியது. 'வர்க்கப் போராட்டம் என்பது வேறு, தலித்துகளின் பிரச்சினை என்பது வேறு; ஏகாதிபத்திய எதிர்ப்பு தலித்துகளுக்கு அவசியமில்லை; வெள்ளையர்கள் தலித்துகளுக்கு மனித மாண்பை கற்றுத் தந்தவர்கள்' என்று கூறியது. தலித் தலைமை, தலித் அரசியல் என முழங்கியது. உழுபவனுக்கே நிலம், உழைப்பவருக்கே அதிகாரம் என்பதற்கு மாற்றாக, பஞ்சமி நிலமீட்பு - இட ஒதுக்கீடு ஆகிய முழக்கங்கள் முன்னுக்கு வந்தன. சமூக மாற்றம் தேவையில்லை, மற்ற போராடும் அமைப்புகளோடு இணைந்து நிற்க வேண்டியதில்லை, தேர்தல் மூலம் அதிகாரத்தில் பங்கு என இலக்கு தீர்மானிக்கப்பட்டது. ஆக ஆளும் வர்க்க சித்தாந்தமாகவும், அதற்கு சேவகம் செய்யும் அமைப்பு வடிவமாகவும் ஃபோர்டு பவுண்டேஷன் தலித்தியம் தோன்றியது.

தலித்தியமும் - பின் நவீனத்துவமும்

 பின் நவீனத்துவம் வருவதற்கு முன் ஸ்டாலினிச எதிர்ப்பு, சோவியத் யூனியன் எதிர்ப்பு ஆகியவையே கம்யூனிச எதிர்ப்பு வடிவங்களாக இருந்தன. பின் நவீனத்துவம் மார்க்சியத்தின் அனைத்து அம்சங்களையும் கேள்விக்குள்ளாக்கியது. பொருள்முதல்வாதத்திற்கு எதிராக கருத்துமுதல்வாதம்; ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை ஒன்று சேர்ப்பதற்குப் பதிலாக சிதறடிப்பது; ஒடுக்குமுறையின் மொத்த உருவமான அரசைப் பற்றி எதுவும் சொல்லாமல் அதை எதிர்த்துப் போராடும் இயக்கங்களையும் தத்துவங்களையும் பெருங்கதையாடல் என்று முத்திரை குத்துவது என்று ஏராளமான சித்து விளையாட்டுக்கள் நிகழ்த்தியது. எனவே ஃபோர்டு பவுண்டேஷன் - திருச்சபை - பின் நவீனத்துவவாதிகள் என்று ஒரு கூட்டணி உருவாகியது.

 கம்யூனிசத்துக்கு மாற்றாக 'ஃபோர்டு பவுண்டேசன் தலித்தியம்' முன்னிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை கம்யூனிசத்திடம் இழக்க மாட்டோம் என்ற பவுண்டேசனின் நோக்கத்துக்கு இந்த போலி தலித்தியம் சேவகம் புரிகிறது. பவுண்டேசனின் கம்யூனிச எதிர்ப்பைப் புரிந்து கொண்டால் தலித்தியத்தின் தத்துவார்த்த அடித்தளமான பின்நவீனத்துவத்தின் வேரினையும், அதன் கேடினையும் புரிந்து கொள்ளலாம்.

                நமக்கு இரண்டு உலகப் போர்கள் குறித்து தெரியும். இவ்விரண்டு உலகப் போர்களும் உலக நிலைமைகளில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தன. அதில் முக்கியமானது அமெரிக்காவின் வளர்ச்சி. இரண்டு போர்களிலும் நேரடியாக பாதிக்கப்படாமல் அதே நேரத்தில் ஆயுத விற்பனையின் மூலம் பெரும் லாபத்தை ஈட்டி, தனிப்பெரும் சக்தியாக வளர்ந்தது அமெரிக்கா. இதன் மூலம் பெருந்தொழில்களைப் பெருக்கிக் கொண்டது அமெரிக்கா.

