2015-ஆம் ஆண்டு, புதிய, புதிய போராட்டங்களைக் காணும் ஆண்டாக அமையட்டும். “போராட்டமே வாழ்க்கை” எனும் கம்யூனிஸ்டுகளின் புரிதல், முற்றிலும் சரியே என மெய்ப்பித்துச் சென்றுள்ளது 2014-ஆம் ஆண்டு! ஆம்; திசையெட்டும் பற்றி எரிந்தன மக்கள் போராட்டங்கள்! பொருளாதார சமூக நிலைமைகளில் ஏற்பட்டு வருகின்ற அதிவேக மாற்றங்கள் அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.

ஆனால், அதற்காக, காலம் கனியும் வரையில் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. மாற்றத்தின் வேகத்தைத் துரிதப்படுத்துவதன் மூலமே மக்கள் விடுதலை சாத்தியப்படும். இல்லையெனில், வாய்ப்பை மீண்டும் பிற்போக்கு சக்திகள் கைப்பற்றிவிடுவர். நாம் கடந்தகால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நம்பிக்கை மட்டும் நமக்குப் போதுமானதில்லை. அனைத்தையும் அறிவின் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.

தோழரே! எந்தவொரு பிரச்சனையையும் நாம் அணுகும்போது, மார்க்சிய கண்ணோட்டத்துடன்தான் பார்க்க வேண்டும். ஏனெனில், அதுவே, கம்யூனிஸ்டுகளின் பார்வை. அதாவது, கம்யூனிஸ்ட் கட்சி என்பது தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் கட்சி. எனவே, தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு இருக்கும். அரசியல் மாற்றங்களை நம் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, இந்தப் புரிதலில் நின்று கொண்டு ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்போவது, டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கும் நரேந்திரமோடியின் ஆட்சியைப் பற்றித்தான்!

நோய்நாடி, நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்கிறார் வள்ளுவர். இந்த அடிப்படையில், பாரதிய ஜனதாவின் 6 மாத கால ஆட்சியின் செயல்பாட்டில் ஒரு சிலவற்றை மட்டும் நாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டால் காங்கிரஸ் கொள்கைகளுக்கும், பாரதிய ஜனதா ஆட்சிக்கும் உள்ள உறவை நாம் உணர முடியும். அதன் மோடி யார் பக்கம்? என்ற உண்மை தெரிய வரும். சரி, தோழரே! இப்போது நாம் ஆய்விற்கு உள்ளே செல்வோம்.

கடந்த 10 ஆண்டுகளாக, வல்லரசு நாடுகளின் முதலாளிகளுக்காவும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காவும் இந்தியப் பெருமுதலாளிகளுக்காவுமே, காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. விளைவாக, நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களும் கடும் துன்பங்களை அனுபவித்தனர். விளைவாக, காங்கிரஸ் கட்சியை, ஆட்சியிலிருந்து மக்கள் இறக்கினர். அப்போது, அவர்களின் மனதில் இருந்த உணர்வு என்ன? அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைய வேண்டும். உயிர்வாழ ஒரு வேலை வேண்டும் அந்த வேலை நிரந்தரமாக நிலைக்க வேண்டும். பொருட்களின் விலை நிலைமைகளுக்கேற்ப சம்பளம் வேண்டும். கட்டணமில்லா கல்வி வேண்டும்; மருத்துவம் வேண்டும்.

குடிநீர், பாசன நீர், சாலை போன்றவற்றிற்காக போராடும் நிலை ஏற்படக்கூடாது. இன்னும் இதுபோன்ற பல விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் இருந்தன. ஏனெனில், மன்மோகன்சிங் ஆட்சியின் 10 ஆண்டுகள் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, ஒரு அமைதியான வாழ்வை உறுதி செய்யவில்லை. இதுவெல்லாம், உங்களுக்குத் தெரிந்ததுதான், தோழரே! மோடி யார் பக்கம்? என்பதை மக்கள் தெரிந்து கொள்வதற்காக தொகுத்துக் கொள்கிறோம். அவ்வளவுதான்!

உழைப்பை விற்று உயிர் வாழ்பவரெல்லாம் தொழிலாளர் வர்க்கமே! உழைக்கும் மக்கள் கூட்டத்தையே நாம், மக்கள் என்றோ அல்லது தொழிலாளர் என்றோ அழைக்கிறோம். காங்கிரஸ் ஆட்சி, தொழிலாளர் பக்கம் இல்லை என்பதை பெரும்பான்மையோர் உணர்ந்ததாலேயே அதன் ஆட்சிக்கு முடிவு கட்டினர். ஆனால், இப்போது அமைந்துள்ள மோடி ஆட்சி யார் பக்கம் என்பதைப் பார்ப்போம்.

