பா.ச.க.வின் வியூகம்

பா.ச.க. வென்றால் அதன் அடை யாளம் அகண்ட பாரதம், இராமர் கோயில், பார்ப்பன பனியா சமூக அடித்தளம் என்பவை பழையக் கதை. வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு என்ற முழக்கங்களுடன் காங்கிரசு எதிர்ப்பை அறுவடை செய்த பா.ச.க. ஒவ்வொரு மாநிலமாக கைப்பற்றி நாடெங்கும் காவிக் கொடியை நாட்டி வருகிறது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், அரியானா வீழ்ந்துவிட்டன. கேரளா, அசாம், மேற்கு வங்கத்திலும் கால் பதிக்கும் என்று ஆரூடங்கள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வியூகம். தமிழ்நாட்டிற்கு என்ன?

இந்திய அளவிலேயே தன் பார்ப்பன பனியா அடையாளத்தை மூடி மறைத்து பிற்படுத்தப்பட்ட அடையாளத்தைக் காட்டி வருகிறது பா.ச.க. அதன் தலைவர் அமித் ஷா பனியாவென்றாலும் பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டின் அடையாளம் சமூக நீதி, இட ஓதுக்கீடு, பெயரளவிலானப் பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் மொழிப்பற்று ஆகியவையாகும். இதை எல்லாம் வைத்துத் தான் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இன்ன பிற தமிழ்நாட்டவர்களும் கடை நடத்தி வருகிறார்கள். நாம் ஏன் இவற்றைக் கையில் எடுக்கக் கூடாதென்று பா.ச.க. துணிந்து விட்டது.

 அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டு 64 ஆண்டுகள் ஆன நிலையில் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னார். உடனே, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பாராட்டி அகம் மகிழ்ந்தார். அரசு துறையில் தான் இன்று இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. அரசு துறையோ கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. தனியார் துறைதான் இன்று வளர்ந்து வருகிறது. தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு இல்லாமல் அரசு துறையில் மட்டும் இட ஒதுக்கீடு இருப்பதால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குறிப்பிடும்படியான பயன் ஒன்றும் இல்லை. இதை ஆர்.எஸ்.எஸ். நன்கு உணர்ந்திருப்பதால் ’மனமிறங்கி’ இப்போது அரசு துறையில் மட்டும் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டை ஏற்பதாகச் சொல்லியுள்ளது. கிட்டதட்ட காதில் பூ சுற்றும் கதைதான்.

அடுத்து, தமிழக பா.ச.க. வின் தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜனைக் கொண்டு வந்திருப்பதாகும். முன்பு பா.ச.க. வின் தமிழக முகமாக இருந்தவர் இல. கணேசன் அவர்கள். அவரை மெல்லப் பின்னுக்கு தள்ளி பொன். இராதாகிருஷ்ணனும், தமிழிசையும் பா.ச.க வின் முகமாகியுள்ளனர். வேலூர் தொகுதியில் போட்டியிட விரும்பிய தமிழிசையின் ஆசையில் மண்ணைப் போட்டார் புதிய நீதிக் கட்சியின் ஏ.சி. சண்முகம். அவர் கொடுத்த பெருந்தொகைக்கு கைமாறாய் வேலூரில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். அதற்கு பதிலீடாகத்தான் தமிழிசைக்கு தலைவர் பதவி. மொத்தத்தில் பா.ச.க. வின் நோக்கம் தனக்கொரு பிற்படுத்தபட்ட சமூக அடையாளத்தைக் காட்டுவதுதான். எனவே, பழைய பாணியில் பா.ச.க. எதிர்ப்பையும் பார்ப்பன எதிர்ப்பையும் சமப்படுத்தி அரசியல் செய்யும் போக்கைத் தடுத்துவிட்டனர். இதை குழப்பும் வேலையை அவ்வப்போது சுப்பிரமணிய சுவாமி செய்தாலும் அவர் வாயை அடைக்கும் வேலையை மெல்ல மெல்ல பா.ச.க. செய்யும்.