                இதே நேரத்தில் இன்னொரு புறம் இரசியாவைத் தொடர்ந்து சீனாவும் கம்யூனிச நாடாகியது. வியத்நாம், கியூபா என பல நாடுகள் புரட்சிகரப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தன. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் பாசிசத்தை முறியடித்த இரசியாவின் உதவியோடு கிழக்கு அய்ரோப்பாவில் பல கம்யூனிச நாடுகள் உருவாகின.

                இந்நிலைமைகள் உலக மக்கள் முன் இரண்டு பாதைகளை முன்னிறுத்தின. மக்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கு ஏற்றது கம்யூனிசப் பாதையா? முதலாளித்துவப் பாதையா? என்பது விவாதமானது. இக்கேள்வி அமெரிக்காவில் கூட எழுந்தது. அமெரிக்காவின் பெரும் நிறுவனங்களில் சக்கையாகப் பிழியப்பட்ட கருப்பின மக்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களிடமும் முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருந்தது.

                இவ்வாறு உலக நிலைமைகளும், உள்நாட்டு நிலைமைகளும் அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கியது. முதலாளித்துவமே சமூகத்துக்கான தீர்வு என அமெரிக்கா நிறுவ வேண்டியிருந்தது. இதன் ஓர் அம்சமாக அமெரிக்கா, இரசியாவுக்கு எதிராக பனிப்போரை நடத்தியதை உலகே அறியும். ஆனால் கம்யூனிசத்துக்கு மாற்றாக முதலாளித்துவத்தை நிலைநிறுத்த மேற்கொண்ட தத்துவப் பணிகள் குறித்து உலகம் பெரிதாக கவலைப்படவில்லை.

                அமெரிக்க ஆளும்வர்க்கங்கள் தங்களது பல்கலைக் கழகங்கள் மூலம் கம்யூனிசத்துக்கு மாற்றான தத்துவத்தை உருவாக்க முனைந்தன. வர்க்கம், வர்க்கப் போராட்டம், வர்க்க ஒற்றுமை, அதிகார மாற்றம் ஆகியவைகளை பல்கலைக் கழகங்கள் தவறென போதிக்கத் தொடங்கின. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றாமலேயே முதலாளித்துவ அரசமைப்புக்குள் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று அமெரிக்கப் பின்நவீனத்துவவாதிகள் கூறினர். பெரிய அமைப்புகளுக்குப் பதிலாக சிறிய அமைப்புகள், உள்ளூர் அமைப்புகள் ஆகியவையே இப்போதைய தேவை என்று இந்த புதிய அரசியல் கூறியது.

                 இதற்கு முன்பே தொழில் நிறவனங்களில் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பல்வேறு வேலைப் பிரிவினைகளைக் கொண்ட ஒரே தொழிற்சாலை என்பதற்கு மாற்றாக பாகங்கள் தயாரிப்பது தனி நிறுவனமாகவும், அதை இணைப்பது இன்னொரு நிறுவனமாகவும், அதை வடிவமைப்பது வேறு ஒரு நிறுவனமாகவும் பல சிறிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த மாற்றமும் அரசியல் களத்தில் எதிரொலித்தது.

amarx_330                ஆக ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஒற்றுமைக்கு மாற்றாக வர்க்கப் பிளவுவாதத்தையும், சமூக ஒருங்கிணைப்புக்கு மாறாக நுண் அடையாள அரசியலையும் அமெரிக்காதான் உருவாக்கியது. அதுவும் கம்யூனிசத்துக்கு எதிராகவே உருவாக்கியது. இதுதான் பின் நவீனத்துவத்தின் தோற்றம். பிறகு பிரான்சுக்குச் சென்று 'தெரிதா, பூக்கோ' என்ற பெயர்களோடும், 'விளிம்புநிலை' போன்ற கம்யூனிஸ்டுகளிடம் களவாடிய சொற்களோடும் இந்தியாவுக்கு வந்தது தனிக்கதை.

