‘சூத்திரர்’ கல்வி உரிமையைப் பறித்தது ‘மனுசாஸ்திரம்’. எனவே, அம்பேத்கரும் பெரியாரும் அதை எதிர்த்தனர். மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் - அய்.அய்.டி.கள், இந்தத் தலைவர்களின் சிந்தனைகளுக்கே அய்.அய்.டி. வளாகத்துக்குள் தடைபோட்டன.  ‘மனுதர்மமே’ அய்.அய்.டி. ஏற்றுக் கொண்ட தத்துவம் என்பதே இதற்கான அர்த்தம். இதுகூட ஒரு கண்ணோட்டத்தில் வரவேற்க வேண்டியதுதான். இல்லையேல் தமிழ்நாட்டில் அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் ஆகியோர் ஒரே களத்தில் கரம் கோர்க்க நல்ல வாய்ப்பு உருவாகியிருக்குமா?

IIT 600‘அய்.அய்.டி.’ என்பதற்கு மற்றொரு பெயர் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் - “அய்யர், அய்யங்கார், உயர்கல்வி நிறுவனம்”. வசிஷ்டர் படிப்பு வட்டம், வந்தே மாதரம் படிப்பு வட்டம், இராமாயண படிப்பு வட்டம், விவேகானந்தர் படிப்பு வட்டம், துர்வாசர் படிப்பு வட்டம் என்று வளாகத்தை வேத மயமாக்குவதற்கு அனுமதித்தவர்கள் - அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டத்தை மட்டும் அனுமதிக்க மறுத்தது ஒன்றே போதும் அதன் நிர்வாகத்தைப் புரிந்து கொள்வதற்கு.

சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது திணிக்கப்படும் பாகுபாடுகளை எதிர்த்து 1998இல் தொடங்கி, 2000 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டு காலம் தொடர்  போராட்டங்களைப் பெரியார் திராவிடர் கழகம் முன்னின்று நடத்தியது. தலித் அமைப்புகளை இணைத்து, ‘சமூகநீதி மீட்பு இயக்கம்’ ஒன்றை உருவாக்கிப் போராடியது. பொதுக் கூட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள், ஆளுநரிடம் மனு என்ற வடிவில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ‘அய்.அய்.டி. வளாகத்துக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவுகிறார்கள்’ என்று புதுதில்லியிலிருந்து சுப்பிரணியசாமியைப் பிடித்து அறிக்கை வெளியிட வைத்தது அய்.அய்.டி. நிர்வாகம்.

1998--2000 ஆண்டுகளில் வசந்தா கந்தசாமி என்ற கணிதப் பேராசிரியர், பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், துறைரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் விவரிக்க முடியாத அளவில் பழிவாங்கப்பட்டார். நோபல் பரிசுக்கு இணையாக மதிப்பிடப்படும் ‘பட்நாகர் விருது’, 1996இல் இவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவ்விருது அவருக்கு கிடைத்துவிடாமல் அய்.அய்.டி. நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இதை எதிர்த்து வசந்தா கந்தசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அய்.அய்.டி.யின் ஜாதி வெறிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஏராளம். அத்தனையும் விசாரணைக்கு வராமல் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளன.

இதே அய்.அய்.டி.யில் படித்து, சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்று, அமெரிக்கா-ஜப்பான் போன்ற நாடுகளில் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய பேராசிரியர் ஒருவர் அய்.அய்.டி.யில் பணியாற்ற மனு செய்திருந்தார். அவர் பெயர் முனைவர் முரளிதரன். அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், தகவல் களஞ்சியத்தில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனாலும், அவரிடம் இல்லாமல் போன தகுதி- உயர் குடிப்பிறப்புதான். ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட’ சமுதாயத்தில் பிறந்து விட்டார். உரிய வாய்ப்பும், தகுதியும் இருந்தும் உள்ளே அனுமதிக்க நிர்வாகம் மறுத்தது.  அய்.அய்.டி. இயக்குனராக இருந்த நடராசன், அய்.அய்.டி. வளாகத்துக்குள்ளேயே நுழைவதற்கு தடை விதிக்கும் ஆணையைப் பிறப்பித்தார். இவற்றையெல்லாம் எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்றார். ஆனால் அவருக்கு நீதியின் கதவுகள் திறக்கப்படவேயில்லை.

