அரசமைப்புச் சட்டம் பிரிவு 16(4)இல் பட்டியல் வகுப்புகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் அரசின் வேலையில் இட ஒதுக்கீடு அளித்திட வழி செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் 26.1.1950இல் நடப்புக்கு வந்தது. பட்டியல் வகுப்புகளுக்கு இதற்கும் முன்பே 1943 முதல் ஆங்கிலேயே அரசு அளித்து வந்த விகிதாசாரப் பங்கு இச்சட்டத்தின் மூலம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. பழங்குடிகளுக்கு இச்சட்டப் பிரிவின் மூலம் 26.1.1950 முதல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் 1994 வரை மய்ய அரசில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. இது வரலாற்றில் இருண்ட காலம் ஆகும்.

ஆனைமுத்துவின் ஒளிவீச்சு

இருளில் தள்ளப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒளியூட்ட தோழர் வே.ஆனைமுத்து தம் தோழர்களுடன் 1978இல் புதுதில்லிக்குப் புறப்பட்டார். குடிஅரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், கட்சிகளின் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரையும் சந்தித்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மய்ய அரசின் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தார்; வட இந்தியா முழுவதும் சுற்றினார்; பரப்புரை செய்தார்; கிளர்ச்சிகள் செய்தார். அதன் விளைவாக மண்டல் குழு 1979இல்  அமைக்கப்பட்டது; அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் 1982இல் வெளியிடப்பட்டது. அதன் பின்னரே மக்களும் சமுதாய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இக்கோரிக்கைக்காகக் களத்தில் இறங்கிப் போராடினர். பிரதமர் வி.பி.சிங் 1990இல் இதற்கு ஆணை பிறப்பித்தார். இது 1994இல் நடப்புக்கு வந்தது.

இடைப்பட்ட காலத்தில் 1990இல் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட உடனேயே உயர் சாதியினர் இந்த ஆணையை எதிர்த்து இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் அரசு இதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். விசார ணைக்குப் பின் 16-11-1992இல் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் இந்த அர சாணை அரசமைப்புச் சட்டப்படி சரியானதே என்று கூறிய உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பெருங்கேடு விளைவிக்கும் கீழ்க்கண்ட கட்டளைகளையும் பிறப்பித்து விட்டது.

  1. பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆகிய மூன்று பிரிவினருக்குமான மொத்த இட ஒதுக்கீடு என்பது 50% வரம்பை மீறக்கூடாது.
  2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது.
  3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளா தாரத்தில் வளர்ந்த பிரிவினருக்கு (Creamy Loyer) இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது.
  4. சில குறிப்பிட்ட படிப்புகளுக்கும் பதவி களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது.

இந்த நான்கு கட்டளைகளும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை முடமாக்கி முழுமையாகச் செயல்படுத்த விடாமல் முடக்கிவிட்டது. இத்தீர்ப்பு 1994இல் நடப்புக்கு வந்தது.

உச்சநீதிமன்றத்தின் இச்செயல் மனிதனைச் செயல்படவிடாமல் அவனுடைய கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கிட்டு விட்டுச் செயல்படு என்று சொல்வதற்கு ஒப்பானது ஆகும்.

பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடி யினருடன் இதே விலங்குகளை மாட்டுவதற்கு உயர்சாதி உச்சநீதிமன்றம் உரிய தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

மாட்டப்பட்டுள்ள இந்த விலங்குகள் இந்திய நாடாளு மன்றத்தால் உடைத்தெறியப்பட்டு இன்றுள்ள மேல்வருண நாயகம் ஒழிந்து அனைத்து வகுப்புகளையும் கொண்ட உண் மையான பங்கேற்பு சனநாயகம் இந்தியாவில் மலரும்படி செய்ய வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் முன்னேற்றம்

மய்ய  அரசு அலுவலர்களின் வகுப்புவாரி யான எண்ணிக்கை மண்டல் குழு அறிக்கையில் 1980ஆம் ஆண்டுக்குத் தரப்பட்டுள்ளது. மய்ய அரசின் பணியமர்த்தம் மற்றும் பயிற்சித் துறையின் இணை அமைச்சர் வி.நாராயணசாமி 18.11.2008ஆம் நாள் நாடாளு மன்றத்திற்கு அளித்த விடையில் மய்ய அரசு அலுவலர்களின் வகுப்புவாரியான எண்ணிக்கை 2008ஆம் ஆண்டுக்குத் தரப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கை விழுக்காடாக மாற்றப்பட்டு அவையிரண்டும் ஒப்பிட்டுப் பார்க்கப்படவேண்டும் என்பதற்காக பட்டியலாக இங்கே அளிக்கப்படுகிறது.