                இந்த பின் நவீனத்துவம்தான் இந்தியாவில் கம்யூனிசத்துக்கு மாற்றாக ஃபோர்டு பவுண்டேசனின் முன்னணிப்படையாக மாறியது. தலித்துகளின் மீதான சாதிய வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு ஆதிக்க சாதி உழைக்கும் மக்களையும் திரட்டுகிற - சாதி ஒழிப்புப் போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக அணி திரட்டுகிற - வர்க்கப் போராட்டத்தின்மூலம் அதிகாரத்தை அடைகிற - ஆளும் வர்க்கத்துக்கு முடிவு கட்டுகிற கம்யூனிசத்துக்கு மாற்றாக, நுண் அரசியலை, அடையாள அரசியலை, தலித்தியம் எனும் பின் நவீனத்துவத்தை பவுண்டேசன் நிறுவியது.

பவுண்டேசன் தலித்தியத்தை பரப்பிய ஆளும் வர்க்க அறிவாளி அடியாட்கள்

                கம்யூனிச எதிர்ப்புடன் தலித் அரசியலை முன்னகர்த்திய கதாநாயகியாக கெய்ல்ஓம்வெட் அறியப்படுகிறார். அமெரிக்கரான இவர் பெர்க்லே பல்கலைக் கழகத்தில் படித்தவர். ஆய்வுக்காக இந்தியா வந்தார். இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டார்.

                'கம்யூனிஸ்டுகளால் தலித்துகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அனைத்து கம்யூனிஸ்டு கட்சிகளும் சாதிக் கட்சிகளே' என இவர் அவதூறுகளை அள்ளி வீசிய நூல்கள் தொண்டு நிறுவனங்களால் பரப்பப்பட்டன. கம்யூனிச எதிர்ப்பை யார் செய்தாலும் ஓடிச் சென்று ஆதரிப்பார். அருந்ததிராய் சி.பி.எம் கட்சியை விமர்சித்து எழுதிய 'God of Small things' என்ற நூலை கெய்ல் வானளாவப் புகழ்ந்தார். அதே நேரத்தில் அருந்ததிராய் உலகமயமாக்கலையும், நர்மதா அணைத்திட்டத்தையும் எதிர்த்தபோது அவரை கெய்ல் கடுமையாக வசைபாடினார். இவர் உலக வங்கி IMF-ன் வெளிப்படையான ஆதரவாளர்.

                இந்த வரிசையில் இன்னொரு முக்கியமான நபர் ரணஜித் குகா. இவர் இந்தியாவில் மக்கள் வரலாறே எழுதப்படவில்லை என்றும், எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்துமே - பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை உட்பட - ஆதிக்க சாதிக் கண்ணோட்டத்தில்தான் எழுதப்பட்டவை என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார். மக்கள் வரலாறு என்பது விளிம்புநிலை மக்களின் வரலாறாகும் என்றும், அது இனிமேல்தான் எழுதப்பட வேண்டும் என்றும் கூறினார்.

                இவரின் வரிசையில் திபேஷ் சக்கரவர்த்தி, பார்த்தா சட்டர்ஜி, ஞான்பாண்டே, ஸ்வெப்பன்தாஸ் குப்தா என பெரும் பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் வங்காளிகள்; அமெரிக்க பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள். பின் நவீனத்துவம் இவர்கள் மூலமாகவே இந்தியாவில் பரப்பப்பட்டது.

                தமிழ்நாட்டில் இவர்களின் வாரிசாகத் தோன்றியவர்கள் அ.மார்க்ஸ், ராஜ்கவுதமன், ரவிக்குமார் போன்றவர்களாவர். இவர்கள் ரணஜித் குகாவின் வார்த்தைகளை அப்படியே வாந்தி எடுத்தார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு வரலாற்றுப் பார்வை கிடையாது; மக்கள் வரலாறு தெரியாது; கம்யூனிஸ்டுகள் ஆணாதிக்கவாதிகள்; ஆதிக்க சாதி கருத்தியல் கொண்டவர்கள்; பொதுவுடமை இயக்கங்கள் தலித்துகளுக்காக எதுவும் செய்யவில்லை என்று ஆங்கிலத்தில் கற்றுக் கொண்டதை தமிழில் வாந்தி எடுத்தார்கள். ஆனால் சொந்தமாகக் கூறுவது போல கூறிக் கொண்டார்கள். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை பற்றி தாங்கள்தான் முதல் முதலில் பேசுவதாகக் கூறிக் கொண்டார்கள். துணையாக தலித் ஆதார மையமும் இதே போன்ற கருத்துக்களை உற்பத்தி செய்து பரப்பி வந்தது.