நாட்டின் தொழில்நுட்ப உயர்கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்த 1959ஆம் ஆண்டில் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் பம்பாய், சென்னை, தில்லி, கான்பூர், கோரக்பூர் மற்றும் கவுகாத்தியில் தொடங்கப்பட்டன. தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த நிறுவனங்களின் வேந்தர் (நீலீணீஸீநீமீறீறீஷீக்ஷீ) குடியரசுத் தலைவர். 1961 ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ், இந்த நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. 1963இல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, வெகுமக்களின் மேம்பாடே இதன் நோக்கம் என்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மக்கள் வரிப்பணத்தில் வெகுமக்கள் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் இந்த நிறுவனம், “புரோகிதர்களின் பூணூல்”களுக்குள் முடக்கப்பட்டுவிட்டது. நிறுவனம் தொடங்கப்பட்டு, 20 ஆண்டுகள்வரை அரசியல் சட்டம் உறுதி செய்திருந்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டையே பின்பற்ற மறுத்துவிட்டனர். 1978ஆம் ஆண்டுதான் அதுவும் நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகே தலித் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைப் பின்பற்ற ஒப்புக்கொண்டனர். அதுவும்கூட கண்துடைப்புதான். அய்.அய்.டி. வரலாற்றில், இதுவரை இந்த இடஒதுக்கீட்டுக்கான இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டதே இல்லை. இப்போதும் என்ன நிலை?

 அய்.அய்.டி. மனிதவளம் மற்றும் சமூக விஞ்ஞானத் துறை, இளம் பேராசிரியர் அருள் சுதர்சன், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெற்றுள்ள தகவல்களே இதை உறுதி செய்கின்றன. 2008-லிருந்து 2015 வரை ஆய்வுப் பட்டப்படிப்புக்கு (பிஎச்.டி.) அனுமதிக்கப்பட்ட தலித் மாணவர் எண்ணிக்கை 142. பழங்குடி மாணவர் எண்ணிக்கை 9. திறந்த போட்டி வழியாக நுழைந்த பார்ப்பனர்கள் - 1592 பேர். மேல் பட்டப்படிப்புக்கு (எம்.எஸ்.) பொது போட்டி வழியாக நுழைந்த பார்ப்பனர் - 1194 பேர். (‘இதில் வெகுசிலர் மட்டுமே முன்னேறிய ஜாதிப் பிரிவினர்) இதில் பிற்படுத்தப்பட்டோர் 740. தலித் மாணவர்கள் 29 பேர். பழங்குடிப் பிரிவு மாணவர் 3 பேர். இது தவிர, ஏனைய துறைகளில் பொதுப் போட்டி வழியாக நுழைந்தவர்கள் 1,194 பார்ப்பன/உயர் ஜாதியினர். 429 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். இதுமட்டுமின்றி 86.57 சதவீத பேராசிரியர்கள்

(464 பேர்) பார்ப்பனர்கள். இதில் மிகச் சிலர் உயர் ஜாதிப் பிரிவினர். பிற்படுத்தப்பட்டவர்கள் 11.01 சதவீதம் மட்டுமே (59 பேர்) தாழ்த்தப்பட்டோர் 2.05 சதவீதம் மட்டுமே (11 பேர்). பழங்குடிப் பிரிவினர் ஒரு சதவீதம்கூட இல்லை 0.31 சதவீதம்தான்

(2 பேர்). மொத்தமுள்ள 536 பேராசிரியர், துணைப் பேராசிரியர், இணைப் பேராசிரியர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பனர்/உயர்ஜாதியினர். சுமார் 650 பேராசிரியர், துணைப் பேராசிரியர்களும், 8000 மாணவர்களும், 3000 ஊழியர்களும் பணியாற்றும் மிகப் பெரும் கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு கொள்கைகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதை இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. (தகவல்: ‘பிரன்ட்லைன்’, ஜூன் 26, 2015)

இவ்வளவுக்குப் பிறகு, 2008ஆம் ஆண்டு மத்திய மனித வளத்துறை அமைச்சகம், இடஒதுக்கீட்டை உறுதி செய்யக் கோரி குறிப்பாணை ஒன்றை அய்.அய்.டி.க்கு அனுப்பியது. தலித் பிரிவினருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம். ஆசிரியர்,-மாணவர் தேர்வுகளில் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த குறிப்பாணை வலியுறுத்தியது. அய்.அய்.டி. நிறுவனம், அந்த ஆணையை அமுல்படுத்த மறுத்ததோடு, அதை எதிர்க்கவும் முடிவெடுத்தது. அய்.அய்.டி., தனது ‘செனட்’ கூட்டத்தைக் கூட்டி, இடஒதுக்கீட்டு ஆணையை நிறைவேற்ற முடியாது என்று தீர்மானமே நிறைவேற்றியது. மத்திய மனித வளத்துறை தனது குறிப்பாணையைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் ஆட்சிக்கே அறிவுறுத்தியது. வெகுமக்கள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட நிறுவனம், தலித், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களுக்கான சட்டப்படியான உரிமைக் கதவுகளை இழுத்து மூடியது.

