வெகுகாலமாக இப்போதுள்ள தொழிலாளர் தொடர்பான சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். இப்போது, மோடி அரசு உடனடியாக தொழிலாளர் தொடர்பான சட்டங்களை மாற்றியமைக்கிறேன் என்று குதிக்கிறது. தொழிலாளர்களோ, ‘‘தொழிலாளர் சட்டங்களை மாற்றாதே!” என போராடி வருகிறார்கள். ஏன் இந்த நிலைமை?

நாம் ஏன் தொழிலாளர் சட்டங்களை மாற்றக் கோரினோம்?

1) பல உணவகங்களில் குறைந்தபட்சக் கூலி சட்டம் தொடர்பான ஒரு பெரிய அறிவிப்பு பலகை மாட்டப்பட்டு இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். தொழிலாளர் துறை இப்படி ஒரு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளதால் பல இடங்களில் இப்படி இருக்கும். ஆனால், அதன் முதல் வாசகத்தைப் படித்தவுடனேயே நீங்கள் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள். ‘மாட்சிமை தாங்கிய மன்னர்பிரானின் காலாட்படையில் உள்ளவர்கள் இந்த பிரிவின் கீழ் வரமாட்டார்கள்’ என்றிருக்கும் இந்த சட்டத்தின் கீழே தொழிற்சங்க ஆணையர் யாராவது ஒருவரின் பெயர் அச்சிடப்பட்டு இருக்கும். இந்தியாவில் எங்கு மாட்சிமை தாங்கிய மன்னர்பிரான் இருக்கிறார்? அவருக்கு எங்கே காலாட்படை இருக்கிறது? என்று நீங்கள் குழம்பக் கூடும். விசயம் வேறு ஒன்றுமில்லை. இந்த சட்டம் முதலில் உருவானது ஆங்கிலேயர் காலத்தில். அப்போது பிரிட்டன் இராணுவத்தில் பணியாற்றியக் காலாட்படையினர், தங்களையும் இந்த சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிய போது அரசு இதனை மறுத்து வெளியிட்ட சரத்துதான் மேலே கண்டது. அந்தச் சட்டம் 1948ல் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் மேலே கண்ட சரத்தை மாற்ற வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இன்று வரை அந்த சரத்துகளுடன் அந்த சட்டம் வெளியிடப்படுகிறது. இந்த சட்டம் மட்டுமல்ல. தொழிலாளர் தொடர்பான பல சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை தான். கீழேயுள்ள சட்டங்களைப் பாருங்கள்.

சட்டங்கள் :

1) தொழிலாளர் நிவாரணச் சட்டம் 1923

2) தொழிற்சங்கச் சட்டம் 1926

3) தொழில் நடத்துவோர் பொறுப்பு சட்டம் 1936

4) கூலி அளிப்பு சட்டம் 1938

5) வார விடுமுறை சட்டம் 1942

6) தொழில் தகராறு சட்டம் 1942

7) தொழிலாளர் வேலைஅமர்த்தல் சட்டம் 1946

இவையனைத்தும் அப்போதிருந்த தொழிலாளர் களின் கடும் போராட்டத்தால் உருவாக்கப் பட்டாலும் ஆங்கில அரசாங்கத்தின் விருப்பப்படி பல ஓட்டைகளும் இதில் இருந்தன.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது தொழிலாளர் சட்டங்களைப் பற்றி அப்போதைய காங்கிரசு அரசு கவலைப்படவில்லை, ஆனால் டாக்டர் அம்பேத்கர் விரிவான தொழிலாளர் சட்டங்களின் தேவையை வலியுறுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு இருந்த காரணத்தினால் ஆங்கிலேயர் அளித்த சட்டங்களையாவது ஏற்றுக் கொள்வோம் என்று அதனைச் சட்டமாக்கினார். விவசாயத் தொழிலாளர்களை இந்த தொழிலாளர் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர் கடைசி வரை போராடினார். ஆனால், இன்று வரை இது நிறைவேறவில்லை.

இப்போதுள்ள சட்டங்களில் உள்ள சில முக்கியமான ஒட்டைகளைப் பார்ப்போம்.

1.தொழிற்சங்க சட்டத்தின்படி ஒரு தொழிற் சங்கத்தை உருவாக்க முடியும். ஆனால் அதை ஆலை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. இதனால்தான், பெரும்பான்மையான தொழிற்சாலைகளில் ஆலை நிர்வாகம் நேர்மையான தொழிற்சங்கங்களை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு சில கருங்காலிகளைக் கொண்டு தானே உருவாக்கிய சங்கம்தான் உண்மையான சங்கம் என்று தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி வருகிறது.

2.ஒரு சைக்கிள் திருடுபோனால்கூட உடனடி யாக காவல்துறைக்கு புகார் கொடுத்து வழக்கு தொடரலாம். ஆனால் தொழிலாளர் பிரச்சனை என்றால் முதலில் அரசாங்கம் நியமிக்கும் சமரச அதிகாரியிடம் முறையிட வேண்டும். அவர் நிர்வாகத்தை அழைத்து பேசுவார். இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டாவிடில் அரசுக்கு முறிவறிக்கை அனுப்புவார்.

