annaimuthu 450நேரு அரசால் 29.01.1953இல் காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குழு 30.3.1955இல் 837 சாதிகள் பிற்படுத்தப்பட்டுள்ளதென பட்டியலிட்டு, அரசின் முதல்நிலைப் பணிகளில் (-1) 25% 2ஆம் நிலைப் பணிகளில் 33.5% 3 4ஆம் நிலைப் பணிகளில் 40% உம் இடஒதுக்கீடு அளிக்க  பரிந்துரைத்திருந்தது. தொழிற்படிப்பு  தொழில்நுட்பப் படிப்பில் 70% இடஒதுக்கீடு அளிக்கவும் பரிந்துரைத் திருந்தது.

பிரதமராக இருந்த நேரு இப்பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தவில்லை. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஜனதா கட்சி, அதன் தேர்தல் அறிக்கையில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் "காகா கலேல்கர் குழுப் பரிந்துரை நடைமுறைப் படுத்தப்படும்" எனத் தெரிவித்திருந்தது. அத்தேர்தல் அறிக்கை வரைவுக் குழுத் தலைவராக இருந்தவர் மொரார்ஜி தேசாய்.         

இதனைக் கூர்ந்து கவனித்த தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் "இந்திய ஒன்றிய அரசுப் பணியமர்த்தத்தங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்" என விண்ணப்ப ஆவணம் தயாரித்து, அதனை குடியரசுத்தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியிடம் கொடுத்தார்.                  

தோழர் வே.ஆனைமுத்து முன்முயற்சியில் தொடங்கப்பட்ட "அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் பேரவை"யின் சார்பில் பிரதமர் மொரார்ஜி தேசாயை சந்தித்து "ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி காகா கலேல்கர் குழுப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து; இந்திய ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கு" என வலியுறுத்தினார்.

முதலில் மறுத்த பிரதமர் மொரார்ஜி, தோழர் ஆனைமுத்து விவாதத்திற்குப் பின் "கலேல்கர் குழு அறிக்கை அளித்து 20ஆண்டுகள் கழிந்துவிட்டதால் அதை நடைமுறைப்படுத்த இயலாது. புதிதாக இரண்டாம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குழுவை அமைக்கிறேன்" என்றார். அதன்படி 20.02.1978இல்            அறிவிக்கப்பட்டு 1.1.1979இல் அமைக்கப்பட்டதுதான் பி.பி.மண்டல் தலைமையிலான "மண்டல் குழு".

 வே.ஆனைமுத்து முன்னெடுப்பில் 23.3.1979அன்று புதுதில்லியில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு - இராம் மனோகர் லோகியாவின் 80ஆம் பிறந்தநாள் விழா பேரணியில் (8 கி.மீ) 27ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அன்று பொதுக்கூட்டத்தில் அப்போதைய துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம், நடுவண் அமைச்சர் இராஜ்நாராயண் ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் நூற்றாண்டு விழா வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஒரு பேரெழுச்சியை உருவாக்கியது.          

பி.பி.மண்டல் அவர்கள் 31.12.1980இல் அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தியிடம் குழுவின் பரிந்துரைகளை அளித்தார். நேருவைப் போல் இந்திராகாந்தியும், மண்டல் பரிந்துரைத்த அறிக்கையைக் கிடப்பில் போட்டுவிடக்கூடாது என்பதற்காக குரல் இடைவிடாது நாடாளுமன்றத்தில் எழுப்பியவர் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையின் தலைவராக உள்ள இராம் அவதேஷ்சிங். இப்பேரவையின் புரவலர் தலைவர் தோழர் வே.ஆனைமுத்து. தோழர் ஆனைமுத்துவிற்கு  உறுதுணை யாக இருந்த மற்றொருவர் இந்திரா காந்தி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த திரு.கியானி செயலில் சிங். (இவர் பி.வ.அய்ச் சார்ந்தவர்). பின்னர் பிரதமரான திரு.வி.பி.சிங் 1990ஆகத்து 6 அன்று மண்டல் பரிந்துரைத்தபடி இந்திய ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என 13.8.1990இல் உத்தரவிட்டார்.

மண்டல் பரிந்துரைகளை அளித்த பின் அவை நடைமுறைப் படுத்த திராவிடர் கழகம், தி.மு.க.உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் பாடுபட்டனர்.

ஆனால், மண்டல் குழு அமைக்கப்பட முழுவதும் காரண மாக இருந்தவர் தோழர் வே.ஆனைமுத்து. பரிந்துரைகள் செயல்பாட்டுக்கு வரும்வரை திரு.இராம்அவதேஷ்சிங் துணையுடன் இடைவிடாது இயங்கியவர் தோழர் வே. ஆனைமுத்து. இச்செயலுக்காக தோழர் வே.ஆனைமுத்துவை நன்றியுடன் போற்றுவோம்.

இச்செயல் நிறைவேற்ற இயலுமா என மலைக்காமல் அதை நோக்கி திட்டமிட்டு செயல்படுவதே தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் தனிக்குணம்.