இந்த நிதியாண்டில் மட்டும் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல், பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகை- வங்கிகளில் வாங்கிய கடனை, திருப்பி அடைக்கின்ற அளவுக்கு, தம் பொருளாதார நிலை இருந்தும், பெருமுதலாளிகள் செலுத்தாத வாராக்கடன் சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய்- மோடியின் நெருங்கிய கூட்டாளி குஜராத்தைச் சேர்ந்த அதானி என்ற பெருமுதலாளிக்கு, ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் தோண்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கவுள்ள கடன் ரூ.6,200 கோடி- மிகப்பெரிய இந்திய முதலாளிகளுடைய வாரிசுகளின் சொத்து மதிப்பு மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாய் (குடிமனைகூட சொந்தமில்லாத குடிமக்களின் எண்ணிக்கையை மோடி வெளியிடுவாரா?)

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மோடி அரசாங்கம் மீட்டுவரத் தவறிய, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு சுமார் 33 இலட்சம் கோடி ரூபாய்கள். (இவை அனைத்தும் நம் உழைப்பால் விளைந்தவை, நமக்கே சொந்தம்! உள்நாட்டில், சட்டத்திற்குப் புறம்பாக, வரி ஏய்ப்பு, ஊழல் போன்றவற்றால் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவோ?)-

சூப்பர் ரிச் என அழைக்கப்படுகின்ற 65 இந்திய கோடீஸ்வரர்களுக்கு மட்டும் ரூ.1.5 சொத்துவரி விதித்தால் 9 கோடி மக்களின் வறுமையை ஒழித்துவிடமுடியும் (நரேந்திர மோடி தயாரா?)

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் காலாண்டு வருவாய் ரூ.14,888 கோடி. இதில் இலாபம் மட்டும் ரூ.2,709 கோடி. (நம்மூர் கந்துவட்டியைவிடவும் மோசமான பகல் கொள்ளை என்பது கணக்குப் போட்டுப் பார்த்தால் தெரியும்) நகரத்தில் ரூ.33.33 சம்பாதிப்போரும், கிராமத்தில் ரூ.27.20 ஈட்டு வோரும் ஏழைகள் இல்லை என்கிறது அரசாங்கம்! மேற்படி வங்கியின் ஒரு நாள் இலாபம் 30 கோடியே 10 லட்சம் ரூபாய்! இது என்ன நியாயம், மோடி சார்?

இவையெல்லாம், நரேந்திர மோடி ஆட்சியின் ஒரு பக்கம் இன்னொரு பக்கத்தையும், பார்க்கலாமா தோழரே? அதாவது கால காலமாக உழைப்பதையே வாழ்வாகக்கொண்டு தம் உழைப்பின் மூலம் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாய் மறைந்து கிடக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் பால், மோடியார் அணுகுமுறை என்னவாக இருக்கிறது? என்று பார்ப்போம். பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை உயர்த்தியன் மூலம் மக்களிடமிருந்து, அரசாங்கமே சுரண்டிய தொகை சுமார் 20,000 கோடி ரூபாய்!-

ஏற்றுமதி செய்யும் அளவுக்கு சர்க்கரை உற்பத்தி இருந்தும் கூட, சுமார் 40 இலட்சம் டன் பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்ததன் மூலம் சுமார் 600 ஆலைகள் இந்தியாவில் மூடப்படும் நிலை! இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலம்?- நாட்டுப்புறப் பட்டாளிகளின் உழைப்பால் உற்பத்தியான உணவுதானியங்கள், பொறுப்பற்ற ஆட்சியாளர்களால் 40 சதவீதம் வீணடிக்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பாழாவது சுமார் 750 கோடி டாலர்! (ஒரு டாலருக்கு, இந்திய மதிப்பு 63 ரூபாய்) மொத்த மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேலான மக்கள் 3 வேளை உணவுக்கு உத்தரவாதமற்றவர்கள்! அரசாங்கம் நடத்தி வருகின்ற ஏர்- இந்தியா என்ற விமானப் போக்குவரத்து நிறுவனமும் விரைவில் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்படும் என்று அறிவிப்பு!

அம்பானியின் ஒரேயொரு பெட்ரோல் கிணறை மட்டும் வாங்குவதற்கு மோடி அரசு துணியுமா?

சுமார் 14 இலட்சம் கோடி பட்ஜெட்டில், சுமார் 10ல் ஒரு பங்கு இராணுவத்திற்கு ஒதுக்கீடு! 3-ல் ஒரு பங்காக உள்ள கிராமப்புற ஏழைகளுக்கு- 100 நாள் வேலை திட்டத்திற்கு - வெறும் 33 ஆயிரம் கோடி மட்டும்!

தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள, டாடா-வினுடைய டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 25 ஆயிரம்பேர் வெளியேற்றம்! இது புதிதல் ஆண்டுதோறும் நடக்கும் வழமையான நடவடிக்கையே என்கிறது நிறுவனம்.- நரேந்திரமோடி தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால், மீனவர்களைக் கைது செய்யும், இலங்கையின் போக்கிற்கு முடிவு கட்டப்படும் என்றார் சுஷ்மா சுவராஜ். ஆனால் 6 மாத ஆட்சியில் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் இராஜபட்சேயின் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் (வாக்குறுதி காற்றில் கரைந்து போயிற்றோ?)-

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும், மோடி ஆட்சி நிரந்தரம் செய்யவில்லை(கேட்டால் சட்டத்தின் ஆட்சி; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கதைப்பார்கள்)-

கட்டுமானத் தொழிலாளர்களிடமிருந்து, கடந்த நிதியாண்டில் மட்டும் வசூலித்த, வருங்கால வைப்பு நிதி ரூ.27,448 கோடி பயன்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. (நலவாரியத்தில் ஒரு பணப் பயனைப் பெற நாம் நாயாய் அலைய வேண்டியிருக்கிறது)-

நாடு முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் மருத்துவ மனைகளில் நிரந்தரமாக உள்ள இலட்சக்கணக்கான துப்புரவுப் பணிகள், கான்டிராக்டாக, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. (வரி வசூல், இராணுவம் மற்றும் காவல்துறையை மட்டும் தனியாருக்கு விடமாட்டார்கள்)-

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை கடந்த திமுக ஆட்சியின்போது தொடங்கிய வேளையில் பத்திரப் பதிவுக்கு அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. 200 ஏக்கர் நிலம் (4.5 இலட்சம் ரூபாய் வீதம்) 99 ஆண்டுக்கு குத்தகை 10 ஆண்டுகளுக்கு விற்பனை வரி மற்றும் வணிக வரி கிடையாது. அந்த முதல் பத்து ஆண்டுகளில் செல்போன் விற்பனை மூலம் அவர்களுக்கு கிடைத்த வருவாய் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய்! அதன் பின், அவர்கள் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்காக தமிழக அரசு வாட் வரியையும் தள்ளுபடி செய்துள்ளது. (நாட்டின் குடிமக்கள் மின் கட்டணம் செலுத்தத் தாமதமானால் இணைப்பைத் துண்டித்து விடுகிறார்கள்.)

வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று காரணம் காட்டியே ஆட்சியாளர்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம்போட்டு, சலுகைகளை வாரி வழங்கி அனுமதிக்கின்றனர் நம் கண் முன்னேயே நோக்கியா தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில்! நரேந்திரமோடி வாய்மூடி மௌனியாக இருக்கிறார்!

சென்னை அருகே ஃபாக்ஸ்கான், க்ரிவ்ஸ் காட்டன் ஆலைகள் மூடப்பட்டு விட்டதால் அதன் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வை இருள் சூழ்ந்துள்ளது-

இராட்சச இயந்திரங்கள் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக மணல் கொள்ளை அடித்துவரும் எந்தவொரு முதலாளியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால், கடலூர் தொடங்கி நாடு முழுவதும் மாட்டு வண்டிகளில் காலங்காலமாக மணல் எடுத்துவரும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, வண்டியும் பறிமுதல் செய்யப்படுகிறது-. பீடி, ஆட்டோ, பட்டாசு போன்ற துறைகளில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் அன்றாடம் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். போதும் போதாதென்று மோடி அரசு மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்கு ஆள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக வெளிப்படையாகவே துணிந்து அறிவித்திருக்கிறது-. அனைத்திற்கும் மேலாக, பாரதீய ஜனதாவின் பெரும்பான்மை ஆட்சி, இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் என்கிறார் முகே; அம்பானி! அவருக்குத்தான் அதிர்ஷ்டம்! அப்படி எனில், தொழிலாளருக்கு?.... கடன்தான்!

சரி! இப்போது சொல்லுங்கள் தோழரே! மோடி யார் பக்கம்? உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகத் தெரிகிறது! மோடி மன்மோகன் சிங்கின் வழித்தோன்றல்தான் என்று! இல்லையா? இந்த உண்மையான முகத்தை மறைத்துக் கொள்ள, முதலாளித்துவ சேவகர்கள் பயன்படுத்தும் முகமூடிதான் இந்துத்வா செயல்பாடுகள்! எதிர்க் கட்சிகள் பெரும்பாலும் இந்த நிழலோடுதான் இப்போது யுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். நாம் தொழிலாளர் வர்க்கத்தை, தம் உரிமைக்காக, பாதுகாப்புக்காக, வாழ்வுக்காகப் போராட, படையாய்த் திரட்ட வேண்டும். மதம், சாதி, கட்சிகளால் பிளவு படுத்தப்பட்டிருக்கும் தொழிலாளர் வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்தி சங்கமாக்க வேண்டும். அனைத்து பேதங்களுக்கும் அப்பால், தொழிற்சங்கங்களின் ஒற்றுமைக்காகப் போராட வேண்டும். இதோ அந்த வரலாற்றுக் கடமையை செய்து முடிக்க, சுரண்டல் பேர்வழிகளுக்கு எதிராகப் போராட நமது சங்கத்தைத் தயார்படுத்தும் நோக்கோடுதான், ஜனநாயக தொழிற்சங்க மய்யம் புதுக்கோட்டையில் ஜனவரி 9-அன்று கூடுகிறது. சிந்தித்துச் செயல்பட, சந்திப்போம்! வாருங்கள் தோழரே!