                உண்மை என்று ஒன்றும் இல்லை என்று கூறிக் கொண்டே மக்களின் ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக, அதற்கான ஒரே இயக்க வடிவத்துக்கு எதிராக, அ.மார்க்ஸ் தீவிரமாகப் பேசினார். 'பெரிய இயக்கங்கள் எல்லாம் அதிகாரத்துவ தன்மை உடையவை, ஆகவே சிறிய இயக்கங்கள், துண்டு துண்டான இயக்க வடிவங்கள் வேண்டும்' என்றார். இது அப்பட்டமான என்.ஜி.ஓ. கருத்தியல் ஆகும். ஃபோர்டு பவுண்டேஷன் போன்ற ஏகாதிபத்திய ஆதரவு நிறுவனங்கள் முன்வைத்த அரசியல் இதேதான்.

                மக்களிடம் செல்வாக்கு செலுத்திய தமிழ்த் தேசிய உணர்வு, ஈழ ஆதரவு, கம்யூனிச ஆதரவு என அனைத்துக்கும் எதிராக அ.மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டனர்.

                இவர்களின் மக்கள் விரோத கருத்துகள் அடங்கிய வெளியீடுகளை விடியல் சிவா பதிப்பித்து வெளியிட்டு வந்தார். புரட்சிகரமான பதிப்பகம் என்று காட்ட 'ஜெகனாபாத் சிறையுடைப்பு' போன்ற சில நூல்களை வெளியிட்டுவிட்டு, டிராட்ஸ்கி, நீட்ஷே, ஈரான் போன்ற நூல்களையும், மாவோ, சே பொன்ற மார்க்சீயவாதிகளை மோசமான ஒளியில் காட்டும் காஸ்நாடா, பிலிப் ஷட் போன்றோரின் நூல்களையும் சிவா வெளியிட்டார். கூடவே லிம்பாலே போன்றோரின் அபத்தமான நூல்களையும் வெளியிட்டார். தனது இறுதிக்காலம் வரை பிரான்ஸ் அரசு நிறுவனமான பாண்டிச்சேரி பிரஞ்சு இன்ஸ்டிடியூட் என்ற அமைப்போடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இப்போது விடியல் டிரஸ்டில் மேற்படி நிறுவனத்தின் முக்கிய ஊழியரான எம்.கண்ணன் முதன்மை வகிக்கிறார்.

                ஈழ விடுதலைப் போர் காலத்தில் அ.மார்க்ஸ் போன்றவர்கள் இழைத்த துரோகம் மோசமானது. ஆயிரக்கணக்கான ஈழ மக்கள் கொல்லப்படும்போது இவர், இசுலாமியர் மீது புலிகள் தாக்குதல் நடத்திய பழைய கதைகளை மேடைதோறும் பேசினார். இதன் மூலம் இசுலாமியர்களை ஈழப் போராட்டத்தின்மீது வெறுப்படையச் செய்ய முயன்றார். பெரும்பாலும் இந்துத்துவ விரோதிகளான தமிழக தமிழுணர்வாளர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிரிவினை ஏற்படுத்த முயன்றார். இங்கு தலித்துகள் மீது கரிசனம் காட்டும் இவர், ஈழத்தில் கொல்லப்பட்ட தலித்துகள் குறித்து கவலையே படவில்லை. ஈழ இனப்படுகொலையை கண்டுகொள்ளாத இவர்தான் இன்றளவும் மனித உரிமை ஆர்வலராக அறியப்படுகிறார்.

