பாஜக - அதிமுக-வின் சித்து விளையாட்டுகளும் வேடிக்கைப் பார்க்கும் தமிழக ஓட்டுக் கட்சிகளும்

ஆசியாவிலேயே மிகப்பெரிய படுகையான காவிரிப் படுகை, தமிழகத்தின் 80% உணவுத் தேவைகளை நிறைவு செய்து வருகிறது. தஞ்சை திருவாரூர் மாவட்டங்களும் மற்றும் கடலூர் மாவட்டம் உள்ளடக்கி பாண்டிச்சேரி வரை சுமார் 8 இலட்சம் ஹெக்டேரில் பரந்து விரிந்து கிடக்கும் காவிரிப் படுகையில் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் பல கிராமங்கள் இருப்பதை உலகில் எங்கும் காணமுடியாது.

1993-இல் காவிரிப்படுகையில் மண்ணெண்ணை எடுப்பதாக வந்த இந்திய எண்ணை நிறுவனமான ஓ.என்.சி.சி, மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான தொடக்கப் பணிகளை மேற்கொண்டது. இது தமிழகத்தின் காவிரிப் படுகை மக்களுக்குத்தெரியாது.

hydrocarbon 284புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் சுற்று வட்டங்களில் ஓ.என்.சி.சி நிறுவனம் ஆயில் எடுப் பதாகக் கூறி 2006-ஆம் ஆண்டு நிலங்களைக் கேட்டதாகவும், 2007-ஆம் ஆண்டு விவசாயி களைக் கட்டாயப்படுத்தி 1 ஏக்கருக்கு மாதத்திற்கு 17 ஆயிரம் இழப்பீடு தருவதாகச் சொல்லி நிலங் களைக் கையகப்படுத்தியதாகவும் கூறுகிறார்கள், 129 நாட்களாகப் போராட்டம் நடத்தி வரும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள்.

மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ‘தி கிரேட் ஈச்டெர்ன் எனெர்ஜி கார்ப்பரேஷன்’ என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், வலங்கை மான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்களும் தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்ப கோணம், ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய வட்டங் களில் சுமார் 1,66,210 ஏக்கரில் மீத்தேன் எடுக்க 29.7.2010-இல் உரிமம் வழங்கியது. அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டு 4.1.2011-இல் அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

இப்போது ‘ஹெல்ப்’ எனப்படும் ஒற்றை உரிமம் திட்டத்தில் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா முழுவதும் 55 புதிய வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற் கான நடைமுறைகள் 2018 சனவரி 19-ஆம் நாள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இதன் அடிப் படையில் 55 வட்டாரங்களில் மொத்தம் 59,282 ச.கி.மீ பரப்பளவில் முதல் கட்டமாக 1000-க்கும் மேற்பட்ட கிணறு அமைக்க ஏலம் விடப்பட உள்ளது.

இதில் தமிழகத்தில் முதல் கட்டமாக காவிரி டெல்டாவில் 3 இடம். இதற்கான அனுமதியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அக்டோபர் 1-ஆம் தேதி மீண்டும் கை யொப்பமிட்டுள்ளார். இதற்குமுன்னர் கடலூரில் தொடங்கி தரங்கம்பாடி வரை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொடுக்கப்பட்ட மூன்று இடங் களில் ஒன்றான கடலூர் மற்றும் சிதம்பரத்தை ஓ.என்.சி.சி-க்கும், ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக 99 நாட்கள் அமைதியாகப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 தோழர்களைப் படுகொலை செய்த அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்குக் கமலா புரம் உள்ளிட்ட இரண்டு இடங்களையும் ஒதுக்கி அனுமதியளித்துள்ளது. இது மோடி கும்பல்களின் நோக்கங்களை நமக்குப் பட்டவர்த்தனமாகப் புரிய வைக்கிறது. ஏற்கனவே கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்கக் கிணறுகளை அமைத்த இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.சி.சி, அனைத் துப் பணிகளையும் முடித்து ஹெச்.ஓ.இ.எல் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு ஓடிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் மற்றும் நீட் தேர்வு விலக்கு அளிக்குமாறு பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் பழனிச்சாமியோடு சென்ற அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது, ஹைட்ரோகார்பன் திட்டமானது விவசாயத்தைப் பாதிக்காதவண்ணம் செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு பின்னர் செயல்படுத்தப்படும் எனக் கூறினார்.

தமிழகச் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் ஒரு படி மேலே சென்று இந்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தனைச் சந்தித்து தமிழ் நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய் களைப் பதிக்கும் பணிக்காகப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமலேயே அத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மக்களின் கருத்துரிமையை மறுக்கும் இந்தச் செயல்பாடுகளே, இவர்கள் கார்ப்பரேட் நிறு வனங்களின் கைக்கூலிகளாக மாறிவிட்டதையும் தமிழகத்தைக் காவுகொடுக்கத் தயாராகி விட் டனர் என்பதையும் பட்டவர்த்தனமாகத் தெரி விக்கிறது.

ஐயா நம்மாழ்வார் அவர்களின் விழிப்புணர் வுக் கூட்டங்களும் போராட்டங்களும் “தி கிரேட் ஈச்டெர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன்” நிறுவனத்தை வேலை செய்யவிடாமல் தடுத்தன. காவிரிப்படுகை மக்கள், மீத்தேன் திட்டத்தின் அபாயங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கினர்.

இந் நிலையில் தி கிரேட் ஈச்டெர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்தின் 5 ஆண்டு உரிமம் புதுப்பிக்கப் படாத தால் 2015-இல் அந்நிறுவனம் வெளியேறியது.

மீண்டும் 2015 பிப்ரவரி 17-ஆம் நாள் 57 இடங்களில் மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கி இந்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயு அமைச்சகம் உத்தரவிட்டது.

இதனால் சர்வதேச அளவில் 128 நிறுவனங் களிலிருந்து ஒப்பந்தம் கோரப்பட்டது.

இறுதியாக மார்ச் 27-ஆம் நாள் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கொடுக்கப் பட்டு இதன் அடிப்படையில்தான் கர்நாடகவைச் சேர்ந்த ஜெம் லெபரட்ரி நிறுவனம் 2016-இல் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சி செய்தது. நெடுவாசல் மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட்டு, தமிழக அர சிடம் வேறு இடத்தை ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒதுக்குமாறு கோரி வருகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிடக் கோரி ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு இயக்கங்கள், விவசாயச் சங்கங்கள் மற்றும் மக்களின் தொடர் போராட்டங்களினால் நாடாளுமன்றத்தில் எழுப்பப் பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய பெட் ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட எந்த இடத்திலும் மீத்தேன், ஷேல்காஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு 2022-க்குள் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியைக் கனிசமாக உயர்த்தத் திட்டமிட்டு இந்தியா முழுவதும் 65 இடங்களில் கண்டறியப் பட்ட சிறு மற்றும் நடுத்தர வயல்களைக் கடந்த பிப்ரவரி 2017-இல் ஏலம் விட்டது.

இதன்படி மத்தியப் பெட்ரோலிய அமைச்சகம் 700 இடங்களில் எரிபொருள் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் 4,30,000 மெட்ரிக் டன் அளவு எண்ணெய் எடுக்க ஒப்பந்தம் அளிக்கப் பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.

இதில் ஒன்று தான் காவிரி டெல்டாவில் உள்ள நெடுவாசல் உள்ளிட்ட இடங்கள்.

நீரியல் விரிசல் எனப்படும் ஆபத்தான முறை யில் 2000 அடி முதல் 10000 அடி வரை துளை யிட்டு, குழாய் பதித்து அதிலிருந்து அனைத்து திசைக்கும் 2 கி.மீ தூரத்திற்குப் பக்கவாட்டில் - அதாவது 36 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்குக் குழாய் செலுத்தப்படும் என்பதும், அதில் மிக அபாயகரமான வேதிப்பொருட்களான ஈயம், யுரேனியம், ரேடியம், மெத்தனால் ஹைட்ரோ குளோரிக் அமிலம், பார்மால்டிசைட், பென்சீன் டொலுயீன், ஈதைல், பென்சீன் சைலீன் போன்ற 600-க்கும் மேற்பட்ட வேதிப்பொருள்களோடு 400 டன் மணல் 400 டேங்கர் லாரி தண்ணீர் கலந்து மிக அழுத்தமாகச் செலுத்தி நிலக்கரிப் பாறைகளை உடைத்தும் வண்டல்மண் பாறைகளை உடைத்தும் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுப்பார்கள் என்பதும், இதனால் பல கோடிக் கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என்பதும், குழாயிலிருந்து வெளி யேற்றப்படும் கழிவு நீர், கடல் நீரைப்போன்று 5 மடங்கு உப்புத் தன்மை கொண்டதால் விளை நிலம் முற்றிலுமாக உப்பு நிலமாக மாறும் என் பதும், கழிவுநீரில் கலந்துள்ள பென்சீன், ரேடியம் போன்ற 600 வேதிப் பொருள்களினால் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் உருவாகும் என்பதும் போராடும் காவிரிப்படுகை மக்களுக்குத் தெரியும் போது, உலகம் முழுவதும் சுற்றி வரும் இந்தியாவின் பிரதமரான மோடிக் கும் அவருடைய சகாக்களுக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடிக்கும் அவருடைய சகாக் களுக்கும் தெரியாதா?

