2018 நவம்பர் திங்களில் இரண்டு நூல்களை வாங்கிப் படித்தேன். பகுத்தறிவுதான் உலகில் மிகச்சிறந்த ஆயுதம் என்பதை வலியுறுத்தும் நூல்கள். இவை இயற்பியல் வானியல்  பேரறிஞரான மறைந்த ஸ்டீபன் ஹாகிங் ‘பெரிய கேள்விகளுக்கு சுருக்கமான விடைகள்’ (Brief Answers to the Big Questions by(Brief Answers to the Big Questions byStephen Hawking, 2018) என்ற அருமையான நூலைப் படைத்துள்ளார். இந்நூல் பத்துப் பகுதிகளையும் 221 பக்கங்க ளையும் கொண்டுள்ளது.

இரண்டாவது நூலை இந்துமத வெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நரேந்தர தபோல்கர்  ‘பகுத்தறிவிற் காக’ (The(TheCase for Reason by Narendra Dabholkar, 2018) என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இது நரேந்தர தபோல்கர் மராத்திய மொழியில்  எழுதிய நூலாகும். இந்நூலைச் சுமன் ஓக் என்ற ஆய்வாளர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்நூல் 29 பகுதிகளையும் 298 பக்கங்களையும் கொண்டுள்ளது. இந்த இருபெரும் பகுத்தறிவாளர்கள் மறைந்துவிட்டாலும் அவர்களின் படைப்புகளால் உலகெங்கும் வாழும் பகுத்தறிவாளர்கள் நெஞ்சில் வாழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

ஸ்டீபன் ஹாகிங்கை வெறும் அறிவியல் எல்லைக்குள்  சுருக்கிவிட முடியாது. வெகு சில அறிவியல் அறிஞர்கள்தான் மக்களுக்குத் தங்களுடைய படைப்புகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேரார்வம் காட்டினர். அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் அண்டத்தைப் பற்றி ஒரு புரட்சியான ஆய்வை நடத்தினார். அதுமட்டுமல்ல பொது மக்களின் பிரச்சினைகளை அடிக்கடி பேசினார். உலகை அழிக்கும் போர் ஆயுதங்கள் தேவையில்லை என்று வலியுறுத்தினார். ஸ்டீபன் ஹாகிங்கும் ஐன்ஸ்டின் வழியிலேயே இயற்பியல் வானியலில் பல புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைக் கண்டார். ஹாகிங்கை வாழும் காலத்தில் நாம் காணும் ஐன்ஸ்டீன் என அறிவியல் அறிஞர்கள் போற்றினார்கள்.

அண்மையில் சில நிமிடங்களே ஓடும் ஒரு செய்திப் படத்தைக் காண வாய்ப்பு கிடைத்தது. 1925ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஐன்ஸ்டீனுக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் அறிஞர் பெர்னார்ட்ஷா கலந்து கொண்டு பாராட்டுரையை வழங்கினார். அவ்வுரையில் “எப்போதும் பலவற்றை மறைக்க வேண்டிய நிலை உள்ளது. பெரும் வரலாற்று நாயகர்களாகப் போற்றப்படுபவர்கள் குறிப்பாக நெப்போலியனைப் பற்றிப்  பேச வேண்டும் என்றால் சில கருத்துகளைக் கூறியாக வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி நெப்போலியனைப் பற்றிப் பல புகழுரைகள் உள்ளன. நான் ஒரு முக்கியமான கருத்தை ஒருகால் குறிப்பிடாமல் இருக்க வேண்டு மென்றால், அது மிகவும் முதன்மையானதாகும். நெப்போலியன் பிறக்காமலிருந்தால் மானுடத்திற்கு நன்மை கிட்டியிருக்கும். நெப்போலியனும் மற்றவர்களும் பெரும் பேரரசுகளை உருவாக்கியவர்கள். இந்த வரிசையில்  இதைத் தாண்டிய பெரிய மனிதர்கள் உள்ளனர்.  அவர்கள் பேரரசுகளை உருவாக்கியவர்கள் அல்ல. அண்டங் களை உருவாக்கியவர்கள். அவர்கள் இந்த அண்டங்களைக் கண்டுபிடிக்கும் போது அவர்களது கைகளில் எந்த மனிதனுடைய இரத்தக் கறையும் படியவில்லை. தாலமி கண்டறிந்த அண்டம் 1400 ஆண்டுகள் நிலைத்தது. நியுட்டனின் கண்டுபிடிப்பும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது.  ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த அண்டம் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்று என்னால் கூற முடியாது” (There is always a great deal to conceal. If you take(There is always a great deal to conceal. If you takethe typical great man of our historic epoch, and suppose that Ihad to rise here tonight to propose a toast of Napoleon. Well,undoubtedly I could say many very flattering things aboutNapoleon. But the one thing which I should not be able to sayabout him would be perhaps the most important thing. Andthat was that it would perhaps have been better for the humanrace if he had never been born. Napoleon, and other greatmen of his type, they were makers of empire. But there’s anorder of men who get beyond that. They are not makers ofempire but they are makers of universe. And when they havemade those universes, their hands are unstained by the bloodof any human being on earth. Ptolemy made a universe whichlasted 1400 years. Newton also made a universe which haslasted 300 years. Einstein has made a universe and I can’t tellyou how long that will last) என்று குறிப்பிட்டார்.

பெர்னார்ட்ஷா குறிப்பிட்ட வரிசையில் அறிஞர் ஹாகிங் தனிச்சிறப்போடு வலம் வருகிறார். காரணம் மற்ற வானியல் அறிஞர்களைப் போல இவர் உடல் நலம் பெற்றிருக்கவில்லை. இந்த அறிவியல் மேதை சந்தித்த உடல் ரீதியான இடர்கள் என்ன? அவர் எப்படி அவற்றை எதிர்கொண்டார்? நோயுடன் கூடிய வாழ்க்கை போராட்டங்களுக்கு இடையில் அறிவியல் திறனை எப்படி வளர்த்துக் கொண்டார்? அவரைத் தாக்கிய நோயினுடைய கொடூரத்தின் தன்மைகள் என்ன? பகுத்தறிவு வாதியான ஹாகிங் மலை போன்ற மன உறுதியால் அக்கொடூரத்தை வென்று அவர் தொடர்ந்து படைத்த சாதனைகள்தான் என்ன? இது போன்ற வினாக்களுக்கு ஹாகிங் வாழ்க்கையும் அவரது படைப்புகளும் விடையாக அமைகின்றன. வள்ளுவர் சுட்டிய ஆள்வினையுடைமையை ஹாகிங் வாழ்வில் காண முடிகிறது.

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்           - குறள் 620

என்ற குறளுக்கு அவர் ஓவியமாகவே வாழ்ந்து மறைந்தார்.  ஸ்டீபன் ஹாகிங் 1942ஆம் ஆண்டில் சனவரி 8ஆம் நாள் கலிலியோ மறைந்த 300வது ஆண்டு நினைவு நாளில் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் நகரில் பிறந்தார். பள்ளிப் படிப்பு முடித்து ஆக்ஸ்போட் கல்லூரியில் 17ஆம் வயதில் இயற்பியல் பட்டப்படிப்பைத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும் போது படகு ஓட்டும் விளையாட்டில் ஆர்வம் கொண்டு பல போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

21ஆவது வயதில் அவரது உருவத் தோற்றத்தில் திடீரென்று மாறுதல்கள் தென்பட்டன. எவ்விதக் காரண மின்றியும் அவர் அடிக்கடி கீழே விழுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவரது தோள்பட்டை தண்டுவடம் பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சோகமான நிகழ்வுகளை ஹாகிங் பின்வருமாறு தனது படைப்பு களில் வர்ணித்துள்ளார். மிகக்கொடுமையான நரம்புத் தளர்ச்சி நோயினால் தாக்கப்பட்டேன். இனி அன்றாட வாழ்வை எல்லோ ரையும் போல் தொடர முடியாது என்பதை அறிந்து அதிர்ச்சிய டைந்தேன்.  சில ஆண்டுகளில் நான் இறந்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். வாழ்க்கையின்மீது எனக்குச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த வுடன் நான் தூக்கிலிடப்படுவது போல ஒரு கனவு கண்டேன். பிறரின் வாழ்வைக் காப்பாற்றுவதற்காக நான் என் வாழ்வைத் தியாகம் செய்வதாக மற்றொரு கனவு கண்டேன். இச்சூழ்நிலை யில்தான் எனது ஆய்வினை  மேற்கொள்ள முடிவு செய்தேன்.

என் வாழ்க்கைப் போராட்டத்தில் மனைவி குழந்தைகள் மாணவர்கள் பெரும் ஆறுதலாகவும் உதவியாகவும் இருந் தார்கள். உணவு உண்பதிலிருந்து மற்ற இயற்கை கடமை களைச் செய்து கொள்வதற்கு 24 மணி நேரமும் மருத்துவத் துணை எனக்குத் தேவைப்பட்டது. 1985இல் நிமோனியா நோயால் தாக்கப்பட்டு தொண்டைக்குழாய் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.  இதனால் பேசும் திறனை முற்றும் இழந்தேன். கலிபோர்னியாவைச் சார்ந்த ஒரு நிறுவனம் ஒரு கருவியை எனக்கு வழங்கியது. கணினி வழியாகவே பேச்சை இணைக் கும் ஆற்றல் பெற்ற இக்கருவியையும் கணினியையும் என்னு டைய சக்கர நாற்காலியில் பொருத்திக் கொடுத்தனர்.

வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளை முறியடித்து உயர் ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டத்தை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் புகழ்மிக்க அறிவியல் அறிஞர் ஐசக் நியுட்டன் 1663 ஆம் ஆண்டில் அமர்ந்த அதே பேராசிரியர் இருக்கையில் அறிவியல் ஆய்வுப் பணியைத் தொடங்கினார் அறிஞர் ஹாகிங். அறிவியல் மேதைகளான நியூட்டன், ஐன்ஸ்டினின் வரிசையில் இயற்பியல் துறையில் மேதையாக விளங்கிய ஹாகிங் படைத்த காலத்தின் சுருக்கமான வரலாறு  (A(ABrief History of Time) என்ற நூல் விற்பனையில் உலக சாதனை படைத்தது. அறிவியல் பயிற்சி இல்லாதவர்களும் படித்துப் புரிந்து கொள்வதற்கு ஏற்ப எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல் தமிழ் உட்பட உலகின் 65 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.

இத்தகைய அறிஞர் மார்ச் 18 2018 அன்று மறைந்தார். மறைந்த பிறகு அவருடைய இறுதிக் கால கருத்துகள் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலும் விரைவில் தமிழ் உட்பட உலக மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படும். இந்த நூலுக்கு  முன்னு ரையை எட்டி ரெட்மைன் வழங்கியுள்ளார். இவர் ஹாகிங் உயிரோடு இருக்கும் போது அவரைப் பற்றிய குறும்படத்தை உருவாக்கியவர். அப்போது அறிஞர் ஹாகிங்கிடம் நேரடியாக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர். குறிப்பாக எட்டி பேராசிரியர் அவர்களே பிறந்தநாளைப் பற்றிக் குறிப்பிட்டு எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்கள் என்று கேட்டுள்ளார். உடனடியாக ஹாகிங் நான் ஒரு சோதிடன் அல்ல. நான் ஒரு வானியல் அறிஞர். என்னைப் பேராசிரியர் என்று அழைப்பதை நிறுத்துங்கள். ஹாகிங் என்று பெயரிட்டு அழையுங்கள் என்று கூறினாராம். இதைக் கண்டு வியந்த எட்டி ரெட்மைன் தனது முன்னுரையில் மிகவும் வலிமை மிக்க மனிதர். தன்னுடைய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை இழந்தும் மற்ற மனிதர் களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர். நாம் ஒரு நகைச்சுவை யாளரை வியப்பிற்குரிய ஓர் அறிவியல் அறிஞரை உண் மையில் அழகான மன ஆற்றலைப் பெற்றவரை இழந்துள் ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலில் ஸ்டீபன் ஹாகிங் குறிப்பிடுவது: அண்டம் வெடிப்பு (Big Bang) உலகிற்குப்  பல அறிவியல் உண்மைகளை அளித்தது. மதவாதத்தில் மூழ்கியிருக்கும் பல கோடி மக்கள் விடுதலை பெற-அறிவு பெற பல கேள்விகளுக்கு அறிவியல் சிறந்த பதில்களைக் காலந்தோறும் அளித்துள்ளது. எனக்குக் கடவுளின் மீது வெறுப்பு கிடையாது. எனது படைப்புகள் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதற்காக எழுதப்பட்டவையல்ல. நம்மைச் சுற்றியுள்ள அண்டத்தைப் பற்றி பகுத்தறிவோடு நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் கருத்துகளைத் தெரிவித்தேன்.

பூமி தட்டையானது என்ற கருத்தியல் மேலோங்கி யிருந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு அரிஸ்டார்கஸ் (Aristarchus)  என்ற மெய்யியல் அறிஞர், பூமி சந்திரனை மறைப்பதனால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்றும் உலகம் உருண்டையானது சூரியன் சந்திரனை மறைக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்தைத் தெரிவித்தார். இத்தகைய அறிஞர்கள் தான் மெய்ப்பொருளை உலகிற்கு அறிவித்தார்கள் என்றார்.

உலகை யார் உருவாக்கினார்கள? அண்டங்களை யார் இயக்குகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு எல்லாம் அறிவியல் பதிலளித்துள்ளது. இவைகள் எல்லாம் கடவுள்  சொல்லி நடப்பது இல்லை என்ற உண்மையும் வெளி வந்தது. இது போன்ற எண்ணற்ற அறிவியல் சார்ந்த பகுத்தறிவுக் கருத்துகளை மிக எளிய முறையில் பதித்துள்ளார் ஹாகிங். இவர் இந்த நூலில் மற்ற கோள்களுக்கு மனிதன் செல்ல முடியுமா? உயிரினங்கள் வாழ்கின்ற கோள்களைக் கண்டுபிடிக்க முடியுமா? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு முயற்சி செய்தால் மனிதன்  எதையும் உருவாக்கலாம் என்பதை நமக்கு அறிவியல் வரலாறு சுட்டுகிறது என்று  கூறியுள்ளார்.  மக்கள் தொகை தற்போது வளர் கின்ற விகிதத்தில் வளர்ந்தால் 27ஆம் நூற்றாண்டில் மனிதனுக்கு இப்பூமியில் நிற்பதற்குத்தான் இடம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

உலகம் வெப்பமயமாதலால் அழியும் தாவரங்கள் உயிரினங்கள் ஆகியவற்றால் பூமி பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் குறிப்பிடுகிறார். நாம் தற்காலத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அணு உலைகளால் ஏற்படும் தீமைகளையும் விளக்கியுள்ளார். ஒரு வேளை அணு ஆயுதப் போர் நடைபெற்றால் மக்கள் தொகை உலகில் குறையும் வாய்ப்பும் உள்ளது என்றும் குறிப்பிட் டுள்ளார். இவ்வாறு உலகம் தொடங்கி அண்டங்கள் வரை உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அறிவியல் ஆய்வு மனப்பான்மையில் கருத்துகளை வழங்கியுள்ளார். பெரு வெடிப் பிற்குப் பிறகுதான் நேரமே தொடங்கியது. அப்படி என்றால் எந்த நேரத்தில் கடவுள் தோன்றியிருப்பார் என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டுள்ளார். இந்நூலை உரிய அனுமதியோடு நல்ல இயற்பியல் வானியல் துறையில்  நன்கு பயிற்சி பெற்ற மொழி பெயர்ப்பாளர்கள் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும். இது அறிவியலுக்கு ஆற்றும் பணி மட்டுமன்று. அறிவியல் சார்ந்த பகுத்தறிவு வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

இரண்டாவதாக ‘பகுத்தறிவிற்காக’ என்னும் நூலில் மூடநம்பிக்கைகளைத் தகர்ப்பதற்கான களத்தில் ஆற்றிய பணிகள் பற்றி, நரேந்தர தபோல்கரால் விளக்கப்பட்டுள்ளது. நரேந்திர தபோல்கர் மருத்துவம் பயின்று அத்தொழிலை வணிகமாக மாற்றாமல், தனது வாழ்நாளில் சமூக சேவைக்குப் பெரும்பங்கு அளித்தவர். தபோல்கர் மகாராஷ்டிர அந்தாஸ்ரத்த நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு அமைப்பை உருவாக்கி, அவர் கொல்லப்படும் வரை அதன் தலைவராகச் செயல்பட்டார்.

இந்நூலில் அறிவியல், மருத்துவ இயல் சார்ந்த பல பகுத்தறிவுக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக மூடநம்பிக்கைகள் மராட்டிய மாநிலத்தின் ஊர்ப் பகுதிகளில் பின்பற்றபட்டபோது அங்குச் சென்று பகுத்தறிவுக் கருத்துகளை, அறிவியல் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதன் காரணமாக மராட்டிய மாநிலத்தில் இவரது அமைப்பு நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் நிறுவப்பட்டது. இவரது அஞ்சாமையும் கடவுள் மறுப்புக் கொள்கையும் பகுத்தறிவுக் கருத்துகளும் பல மதவாதக் குழுக்களையும் போலிச் சாமியார்களையும் நடுங்கச் செய்தது. இவர் ஒரு தனி மனிதர் அல்ல. ஓர் அமைப்பு என்பதை இந்நூல் பல இடங்களில் சுட்டுகிறது.