                அ.மார்க்சின் பின் நவீனத்துவ அரசியலாக்கத்தின் பின்புலத்தில்தான் தமிழகம் முழுவதும் பல நல்ல புரட்சிகர இயக்கத்தில் பணியாற்றிய இளைஞர்கள் குடிகாரர்களாக, பாலியல் மோகிகளாக, ஓரினச் சேர்க்கையாளர்களாக மாற்றப்பட்டனர்.

சிங்களப் பேரினவாத அரசின் ஆதரவில் செயல்படும்  சிறிலங்கா டெமாக்கரெட்டிக் பாரம் (SLDF), லிட்டில் எய்ட் போன்ற தன்னார்வக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் சுசீந்திரன், சுகன், ஷோபாசக்தி உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள். இவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பரப்பும் கருத்துக்களை தமிழகச் சூழலில் பரப்பும் வேலையைத்தான் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்றோர் செய்கிறார்கள். தன்னார்வக் குழு வேலையைச் செய்யும் புலி எதிர்ப்பாளர்கள் தமிழகத்திற்கு வரும்போது, அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பது, நேர்காணல்களை வெளியிடுவது, அவர்களுடன் கூட்டங்களில் பங்கேற்பது அல்லது அவர்கள் புலம்பெயர் நாடுகளில் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்வது என அ.மார்க்ஸோ அல்லது அவர்களது அடிப்பொடிகளோ செயல்படுகின்றனர்.

சுசீந்திரன் ஐ.என்.எஸ்.டி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பின்  திருவனந்தபுரத்தில் நடத்திய புலிஎதிர்ப்பு கூட்டத்தில் எஸ்.வி.ராஜதுரை கலந்துகொண்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த ஐ.என்.எஸ்.டி. அமைப்பு ஜெர்மனியின் எவாஞ்சலிகா அகாதமியா என்ற புராட்டஸ்டண்ட் கிருத்துவ நிறுவனத்துடன் தொடர்புடையது என்று ஈழ புலம்பெயர் எழுத்தாளர் அசோக் யோகன் ‘எஸ்.வி.ராஜதுரை - பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்’ என்ற கட்டுரையில் கூறியுள்ளார். லால்கர் ஆக இருந்தாலும் சரி, ஈழம் ஆக இருந்தாலும் சரி, நாயக்கன் கொட்டாயாக இருந்தாலும் சரி, வேறெந்த மக்கள் போராட்டமாக இருந்தாலும் சரி ஓடி வந்து குழிபறிக்கும் வேலைகளில் இந்த பின் நவீனத்துவவாதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் கண்டங்கள், நாடுகளைக் கடந்து இணைந்து கொள்கிறார்கள்.

                தமிழ்த் தேசிய எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு ஆகிய அனைத்து குணாம்சங்களையும் கொண்ட பின்நவீனத்துவவாதிகளின் தலைவர்களில் ஒருவராக உள்ள இரவிக்குமார்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கையாளராகவும் இருக்கும்போது, அவர்கள் கம்யூனிஸ்டுகள் மீது பாய்வதில் ஆச்சரியமேதுமில்லை. பின்நவீனத்துவத்தின், ஃபோர்டு பவுண்டேசனின் கம்யூனிச எதிர்ப்புதான் இது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பவுண்டேசனின் தலித் இயக்கங்களால் சாதி வெறியாட்டத்தை தடுக்க முடியாது

ravikumar_370                சாதி வெறியாட்டத்தை தடுப்பது என்பதும், சாதியை ஒழிப்பது என்பதும் இரண்டு மட்டத்திலான பணிகளாகும். ஒன்று சாதிய ஒடுக்குமுறைக்குள்ளாகும் அனைத்து தலித் மக்களையும் ஒன்றுபடுத்தவேண்டும். இது நுண் அரசியல், அடையாள அரசியல் என்ற பின்நவீனத்துவத்தை கடைப்பிடிக்கும் தலித் அமைப்புகளுக்கு சாத்தியமேயில்லை. அவர்களின் அடையாள அரசியல்தான் தலித் இயக்கங்களையே சாதிவாரி அமைப்புகளாக சிதறடித்துள்ளன. உள் இட ஒதுக்கீடு போன்றவற்றில் கூட மோதலை உருவாக்குகின்றன.