அடுத்து பா.ச.க. கையிலெடுத்திருப்பது இந்துப் பெருமிதத்திற்கு மாறாகத் தமிழ் பெருமிதத்தை ‘‘வெளிமாநிலங்களில் நாங்கள் பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்து ஆட்சியதிகாரம் வரை சென்று விட்டோம். தமிழகத்தில் தேசிய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என நிறைய மாயையான விஷயங்கள் இருந்தன. இதனால் எங்களை வடநாட்டு கட்சியாகவே பார்த்தார்கள். அதனால் நாங்கள் மைனஸிலிருந்து ஆரம்பித்து தற்போதுதான் பூஜ்யத்துக்கு வந்துள்ளோம். மக்களுக்கு இப்போதுதான் எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே இனி எங்கள் கட்சி தமிழகத்தில் வளரும்.” என்று நம்பிக்கை தெரிவித்துள்ள இல.கணேசன், ஒருபக்கம் சமஸ்கிருத வாரத்தைக் கொண்டாடிக் கொண்டே மறுபக்கம் தமிழ் புத்தாண்டில் (தை மாதமல்ல, சித்திரை மாதத்தில்) தமிழ் மொழி வாரம் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மனு போடுகிறார். தருண் விஜய் தமிழ் மொழிக்காக மோடியிடம் பேசுகிறார். வடநாட்டுக்காரரின் தமிழ்ப் பற்றைப் பார்த்து பரவசத்தில் இருக்கிறது மொழிப் பற்றாளர்கள். வைரமுத்து தருண் விஜய்க்குப் பாராட்டு விழாவே எடுத்துவிட்டார்.

நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் 90 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தமிழ்நாட்டில் இராஜேந்திர சோழனின் 1000வது முடிசூடிய ஆண்டு விழாவையொட்டி பேரணி நடத்துவதாகச் சொல்கிறார்கள். மராட்டியத்திற்கு ஒரு சிவாஜி, தமிழ்நாட்டிற்கு ‘இராஜேந்திர சோழன். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அவுரங்கசிப்பும், அக்பருக்கும், ஹுமாயுனும்தான் பிரச்சனை. இராஜ இராஜ சோழனும், இராஜேந்திரனும், பண்டார வன்னியனும் பிரச்சனையில்லை. தமிழ் மன்னரைப் போற்றி தெலுங்கு மன்னரைத் தூற்றி வடுகர் எதிர்ப்பு அரசியல் பேசுவோர்க்கும், சோழர் பரம்பரை என்று பெருமை பேசும் தமிழ்நாட்டு மன்னர் தேசியவாதிகளுக்கும் வேட்டு வைத்தது ஆர்.எஸ்.எஸ். கருணாநிதிக்கு கை கொடுத்த சோழன் நமக்கும் கை கொடுப்பான் என்று புரிந்துவிட்டது போலும்.

பா.ச.க. கண்ணி வைத்து முன்னேறி வருகிறது. புதைந்துப் போன மன்னர்களின் வரலாற்றுக்குள்ளும் மொழிப் பெருமை அரசியலுக்குள்ளும் தலையைவிட்டு மாட்டிக் கொண்டுள்ளவர்களுக்கு பா.ச.க. பொறி வைத்துவிட்டது. சமஸ்கிருதத்தையும், அகண்ட பாரதத்தையும், தமிழையும், இராஜேந்திர சோழனையும், உலகமயத்தையும் ஒரு வரிசையில் நிறுத்தும் இரசவாதத்தைப் பயின்று வருகிறது. அதானியையும், சங்கரச்சாரியாரையும், கமலஹாசனையும், அமீர்கானையும், சசி தரூரையும், சச்சினையும் ஒரு வரிசையில் நிறுத்திவிட்டார்கள் தானே!

பாரதத்தின் பெருமைகளில் தமிழ் மொழியும் ஒன்றென்று சொல்லிக் கொண்டு மோடியும், பொன்னாரும், தமிழிசையும், தருண் விஜய்யும் தேர்தலின் போது படையெடுத்து வந்து தமிழர் நெற்றியில் பட்டை நாமம் போடுவார்கள். பா.ச.க. வின் தமிழ்நாட்டு வியூகத்தில் தமிழ் பெருமிதத்திற்கு ஓர் இடமுண்டு.

மொழிப் பற்றாளர்கள் விழித்து கொள்ள வேண்டும். மக்கள் பற்றோடு மொழிப் பற்றையும் இணைக்கும் இரசவாதம் தான் பா.ச.க. வின் வியூகத்தை முறியடிக்க முடியும்.