இதனை அரசு பரிசீலித்து தொழிலாளர் நிர்வாகத்திற்கு வழக்கு தொடரலாம் என்று அனுமதி அளிக்கும். இதன் பிறகே தொழிலாளர்கள் வழக்கு தொடர முடியும். இதில் ஒரு சமரச அதிகாரி எவ்வளவு காலத்திற்குள் இந்த சமரசத்தை முடிக்க வேண்டும். அரசாங்கம் எவ்வளவு காலத்திற்குள் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று எந்த வழிமுறையும் இல்லாததால் ஒரு தொழிலாளர், தான் பாதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரவே பல ஆண்டுகள் ஆகிவிடும்.

3.ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் என்று ஒரு சட்டம் இருக்கிறது. இதன்படி நிரந்தரமாக நடைபெறும் எந்த பணியிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்த முடியாது. அப்படி நிரந்தரப் பணியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருந்தால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிரந்தர பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. ஆனால் தனியார் துறைகள் மட்டுமின்றி எல்லா அரசுப் பொதுத் துறைகளிலும் நிரந்தர பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இலட்சக்கணக்கில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏனெனில், இப்படி விதிக்கு மாறாக ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தினால் அந்த ஆலை நிர்வாகத்தை இந்த சட்டத்தின் மூலமாக தண்டிக்க முடியாது.

 இந்தியாவில் 7% தொழிலாளர்களே அமைப்பாக்கப்பட்டத் துறையில் உள்ளனர். இதிலும் ஒப்பந்தத் தொழிலாளர், பயிற்சி தொழிலாளர், லாஜிஸ்டிக்கில் பணியாற்றும் தொழிலாளர் என்று பலரையும் கழித்துவிட்டால் சுமார் 2% தொழிலாளர்களுக்கே இந்த தொழிற்சட்டங்கள் பொருந்தும். மீதமுள்ள 98% தொழிலாளர்களுக்கு இந்த சட்டம் எதுவும் பொருந்தாது. கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இந்த தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது. இது போன்ற பல காரணங்களால்தான் இந்த சட்டங்களை மாற்ற வேண்டும் என்று போராடி வருகிறோம்.

ஆனால், மோடி அரசாங்கம் என்ன மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது?

1) இப்போது 100 பேருக்கு மேல் பணியாற்றும் தொழிற்சாலைகளை மூடவேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இதனை 1000 பேருக்கு மேல் தொழிலாளர்கள் பணியாற்றும் கம்பெனிகள் மட்டுமே ஆலைமூடலுக்கு அனுமதி பெற்றால் போதும் என்று மோடி அரசு திருத்தம் கொண்டுவர முயற்சிக்கிறது. இதன் மூலமாக நோக்கியா போன்று எந்த ஆலையையும் ஒரே நாள் இரவில் மூடிவிட்டு கிடைத்த இலாபத்தைச் சுருட்டிக் கொண்டு கிளம்பிவிட முடியும்.

2) இரவு நேரத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இப்போது தடையுள்ளது. இதனை மோடி அரசு மாற்றி இரவு நேரத்திலும் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்று திருத்தம் செய்ய நினைக்கிறது.

3) இப்போதுள்ள நிலையிலேயே தொழிற்சங்க ஆய்வாளர்கள் காசு வாங்கிக் கொண்டு ஆலை நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதேயில்லை. மோடிக்கு இதுகூட பொறுக்கவில்லை. நிர்வாகமே ஒரு படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாம். தொழிற்சங்க ஆய்வாளர்கள் அதனைப் படித்துவிட்டு அலுவலகத்திலேயே இருந்தால் போதுமாம்.

4) ‘‘ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டியதில்லை” என்றும் சட்டத்தை மாற்ற முயற்சிக்கிறது.

5) பயிற்சித் தொழிலாளர்களை எல்லா தொழில்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சட்டத் திருத்தம் செய்ய வலியுறுத்துகிறது.

இப்படியாக முதலாளிகளுக்காக முதலாளிகளுக்கென்றே ஒரு முதலாளிய எடுபிடியால் இந்த தொழிலாளர் சட்டத் திருத்தம் வரவுள்ளது. நாம் மனித குரங்கை மனிதனாக்க வேண்டும் என்று கோருகிறோம். மோடியும் மனிதக் குரங்கு மாற வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், உண்மையான குரங்காக மாற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்!

இது நம்மை மட்டுமல்ல, முதலாளிகளில் ஒரு பிரிவினரைக் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதலாளியப் பத்திரிக்கை ”தி இந்து” இந்த தொழிலாளர் சட்டத் திருத்தத்தை விமர்சித்துவிட்டு, மிச்ச சொச்சம் இருக்கும் உரிமைகளையும் பறிக்க அரசே துணைப்போகும் என்றால் தொழிலாளர் நலத்துறையின் பெயரை ’முதலாளிகள் நலத்துறை’ என்று மாற்றிவிட்டு இதனைப் பகிரங்கமாகவே செய்யலாமே! என்று கேள்வி எழுப்புகிறது. மோடிக்கு எது வேண்டுமென்றாலும் தெரியலாம் ஆனால் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படி தொழிலாளர்களின் மீது அடக்குமுறையை ஏவி, மே தின கூட்டத்தைக் கூட நடத்த அனுமதிக்காத இட்லருக்கு அவனுடைய சொந்த நாட்டில் கல்லறை கூட இல்லை. வரலாறு திரும்பவும் பலமாக எழுதப்படும்!