ram rajya ratha yatra

இந்தியாவில் ‘இராமராஜ்யம்’ அமைப்பதற்கும், அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவதற்கும் ‘சங்பரிவார்’, ‘இராமராஜ்ய யாத்திரை’ ஒன்றைத் துவக்கி இருக்கிறது. இது “அரசியல் யாத்திரையல்ல; ஆன்மிக பரப்புரை யாத்திரை” என்று அறிவித்துக் கொண்டு கடந்த பிப்.13ஆம் தேதி (மகாசிவராத்திரி நாள்) உ.பி. மாநிலம் அயோத்தியிலிருந்து புறப்பட்டுள்ளது.

41 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரை, 6 மாநிலங்களில் 6000 கிலோ மீட்டர் ‘இராமராஜ்ய’ பிரச்சாரம் செய்து மார்ச் 25 அன்று தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்தில் நிறைவடைகிறது. விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் சம்பத்ராய் என்பவர் தொடங்கி வைத்துப் பேசுகையில், “இந்த யாத்திரையை ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் ஒருங்கிணைக்கவில்லை” என்று ‘எங்கப்பா குதிருக்குள் இல்லை’ என்ற வகையில் பேசி இருக்கிறார். ‘ஸ்ரீ இராமதாச மிஷன் யுனிவர்சல் சொசைட்டி’ என்ற அமைப்பு இதை நடத்துகிறதாம். (கேரளா - மகாராட் டிரத்தில் மட்டும் செயல்படும் அமைப்பு இது)

தேர்தலை சந்திக்க விரும்பும் ம.பி.., கருநாடக மாநிலங்களில் இந்த ‘யாத்திரை’க் குழு பிரச்சாரம் செய்கிறது. இந்த யாத்திரையில் வரும் இரதம், அயோத்தியில் உருவாக்குவதற்காக திட்டமிடப் பட்டுள்ள ‘இராமன் கோயில்’ வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இரத யாத்திரை புறப்பட்ட இடம் அயோத்தி யிலுள்ள விசுவ இந்து பரிஷத் அமைத்துள்ள ‘இராமர் கோயில் பணிமனை’. 1990ஆம் ஆண்டு இந்தப் பணிமனையை விசுவ இந்து பரிஷத் தொடங்கி, இங்கே இராமன் கோயில் கட்டுமானப் பணி களுக்கான கம்பி வேலைகள், கட்டுமான பொருள் சேகரிப்புப் பணிகள், சன்னல், கதவுகள் தயாரிக்கும் வேலைகள் 1993ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகின்றன.

பள்ளிப் பாடத் திட்டத்தில் ‘இராமாயணம்’ குறித்த பாடத்தைச் சேர்க்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். மடாதிபதிகள், சாமியார்களைக் கலந்து ஆலோசித்து ‘இந்து தேசிய நாள்’ ஒன்றை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இந்த யாத்திரையில் வலியுறுத்தப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்று அவர்கள் கூறினாலும், வழி நெடுக இந்த யாத்திரையில் அந்த அமைப்பினரே பங்கேற்று வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ள போலி இஸ்லாமிய அமைப்பான ‘முஸ்லிம் இராஷ்டிர மஞ்ச்’ என்ற அமைப்பின் பெயர் - இந்த யாத்திரையில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. பா.ஜ.க. முன்னணி தலைவர்கள் இந்த யாத்திரைக்கு வரவேற்புகளை அளித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ரத்வி நிரஞ்சன் ஜோதி, நாடாளுமன்ற உறுப்பினர் லல்லுசிங், அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யா ஆகியோர் யாத்திரையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரவேற்பு அளித்து வருகிறார்கள். இது ‘அரசியல் யாத்திரை அல்ல’ என்று சங்பரிவார் கூறுவது அப்பட்டமான பொய் என்பதை இந்த அரசியல் பிரமுகங்கள் பங்கேற்பு அம்பலப்படுத்தி யிருக்கிறது.

1980ஆம் ஆண்டிலும், 1984, 1985, 1989ஆம் ஆண்டுகளிலும் இதேபோல் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து பல்வேறு யாத்திரிகைகளை இராமன் கோயிலுக்காக நடத்தியது. அப்போதும் அரசியல் யாத்திரை அல்ல. ஆன்மிக யாத்திரை என்றே கூறினர். இந்த யாத்திரைகள் மூலம்தான் கரசேவகர்கள் திரட்டப்பட்டனர். இப்போது நடப்பதும் அதே போன்ற சதிதான் என்று பைசாபாத்திலிருந்து ஜன்மோர்ச்சா என்ற பத்திரிகையை நடத்தி வரும் ஷீட்டல் சிங் கூறியுள்ளார்.

உ.பி. முதல்வர் ஆதித்யாநாத், பிரதமர் நரேந்திர மோடி ஆசியுடன் இந்த யாத்திரை நடக்கிறது. மோடி ஆட்சி இன்னும் ஒரு ஆண்டில் தேர்தலை சந்திக்க உள்ள சூழலில் இந்தியா முழுதும் இந்து, இந்து அல்லாதோர் என்ற அணி திரட்டலைத் தொடங்கி விட்டார்கள் என்பதே அயோத்தி மற்றும் பைசாபாத் பகுதியிலுள்ள பொது மக்களான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6 அன்று கடந்த 2017இல் சங்பரிவார் வெற்றி விழா நடத்தி, இராமன் கோயில் கட்டியே தீருவோம் என்று சபதமேற்று, தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். அதன் தொடர் நிகழ்வுகள் உ.பி. அரசின் முழு ஆதரவோடு தொடங்கி நடந்து வருகின்றன. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இஸ்லாமியர்களுக்கான நில உரிமை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவர் அஷீம் அன்சாரி. அவர் 2 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்து விட்டார். அவரது மகன் இக்பால் அன்சாரி, “மசூதி இடிக்கப்பட்டபோது எனக்கு 20 வயது. சங்பரிவார்கள் அயோத்தியில் நடத்திய வெறியாட்டங்களை என்னால் மறக்கவே முடியாது. அச்சத்திலும் பதைபதைப்புகளிலும் நான் அதிர்ந்து போய் நின்ற தருணம் அது. கடந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று அவர்கள் நடத்திய வெற்றி விழா கொண்டாட்டங்கள், அதே போன்ற அச்சத்தையே எனக்கு ஏற்படுத்தியது. மற்றுமொரு இரத்தக் களறிக்கு தயாராகி வருகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது” என்றார்.

1949ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவில் இராமன், சீதை, இலட்சுமணன் சிலைகளைக் கொண்டு வந்து சங்பரிவார் ஆட்கள் பாபர் மசூதிக்குள் போட்டு விட்டு, இராமன் சுயம்புவாகத் தோன்றியதாகப் பொய் சொல்லி வந்ததை 1949ஆம் ஆண்டு முதலே இடைவிடாது கூறி வந்தவர் ஹஷீம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணமடைந்த நிலையில் அவரது மகன் இக்பால் தொடர்ந்து பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கை அவரின் வாரிசுதாரராக இருந்து நடத்தி வருகிறார்.

- தகவல்கள் ‘பிரன்ட் லைன்’ மார்ச் 16, 2018

Pin It