தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மிக் கட்சி பெற்ற உரத்த வெற்றிக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் எளிய கருவியான விளக்கமாற்றுச் சின்னத்தை அரசியல் மாற்றாக்கிய ஆம் ஆத்மிக் கட்சிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ஆம் ஆத்மியின்; வெற்றி உண்மையில் வரலாற்றுச் சிறப்பு கொண்டதுதான். மோடி - அமித்ஷா இருவரையும் தேர்தலில் வாக்கு ஈனுலைகள் போல பா.ச.க. வும் சங்கப் பரிவாரங்களும் காண்பித்தன. ஊடகங்கள் அவதாரங்களாகவே ஆக்கிவிட்டன. வங்காளம் சென்று ‘நான் அமித்ஷா, நான் திரிணாமூல் காங்கிரஸை அழிக்க வந்திருக்கிறேன’; என்று தலையால் எக்காளமிட்ட அழிச்சாட்டியத்தை இந்த நாடு கண்டதில்லை. நாடாளுமன்ற வெற்றியைத் தொடர்ந்து வந்த 4 மாநில வெற்றியும் பி.ஜே.பி யை இனி அசைக்க முடியாது என்று சாமானியர் வரை நம்பவைத்தது. இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முதலாக வலதுசாரி மதப்பயங்கரவாத ஆட்சி வலுவாக காலூன்றிவிட்டது என்று இடதுசாரித்தலைவர்கள் அபாய சங்கு ஊதிவந்த வேளையில், பல்வேறு புரட்சிகர முற்போக்கு இயக்கங்கள் தமது பாசிச எதிh;ப்பு கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்த வேளையில் ஆம்ஆத்மியின்; வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அது பா.ச.க. வுக்கு ஏற்படுத்திய அரசியல் தோல்வி, கால முக்கியத்துவம் கொண்டது.

arvind gejjriwal

பா.ச.க. இந்தியாவெங்கும் ஆட்சியேற்ற இந்த ஓராண்டில் சிறுபான்மையினருக்கு எதிரான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதவன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. கோத்ராவில் பா.ச.க. கட்;டவிழ்த்த வன்முறையில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டு 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 70 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனா;. கோட்சேவுக்கு சிலைவைக்கும் முயற்சிகள். அரசியல் சட்டத்தில் மதச்சார்பின்மை, சோசலிசம் போன்ற வார்த்தைகளைக் கூட திருத்த வேண்டும் என்ற மதவெறி வன்மம் கொண்ட அடாவடித்தனங்களுக்கும் பாசிச வன்முறைகளுக்கும் அளவே இல்லை.

ஒருவரை ஒரே நாளில் கட்சியின் உறுப்பினராக்கி அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவித்த பா.ச.க. வின் நடுக்கத்தை நாடே கண்டது. தில்லியில் மோடியின் பேரணி பிசுபிசுத்துப் போனது. கட்சியின் எல்லாத் தலைவர்களும் செய்த தில்லாலங்கடி முயற்சிகளும் தோற்றுப் போயின. காசு வாங்கிக்கொண்டு பா.ச.க., காங்கிரசுக்கு காலம் காலமாக காவடி தூக்கிவந்த ஊடகங்களைத் தோற்கடித்து தலைநகரில் அவர்களை வீழ்த்தி ஒட்டுமொத்த அரசியல் தோல்வியை உருவாக்கிய உத்தி மிகத் துல்லியமான உத்தி.

ஆம் ஆத்மிக் கட்சியின் இரண்டாண்டுகால வளர்ச்சியில் படிப்பினைப் பெற பல பாடங்கள் உள்ளன. இலட்சக்கணக்கானோரை ஈர்த்து 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை இரண்டே ஆண்டுகளுக்குள் பெற்றது முக்கியத்துவமான வெற்றி. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவெங்கும் ஒன்றரை கோடி வாக்குகளைப் பெற்றதும் கவனிக்கத்தக்கது. வெறும் விளம்பரப் பின்னணியோ, நடிகராகவோ அல்லாமல் ஊழல் எதிர்ப்புப் போராட்டக் களத்திலிருந்து முன்வந்த கட்சி வெற்றி பெற்றதும் கவனிக்கத்தக்கது. ஒருபெரும் மக்கள் திரள் இயக்கத்தைக் கட்டியெழுப்பிக் காத்ததும் கவனிக்கத்தக்கது.

ஆம் ஆத்மிக் கட்சியின் வெற்றிப் பின்னணி.