                இதனை தலித் அரசியல் பேசுகிற எந்த தத்துவார்த்தவாதியும் எதிர்க்கவில்லை; தலித் ஆதார மையங்களும் தடுக்கவில்லை. மாறாக தனித் தனி அமைப்புகளுக்கு தனித்தனியாகப் பணம் கொடுத்து பிளவுகளை ஊக்குவிக்கின்றன.

                அடுத்து சாதியாதிக்கத்தையும், சாதிய வெறியாட்டத்தையும் முறியடிக்க வேண்டுமானால் மேல் சாதியில் உள்ள உழைக்கும் மக்களை சாதியாதிக்கத்துக்குப் பலியாகாமல் அணிதிரட்ட வேண்டும். அவர்களின் மீதான ஒடுக்குமுறைக்கும், வறுமைக்கும், துன்பத்துக்கும் காரணமான இவ்வுற்பத்தி முறையை ஒழிக்கப் போராட வைக்க வேண்டும். இவ்வுற்பத்தி முறையால் லாபமடையும் சாதி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக அணி திரட்ட வேண்டும். இதை சாதிய அரசியலால் சாதிக்க முடியாது. எனவே, சாதியவாதம் பேசும் தலித் அமைப்புகளுக்கு இது சாத்தியமில்லை.

                கூடுதலாக சாதியை ஒழிப்பதற்கு புரட்சிகர அதிகாரம் நிறுவப்படுவது அவசியமாகும். பிற்போக்கு சக்திகள் தலை தூக்க முடியாத சர்வாதிகாரம் அடிப்படையானதாகும். ஆனால் தேர்தல் மூலம் அதிகாரத்தில் பங்கு என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேவை இல்லை என்றும், உலகமயமாக்கலை எதிர்ப்பது இல்லையென்றும், ஆகவே அதிகார மாற்றம் தேவையில்லை என்றும் கொள்கை வகுத்துக் கொண்ட தலித் இயக்கங்களுக்கு இது சாத்தியமேயில்லை.

                ஆகவே பவுண்டேசன்களின் தலித் இயக்கங்களால் சாதி வெறியாட்டத்தையும் தடுக்க முடியாது; சாதியையும் ஒழிக்க முடியாது.

கம்யூனிச இயக்கங்களே மக்களுக்கான தலித் இயக்கங்கள்

                                சாதியை ஒழிப்பதற்கு புரட்சிகர அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்றும், சாதிய வன்முறை வெறியாட்டத்தை தடுப்பதற்கு மேல்சாதி உழைக்கும் மக்களையும் திரட்ட வேண்டும் என்றும், களமாடுகிற புரட்சிகர கம்யூனிஸ்டு இயக்கங்களே மக்களுக்கான தலித் இயக்கங்களாகும். சாதிய வெறியாட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் தேவைப்பட்டால் சாதி வெறியர்களை அழித்தொழிக்கவும், அதனால் தங்களது உயிரைக் கூட விடவும் துணியும் புரட்சிகர இயக்கங்களே மக்களுக்கான தலித் இயக்கங்களாகும்.

                இதனை தோழர் சீனிவாசராவ் முதல் வாட்டாக்குடி இரணியன், தமிழரசன், அப்பு, பாலன் என எண்ணற்ற தோழர்களின் வீர வரலாற்றில் இருந்து உணர முடியும். தேர்தல் பாதையானாலும் சி.பி.எம். கட்சியின் திருப்பூர் இரத்தினசாமி போன்றோரின் தியாக வரலாறை யாரும் மறுக்க முடியாது.

