உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்காட்லாந்து தேசத்திற்கான பொது வாக்கெடுப்பு செப்டம்பர் 18 அன்று நடைபெற்று, அம்மக்கள் பிரித்தானியாவோடு இணைந்து இருப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். இப்பொதுவாக்கெடுப்பிற்கு முன்னர் நடைபெற்ற விவாதங்களும் அதன் இறுதி முடிவும் உலகம் முழுவதும் பலத்த அரசியல் கருத்து மோதல்களை உண்டாக்கி மீண்டும் ஒரு முறை தேசங்களின் அரசியல் சுயநிர்ணய உரிமை பல்வேறு முகாம்களுக்கு மத்தியில் விவாதப் பொருளாக மாற்றியுள்ளது.

scotland

 தீவிர வலதுசாரிகள், பன்னாட்டு அதிகார மையங்கள், மூன்றாம் உலக நாடுகளின் அரச பீடங்கள், உலகெங்கும் போராடி வரும் தேசிய விடுதலை ஆற்றல்கள், சோசலிஸ்டுகள் ஆகியோர் தங்கள் நோக்கிலிருந்து இச்சிக்கலின் நடப்பு அரசியல் யதார்த்தம் குறித்தப் பரிசீலனையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இது குறித்த விவாதத்தை இன்றைய சமகால அரசியல் சூழலோடு பொருத்தி நாமும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அழகான ஸ்காட்லாந்து தேசமும் அதன் மக்களும் முன்னூற்றி ஏழு ஆண்டு காலமாக பெரிய பிரித்தானியாவோடு (Great Britain) கொண்டிருந்த இணைப்பு குறித்த மீள்பரிசீலனையை, 21-ஆம் நூற்றாண்டின் மனிதகுல நாகரீக வளர்ச்சியின் உச்சபட்ச நவீன அரசியல் தீர்வு முறையோடு பொருத்தி தங்கள் சிக்கலுக்கு விடைதேட முயன்றிருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) அரசியல் அமைப்பில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய நான்கு தேசங்களும் உள்ளடங்கியுள்ளன. இந்த அரசமைப்பின் கொடுங் கோன்மையின் கீழ் ஐரீஷ் மக்கள் வலி மிகுந்த துயரைச் சந்தித்திருக்கிறார்கள். மூன்று நூற்றாண்டின் கடினமான போராட்டத்திற்குப் பிறகு, மத ரீதியாக துண்டாடப்பட்ட சிறிய அயர்லாந்து தேசத்தைத்தான் அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆங்கில காலனிய ஆதிக்கத்தின் இரத்த வரலாற்றின் சுவடை உலகம் இன்றும் மறந்துவிடவில்லை. ஸ்காட்லாந்தின் வரலாறும் இதற்கு மாறுபட்டதல்ல. பிரித்தானிய அரசமைப்புக்கு உட்பட்ட போராட்டத்தின் ஊடாக தங்கள் உரிமைகளைக் கோரிக் கொண்டிருந்த ஸ்காட் மக்கள் முட்டி முட்டி மோதி, இப் போது பொது வாக் கெடுப்பிற்கு வந்து நின்றிருக்கிறார்கள். ஸ்காட்லாந்து தனியரசுக்கான கோரிக்கையை ஸ்காட்லாந்தின் தேசியவாதக் கட்சியும், ஸ்காட் சோசலிசக் கட்சியும் ஒருங்கே முன்னெடுத்திருக்கின்றன. இக் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் பல உரைகளில் குறிப்பிட்டிருப்பதுபோல அவர்களுடைய கோரிக்கை ஒரு வழக்கமான தேசியவாதக் கோரிக்கை அல்ல. மாறாக ஸ்காட் சமூகத் தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ள அரசியல் அமைப்பு முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவது. நார்டிக் நாடுகளைப் போன்ற வளர்ச்சியடைந்த சனநாயக சமூக ஏற்பாட்டை கண்டடைவதற்கான வழி முறையாகத்தான் தங்களுடைய தனி யரசுக் கோரிக்கையை முன்னெடுத் திருக்கிறார்கள்.

பொதுவாக்கெடுப்புக்கான வாதப் பிரதிவாதங்களில் தனியரசுக் கோரிக் கைக்கான ஆதரவாளர்கள் முன்வைத்த காரணங்கள், முதன்மையாக பிரித் தானிய அரசுடைய சமூக சீர்த் திருத்த நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார சீர்த்திருத்தத்த நடவடிக்கைகளை மையமிட்டு இருந்தன. இதில் ஸ்காட் மக்களின் தேசிய அடையாளமோ அல்லது அது சார்ந்த உணர்ச்சிப் பூர்வமான கருத்துகளின் முன் வைப்போ மங்கலானதாகவே உருவம் கொண்டிருந்தது. அதுவும்கூட ஸ்காட் பெருமைவாத அடிப்படையில் அல்லாமல் இங்கிலாந்தில் வளர்ந்துவரும் ஆங்கிலப் பெருந்தேசியவாதத்திற்கு எதிரானதாகவே அமைந் திருந்தன.