1980 மற்றும் 2008 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்கள் ஒப்பிட்டாய்வு - முதல் நிலைப் பணிகள்

table 1

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பங்கு 0.7% அதிகரித்துள்ளது.

பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு 11.7% அதிகரித்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு மொத்தம் 12.4% அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பால் உயர் வகுப்பினரின் பங்கு 89.6%லிருந்து 77.2%ஆகக் குறைந்துவிட்டது. அதாவது 12.4% குறைந்துவிட்டது.

table 2 600

உயர் வகுப்பினரின் பங்கு 4.2% அதிகரித்துள்ளது.

பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு 2.4% அதிகரித்துள்ளது.

உயர் வகுப்பு மற்றும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு 6.6% அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பங்கு 10.6%இலிருந்து 4.0%ஆகக் குறைந்துவிட்டது. அதாவது 6.6% குறைந்து விட்டது.

table 345 600

உயர் வகுப்பினரின் பங்கு 11.5% அதிகரித்துள்ளது.

பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு 0.4% அதிகரித்துள்ளது.

உயர் வகுப்பு மற்றும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு 11.9% அதிகரித்துள்ளது.

உயர் வகுப்பினரின் பங்கு 11.5% அதிகரித் துள்ளது.

பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு 0.4% அதிகரித்துள்ளது.

table 1 5 600

பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு 5.6% அதிகரித்துள்ளது.

உயர் வகுப்பினரின் பங்கு 1980இல் இருந்தது அப்படியே உள்ளது; அதிகரிக்கவும் இல்லை; குறையவுமில்லை.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பங்கு 12.6% இலிருந்து 7.0% ஆகக் குறைந்துவிட்டது. அதாவது 5.6% குறைந்துள்ளது.

1980 முதல் 2008 வரையான காலத்திய வகுப்பு மற்றும் பணிநிலை வாரியான செயல்பாட்டின் ஆய்வு

1 முதல் 5ஆம் நிலைப் பணிகள்

table1 5 1980 600உயர் வகுப்பினரின் செயல்பாடு :

முதல்நிலைப் பணிகளில் உயர் வகுப்பினர் பங்கு 12.4% குறைந்துள்ளது. ஆனாலும் இந்த இழப்பை அவ்வகுப்பினர் 2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் நிலைப் பணிகளில் அதிகமான பங்கைப் பெற்று ஈடு செய்து கொண்டனர்.

2ஆம் நிலைப்பணிகளில் 4.2% பங்கு அதிகரித் துள்ளது.

3ஆம் 4ஆம் 5ஆம் நிலைப் பணிகளில் 11.5% அதிகரித்துள்ளது.

5 நிலைகளின் மொத்தப் பணிகளில் அதி கரிப்பும் இல்லை; குறையவும் இல்லை.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் செயல்பாடு :

முதல்நிலைப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பங்கு 0.7% அதிகரித்துள்ளது.

2ஆம் நிலைப்பணிகளில் பங்கு 6.6% குறைந்துள்ளது.

3ஆம் 4ஆம் 5ஆம் நிலைப் பணிகளில் பங்கு 11.9% குறைந்துள்ளது.

5 நிலைகளின் மொத்தப் பணிகளின் பங்கு 5.6% குறைந்துள்ளது.

பட்டியல் வகுப்பினர் & பழங்குடியினரின் செயல்பாடு :

முதல் நிலைப் பணிகளில் பட்டியல் வகுப்பினர் & பழங்குடியினர் 11.7% அதிகரித்துள்ளது.

2ஆம் நிலைப் பணிகளில் 2.4% அதிகரித் துள்ளது.