இந்நூலில் சாமியார்கள், மந்திரவாதிகள், தந்திரங்களைச் செய்பவர்கள்; வசிய முறை ஆகியவற்றில் மோசடிகள் செய்பவர் களுக்கு  எதிராகத் தபோல்கர் கண்ட களங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆப்ரகாம் கோவூர், டாக்டர் அம்பேத்கர் ஆகிய அறிஞர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மராத்திய மாநிலத்திற்கு அப்பால் செயல்படும் பகுத்தறிவு இயக்கங்களைப் பற்றி சில குறிப்புகள் இருப்பினும் தந்தை பெரியாரின் பணிகள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பது அவரது உரைகளில் தெளிவாகத் தென்படுகிறது. ஒரு உரையில் மூடநம்பிக்கை உண்மையில் நம்பிக்கை என்னும் வணிகத்தில் நடத்தப்படும் கருப்புச்சந்தை (Superstition is really black marketing in the business of(Superstition is really black marketing in the business offaith) v என்று குறிப்பிட்டுள்ளார். மூடநம்பிக்கை என்பது வீட்டிலுள்ள  கழிவு அல்லது குப்பை போன்றது அதை அகற்ற வேண்டும் (Superstition is like the trash and litter in a home) என்பதை எனது வாழ்நாள் இலட்சியம் என்றும் குறிப்பிடுகிறார்.

1999இல் பாஜக ஆட்சியின் போது சோதிடத்தைப் பல்கலைக்கழகங்களில் ஒரு பாடத்திட்டமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக எல்லாப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்களுக்கும் சோதிடம் எப்படிப் போலியானது என்பதை விளக்கி ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் நாள் பிள்ளையார் பால் குடித்தார் என்ற செய்தியை இந்துமத வெறியர்கள் பரப்பினார்கள். குறிப்பாக விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ். போன்ற தீய சக்திகள் கோயில்களுக்குச் சென்று பிள்ளையார் சிலைகளுக்குப் பாலை ஊற்றிய போது, தபோல்கரே களம் இறங்கி, அது எவ்வளவு பொய்யானது என்பதை நேரடியாகச் சோதனை செய்து மக்களுக்கு விளக்கினார். இக்காலக் கட்டத்திலிருந்து அவரை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று இந்தத் தீய சக்திகள் முயன்றன என்பதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை.

2010இல் மகாரா`ஷ்டிர அரசு மராட்டிய மாநிலத்தின் சிறந்த படைப்புகளுக்கான பரிசினை தபோல்கருக்கு வழங்க முற்பட்டது. அப்போதைய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் விருதை ஏற்கும்படி கடிதம் எழுதினார். இதை வாங்க மறுத்த தபோல்கர், மராட்டிய மாநிலத்தில் நிலவும் கொடுமையான மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்; அதைத்தான் நான் விரும்புகிறேன் என்று பதிலளித்தார்.

இவர் கடவுளை கல் என்றும், கற்பனை என்றும் அடிக்கடி தனது உரையில் குறிப்பிட்டு வந்தார். இதனால் இந்து மதத் தீவிரவாத அமைப்புகள் இவரைத் தாக்கவும் முற்பட்டன. 2008இல் புனேவில் நடந்த பகுத்தறிவாளர் மாநாட்டில் இவர் மீது தொடர்ந்து செருப்புகள் வீசப்பட்டன. அதைப் பொருட்படுத்தாமல் தனது கருத்தைப் பதிவு செய்தார். அப்போது ஊடகங்கள் செருப்பு வீசுவதை முதன்மைப்படுத்திச் செய்தி வெளியிட்டபோது கடுமையான முறையில் ஊடகங்கள் மீது விமர்சனம் வைத்தார். செருப்பு வீசுவது ஒரு சிறு சம்பவம். ஆனால் பகுத்தறிவுத் தொடர்பான மாநாட்டு உரைகளை உரிய முறையில் வெளியிட வில்லை என்பதையும் குறிப்பிட்டுக் கண்டனம் தெரிவித்தார்.

மிகவும் மென்மையான மனிதர். வலிமையான பகுத்தறிவுவாதி என்று அவரது நண்பர்கள் போற்றினர். 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் நாள், காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மதவெறியர் இருவரால் மிக அருகில் துப்பாக்கியால் தபோல்கர் சுடப்பட்டுக் கொடுமையான முறையில் கொல்லப்பட்டார். இவரது விருப்பம் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு அளிக்க வேண்டும் என்பதாகும். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டதால் காவல் துறை விதிகளின்படி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவ மனைக்குக் கொடையாக இவரது உடல் அளிக்கப்படவில்லை. எவ்வித மதச்சடங்குகள் இன்றி பகுத்தறிவு நெறிக்கேற்ப இவரது மகள்தான் சிதைக்கு நெருப்பூட்டினார்.

இவ்விரு நூல்களைப் படித்தபோது தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தொலை நோக்கோடு ஆற்றிய மானுடப் பணிகள், அமைத்த பகுத்தறிவுக் களங்களை எண்ணி அவைகள் இன்றும் உயிர்ப்போடு இருப்பது பெருமிதம் தருகிறது.

Pin It