இந்த நிறுவனங்களில் மக்களின் வரிப் பணத்தில் படித்த ‘அறிவாளிகள்’  இறுதியாண்டு படிக்கும்போதே வெளிநாடுகளில் வேலை நியமன ஆணைகளையும் விசாவையும் பெற்றுக்கொண்டு பட்டம் பெற்ற உடனேயே விமானம் ஏறிவிடுகிறார்கள். இந்தியாவில் குறைந்தது சில பல ஆண்டுகளாவது பணியாற்றுவதைக் கட்டாயப்படுத்தும் நிபந்தனைகள் எதையும் இந்த ‘தேசபக்த’ நிர்வாகங்கள் விதிக்கத் தயாராக இல்லை.

உயர்கல்வியில் 27 சதவீதம் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கான சட்டத்திருத்தம் வந்தபோது, இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக் களமாக இந்த உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றப்பட்டன. அதற்கெல்லாம் நிர்வாகம் தாராளமான சுதந்திரத்தை வழங்கவே செய்தது. அய்.அய்.டி. வளாகத்துக்குள் மட்டுமல்ல; வெளியே வந்தும் போராடினார்கள். 2006, மே 15 அன்று இடஒதுக்கீட்டை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு, அய்.அய்.டி. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அய்.அய்.டி. நிர்வாகம் அனுமதித்தது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கு அரசியல் தேவையா? என்ற கேள்வியை எழுப்புவதற்கு அய்.அய்.டி. ‘அறிவுஜீவிகள்’ தயாராக இல்லை. அம்பேத்கர்-, பெரியார் படிப்பு வட்டம் வரும்போது மட்டும்தான் இவர்கள் ஆவேசத்துடன் மாணவர்களிடையே பிளவு ஏற்படுத்தக் கூடாது என்றும், அரசியல் நுழையக் கூடாது என்றும் ‘வேதாந்தம்’ பேசுகிறார்கள். இவை மட்டுமா? மிகக் குறைந்த எண்ணிக்கையில் அய்.அய்.டி.க்குள் காலடி எடுத்து வைக்கும் தலித் மாணவர்கள், அவமதிப்புக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்படுவதும், உயர்ஜாதிப் பேராசிரியர்களால் புறக்கணிக்கப் படுவதும் வழக்கமாகிவிட்டது. இதுவரை 50க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வளாகத்துக்குள்ளேயும் விடுதிகளிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2000ஆம் ஆண்டில் சென்னை அய்.அய்.டி.யில் நடந்த ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்ட வேண்டும். பழங்குடி, -தலித் இணையர்களுக்குப் பிறந்த சுஜி என்ற தலித் பெண், 12ஆம் வகுப்பில் ஆந்திராவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றவர். அந்தப் பெண், சென்னை அய்.அய்.டி.யிலே படிக்க விரும்பி  இங்கு சேர்ந்தார். தலித் மாணவர் என்றால் அவர்களுக்காக ஓராண்டு கூடுதல் படிப்பு. அதற்குப் பெயர் ‘தயாரிப்புப் பயிற்சி’. மாநிலத்திலே முதலிடம் பெற்ற மாணவியாக இருந்தாலும்கூட தலித் என்றால் அவருக்கும் தனிப்பயிற்சி கட்டாயம். சுஜியின் தனிப் பயிற்சி வகுப்பில் கணிதம் நடத்திய ஒரு பார்ப்பனப் பேராசிரியரை விஞ்சும் விதமாக சுஜி தன் கணித ஆற்றலை வெளிப்படுத்தியதால் எரிச்சல் அடைந்த அப்பேராசிரியர், அந்த மாணவியைத் தனிப்பயிற்சித் தேர்விலேயே தோல்வியைத் தழுவச் செய்தார். அதிர்ச்சியுற்ற மாணவியின் பெற்றோர்கள், அப்போது அய்.அய்.டி. எதிர்ப்புப் போராட்டக்களத்தில் நின்ற பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னை (விடுதலை இராசேந்திரன்) இல்லத்தில் சந்தித்து, கண்ணீர் விட்டனர். பெரியார் திராவிடர் கழகம் பல்லாயிரக்கணக்கில் சுவரொட்டிகள் அச்சடித்து  இதை அம்பலப்படுத்தியது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். அய்.அய்.டி. வளாக வாயிலிலேயே பொதுக் கூட்டம் நடத்தி, நிர்வாகத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினோம். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் (கண்ணகி பாக்கியநாதன்) அய்.அய்.டி.யிடம் விளக்கம் கேட்டார்.

