கடந்த செப்.9 அன்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயின் என்னும் தானிய வியாபாரி ஐ.ஐ.டி.களில் சைவ உணவுக்கான தனி உணவகங்கள் கோரி ஒரு கடிதத்தை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தின் சாரம் இதுதான் :

1) அசைவ உணவுகள் உண்ணும் பழக்கம் இந்தியக் கலாச்சாரத்தில் இல்லை

2) அசைவம் உண்பது நமது மாண்புகளை பாதிக்கிறது. மூர்க்கத்தனத்தை வளர்க்கிறது.

3) குற்றச் செயல்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.

4) வன்முறைகளும், சாதி மறுப்பு, மதம் மறுப்பு திருமணங்கள் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது

5) ஐ.ஐ.டி உணவகங்களில் அசைவ உணவுகள் பரிமாறப்படுவது சைவ மாணவர்களை ஈர்க்கிறது. சைவ உணவு உண்பவர்களை இது கெடுக்கிறது. நம் சாப்பாடு பரிசுத்தமாக இருந்தால் தான், நம்மால் பரிசுத்தமாக சிந்திக்க முடியும்.

6) அசைவ உணவு பரிமாறப்படுவதன் மூலம் மேற்கத்திய உலகின் தீய பழக்கவழக்கங்கள் புகுத்தப்படுகின்றன. வெங்காயம், பூண்டு, மாமிசம் போன்ற டாஸ்மிக் (tasmic) உணவுகளை விடுத்து, இந்து தர்மத்தின்படி சாத்வீக உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

7) எனவே, ஐ.ஐ.டி.கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் சைவ உணவிற்கு தனி உணவகங்கள் அமைக்க வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் அனைவரது கோரிக்கையாகும்.

 இந்த அபத்தமான கடிதத்தை அனுப்பியவர் தான் ஒரு சுயம்சேவக் என்றும் (ஆர்.எஸ்.எஸ். தொண்டர்), பா.ஜ.க.வின் ஆதரவாளர் என்றும், அதனால் இன்றைய மோடி அரசு தனது கருத்துகளைப் புரிந்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, இந்தக் கடிதத்தை அனைத்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். இந்தக் கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு பொறுப்புடன் கேட்டுக் கொண்டுள்ளது அமைச்சகம்!

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சில மாணவர்கள், சைவ உணவு உண்பவர்கள் சைவம் சாப்பிடுகிறார்கள். அசைவம் உண்பவர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள். மாணவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. எங்களுக்குள் தேவையில்லாத பிரிவினையை உண்டாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள். ஐ.ஐ.டி சென்னையில் சைவ உணவிற்கு தனி மெஸ் செயல்பட்டு வருகிறது. சுமார் 400 மாணவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். மொத்தம் உள்ள 8000 மாணவர்களுள் இது வெறும் 5% மட்டுமே.

இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உணவுப் பழக்கத்தை கொச்சைப்படுத்தி, மக்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவக் எழுதியுள்ள அறிவுக்கும், அறிவியலுக்குப் புறம்பான ஒரு பார்ப்பனீய ஆதிக்கக் கருத்தியலை, ஒரு மறு பரிசீலனை கூட இல்லாமல், கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்களின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். பார்ப்பனீயக் கட்டுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க காவிக் கும்பல். சுத்தியல் அரிவாள் கொண்டு அதை சுக்குநூறாக்குவோம்!

நன்றி : விசை