கம்யூனிச இயக்கங்களின் சந்தர்ப்பவாதமும் - பின்நவீனத்துவமும்

                பின் நவீனத்துவத்தின் அபாயத்தை நாம் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே பல்வேறு இயக்கங்கள் தோலுரித்துள்ளன. ஆனால் எந்த இயக்கமும் உறுதியாக தத்துவார்த்தப் போராட்டம் நடத்தி அதனை முறியடிக்கவில்லை. மாறாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்நவீனத்துவவாதிகளோடு கூடிக் குலவுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

                சி.பி.எம்.கட்சியின் தற்போதைய பொதுச்செயலர் - பிரகாஷ்கரத் என்.ஜி.ஓக்களின் கேடு குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ளார். இக்கட்சியின் ஆதரவாளரான இஜாஸ் அகமது, ‘ஆன் போஸ்ட்மார்டனிசம்' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

                இவ்வாறு பின் நவீனத்துவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சி.பி.எம். கட்சிதான் விடுதலைப்புலிகள் எதிர்ப்புக்காக அ.மார்க்ஸ் முதலான பின்நவீனத்துவவாதிகளுக்கு நாடெங்கும் மேடை அமைத்துக் கொடுத்தது. பதிலுக்கு லீனா மணிமேகலையின் கவிதைகளை பின் நவீனத்துவவாதிகள் தோழர்களுக்கு வழங்கினர்.

                இந்திய மாவோயிஸ்ட் கட்சித் தோழர் அரவிந்தன், ‘தலித்துகளுக்கு எதிராக பெருகும் தாக்குதலை முறியடிப்போம்' எனற கட்டுரையில் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். சி.பி.எம்.-மின் பின்நவீனத்துவ எதிர்ப்பும், பின் நவீனத்துவவாதிகளோடு அதன் சந்தர்ப்பவாதக் கூட்டையும் கண்டித்து மாவோயிஸ்ட் கட்சி விரிவான விமர்சன அறிக்கை வைத்துள்ளது.

                ஆனால் இதே மாவோயிஸ்ட் கட்சிதான் தமிழகத்தில் மனித உரிமை நடவடிக்கைகளுக்காக அ.மார்க்ஸ் போன்றோரைப் பயன்படுத்துகிறது. பின்நவீனத்துவ படைப்புகளைக் கொண்டு வந்த விடியல் சிவாவை தமது தீவிர ஆதரவாளராக காட்டிக் கொண்டது. பின் நவீனத்துவப் பின்புலம் கொண்ட ஆனந்த் டெல்டும்டே போன்றவர்களை தலித் அறிவுஜீவிகளாக தனது கட்சியினரிடையே விளம்பரப்படுத்துகிறது.

                இதன் விளைவாக மாவோயிஸ்ட் கட்சியின் தலித் ஆதரவாளர்கள் கம்யூனிச எதிர்ப்பாளராக மாறும் போக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

                இதே போல் ரெட் ப்ளாக் கட்சியின் பொதுச் செயலர் K.N.இராமச்சந்திரன் பின்நவீனத்துவ அரசியலை திரை கிழித்துள்ளார். அவ்வமைப்பைச் சார்ந்த P.J.ஜேம்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்து விரிவான ஆய்வுடன் நூல்கள் எழுதியுள்ளார். ஆனால் இவர்கள் இப்போது சாதி ஒழிப்பு அரங்கம் என்ற பெயரில் எல்லா பிற்போக்குவாதிகளோடும் இணைந்து விரிந்த தளத்தை உருவாக்குகின்றனர்.

             derrida_340   இயக்கங்கள் தவிர சமூக சிந்தனையாளர்களும் பின் நவீனத்துவத்தின் அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். திரு.யமுனா ராஜேந்திரன் ‘நான் பின் நவீனத்துவ நாடோடி அல்ல' என்ற நூலிலும், திரு.பீர்முகமது ‘கீழைத் தேய சிந்தனையாளர்கள்' என்ற நூலிலும் இதனை வெளிக்கொண்டு வந்துள்ளனர். ஆனால் இத்தகைய நூல்களை முன்னின்று வரவேற்கும் கடமையை இயக்கங்கள் செய்யத் தவறியதால் அவை உரிய கவனத்தைப் பெறவில்லை.