அய்.அய்.டி நிர்வாகம் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவராமல் பார்த்துக் கொண்டது. ’எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’(மறைந்த பேராசிரியர் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன்), ’ஸ்டேட்ஸ்மேன்’(ஜெயா மேனன்), ’இந்துஸ்தான் டைம்ஸ்’(பகவான் சிங்) ஆகிய ஏடுகளில் மட்டும் சுஜி பற்றிய செய்திகள் வந்தன. இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகு அய்.அய்.டி. நிர்வாகம், அதன் வரலாற்றிலேயே முதன்முதலாக தலித் மாணவியைத் தோல்வி அடையச் செய்த தனது அநீதியான முடிவைத் திரும்பப்பெற முன் வந்தது. சுஜி, தொடர்ந்து படித்தாலும் அவரால் கல்வியை அங்கே தொடர முடியவில்லை.

பல்கலைக்கழக நிதிக் குழுவின் முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட் நேரடி ஆய்வுகளை நடத்தி, 72 சதவீத தலித் மாணவர்கள் புறக்கணிப்புக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறார்கள் என்பதை வெளிச்சப்படுத்தினார் (டைம்ஸ் ஆப் இந்தியா, செப்.2014).

மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு, ஒவ்வொரு துறையின் பெயர் பலகையும் சமஸ்கிருதமாக்கப்பட்ட இந்தி மொழிகளிலேயே மாற்றப்பட்டுள்ளன. இந்தி தெரிந்த மாணவர்களால்கூட இதைப் படிக்க இயலவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரசின் பொருளாதாரக் கொள்கையைக் கடுமையாக விமர்சிக்கும் கருத்தரங்குகளை அய்.அய்.டி. நிர்வாகமே ஏற்பாடு செய்தது. குரு மூர்த்தி, அரவிந்த் நீலகண்டன் போன்ற ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழல்களை அய்.அய்.டி. நிர்வாகம் பேச வைத்து, மோடிக்கு மறைமுக ஆதரவைத் திரட்டியது.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் ‘சாகாக்களும்’ , ‘அரே ராமா அரே கிருஷ்ணா’ அமைப்பும் அய்.அய்.டிக்குள் வலம் வருகின்றன.

அய்.அய்.டி. தொடங்கியது முதல் இயக்குனர்களாக பி.வி. இந்திரேசன், எல்.எஸ். சிறீநாத், என்.வி.சி. சாமி, ஆர்.நடராஜன், அனந்த் என்று தொடங்கி, பாஸ்கர் இராமமூர்த்தி வரை பார்ப்பனர்கள் மட்டுமே தொடருகின்றனர். இவர்களின் ‘சாம்ராஜ்யத்தில்’ பதவி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை ஏதும் பின்பற்றாமல், கொல்லைப்புற வழிகளில் ‘திடீர்’(ணீபீலீஷீநீ) நியமன முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஏடுகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதும் இல்லை. இந்த முறைகேடுகளை எதிர்த்து, ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் நாடாளுமன்றச் சட்டத்தின் வழியாக உருவாக்கப்பட்ட, இந்த நிறுவனங்கள் பெற்றுள்ள சுயாட்சி உரிமைகள் முறைகேடாகவே பயன்படுத்தப்படுகின்றன. சென்னை அய்.அய்.டி., அதிகாரக் குவியல்களைச் சட்டப்பூர்வமாக்கி, அதற்கேற்ற  திருத்தங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அய்.அய்.டி. சட்டத்தின் 13(5)ஆவது பிரிவு ஒரு பேராசிரியரையோ ஊழியரையோ விளக்கம் ஏதும் கேட்காமலே பதவி நீக்கம் செய்ய முடியும். பிரிவு 12(1) - நியமனங்களுக்கான விளம்பரத்தை வெளியிடாமல், இயக்குனர் பரிந்துரையை ஏற்று நிர்வாகக் குழுவே நியமனம் செய்ய முடியும் என்ற உரிமையை வழங்குகிறது. அதுமட்டுமின்றி இப்போதுள்ள சட்டங்களையே மாற்றியமைக்கவும், உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற சட்ட நடைமுறை பின்பற்றப்படாமல், அனைத்தையும் புறந்தள்ளி, ‘மனுதர்ம’ ஆட்சியை அங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில், இயக்கங்கள் நடத்தியப் போராட்டங்களால் அம்பேத்கர் -பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடை நீங்கியிருக்கிறது. ஆனால், அம்பேத்கரும் -பெரியாரும் வலியுறுத்திய ‘சமூகநீதி’ அய்.அய்.டி.க்குள் நுழையுமா? அதற்கு அனுமதிப்பார்களா? அது நடக்கும் போதுதான், மக்கள் வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடியை விழுங்கும் இந்த அய்.அய்.டி.கள்  இந்த நாட்டின் வெகுமக்களுக்குப் பயன்பட வேண்டுமென்ற அதன் நோக்கத்தை நிறைவு செய்ய முடியும்.