அன்னா அசாரே தேர்ந்தெடுத்த ஊழல் என்ற மையப்பிரச்சனை மிக மிகத் துல்லியமான ஒரு மக்கள் பிரச்சனை. இந்தியாவெங்கும் பரந்துபட்ட மக்கள் உணர்ந்த ஒரு மையப்பிரச்சனை. இதுவரை எந்தக் கேள்விகளுமின்றி குறைந்தபட்ச சட்டமுறைகளைக்கூட கடைபிடிக்காத முதலாளித்துவ சக்திகளுக்கு எதிரானதாகவும் உலகமயச்சூழலில் கட்டற்று நாட்டைக் கொள்ளையடித்த பா.ச.க. ரெட்டிசகோதரர்கள் போன்ற எண்ணற்ற கொள்ளை முதலாளிகளுக்கு எதிரான போராட்டமாகவும் அது முன்னேறியது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மீது தில்லியில் வழக்கு தொடுத்தநிலையில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெளிச்சத்தை ஊடகங்களில் பெற்றது. கேஜ்ரிவால் ஒரு மாவோயிஸ்ட், அவர் ஓர் அராஜகவாதி என்று அவர்களது எதிரிகள் பழிக்கும் வண்ணம் அவர்களின் போராட்டம் வலுப்பட்டது. ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்களின் பின்னால் மக்கள் திரண்டதுதான் அவர்களுக்கு இந்த துணிச்சலைக் கொடுத்தது. அன்னா அசாரே வியூகத்தை வகுத்துத் தொடங்கி வைத்தாலும் சிறப்பான உத்திகளுடன் படைநடத்திய தளபதி கேஜ்ரிவால்தான்.

100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் இதயத்தில் முள்ளாக அழுந்தியிருந்த ஊழல் பிரச்சனையில் கைவைத்தது முதல் வெற்றி. அதைத் தொடர்ந்து பெற்ற வெற்றியைச் சரியாக அமைப்பாக்கி, அணிதிரட்டி அடுத்தடுத்து சரியாக திட்டமிட்டு முன்னேறியது இரண்டாம் வெற்றி. நாடெங்கும் பலமில்லாத நிலையில் தில்லியில் கவனம்வைத்துக் களமிறங்கிய முடிவு மூன்றாவது வெற்றி. தில்லித் தேர்தல் பா.ச.க. வுக்கு அரசியல் ரீதியாக ஏற்படுத்திய தோல்வி தன்னிகரில்லா வெற்றி. இவை அனைத்தையும் நாம் மனதார வரவேற்பதோடு வாழ்த்துகிறோம்.

ஆம் ஆத்மியிடம் மக்களின் எதிர்பார்ப்புகள்:

ஆம் ஆத்மி முன்வைத்துள்ள இலவசக் குடிநீர், குறைந்த விலை மின்சாரம், ஊழலில்லா நிர்வாகம் போன்ற முழக்கங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை நடுத்தர மக்களின் வாக்குகளைப் பெற்றதில் முக்கியமானவை.

மதச்சார்பின்மை, அனைத்துப் பிரிவினரின் நல்லிணக்கம், மற்றும் அவரவரின் பின்தங்கிய நிலைமையை மதம் மற்றும் சாதிப் பின்னணி தாண்டி சீர்செய்தல் என்பதும் முக்கியமானது. தில்லி மாநில அந்தஸ்து கோரிக்கையும் தோ;ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே நிர்வாக அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையும் தேசிய ஜனநாயகப் போராட்ட திசைவழியில் முக்கியக் கோரிக்கைகளே. இவற்றை நிறைவேற்றுதலில் ஆம் ஆத்மியின் உறுதிப்பாடும் அவற்றை நிறைவேற்றுதலில் உள்ள பற்றுறுதியும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.  இந்த சாதகங்களை நாம் திறந்த மனதோடு வரவேற்கும் அதேவேளை ஆம் ஆத்மிக் கட்சியின் சில வரம்புகள் அடிப்படையில் அதன் இலட்சியங்களைத் தோல்விக்கிணற்றில் தள்ளும் தன்மையைக் கொண்டவை.

அவற்றைப் பார்ப்போம்.

ஆம் ஆத்மி கட்சி வலதா? அல்லது இடதா?

‘ஆம் ஆத்மி கட்சி வலதா? அல்லது இடதா? என்று கேட்கிறார்கள். நாங்கள் வலதுமில்லை! இடதுமில்லை! எது வளா;ச்சிக்கு உதவுகிறதோ அதை கைக்கொள்வோம்’. என்று கேஜ்ரிவால் சொல்லியிருக்கிறார்;. இடதுநிலை வலதுநிலைக்குச் சமமான கெட்ட வார்த்தையாக பயன்படுத்தப்படும் நிலையை ஏற்படுத்திய சி.பி.எம் சி.பி.ஐ களின் முதலாளித்துவ அரசியல் வெட்ககரமானது. எனினும் உண்மை என்பது உரைப்பவர்களின் தீர்ப்பபாகிவிடாது.