                இதுபோல இவ்வமைப்புகளின் சந்தர்ப்பவாதத்தால் பின் நவீனத்துவ பிற்போக்காளர்கள் பாதிக்கப்படவில்லை. மாறாக மனித உரிமை, தலித் சிக்கல், சிறுபான்மையினர் அரங்கு போன்ற எந்த ஒரு தளத்திலும், புரட்சிகர பதாகையின் கீழ் பின்நவீனத்துவவாதிகள் பிரகாசிக்கிறார்கள். இதனால் புரட்சிகர இயக்கங்களின் அணிகள் இச்சக்திகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இதன் சமீபத்திய உதாரணம் தோழர்.ரஜினி புரட்சிகர இயக்கங்களை அவதூறு செய்து கொண்டிருப்பது.

                ம.க.இ.க போன்ற அமைப்புகள் இப்படி சகதியில் சிக்கிக் கொள்வதில்லை. தங்கள் அணிகளுக்குள் இத்தகைய சக்திகள் ஊடுருவுவதை அவர்கள் குறிப்பிடத்தக்க உறுதியுடன் தடுத்து நிற்கின்றனர். (இதன் காரணமாகவே ம.க.இ.க இத்தகைய கும்பல்களால் அதிகமாகத் தாக்கப்படுகிறது போலும்) ஆனால் இவர்களும் பின்நவீனத்துவத்தை ஆதாரத்தோடு முறியடித்து புரட்சிகர பாதையை நிறுவுவதற்கான பணியை முழுமைப்படுத்தவில்லை. வழக்கம்போலவே இது குறித்து ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதுவதோடு தமது வரலாற்றுக் கடமை நிறைவேறி விட்டதாக அகமகிழ்ந்து கிடக்கிறார்கள்.

                இவ்வாறான அமைப்புகளின் சந்தர்ப்பவாதத்தால் பின்நவீனத்துவமும் - தலித்தியமும் இன்று சமூகத்தை வேரோடு அரித்துக் கொண்டிருக்கிறது. நாய்க்கன்கொட்டாய் கலவரத்தை நக்சல்பாரி இயக்கத்தின் மீதான தாக்குதல் எனக் கூறி திருமாவளவன் தனது கடமையை கைகழுவுகிறார். இனி சாதிவெறியாட்டங்கள் நடந்தால் என்ன செய்வதென மக்கள் விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள்.

பாபாசாகிப் அம்பேத்கர் ஒருநாளும் உண்மை என்று ஒன்று இல்லவே இல்லை என்று மறுத்தவரோ, தலித்துகள் தங்களுக்கென்று ஒரு பேரமைப்பைக் கட்டி எழுப்புவதை மறுத்தவரோ, தலித்துகள் மற்ற சமூகங்களில் ஏன் மற்ற நாடுகளில் கூட நண்பர்களைத் தேடிக் கொள்வதை எதிர்த்தவரோ கிடையாது. சாதி ஒழிப்பதற்கு முதன்மையான வழி இந்து மதத்தை ஒழிப்பதே என்று அம்பேத்கரும், தந்தை பெரியாரும் வரையறுத்துச் சொன்னார்கள். இன்றும் அம்பேத்கர், பெரியார் வழியில் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி செயல்படுகின்ற அமைப்புகள் இருக்கின்றன. இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களும் மக்களைப் பிடித்துள்ள அபின்தான் என்று உணர்ந்துள்ள புரட்சிகர சக்திகள், இந்திய சூழலில் அம்பேத்கர், பெரியார் வெளியிட்ட கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு, உண்மையான அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்களோடு கைகோர்ப்பது காலத்தின் தேவை.

                புரட்சிகர இயக்கங்கள் இனியும் நட்பு சக்தி, தோழமை அணுகுமுறையென பவுண்டேசன் தலித் அமைப்புகளை தோளில் சுமக்காமல், போலி மனித உரிமை பேசும் பின்நவீனத்துவவாதிகளை மேடையேற்றாமல், தாமே முன்னின்று தலித் மக்களையும், சமூகத்தையும் காக்க வேண்டும். அதற்காக புரட்சிகர சக்திகள் முதலில் ஓரணியில் திரள வேண்டும்.

- குணா, தேசிய முன்னணி இதழ் குழு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It