இந்திய அரசு உலக வர்த்தக மையத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களாலும், அமெரிக்கா ரஷியா போன்ற வல்லாதிக்க நாடுகளின் நெருக் கடியாலும் உலக முதலாளிகள் மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளான அம்பானிகள், டாட்டாக் களின் கார்ப்பரேட் நிறுவனங்கள் 35 ஆண்டுகள் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்கள் எடுக்கவும் 100 ஆண்டுகள் நிலக்கரி எடுக்கவும், காவிரிப்படுகையை அழித்துக் கனிமவளங்களைக் கொள்ளையடிக்கவும் மோடிகளும் எடப்பாடி களும் துணைபோகிறார்கள்.

இவர்கள் காவிரிப்படுகையை மட்டும் அழிக்கத் துடிக்கவில்லை.

தமிழகத்தின் பிற பகுதிகளில் கிடைக்கக் கூடிய பெட்ரோல், நிலக்கரி மற்றும் மலைகளை அறுத்துக் கிடைக்கும் கிரானைட், சுண்ணாம்புப் பாறைகள், இரும்புத் தாது, மண் படிவங்களில் கிடைக்கும் பாக்சைட், தங்கம், பிளாட்டினம், அணு உலைகளுக்குத் தேவையான மணல், தாது மணல் போன்ற கனிமவளங்களும் கடல் வளங் களும் காட்டு வளங்களும் அழிக்கப்படுவதோடு, உலக வல்லாதிக்க நாடுகளின் அனல் மின் நிலையங்களுக்காகவும் நியுட்ரினோ ஆய்வுக் கூடங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழில்நுட்பப் பூங்காக்களுக்காகவும் தமிழக நில வளங்களை உலக மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து மகிழ்கிறார்கள்.

1960-இல் சோமாலியா வளமான மிகவும் செழுமையான விவசாய நாடாக இருந்தது. அம் மக்கள் சுய தேவை உற்பத்தியால் வறுமையை விரட்டியவர்கள்.

அந்த நாடு படிப்படியாக இத்தாலியர்களின் பிடியில் சென்றது. இத்தாலியும் மேற்குலக நாடுகளும் தெற்கு சோமாலியாவில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டனர்.

இன்று சோமாலியா வறுமையின் பிடியில்! சோமாலிய மக்கள் கடல் கொள்ளையர்களாக மாற்றப்பட்டனர்.

50 லட்சம் குழந்தைகள் சாவின் விளிம்பில் மண் ரொட்டி சாப்பிடும் அவலம்!

சோமாலியாவின் நிலை எதிர்காலத்தில் தமிழகத் திற்கும் வரவேண்டுமா?

இந்தியாவுக்காகத் தமிழ்நாட்டையே காவு கொடுக்க நினைக்கும் மோடிகளும் எடப்பாடி களும், வாயிருந்தும் ஊமையாய், கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இருக்கக் கூடிய ஓட்டுக்கட்சித் தலைவர்களும் நம் மண் ணையும் நம் வாழ்வாதாரங்களையும் தமிழகத்தின் இறையாண்மையையும் காப்பாற்றுவார்களா?

ஒருபோதும் காக்கமாட்டார்கள். நாம்தான் நமது மண்ணை நமது வாழ்வாதாரத்தை நமது உரிமையை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

ஒற்றுமையான ஒன்றுபட்ட வலிமையான போராட்டமே இனி தமிழகத்தைக் காப்பாற்றும்.