3ஆம் 4ஆம் 5ஆம் நிலைப் பணிகளில் 0.4% அதிகரித்துள்ளது.

5 நிலைகளின் பணிகளிலும் இவர்களின் பங்கு 5.6% அதிகரித்து உள்ளது. இது எண்ணி மகிழத்தக்கது.

பட்டியல் வகுப்புகள் & பழங்குடிகள் முன்னேற்றம்

மக்கள் தொகையில் 25.5 விழுக்காடு உள்ள ப.வ. & ப.கு. ஆகிய இவ்விரண்டு வகுப்பினரும் 2008இல் மய்ய அரசின் முதல்நிலைப்பணிகளில் 17.4 விழுக்காடு இடங்களும் இரண்டாம் நிலைப் பணிகளில் 20.6 விழுக்காடு இடங்களும் மூன்றாம் நிலை, நான்காம் நிலை, அய்ந்தாம் நிலைப் பணிகளில் 24.8 விழுக்காடு இடங்களும் பெற்றுள்ளனர். தங்கள் வகுப்புகளுக்குரிய விகிதாச்சாரத்தை எட்டும் பயணத்தில் பட்டியல் வகுப்பினர் 1943இல் இருந்தும் பழங்குடியினர் 1950இல் இருந்தும் என இவ்விரண்டு வகுப்பினரும் பெற்றுள்ள முன்னேற்றம் இதுவாகும்.

முன்னேற்றம் எப்படிச் சாத்தியமாயிற்று?

மய்ய அரசின் பணிகளில் 1943ஆம் ஆண்டு பட்டியல் வகுப்பினருக்கு முதன் முறையாக 8.33 விழுக்காடு இடஒதுக்கீடு நேரடி நியமனப் பதவிகளில் அளிக்கப்பட்டது. அது விகிதாசார அடிப்படையில் 1946ஆம் ஆண்டில் 12.5 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. 1950ஆம் ஆண்டில் பட்டியல் பழங்குடிகளுக்கு முதன் முறையாக 5 விழுக்காடு நேரடி நியமனப் பதவிகளில் விகிதாசார ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இன்று பட்டியல் வகுப்பினருக்கு 15.0 விழுக்காடும் பட்டியல் பழங்குடிகளுக்கு 7.5 விழுக்காடும் விகிதாசார இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 1946ஆம் ஆண்டிலிருந்து பட்டியல் வகுப்பி னருக்கும் 1950ஆம் ஆண்டிலிருந்து பட்டியல் பழங்குடியினருக்கும் விகிதாசாரப் பங்குடனும் பின்னர் 1963ஆம் ஆண்டிலிருந்து பதவி உயர்விலும் விகிதாசாரப் பங்குடனும் இடஒதுக்கீடு அளிக்கப் பட்டு வருவதால்தான் இந்த முன்னேற்றம் சாத்தியமாயிற்று.

பிற்படுத்தப்பட்ட மக்களின் இழிநிலைக்குக் காரணம் என்ன?

மக்கள் தொகையில் 57 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் 2008இல் மய்ய அரசில் முறையே முதல்நிலைப் பணிகளில் 5.4 விழுக்காடும், இரண்டாம் நிலைப் பணிகளில் 4 விழுக்காடும், 3ஆம் 4ஆம் 5ஆம் நிலைப் பணிகளில் 7.1 விழுக்காடும் மட்டுமே பங்கு பெற்றுள்ளனர்; ஒற்றை இலக்கத்திலேயே பெற்றுள்ளனர்.

மய்ய அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு  அதாவது, அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்த 1950ஆம் ஆண்டிலிருந்து 44 ஆண்டுகள் கழித்துத்தான் 1994ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக அன்றைய விகிதாசாரக் கணக்கின்படி 52 விழுக்காடு கொடுக்காமல் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நேரடி நியமனப் பதவிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக்கு விதித்துள்ள 50% உச்ச வரம்பிலிருந்து ஏற்கெனவே பட்டியல் வகுப்புகளுக்கு 15% பழங்குடிகளுக்கு 7.5% ஆக மொத்தம் 22.5% இடஒதுக்கீட்டினைக் கழித்தபின் எஞ்சியிருப்பது 27.5% மட்டுமே. இதில் 27% மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கொடுக்க முடியும். மக்கள் தொகையில் 50 விழுக்காடு உள்ள இவர்களுக்கு இன்று 27 விழுக்காடுதான் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவர்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை. இவர்களில் வளர்ந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை. அதனால் தான் இவர்கள் பெற்றுள்ள பங்கு மிக மிகக் குறைவானதாக சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளது.

