மே 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு தமிழீழத்தில் சிங்கள இராணுவத்தின் கடும் அடக்கு முறைக்குள் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்கள் இப்பொழுது சனநாயகப் போராட்டங்கள் வாயிலாக தங்கள் உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் போராடத் தொடங்கியுள்ளனர்.

 கடந்த சனவரி - 2015 க்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் எனும் பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து குடிநீர் மாசுபட்டதற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடத் தொடங்கினர். சமூக வலைதளங்கள் மூலம் தமிழீழ இளைஞர்கள் குடிநீரின் தூய்மையை வலியுறுத்தி இக்கால கட்டத்தில் தொடர்ச்சியானப் பரப்புரையையும் மேற்கொண்டனர்.

கடந்த மார்ச்சு மாதம் இலங்கை அரசு மீது ஐ.நாவில் இனக்கொலைக்கான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக நடைபெற்ற ஊர்வலம், ஒன்றுகூடலில் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

நான்காம் கட்ட ஈழப்போரிலும் போருக்கும் முன்னாலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னைவிட வேகமாக முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக வடக்கில் உள்ள பெண்கள் இத்தகைய சனநாயகப் போராட்டங்களில் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.

house 600மே மாதத் தொடக்கத்தில் புங்குடுத்தீவில் பாலியல் வன்கொடுமையால் பள்ளி மாணவி வித்யா கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து யாழ்ப் பாணம் மட்டுமல்லாது வடகிழக்கு முழுவதும் மக்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி பெருமளவில் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஈழ மக்களின் இப்போராட்டம் இலங்கையின் தெற்குப் பகுதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்திய அரசின் சம்பூர் அனல்மின் நிலையத்திற்காக நிலம் எடுப்பதாகக் கூறி சம்பூரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தங்களைச் சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டுமென வலியுறுத்தி வெகுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த ஆறு ஆண்டுகளாக முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் தமிழீழத்தில் பெருமளவில் நினைவுக் கூறப்பட வில்லை. ஆனால் இந்த ஆண்டு பரவலாக பல மாவட்டங்களில் அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்தனர். குறிப்பாக முள்ளிவாய்க்காலிலும் மக்கள் கூடி, தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகக் கொடூரமான இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழர்கள் ஆறாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கள் சனநாயக உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கியுள்ளனர்.

மக்கள்..மக்கள்..மக்கள் மக்களே வரலாற்றை முன்னகர்த்துகின்றனர்!