ஸ்காட்லாந்தின் பொருளியல் நிலைமை பிரித் தானியாவின் மற்றையப் பகுதிகளைவிட மிகவும் பின்தங்கியதாகவே உள்ளது. ஏறக்குறைய பதினேழு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். மற்றைய ஐரோப்பிய தேசங்களைவிட அதீத வறுமை சூழல் நிலவுவதையே இப்புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஸ்காட் லாந்து மக்களின் வாழ்க்கைத் தரம் அங்குள்ள அரசின் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சார்ந்தே இருக்கிறது. அரசின் மொத்த வருவாயில் பொதுச் செலவினங்களுக்கு அதிகம் செலவிடுவதன் வாயிலாக ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் ஓரளவுக்கு உத்தரவாதப்படுத்தப் படுகிறது. இந்த சமூகக் காப்பு நடவடிக்கையில் இருந்து விலகிக் கொள்வதை மையப்படுத்திய பிரித் தானிய மைய அரசின் அரசியல் பொருளாதார சீர்த்திருத்தங்கள் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கின்றன. ஒருபுறம் ஸ்காட்லாந்து தேசத்தின் வளங்களைச் சூறையாடிக்கொண்டு, உற்பத்தி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை உத்தரவாதப்படுத்தாத நிலையில், சமூகப் காப்பு நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ளும் சீர்த்திருத்தங்கள் பிரித்தானிய அரசு மீது கோபத்தையும் எல்லையற்ற சீற்றத்தையும் ஸ்காட்லாந்து மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக இங்கிலாந்தில் வளர்ந்துவரும் வலதுசாரிப் போக்கும் பழமைவாதப் பிடிப்பும் பிற மக்களுக்கு அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் அதிகரித்துள்ளது. இன்னொருபுறம் தாட்சர் காலந்தொடங்கி தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவரும் புதிய தாராளவாதக் கொள்கைகள் சமூகப் பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கி உள்ளது. பி.என்.பி (British Nationalist Party) மற்றும் யூகிப் (United Kingdom Independent Party) ஆகிய தீவிர வலது சாரிக் கட்சிகள் பிற மக்கள் மீதான இன வெறுப்பையும் வன்முறை நடவடிக்கைகளையும் தூண்டிவிடுகின்றன. தொழிலாளர் கட்சியும் டோரிக் கட்சியும் வளர்ந்துவரும் பாசிச அரசியல் நிலைமையைக் கண்டு கொள்ளாமலும் மக்கள் விரோதப் பொருளாதார சீர்த்திருத்தங்களை நிறை வேற்றுபவையாகவும் இருக்கின்றன. அடிப்படையில் ஸ்காட்லாந்தின் பெருந்திரளான உழைக்கும் மக்கள், தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்களாகவும் தாராளவாத இடதுசாய்வு உள்ளவர்களாகவும் இருப்பவர்கள். இந்நிலைமைதான் தனியரசுக் கோரிக்கையைத் தீவிரப் படுத்தியது.

வளர்ச்சியடைந்த சமூக அரசியல் உணர்வுள்ள ஸ்காட்லாந்து மக்களுக்கு மைய நீரோட்டக் கட்சிகள் துரோகம் இழைப்பதாகவும் புதிய வலதுசாரிக் கட்சிகள் அச்சத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. இந்நிலையில்தான், வளர்ச்சி அடைந்த நார்டிக் நாடுகளைப் போன்ற மேம்பட்ட கூட்டரசுக்கான அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தையும் ஏகபோக மூலதனம் மற்றும் புதிய தாராளவாத பொருளாதார அமைப்புக்கு மாற்றாக முற் போக்கான பொருளாதார அமைப்பையும் கோருவதன் பின்னணியில் தனியரசுக் கோரிக்கையை முன் வைத்தார்கள்.