முதலாளிகளுக்குச் சாமரம் வீசுகிற ஆளும்வர்க்க அரசியலை ஆதரிக்கும் வலதுசாரி அரசியலுக்கும் உழைக்கும் பாட்டாளி மக்களின் தரப்பில் நின்று ஏழை நடுத்தர மக்களின் வாழ்வை மாற்றியமைக்கப் போராடும் அரசியலுக்கும் இடையில் திட்டவட்டமான கோட்டை வரையாத எல்லா முயற்சிகளும் வலதுசாரி அரசியலுக்கே வழிவகுக்கும்.

இருக்கும் அரசமைப்பின் சட்ட வரம்புகளுக்குள் எல்லா சீர்திருத்தங்களையும் மேற்கொண்டால் நாட்டைத்திருத்தி விடலாம் என்றும் நல்லவர்கள் ஆட்சித்தலைமையை ஏற்றால் இவற்றைச் சரிசெய்து விடலாம் என்றும், ஊழல் ஒழிப்பு முழக்கத்தில் வர்க்கப் பகைமையை ஒழித்துவிடலாம் என்றும் அல்லது வர்க்கப் பகைமை என்ற ஒன்றில்லை என்ற மயக்கமும் முதலாளித்துவ தாராளவாத அரசியலின் தப்பெண்ணங்களே ஆகும். முதலாளித்துவ அரசமைப்பின் அடிப்படையான இலாபவேட்டைப் பொருளாதாரமும் செல்வக்குவிப்பும் அரசியல் செல்வாக்கும் பாட்டாளி மக்களைச் சுரண்டிப் பெறப்பட்டவை. முதலாளிகளின் மூலதனம் ஒரு அணுப்பொழுது நீடிக்க வேண்டுமென்றாலும் அவர்கள் பாட்டாளி மக்களை ஒட்டச் சுரண்டியாக வேண்டும். இந்த அடிப்படைத் தீங்கை ஒழிக்காமல், செல்வத்தைப் பறிமுதல் செய்து மக்கள் சொத்தாக மாற்றாமல் ஒருபோதும் வறுமையை, வேலை இல்லாத்திண்டாட்டத்தை, ஊழலை ஒழிக்க முடியாது.

முதலாளித்துவ தாராளவாதம் ஒரு முட்டுச்சந்து!

முதலாளித்துவ அமைப்புக்குள் முடிவற்ற நற்சிறப்பைத் தேடியலையும் இந்த மாயமான் வேட்டை இறுதியில் நெருக்கடியைத் தழுவும். இந்தியா நேருவின் தாராளவாத ஆட்சியைக் கண்டது. மொரார்ஜி தேசாயின் தாராளவாத ஆட்சியைக் கண்டது. இந்த நாட்டில் ஆம் ஆத்மி (ஏழைகளின் பங்காளன்) அரிதாரத்தை நீண்ட நெடுங்காலமாக பூசி ஆடிவந்தது காங்கிரஸ் கட்சி தான். அதன் தர்க்க விளைவாக நாட்டையே மதவெறிப் பாசிஸ்டுகளின் கரசேவைக்கு காவுகொடுத்திருத்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்திய துணைக்கண்டத்தையே தன் இரத்தம் சொரியும் பற்களில் கவ்வியுள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கம் (அல்லது தாராளவாத வார்த்தைகளில் சொல்வதானால் கார்ப்பரேட் - கார்ப்பரேட் மாபியா வர்க்கம்); நெருக்கடி வந்தால் அழித்தொழிப்பு, ஆட்சிக்கவிழ்ப்பு, யுத்தம் என அனைத்தையும் செய்யத் தயங்காது. முதலாளித்துவ அமைப்பிற்குள் சீர்திருத்துவதும் சட்ட சம்மதவாதமும் முடிவில்லாமல் நற்சிறப்புகளைத் தேடிப் பாடுவதும் அப்பட்டமான முதலாளித்துவ தாராளவாத அரசியலே. இது, இடது தண்ணீருக்குள் மீன் பிடித்து வலது தண்ணீரில் விட்டுக் காப்பது போல அபத்த விளையாட்டாகிவிடும். இந்த மீன்பிடி விளையாட்டு ஒரு கட்டத்தில் தண்ணீரில் மீன்பிடிப்பது மாறி இரத்தத்தில் மீன்பிடிப்பதாக மாறும். அன்று நமது சொந்த கைகளே சாபமாகும். நமது சொந்த மீன்களே நமது எதிரிகளாகிவிடும். ஏனெனில் இலாப வேட்டையாடும் முதலைகளே இந்த மீன்பிடிவிளையாட்டின் நடுவர்கள்.

- தங்கபாண்டியன்