பிரதமர் வேட்பாளராக பா.ச.க.வால் அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் துக்கான பொதுத் தேர்தலின் போது, “நான் பிரதமரா னால் ஆண்டிற்கு இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்” என்று தேர்தல் பரப்புரை மேடை தோறும் முழங்கினார். ஆனால் நான்கு ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் அய்ம்பதாயிரம் வேலை வாய்ப்புகளைக் கூட உருவாக்கவில்லை என்கிற உண்மை அம்பலமாகியுள்ளது.

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நீடித்த வேலை வாய்ப்புக்கான ஆய்வு மய்யம், “2018ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலை வாய்ப்பு நிலை” என்னும் தலைப் பில் அதன் ஆய்வறிக்கையை செப்டம்பர் மாதம் வெளி யிட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் இந்தியாவில் வேலையின்மை 5 விழுக்காடு உயர்ந்துள்ளது; உயர்கல்வி கற்ற இளைஞர் களுக்கான வேலையின்மை 16 விழுக்காடு உயர்ந் துள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-2015 காலத்தில் 70 இலட்சம் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமைப்பு சார்ந்த உற்பத்தித் துறையில் பணியிடங் களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ள போதிலும் பணி நிரந்தரம் இல்லாமலும், குறைந்த கூலியிலும் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் தொழிலாளியின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் தொழிலாளியின் உற்பத்தித் திறன் ஆறு மடங்கு உயர்ந்துள்ளது. மேற்பார்வை செய் கின்றவர்கள், நிர்வாகம் செய்கின்றவர்களின் ஊதியம் மூன்று மடங்கு அதிகமாகி உள்ளது. ஆனால் தொழிலாளர் களின் ஊதியம் 1.5 மடங்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளை இலாபம் ஈட்டுவதே முதலாளிய உற்பத்தி முறையின் நோக்கம் என்பது தொடர்ந்து அம்பலப்பட்டு வருகிறது.

1990களில் தாராளமயம், தனியார் மயம், உலக மயம் என்கிற கொள்கை இந்தியாவில் அரசுகளால் செயல்படுத்தப்பட்ட போது, இதனால் நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி வேகமாக உயரும் என்று ஆளும் வர்க்கத்தால் கூறப்பட்டது. ஆனால் இது நடைமுறைப் படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே இது வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி (Jobless Growth) என்பது அப்பட்டமாக வெளிப்பட்டது. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு (GDP -ஜி.டி.பி.) வளர்ச்சி 3 முதல் 5 விழுக்காடாக இருந்த போது வேலை வாய்ப்பின் வளர்ச்சி 2 முதல் 2.5 விழுக்காடாக இருந்தது. ஆனால் தாராள மய புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத் தப்பட்ட பின், ஜி.டி.பி. வளர்ச்சி 6.8 முதல் 8.7 விழுக் காடாக உயர்ந்த போதிலும் வேலைவாய்ப்பின் வளர்ச்சி 0.1 முதல் 2.0 விழுக்காடு என்கிற தேய்வு நிலையில் இருக் கிறது என்பதைக் கீழே உள்ள அட்டவணை காட்டுகிறது. 

ஆண்டு         ஜி.டி.பி. வளர்ச்சி   வேலை வாய்ப்பு
1972-1977        4.6      2.6
1977-1982   3.9      2.1
1982-1986  4.0       1.7
1986-1993     5.6       2.4
1993-1999  6.8       1.0 
1999-2004      5.7           2.8
2004-2009     8.7          0.1
2009-2011      7.4      1.4
2011-2015      6.8         0.6

புதிய உயர் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட தாராளமய-புதிய பொருளாதாரக் கொள்கை, நிரந்தரத் தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றுவது, கூலியைக் குறைப்பது, வேலை யில்லாத் திண்டாட்டத்தை அதிகப்படுத்துவது ஆகிய வற்றின் மூலம் பெருமுதலாளிகளும் பெருவணிகர் களும் கொள்ளை இலாபம் ஈட்ட வழிவகுக்கிறது. எனவேதான் இந்திய நாட்டின் மொத்த செல்வத்தில் 74 விழுக்காடு மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினராக உள்ள பெருமுதலாளிகளிடம் இருக்கிறது.

இந்த நிலையை நீடிக்கச் செய்வதற்காக இந்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கைகளைச் சீர்திருத்தம் என்கிற பெயரால் எடுத்து வருகிறது. இதை எதிர்க்கின்ற தொழி லாளர்களை - குர்கானில் மாருதி சுசிகி தொழிலாளர் களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருப்பதுபோல் - ஒடுக்கி வருகிறது. ஆயினும் உழைக்கும் மக்கள் சாதி வேறுபாடுகளை மறந்து ஒரே வர்க்கமாகத் திரண்டு போராடுவதன் மூலமே முதலாளியத்தின் கொடிய சுரண்டலை ஒழிக்க முடியும்.