மின்சார விலையேற்றத்திற்கு மத்திய ஒழுங்குமுறை ஆணையம்தான் காரணம் என்று முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இதன் மூலம் தனது அரசுக்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போன்று நழுவியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழல் முறையில் வாங்கிய உபகரணங்களால் ஏற்பட்ட நஷ்டம், மின்சார வாரியத்தில் தொடர்ந்து நடைபெறும் ஊழல் இவையெல்லாம் மின்சார வாரியத்தின் அதிகபட்ச நஷ்டத்திற்குக் காரணம் என்பதை மறைத்து விட்டார்.

ஆனால், முதலமைச்சர் சொல்வதில் ஓர் அடிப்படை உண்மை உள்ளது. தற்போது 20-47 இலட்சம் விவசாயிகளுக்கு அளிக்கும் இலவச மின்சாரத்திற்கான மானியம் ரூபாய் 300 கோடி, 1.6 கோடி வீட்டு இணைப்புகளுக்கு அளிக்கும் மானியம் 2,714 கோடி இலவச லைப் திட்டத்தின்படி 1.83 இலட்சம் பேருக்கு அளிக்கும் மின்சாரத் திற்கான தொகை 225 கோடி மற்றும் சிறு, குறு, தொழிலகங்களுக்கு அளிக்கும் மின்மானியம் ஆலை அனைத்தும் சேர்த்து அரசுக்கு 6,295 கோடி செல வேற்படுகிறது.

இந்த ஒவ்வொரு திட்டத்திலும் உண்மையான பயனாளிகள் பயனடைவதைவிட பெரும் கல்வி, தொழில் நிறுவனங்களே பயனடைகின்றன என்பது ஒருபுறமிருக்க இந்த மானியம் அனைத்தையும் மாநில அரசே ஏற்கிறது என்பது மிக முக்கியமான விஷயம். இதுதான் முக்கியமான பிரச்சனை. இதற்கு அடிப்படைக் காரணம் மத்திய அரசு 2003இல் கொண்டு வந்த அயோக்கியத்தனமான மின்சார சட்டம்- 2003. மின்சட்டத் திருத்தம் 2014 மசோதா. முற்றிலும் தனியாருக்கு இந்தத் துறையை ஒப்படைப்பது என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த சட்டத்தை பா.ஜ.க ஆட்சி வாஜ்பேய் தலைமையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை காங்கிரஸ் வரவேற்றது.

இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

1. இந்த சட்டத்திற்குப் பிறகு மாநில மின்சார வாரியங்கள் படிப்படியாக மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இருந்து விலகிவிட வேண்டும்.

2. மாநில மின் வாரியங்கள் வீட்டு மற்றும் விவசாயிகளுக்குக் கொடுத்து வந்த மின் மானியத்தை நிறுத்த வேண்டும்.

3.அடுத்து, மிக முக்கியமாக இனிமேல் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பை மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Central Electricity regularity Authority) ஏற்றுக்கொள்ளும்.

4. இந்த மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய முறையில் மின்சார விநியோகத்தை அமுலாக்கும்.

இந்த சட்டம் உருவான கதையே வேறொன்று. தனியார் முதலீடு செய்ய மிகவும் தயங்கிய துறையாக மின்சார துறையே இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணம் மின்சாரத்தின் சிறப்பான குணம். இதனை உற்பத்தி செய்கின்ற நேரத்திலேயே பயன்படுத்த வேண்டும் (இன்வெர்ட்டர் போன்றவைகளின் மின் சேமிப்பு மிகக் குறைவு) உதாரணமாக 1000 மெகா வோல்ட் ஓரிடத்தில் மின் உற்பத்தி ஆகும் போது 1000 மெகா வோல்ட்டையும் நுகர்வோர் பயன்படுத்த வேண்டும்.

அவற்றில் 200 மெகா வோல்ட்தான் பயன்படுத்தப்படுகிறது என்றால், 200 மெகா வோல்ட்டுக்கான பணம்தான் திரும்ப கிடைக்கும். மீதி மின்சாரம் எல்லாம் வீணாகி விடும். இதனால்தான் என்ரான் போன்ற பகாசுர ஊழல் நிறுவனங்கள்கூட இந்த துறையில் கால்பதிக்க முடியாமல் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஓடி விட்டன. இப்படி மிகவும் கஷ்டப்படும் முதலாளிகளுக்கு லாபமளிக்கவே இந்த புதிய சட்டத்தை பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது.

இதிலுள்ள ஒரு திட்டத்தைப் பார்த்தாலே இதனைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு கம்பெனியும் தங்கள் தேவைக்கு ஏற்ப எவ்வளவு மின்சாரம் தேவை என்பதை மத்திய ஒழுங்குமுறை ஆணையத்திடம் 24 மணி நேரத்திற்கு முன்பாக அறிவிக்க வேண்டும். இந்த வாரியம் அவர்கள் கேட்கும் மின்சாரத்தை வழங்கும். இப்படி அளிக்கும் மின்சாரத்தை அளிக்க தவறினாலோ அல்லது குறைவு ஏற்பட்டாலோ இந்த மின்சார மதிப்பில் இரண்டு மடங்கு தொகையை இந்த வாரியம் அந்த கம்பெனிக்கு வழங்கும். முதலாளிகளுக்கு சரி, நமது வீட்டிற்கு இது போன்று மின்சார வெட்டு ஏற்பட்டாலோ அல்லது இறக்கம் ஏற்பட்டாலோ ஒரு பைசாகூட இந்த வாரியம் வழங்காது. இது போன்ற சட்டம் உலகில் எங்குமே அமலான தில்லை. பா.ஜ.க வின் இந்த சட்டத்தை கழக் அரசுகள் உற்சாகமாக அமலாக்கிக் கொண்டு உள்ளது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம். இதன் தொடர் விளைவுகளைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த சட்டம் அமலானது வரை மின் உற்பத்தி பக்கமே தலைவைத்து கூட படுக்காத பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த துறையில் நுழைய ஆரம்பித்துள்ளன. உதாரணமாக, 1994இல் 3858 கோடி இலாபம் ஈட்டிய தமிழக மின்சார வாரியம் 2006 இல் ரூபாய் 4751 கோடி நஷ்டமடைய ஆரம்பித்தது. இப்போது முதலமைச்சர் இந்த மத்திய வாரியத்தால்தான் பிரச்சனை என்று கூறுகிறார். நாம் இந்த சட்டம் உருவானபோதே இது மாநில மின்சார வாரியத் தையும், பொது மக்களையும் கடுமையாக பாதிக்கும். அதே சமயத்தில் பெருமுதலாளிகளை கொழுக்க வைக்கும் என்று கண்டித்தோம்.

அப்போது இரண்டு கழகங்களுமே போட்டி போட்டுக்கொண்டு இந்த சட்டத்தை அமலாக்கின. தற்போதும் கூட இந்த வாரியத்தில்தான் பிரச்சனை என்று கூறிவிட்டு நஷ்டம் அனைத்தையும் நமது தலைகளில் தூக்கி வைத்துவிட்டு வணங்க புறப்பட்டு சென்றுவிட்டார். காலம் மாறும். அதிகாரம் உழைப்போர் கரங்களில் மாறும். அப்போது இது போன்ற ஒவ்வொரு அநியாயங்களுக்கும் தீர்ப்பெழுதப்படும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.