பொதுவாக்கெடுப்பும் பிந்தைய நிலவரமும்:

ஸ்காட் மக்கள் மத்தியில் தனியரசுக் கோரிக்கைக்கான ஆதரவு செப்டம்பருக்கு முந்தைய இரண்டு மாதங்களில் பெருமளவு அதிகரித்து வருவதைக் கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில், வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்றமும் பக்கிங்காம் அரண்மனை வட்டாரமும் பதற்றம் அடைந்து அலறத் தொடங்கின. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இரண்டு பிரதானக் கட்சிகளும் ஏகபோக ஊடக அதிகார சக்திகளும் ஸ்காட்லாந்தின் மேட்டுக்குடி வர்க்கமும் தனியரசுக் கோரிக்கைக்கு எதிராக ரசபாசமான பல அனுதாப நாடகங்களை அரங்கேற்றின. ஒருபுறம் ஸ்காட்லாந்து பிரிந்தால் ஐரோப்பிய யூனியனின் சலுகைகளை இழக்க நேரிடும், பெரும் பொருளாதாரக் குழுப்பம் நிகழும், இருக்கின்ற உத்தரவாதமான பணிப் பாதுகாப்பை, சமூகப் பாதுகாப்பை இழக்க நேரிடும் எனப் பயமுறுத்தியும் இன்னொருபுறம் நாமெல்லாம் ஒரு தாய் மக்கள், ஸ்காட்லாந்திற்கு அதிகாரத்தைப் பரவலாக்குவோம், சமமற்ற விவகாரங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம், பொதுவாக்கெடுப்பு அன்று ஸ்காட்டின் தேசியக் கொடியை உடையாக இங்கிலாந்தின் அதிகார வர்க்கமும் அரசியல் நடிகர்களும் அணிவார்கள் என்றெல்லாம் நயமாகப் பேசியும் ஸ்காட்டின் மேட்டுக்குடியும் இங்கிலாந்தின் ஆளும்வர்க்கமும் இணைந்து ஒரு கூட்டு நாடகத்தை அரங்கேற்றினர். ஆனால், ஸ்காட் மக்களும் சோசலிஸ்ட் களும் சனநாயக ஆற்றல்களும் இந்த நாடகத்தைப் புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் மேம்பட்ட வழியில் இணைந்திருப்பது என்ற ஓர் அரசியல் தெரிவை மேற்கொண்டு தங்கள் அரசியல் கோரிக்கைக்கு பின்னுள்ள சமூகப் பொரு ளாதாரக் கோரிக்கைகளுக்கான நியாயத்தையும் அழுத்தத்தையும் அனைத்துலக சமூகத்தின் முன் வலுப்படுத்தி யுள்ளனர். மொத்தம் பதிவான 84.6% வாக்குகளில் 44.7% வாக்குகள் தனியரசுக்கும் 55.3% வாக்குகள் சேர்ந்திருப்பதற்கும் பதிவானது. இந்நேரத்தில் நமக்கு, 'நண்பனை நிதானமாக தேர்வு செய். நண்பனை மாற்றுவதை அதைவிட நிதானமாக செய்!' என்ற ஸ்காட் லாந்தின் புகழ்பெற்ற பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது.

பொதுவாக்கெடுப்பும் உலகமும்:

ஸ்காட் தனியரசுக் கோரிக்கைக்கு அதரவு பெருகுவதைக் கண்ட அமெரிக்க மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகங்களும் உலகின் அதிகார மையங்களும் பதற்றத்தை வெளிப்படுத்தின. உலகம் முழுதும் இருக்கும் சோசலிஸ்ட்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் ஆங்கிலப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணி செயல்வீரர்களும் ஸ்காட் மக்களின் தனியரசுக் கோரிக்கையை உற்சாகத்துடன் ஆதரித்து உலகம் முழுதும் எடுத்துச் சென்றனர்.

ஸ்பெயினின் ஸ்கேட்டலினா தேச மக்களும் கிழக்கு உக்ரைனின் டொனஸ்கு தேச மக்களும் தங்களின் தேச விடுதலைக் கோரிக்கையை முன்னிறுத்தி ஸ்காட் மக்களை வாழ்த்தி பல்லாயிரக்கணக்கில் ஆதரவுப் பேரணிகளில் பங்கு பெற்றனர். காஷ்மீர், குர்து, பாலஸ்தீன், குயூபக், பாஸ்க், ஈழம் என தேசிய விடுதலைப் போராட்டத்தில் கள முனையில் இருக்கின்ற தேச மக்கள், மீண்டும் ஒருமுறை தேச - அரசு சிக்கலை சமாதானப்பூர்வமாக சனநாயக வழியில் உலக அரங்கில் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற உற்சாகம் அடைந்தனர். ஆனால் உலகின் அதிகார மையங்களும் மூன்றாம் உலக நாட்டின் நாடாளுமன்ற மன்னர்களும் வலதுசாரி பிற் போக்கு சக்திகளும் இதற்கு எதிர்நிலையில் நின்றன. மக்களின் சுயநிர்ணய உரிமையைத் தோற்கடிப்பது ஏகாதிபத்திய பொருளாதாரவாத எல்லைக்குள் அல்லது பெருந்தேசிய பெருமூலதன அரசமைப்புக்குள் ஒடுக்கப் படும் தேசங்களின் வளங்களை, மக்களின் உழைப்பைச் சூறையாடுவது, வன்முறையின் ஊடாக ஒடுக்கப்படும் தேசங்களை இரத்தக் களரியால் மூழ்கடிப்பது என்ற பழைய சாம்ராஜ்ஜிய காலக் கனவுகளோடு புதிய உலக மயமாக்கலை அமல்படுத்தும் நிலையில் ஸ்காட்லாந்தின் பொதுவாக்கெடுப்பை எதிர்த்து நின்றனர்.