பட்டியல் வகுப்பினருக்கு 1943 முதல் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு அதுவே 1946 முதல் விகிதாசார அளவுக்கு நடை முறைப்படுத்தப்பட்டு 1964 முதல் பதவி உயர்விலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று 75 ஆண்டுகள் ஆகியும் பட்டியல் வகுப்பினர் இன்னும் தங்களுக்குரிய விகிதாசாரப் பங்கை அடையமுடியவில்லை. இங்கே இன்னொன் றையும் கவனிக்க வேண்டும். பட்டியல் வகுப்புகளில் பழங்குடி வகுப்புகளில் வளர்ந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்கிற தீமை இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அந்தத் தீமையை உச்சநீதிமன்றம் செய்துவிட்டது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 1990இல் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டு அது 1994இல் தான் நடப்புக்கு வந்தது. அது விகிதாசாரப் பங்கான 52% அளவுக்கு அளிக்கப்படாமல் உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி அது 27% ஆகக் குறைக்கப்பட்டும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லை என்றும் வளர்ந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றும் சில குறிப்பிட்ட படிப்புகளுக்கும் பதவிகளுக்கும் இட ஒதுக்கீடு இல்லை என்றும் ஆக்கப்பட்டுவிட்டது. இன்றுள்ள நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும், தங்களுக்குரிய விகிதாசாரத்தை எட்ட முடியாது.

பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய மூன்று வகுப்பினரும் தங்கள் தங்கள் வகுப்புகளுக்குரிய பங்கினை முழுதாக அடைய முடியவில்லை. அவ்வாறு அடைய முடியாத பங்கினை உயர் வகுப் பினரே அபகரித்துக் கொண்டனர்; அபகரித்துக் கொண்டு வருகின்றனர்.

மண்டல் குழு அறிக்கையில் 3743 சாதிகள் - சமுதாயங்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  மக்கள் தொகையில் அவ்வகுப்புகளின் விழுக்காடு 52 ஆகும். இதன் பிறகு மய்ய அரசு மேலும் 600 சாதிகளை அப்பட்டியலில் சேர்த்து விட்டது. எனவே இப்போதுள்ள பட்டியல்படி மக்கள் தொகையில் எல்லா மதங்களையும் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 57 விழுக்காடாக உயர்ந்து விட்டது.

அனைத்து வகுப்புகளும் பங்காளிகள்

இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களை பட்டியல் பழங்குடிகள், பட்டியல் வகுப்புகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்று பிரிவினை செய்துள்ளது; பிரிவினைக்கு உள்ளாகாத எஞ்சிய அனைவரும் உயர் வகுப்பினர். இந்திய சனநாய கத்தில் பங்காளிகளான இந்நான்கு பிரிவினருக்கும் தேசத்திலுள்ள அனைத்தையும் பெரியாரும் அம்பேத்கரும் லோகியாவும் வகுத்துக் கொடுத் துள்ள விகிதாசார வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அடிப்படையில் பாகப் பிரிவினை செய்து கொடுக்கப்பட வேண்டும். மய்ய அரசில் பட்டியல் வகுப்புகளுக்கும் பழங்குடிகளுக்கும் கல்வியிலும் வேலையிலும் அவ்வாறு விகிதாசாரப்படி பாகப் பிரிவினை செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 1994 வரையிலும் மய்ய அரசின் கல்வியிலும் வேலையிலும் அவ்வாறு பாகப் பிரிவினை செய்து கொடுக்கப்படவே இல்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பங்கை உயர் வகுப்பினரே அனுபவித்து வந்தனர்; இன்றும் அனுபவித்து வருகின்றனர்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 1994இல்தான் இடஒதுக்கீடு  முதன்முதலாக நடைமுறைப்படுத் தப்பட்டது. ஆனால் அது விகிதாசாரப் பங்காக இல்லை. மேலும் வளர்ந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது; பதவி உயர்வில் கிடையாது; என்கின்ற குறைபாடுகளுடன் அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எல்லா வகுப்புகளுக்கும் விகிதாசாரம் பங்கிட்டுக் கொடுத்தால்தான் இந்திய சனநாயகம் பங்கேற்பு சனநாயகமாக மலரும்.

