சென்ற இதழில் அடுத்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது இலங்கை தேர்தல் முடிந்திருக்கும். இராஜபக்சே தோல்வியடைய அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற்றாலும் இராஜபக்சேவின் சரிவின் துவக்கப் புள்ளியாக இந்த அதிபர் தேர்தல் அமையும் என்று எழுதியிருந்தோம்.

அதேபோன்று 2009 ‘நான்காவது ஈழ யுத்தம்’ முடிந்திருந்த நேரத்தில் 2009 சூன் இதழில் ஈழ மக்களின் போராட்டம் இடைக்கால தோல்வியை சந்தித்திருக்கலாம். ராஜபக்சேக்கள் ஆணவத்தில் கொக்கரிக்கலாம். ஆனால் இவர்களைப் போன்றவர்களின் இனவெறி கூச்சலை மறந்து தங்கள் குழந்தைகளின் அடிப்படை வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க துவங்கியவுடனேயே ராஜபக்சேக்களெல்லாம் வரலாற்றின் குப்பை தொட்டியிலேயே தூக்கியெறியப்படுவார்கள். இதற்கு அதிக காலம் தேவைப்படாது. 5 ஆண்டுகளே அதிகம் என்று எழுதியிருந்தோம்.

நமது இந்த இரண்டு கணிப்பீடுகளுமே கன கச்சிதமாக யதார்த்தமாகியுள்ளன. இது அரசியல் ஆரூடமல்ல. வரலாறு நமக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிற பாடம். இதனைச் சர்வாதிகாரிகளும் கொடுங்கோலர்களும்தான் புரிந்துகொள்ளவே மறுக்கிறார்கள்.

இதே தவறைத்தான் இந்திராகாந்தி செய்தார்.

1971ல் நடைபெற்ற இந்திய- பாகிஸ்தான் யுத்தத்தில் இந்தியா பெரும் வெற்றிபெற்றது. வங்காளதேசம் புதிதாக உருவெடுத்தது. இதன் முழுவெற்றியும் தனக்குத்தான் சொந்தம் என்று இந்திராகாந்தி மார்தட்டிக்கொண்டார். அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாயியே இந்திராவைத் துர்க்கையின் மறு அவதாரம் என்று போற்றிப் புகழ்ந்தர். இந்திராகாந்தியும் அதை நம்பத் தொடங்கினார்.

1975ல் மிசா அறிவிக்கப்பட்டது. காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டது. அனைத்து எதிர்ப்பு குரல்களும் ஒடுக்கப்பட்டன. மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர் ஆனால் இந்திராவைச் சுற்றி இருந்தவர்கள் பாடிய ‘இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா‘ என்ற இனிய தாலாட்டில் அம்மையார் தன்னை மறந்து கனவுலகில் உறங்கிக்கொண்டிருந்தார்.

பல்வேறு அக, புற காரணங்களால் 1977ல் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தும் நிர்பந்தத்திற்கு உள்ளானார் இந்திரா. விளைவு, தனது சொந்த தொகுதியான ரேபரேலியிலேயே இந்திரா படுதோல்வி அடைந்தார். அவரது மகன் சஞ்சய்யும் மண்ணைக் கவ்வினார். ஏன் இந்த நிலைமை? மக்களின் அத்தியாவசிய தேவைகளையும், அடிப்படை ஜனநாயக உரிமை களையும் புறக்கணித்துவிட்டு அடையாளத்தால் மட்டுமே அதிக காலம் ஒப்பேற்ற முடியாது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இது.

ஆனால் இந்தப் படிப்பினையை தற்போது இந்தியாவை ஆட்சி செய்யும் பாசிஸ்டுகள் புரிந்துகொண்டிருக்கிறார்களா? இந்துத்துவா பாசிஸ்டுகளுக்கும், அன்றிருந்த இத்தாலிய பாசிஸ்டுகளுக்கும் இடையிலிருந்து ரகசிய உறவு குறித்து பல தகவல்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. மறுபடியும் இவர்களுக்கு வரலாற்றை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

இந்துத்தவா பாசிஸ்ட்டுகள் எந்த இத்தாலிய பாசிஸ்ட்டுடோடு கூடி குலாவிக் கொண்டிருந்தார்களோ அந்த பாசிஸ்ட்டு அமைப்பின் தலைவன் முசோலினி எண்ணற்ற இத்தாலிய மக்களை கொன்றொழித்தவன், மக்களுக்கு எவ்வித சனநாயக உரிமையும் தர மறுத்தவன். என்னை எவராலும் வெல்ல முடியாது என்று கொக்கரித்தவன் ஆனால். 1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவை நெருங்கிய சமயத்தில் இத்தாலிய விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த விவசாய போராளிகளால் அவன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டான். அவனுடைய உடலும் அவனது சகாக்களின் உடலும் மிலன் நகரின் மத்தியில் தலைகீழாக கட்டித் தொங்கவிடப்பட்டது.

இவர்கள் தூக்கிலிட்டதையும் தலைகீழாக பகிரங்கமாக தொங்கவிட்டதையும் பற்றி நாம் கேள்வி எழுப்பலாம்.

ஆனால் எந்த சர்வாதிகாரியும் நிரந்தரமானவன் இல்லை. எந்த சர்வாதிகாரமும் தொடர்ந்து நீடிக்காது. அவர்கள் வீழ்த்தப்பட்டே தீருவார்கள் என்பதற்கு ஒரு அதிர்ச்சிகரமான உதாரணம் அது என்பதை மட்டும் இந்துத்துவா பாசிஸ்டுகளுக்கு நாம் மறுபடியும் நினைவூட்ட வேண்டியுள்ளது.

இந்த நேரத்தில் டெல்லியில் மோடி அலையை ஆம் ஆத்மி கட்சி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளது. இதே அரசியல் கட்டமைப்பிற்குள் ஆம் ஆத்மி கட்சி, அவர்கள் சொல்லுகின்ற மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா என்பதை வருங்காலமே தீர்க்கும். எனினும் தில்லியில் கெஜ்ரிவாலின் வெற்றி ஒரு நல்ல அறிகுறி.