நமது தமிழகத்தின் குறுகிய தேசியவாத ஆய் வாளர்களோ எவ்வித வர்க்கப் பார்வையுமின்றி உலகமய ஒழுங்கமைப்பின் கால வரலாற்றுப் பார்வையுமின்றி ஸ்காட்லாந்தில் பிற இன மக்களின் குடியேற்றமும் விகிதாச்சார அதிகரிப்பும் பொது வாக்கெடுப்பின் முடிவை நிர்ணயித்ததில் முதன்மை பங்கு வகித்தது என்ற மேம்போக்கான இனவாத ஆய்வு முடிவுகளை அறிவியலாக முன் வைக்க முயற் சிக்கிறார்கள். உண்மையில் சொல்லப் போனால், முழு சுதந்திரத்திற்கு பதிலாக இங்கிலாந்து அரசியின் கீழ் தனிநாடாக இருக்கத் தயார் என்ற பிற்போக்கு கோரிக்கையைத் தான் ஸ்காட்லாந்தின் தேசியவாதக் கட்சித் தலைவரும் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் முதல் அமைச்சருமான அலெக்ஸ் அல்மாண்டு முன் வைத்தார் என்ற உண்மையைக் கூட இவர்கள் சொல்ல மறுக்கின்றார்கள். ஆனால் ஸ்காட் சோசலிஸ்ட் கட்சிதான் முழு சுதந்திரத்தையும் அக்கோரிக்கைக்கான சமூகப் பொருளாதார உள்ளடக்கத்தையும் தீவிரமாக எடுத்துச் சென்றது, அதன் பிறகுதான் தனியரசுக்கான ஆதரவு வாக்கு சதவிகிதம் பெருகியது என்பதையும் இந்த நேரத்தில் ஓசையின்றி மறைத்துவிடுகிறார்கள். ஒரு மொழி இன மக்கள் என்பதால் எழுந்த கோரிக்கையாக விளக்கப்படுத்தி, ஸ்காட்லாந்து மக்களின் சுதந்திரக் கோரிக்கைக்கு பின்னுள்ள சமூகப் பொருளாதாரக் காரணிகளை மூடி மறைத்து, ஒரு தேசத்தில் தேசிய மற்றும் மொழிச் சிறுபான்மையினரை எதிர் நிறுத்தி, சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையே குழி தோண்டிப் புதைத்து விடுகிறார்கள். தேசம், தேச - அரசு, சனநாயகம் போன்ற வளர்ச்சியடைந்த அரசியல் வரையறுப்புகளை இனவாத சேற்றுக்குள் மூழ்கடித்துவிடுகிறார்கள்.

இன்றைய உலகயமாக்கலை, பெருமூலதனக் கொள்ளையை, அதற்கிசைவாக நடத்தப்படும் ஏகாதிபத்திய பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்த ஒரு போராட்டத்தின் பகுதியாகத்தான் தேசிய சுதந்திரத்தைக் காத்துக் கொள்ள முடியும் என்ற சமகால அரசியல் யதார்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசியப் போராட்டத்திற்கு மொழிவரம்போ இனவாத ஆய்வோ மட்டும் போதுமானதல்ல. அக்குறிப்பிட்ட சமூகத்தின் திட்டவட்டமான அரசியல் பொருளாதார நலன்களைப் புரிந்து கொள்வதும் அதற்கான திட்டவட்டமான கோரிக்கைகளை வளர்த்தெடுப்பதும் இன்றியமையாததாகும். இதை தான் ஸ்காட்லாந்து பொதுவாக்கெடுப்பும் அதன் முடிவும் நமக்கு சுட்டி நிற்கின்றன.