தமிழ்நாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் 1928 முதற்கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பிற்படுத்தப்பட்ட-மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விகிதாசாரப் பங்கு நடப்பில் இல்லை. அவற்றுக்குள்ளும் சில வகுப்புகள் சிலவற்றில் முற்றிலும் பிரதிநிதித்துவம் பெறாமலும் சிலவற்றில் சொற்ப அளவுக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மய்ய அரசின் வேலையில் 1994 முதற்கொண்டும் மய்ய அரசின் கல்வியில் 2008 முதற் கொண்டும் தங்களுடைய விகிதாசாரத்துக்குக் குறைவாகவே.  அதாவது, மக்கள் தொகையில் 57 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 27 விழுக்காடு மட்டுமே இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அது 57 விழுக்காடாக உயர்த்தப் பட்டு  விகிதாசாரப் பங்காக அளிக்கப்பட வேண்டும்.,

என்ன செய்ய வேண்டும்?

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு விகிதாசார இடப்பங்கீடு அளிக்கப்பட வேண்டும்; பதவி உயர்விலும் இடப்பங்கீடு கொடுக்கப்பட வேண்டும். மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு களில் வளர்ந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்கிற அரசு ஆணை நீக்கப்பட வேண்டும். சில குறிப்பிட்ட படிப்புகளுக்கும் பதவி களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்கின்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு இரத்துச் செய்யப்பட வேண்டும். இதற்காக இவ்வகுப்பினர் தொடர்ந்து போராட வேண்டும். 

இதைப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். 

படிப்பு வட்டம் - செயல் வட்டம்

இதன் பொருட்டு இதர பிற்பட்ட வகுப்புகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு படிப்பு வட்டம் உருவாக்கப்பட்டு விகிதாச்சார வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கல்வி அளிக்கப்பட வேண்டும்; செயல்வட்டம் அமைத்து அதை அடை வதற்கான வேலைத்திட்டம் வகுத்துப் பாடுபட வேண்டும்.

உடல் வெப்பமும் விகிதாசாரப் பங்கீடும்

மனிதன் குளிர்மிகுந்த இடத்தில் வாழ்ந்தாலும் வெப்பம் மிகுந்த இடத்தில் வாழ்ந்தாலும் ஆண்டின் எல்லா நாள்களிலும் ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் அவனுடைய உடலின் வெப்ப அளவு 98.4F நிலையிலேயே மிகாமலும் குறையாமலும் பேணப்பட்டு வருகின்றது. அது மிகினும் குறையினும் நோய் எனப்படும். அது போன்றதுதான் சமுதாய வாழ்க்கை. சமுதாய வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் அந்தச் சமுதாயத்தில் அடங்கியுள்ள பல வகுப்புகளும் உரிமை, உடைமை, அனுபவிப்பு ஆகிய மூன்றிலும் மக்கள் தொகையில் தங்களுடைய வகுப்பின் விகிதாசார அளவுக்குரிய பங்கினைப் பெற்று வாழ வேண்டும்.  ஒரு வகுப்பு விகிதாசார அளவுக்கும் கூடுதலாகவோ குறைவாகவோ பெற்று வாழ்வது சமுதாய நோய் ஆகும்; கூடுதலாகப் பெறுவது ஆதிக்கம் செய்யும்; குறைவாகப் பெறுவது அடிமையாக்கிவிடும்; பிரதிநிதித்துவம் பெறாமலே இருப்பது வாழ்வது ஆகாது; நடைப்பிணத்திற்கு ஒப்பாகும். எனவே எல்லா வகுப்புகளும் தங்களுக்குரிய விகிதாசாரப் பங்கினைப் பெற்று வாழ்வதே சுயமரியாதை  வாழ்வாகும்.

Pin It