இந்த புத்தாண்டுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும் என்று எழுதத் துவங்கியபோதுதான் பெஷாவரில் பச்சிளம் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட படுகொலை செய்திகள் வெளிவந்தன. பெஷாவர் தாக்குதல் என்பது பழிக்குப் பழி என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதல் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இத்தாக்குதலை இசுலாமிய மக்களின் நலனில் அக்கறை கொண்ட மக்கள் திரள் இசுலாமியத் தலைவர்கள் அன்றும் இன்றும் என்றும் இதுபோன்ற அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொண்டதே இல்லை, இனிமேலும் ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை.

ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து பா.ஜ.க போடும் நாடகம்தான் அருவெறுப்பை உண்டாக்கியுள்ளது. இது கோழைத்தனம். வெறித்தனம், என்றெல்லாம் பா.ஜ.க. தலைவர்கள் கூச்சல் போடுகின்றனர். இந்த வெறிக் கூச்சலுக்கு ஜனநாயகவாதிகள் கொதிப்படையாமல் இருக்க முடியாது.

குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் மோடியால் கொல்லப்பட்டார்களே அப்போது இந்த பேர்வழிகள் எங்கே போனார்கள்?

ஆனால், இசுலாமியர் மீது மோடி நடத்திய பச்சைப் படு கொலைகளுக்கும் மதவெறி வன்முறைகளுக்கும் வாய்மூடி மௌனிகளாக இருந்த இப்பேர்வழிகள்தான் இன்று பெஷாவர் தாக்குதலைக் கண்டித்து ஜனநாயக வேஷம் போடுகிறார்கள்.

குஜராத் கலவரத்தில் மோடி செய்த கொலைகளுக்கு பின்னால் என்ன காரணம் இருந்தது? மத வெறியும், முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடிமை புத்தியும் தவிர வேறு என்ன இருந்தது ?

இந்த தாக்குதல் குறித்து ஆர்.எஸ்.எஸ்.இன் அதிகாரப் பூர்வமான ஆங்கில இதழான ஆர்கனைசரின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்திரி ‘மதமும் அரசியலும் தனித் தனியாக பிரிக்கப்படுவது அவசியம்’ என்று எழுதியுள்ளார்.

நாங்களும் இதனைத்தான் ஆழமாக வலியுறுத்தி வருகிறோம். திரு. சேஷாத்திரி இந்த கட்டுரையை முதலில் இந்துராஷ்ட்டிரம் பேசும் பகவத்துக்கும், பாபர் மசூதியை இடித்த அகாலிதளுக்கும், குஜராத்தில் படுகொலை செய்த மோடிக்கும்,பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும், என்றெல்லாம் பேசும் மத்திய அமைச்சர்களுக்கும், அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் அவா.

மற்றபடி இந்த புத்தாண்டு புதிய துவக்கமாக அமையும் என்றே நம்புகிறோம். அடுத்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது இலங்கை அதிபர் தேர்தல் முடிந்திருக்கும். ராஜபக்சே தோல்வி அடைய அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை தில்லு-முல்லுகள் செய்து வெற்றி பெற்றாலும் ராஜ-பக்சேயின் சரிவின் துவக்க புள்ளியாக இந்த அதிபர் தேர்தல் அமையும் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு தோல்விகளும், மறக்க முடியாத சோகங்களும் நம்மை தள்ளினாலும் நாம் முன்னேறிய தீர வேண்டும்.

இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும் நேரத்தில் பொங்கல் விழாவிற்கு நீங்கள் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். நம்மை பொறுத்தவரை பொங்கல் விழா ஒரு மதபண்டிகை அல்ல. அதற்கு மத அடையாளம் இடப்பட்டாலும் அதன் வரை-யறைகள் மாறிக்கொண்டேதான் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சங்கராந்தி பண்டிகை-யாகவும், ஆரிய பண்டிகையாகவும் இருந்து வந்த நிலைமாறி இப்போது அறுவடை விழா என்றும் உழவர் திருநாள் என்றும், தமிழர் விழா என்றும், திராவிடர் திருநாள் என்றும் மாற்றம் பெற்று வருவதைக் காண்கிறோம் என்று திரு அண்ணா-துரை 1956 இல் எழுதினார். பொங்கலுக்கு இடப்பட்ட இந்த வரையறை ஒரு புதிய வளர்ச்சியே. நாம் இதிலிருந்து முன்னேறி இன்னொரு மேம்பட்ட ஒரு கட்டத்திற்கு நகர விரும்புகிறோம். மே 1 உழைப்பாளர் உரிமை தினம் என்றால் பொங்கல் உழைக்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர் நன்றி செலுத்தும் நன்னாள். அந்த உழைப்பாளர்களிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெறும் பொன்னாள் என்று கருதுகிறேன்.

இதில் இல்லந்தோறும், இளைஞர்களும், முதி-யோர்களும், இருபாலரும் பொங்கலோ பொங்கல் என்று குரலெழுப்பி பழையவை ஒழிந்தன, நல்லவை பிறந்தன என்று கொண்டாடும் காட்சியை காண -விழைகின்றேன்.

இந்நேரத்தில், எந்த உழைப்பாளியிடம் சென்று நாங்கள் நன்றி செலுத்துவது எந்த தொழிலாளி-யிடமிருந்து வாழ்த்து பெறுவது என்று நீங்கள் தயங்குவது தெரிகிறது.

எந்த உழைப்பாளியை விடவும் உன்னதமான உழைப்-பாளி உங்கள் தாய்தான். அவரது கரங்களைப் பற்றி வருடி அவர் இதுகாரும் ஆற்றிய பணிக்கு நன்றி கூறுங்கள். அவரிடமிருந்து வாழ்த்து பெறுங்கள். உங்கள் தாயைவிட, தந்தையைவிட, தமக்கைகளைவிட, உங்கள் துணைவியரைவிட, அதிகம் உழைக்கும் தொழிலாளர் யார் உங்களுக்கு அருகில் உள்ளனர். எங்கும் பொங்கும் இன்பம் தங்கும் இனிய பொங்கல் மற்றும¢ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆசிரியர்