மோடி பதவியேற்றவுடன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரையில், ‘இந்த அரசு சாமானியர்களின் அரசு‘ என்று கூறினார்.

 ஆனால், ‘சாமானியர்கள்‘ என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை நாம் உணர அதிக காலம் பிடிக்கவில்லை. மோடி அரசின் முதல் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து இந்த ‘சாமானியர்கள்‘ வேறுயாருமல்ல, அதானி, அம்பானி, டாடா. கோத்ரேஜ் போன்ற பெருமுதலாளிகள்தான் என்பது அம்பலமானது.

 modi ambani tataஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை அந்த அரசாங்கத்தின் ‘வர்க்க சார்பை‘ தெளிவாக விளக்குகிறது என்று லெனின் குறிப்பிட்டார்.

 நிதிநிலை அறிக்கையில் உள்ள பொதுவான வரவு செலவை பாருங்கள். மத்திய அரசின் வரவில் 20% நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நேரடிவரி, 14% வருமான வரி, 9% சுங்க வரி, 10% கலால் வரி, 9% சேவை வரி,10% வரியல்லாத வருமானம் (பொதுத்துறை போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம்) கடன் மூலம் கிடைக்கும் வருவாய் 28%.

 அதே போன்று செலவு 23% மாநிலங்களுக்கு ஒதுக்கீடு, அரசு வாங்கிய கடனுக்கான வட்டி 20%, மத்தியத் திட்டங்களுக்கு 11% , பாதுகாப்புத் துறைக்கு 11%, திட்டம் சாராத இதர செலவுகள் 11%, மானியம் 5% மாநில திட்டங்களுக்கான நிதியுதவி 9%.

 இந்தியா போன்று வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் அதிகமாக உள்ள நாட்டில், விவசாயத்தைச் சார்ந்து வாழ்பவர்கள் அதிகமாக உள்ள நாட்டில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும், விவசாயத்திற்குமே முன்னுரிமை தந்து அதிக நிதி ஒதுக்கிடு செய்யப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமானது. (ஆனால் அருண்ஜெட்லி சமர்பித்த நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு மருந்துக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை. கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு 5000 கோடி, வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு 3000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. சுமார் 17, இலட்சம் கோடி செலவினங்களுக்கு ஒதுக்கியதில் ஒட்டு மொத்த விவசாயத்திற்கு வெறுமனே 8000 கோடிதான் ஒதுக்கீடு. இதற்கிடையில் விரைவில் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தையும் நிறுத்தப் போவதாக நிதிநிலை அறிக்கை வருவதற்கு முன்பே மோடி அரசு அறிவித்துள்ளது. அதே போன்று விவசாய மானியம் அனைத்தும் விரைவில் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது. அதே போன்று நிதிநிலை அறிக்கை முடிந்த கையோடு நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. இதன் தொடர் விளைவு என்னவாக இருக்கும் ‘கை’ க்கும், ’வாய்’க்கும் என்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிற விவசாயிகள் ஒட்டு மொத்தமாக சொந்த மண்ணிலே அகதிகளாக மாறிவிடுவார்கள். நிலங்கள், விவசாய இடுபொருள்கள், விவசாய உற்பத்தி பொருட்கள் விற்பனை என அனைத்தும் பன்னாட்டு மற்றும் பன்னாட்டு சூதாட்ட முதலாளிகள் கைக்குப் போய்விடும்.

 அடுத்ததாக சேவை துறை. இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்த படியாக அதிக மக்கள் ஈடுபட்டுள்ள துறை இது. வர்த்தகம் , உணவு விடுதிகள், போக்குவரத்து, திரையரங்குகள், பொழுது போக்கு மையங்கள், தொலைத் தொடர்பு, வங்கி தொழில், காப்புறுதி, கட்டுமானத் தொழில், மருத்துவப் பணி, சமூக சேவைகள் ஆகியவை இந்தத் துறையின் கீழ் வருகின்றன். ஆனால் இதற்கும் நிதி அதிகமாக ஒதுக்கவில்லை. மாறாக இந்தத் துறைகளுக்கு இதுவரை இருந்த 12.3% வரியை 14% சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இதிலும் அதிக வருமானம் இருந்தால் கூடுதலாக இன்னும் 2% வரி விதிக்க முடிவு செய்துள்ளது.

 இது சேவைத் துறையை மட்டுமல்ல, இதனோடு நெருக்கமாக உள்ள சிறு, குறு தொழில்களையும் கணிசமாக பாதிக்கும் என்பது நிச்சயம். ஆனால் தொழிற்துறை என்று வந்தவுடன் மோடி அரசுக்கு பாசம் பொங்கிக் கொண்டு வருகிறது. நிறுவன வரியை 30% லிருந்து 25% குறைத்துள்ளார். இந்த 25% விதமும் படிப்படியாக 20% ஆக மாறிவிடும் என்று முதலாளிகளுக்கு உறுதியளித்துள்ளார் நிதி அமைச்சர். பல இலட்சம் கோடி சலுகைகளை நிதி நிலை அறிக்கைக்கு முன்பே கொடுத்த பின்பும் அவர்களுக்கு மீண்டும் இவ்வளவு வரி சலுகையா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விற்கு அருண் ஜெட்லி, மிகவும் அடக்கத்தோடு கூறினார், ‘’அதிக அளவில் நிறுவனங்களுக்கு வரி இருப்பது வருவாய், முதலீடு என்று இரு பிரிவினையும் பாதிக்கும். ‘சரி முதலாளிகளுக்கு வரி போட்டால் வருவாயும், முதலீடும் பாதிக்கும் என்றால், எல்லா வரிகளையும் உழைக்கும் மக்கள் மீதும், மத்தியத் தர மக்கள் மீதும் போடுகிறார்களே இதனால் எங்கள் வாழ்க்கையே போய்விடுமே‘ என்ற கேள்விக்கு நயவஞ்சமாக நிதியமைச்சர் அமைதி காக்கிறார்.

 அதே சமயத்தில் இராணுவத்திற்கு 10% அதிகரித்து 2,66,727 கோடி ஒதுக்கப்படுகிறது. உருப்படாத சி.பி வங்கிக்கு 10% நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ள இந்த நிதியும், களத்தில் நின்று கொண்டிருக்கும் இராணுவ வீரர்களின் நலன்களுக்காக செலவிடப்பட போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். பாதுகாப்புத் தளவாட தயாரிப்பில் முதலீடு செய்ய உலக முதலாளிகளை அழைத்துள்ள மோடி இந்த நிதியில் கணிசமானதை உள் கட்டுமானத்திற்கே செலவிடப் போகிறார் என்பது சொல்லாமல் விளங்கும்.

 இதேபோன்று வரி மற்றும் வரியில்லா வருவாயின் மூலமாக சுமார் 19 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வரிகள் நமது தலையில்தான் விழப் போகின்றன. இதே சமயத்தில் செலவுக்கும் திட்டமிடலுக்கும் உள்ள பற்றாக்குறை 6 இலட்சம் கோடி கடனாக வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னுமே நமது செலவில் கடனுக்காக 20% செலுத்திக் கொண்டிருக்கிறோம். இப்போது வாங்கிய புது கடனுக்குச் சேர்த்து கடன் கட்டுவது என்றால் எவ்வளவு கட்ட வேண்டியிருக்கும். மேலும் வரியில்லாத வருவாய் (அரசின் பொதுத்துறை போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் ) வெறும் 5 இலட்சம் கோடியாக குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் இது ஒரு பெரிய பங்கு வகித்தது. இப்போது விமான நிலைய பராமரிப்பு, துறைமுகம், நிலக்கரி போன்றவற்றையும் தனியாரிடம் விற்க போகின்ற சூழலில் இதிலிருந்து கிடைக்கும் வருவாய் கிட்டதிட்ட இல்லாமலே போய்விடும்.

 பிறகு எப்படி கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு போன்றவைகளுக்கு செலவிட முடியும்? ‘இந்து ராஷ்டிரத்தில்‘ நாம் வாழ்கிறோம் என்ற பெருமையே நமக்கு போதா? தொழிலாளியின் PF க்கு முதலாளிகள் கொடுத்து வந்த பங்களிப்பைக்கூட நிறுத்தும் முகமாக எந்தவொரு தொழிலாளியும் விரும்பினால் மட்டுமே இனிமேல் PF கிடைக்கும் என்று அறிவித்துவிட்டார்கள். நிதிநிலை அறிக்கைக்கு முன்பே தொழிலாளர் சட்டங்களையும், முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்த முடிவு செய்துவிட்டார்கள். இந்தக் காரணத்தினால்தான் இந்த நிதிநிலை அறிக்கை வந்தவுடனேயே, இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிராம் ‘இது வளர்ச்சிக்கு சாதகமான பட்ஜெட். பொருளாதார ஏற்றத்துக்கு இந்த பட்ஜெட் அடித்தளம் போட்டுள்ளது‘ என்று மகிழ்ச்சி பொங்க வரவேற்றுள்ளர். இவர் மட்டுமன்றி அம்பானி (ரிலையன்ஸ் குழுமம்), ராஜன் பாரதி மிட்டல் (பாரதி எண்டர்பிரைசர் குழுமம் ), ராகுல் பஜாஜ் ( பஜாஸ் குழுமம் ), ஆதி கோத்ரேஜ் (கோத்ரேஜ் குழுமம் ) போன்றவர்களும் மிகவும் வரவேற்றுள்ளார்கள்.

இதையெல்லாம் விஞ்சும் விதமாக ஆர்.எஸ்.எஸ்.ன் ஊதுகுழல், பொருளாதார 'மேதை' எஸ்.குருமூர்த்தி “…………….. தேசிய வளர்ச்சிக்கு, உள்நாட்டு முயற்சிகளையே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நிதிநிலை அறிக்கை……." என்று கூசாமல் பொய் பேசுகிறார்.

 உள்நாட்டு முயற்சிதான் அடிப்படை என்றால் 66 பொதுத்துறை நிறுவனங்களை மூடப்போவதாக நிதிநிலை அறிக்கையிலேயே பகிரங்கமாக அறிவித்தது ஏன்? பாதுகாப்பு தளவாட உற்பத்தி, காப்பீடு, கனிம வளங்களை அகழ்ந்தெடுத்தல், பெட்ரோலியம் சுத்திகரிப்பு, விமான, துறைமுக, மருத்துவத் துறை என்று அனைத்துத் துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று ஒவ்வொரு நாட்டு முதலாளிகள் காலிலும் மோடி விழுந்து கொண்டிருக்கிறாரே இதற்கு என்ன அர்த்தம்.

ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டக் காலத்தில் ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்காமல் தங்களின் ‘தேச பக்தி‘யை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்.ன் பிரச்சார பீரங்கியல்லவா அவர். அவரால் இப்படித்தான் பாராட்ட முடியும்.

 சரி இப்படி நாசகார நிதி நிலை அறிக்கையின் படி அமலாக்கப்பட்டால் ஒட்டு மொத்த மக்களும் கடும் துன்பத்திற்கு உள்ளாகி நாட்டின் பொருளாதாரமே படுத்துவிடுமே? என்று நீங்கள் பயப்படலாம்.

 ஆனால் இதனை நமது மத்திய புள்ளிவிவர அலுவலகம் பார்த்துக் கொள்ளும்.