மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, 29.4.1978 முதல் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவண் அரசில் இட ஒதுக்கீடு கோரிப் பரப்புரை செய்து வருகிறது. பீகாரிலும், புது தில்லியிலும், தமிழகத்திலும் 1979 - 1982 இல் கிளர்ச்சிகளை நடத்தியது. எனவே, இக்கட்சியை "இட ஒதுக்கீட்டுக் கட்சி" என்று பலரும் அடையாளப்படுத்துகின்றனர். அதில் பிழை இல்லை.

8.8.1976இல் தொடங்கப்பட்ட இக்கட்சி, அப்போது முதலே சமதர்மம் பற்றிப் பேசுகிறது; ஏடுகளில் எழுதுகிறது. "மார்க்சியம் பற்றிப் பேசிடக் கம்யூனிஸ்டுகள் இருக்கும் போது, இவர்களுக்கு ஏன் இந்த வேலை?" என்று மூத்த பெரியார் தொண்டர்களும், பெரியார்பால் பற்றுள்ள தமிழ்ப்பொது மக்களும் நம் காதுபடப் பேசுகிறார்கள்.

எதற்கெடுத்தாலும் "அனைத்திந்திய அளவில் செயல்பட வேண்டும் என்று கூறுகிற அகில இந்தியக்காரர்களாக இவர்கள் மாறிவிட்டார்கள்" என்று, தமிழ்த்தேசிய இன விடுதலையில் ஆர்வம் உள்ளவர்கள் குறைபட்டுக் கொள்ளுகிறார்கள். இது 1937 இலேயே பெரியார் எடுத்த நிலைப்பாடு; இன்றும் வேண்டப்படுவது.

பின்வரும் புள்ளிவிவரங்கள், நடுவண் அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசுப் பணிகளில் கிடைத்துள்ள விவரங்களையும், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினருக்குக் கிடைத்துள்ள விவரங்களையும் பற்றியவை.

2008 நவம்பர், அன்றைய கணக்குப்படி நடுவண் அரசுப் பணிகளில் I, II, III, IV ஆம் நிலைப் பணிகளிலும், துப்புரவுப் பணியிலும் உள்ளவர்களில் மொத்த எண்ணிக்கை 28,43,965 ஆகும்.

இதில் பங்கு கிடைத்துள்ள விவரம் பின்வருமாறு :

மொத்தம் பட்டியல் வகுப்பு பழங்குடி வகுப்பு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு

நிலை I இல் 97,951 12,281 4,754 5,331

நிலை II 1,40,223 20,884 8,004 5,052

நிலை III 18,22,326 2,86,573 1,27,871 1,47,327

நிலை IV 7,06,170 1,38,466 48,828 3,56,468

துப்புரவு 77,295 39,774 4,621 2,548

ஒவ்வொரு நிலையிலும் மீதப்படும் மொத்த இடங்களும் வெறும் 15% உள்ள மேல் சாதியினர்க்கே.

இந்திய மக்கள் தொகை 2001 இல், 102.87 கோடி. இதில் இந்துக்கள் 83 கோடிப்பேர்.

இந்துக்களில்,

பார்ப்பனர் 5.50 கோடி

சத்திரியர், வைசியர் 2.00 கோடி

மேல் சாதி சூத்திரர் 7.00 கோடி

கீழ்ச்சாதி சூத்திரர் 44.00 கோடி

பட்டியல் வகுப்பார் 17.00 கோடி

பழங்குடியினர் 7.50 கோடி

83.00 கோடி

44 கோடிப் பேராக உள்ள கீழ்ச்சாதி சூத்திரர் தாம் இந்து பிற்படுத்தப்பட்டோர். மதச்சிறுபான்மையினருள், 8 கோடிப்பேர் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோராக உள்ள இந்து, இஸ்லாம், கிறித்துவ, சீக்கியப் பிற்படுத்தப்பட்டோர் 52 கோடிப் பேருக்கு, 2008 ஆம் ஆண்டுவரையில் நடுவண் அரசில் ஒவ்வொரு நிலை வேலையிலும் கிடைத்துள்ள பங்கு மேலே கண்ட பட்டியலின் படி மிகவும் குறைவனதே. இது ஏன்?

இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 இல் நடப்புக்கு வந்தது. ஆனால் 1955 இல் தான் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் ஆயத்தம் ஆனது. 1956 இல் அந்தப் பட்டியல் ஏற்றுக் கொள்ளப்பட்டுப், பிற்படுத்தப்பட்டோருக்கு அப்போதே நடுவண் அரசு வேலையிலும், எல்லா மாநிலங்களிலும் இடஒதுக்கீடு தரப்பட்டிருக்க வேண்டும். அப்படித்தர மறுத்தவர் பிரதமர் பண்டித நேரு தான்.

அவர், 1961 மே மாதம் நடுவண் அமைச்சரவையைக் கூட்டிக், "காகா கலேல்கர் பரிந்துரைத்த சாதிப்பட்டியலை இந்திய அரசு ஏற்க முடியாது" என்று தீர்மானமே நிறைவேற்றினார். அத்துடன் மட்டுமா? 1961 ஆகஸ்டு மாதம் எல்லா மாகாணப் பிரதமர்களுக்கும் ஒரு இரகசிய மடல் எழுதினார். "பிற்படுத்தப்பட்டோருக்கு மாகாண அரசில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக்கூடாது. வேண்டுமானால் அவர்களுக்குப் படிப்புக்குப் பண உதவி செய்யலாம்" என்று அதில் அறிவித்தார்.

இது, வேண்டுமென்றே இந்தியப் பிற்படுத்தப்பட்டோருக்கு பண்டித நேரு செய்த துரோகம் ஆகும்.

நேரு அவர்களின் இந்த அக்கிரமத்துக்குச் சாவு மணி அடித்தது மா.பெ.பொ. கட்சி தான். எப்படி?

29.4.1978 முதல் 29.4.1981 வரை உள்ள மூன்று ஆண்டுகளில் ஏறக்குறைய 16 மாதங்கள் நானும் என் தோழர்களும் புது தில்லி, பீகார், உத்தரப்பிரதேசம், இராசஸ்தான் என அலைந்தோம்; பரப்புரை செய்தோம்; பேரணிகளை நடத்தினோம்; போராட்டங்களை நடத்தினோம்.

எண்ணற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும், சமூகத் தலைவர்களையும் நேரில் கண்டு பேசினோம். லோகியாவாதிகள் தவிர்த்த மற்றவர்கள் - "மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தர, அரசமைப்புச் சட்டத்தில் எங்கே இடம் இருக்கிறது?" என்று தான் எங்களிடம் கேட்டனர்.

இரண்டு ஆண்டுகளில் 1981, 1982 இல் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தக்க புரிதலைப் பலருக்கும் உண்டாக்கின.

1. புது தில்லியில் 29.4.1981 இல் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தினோம். வந்திருந்தவர்கள் 15 பேர். முதலில் அவர்களுக்குப் புரிய வைத்தோம்.

2. 25.1.1982 அன்று மாலை, அன்றைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் அவர்களை நானும் தோழர்களும் நேரில் கண்டு நீண்ட நேரம் பேசினோம்.

"அரசமைப்பு விதி 16 (4) என்பது அரசு வேலையில் இட ஒதுக்கீடு தருவது பற்றியது. அதில் to any backward class of citizens - எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்களுக்கும் என்றிருப்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் உள்ளிட்டது தான். அதற்கான விளக்கம் அதுதான் என்பதை டாக்டர் அம்பேத்கர் விதி 338 இல் குறித்துள்ளார்" என்பதை அவரிடம் நான் விளக்கிச் சொன்னேன்.

அன்றுதான் அவருக்கு அது புரிந்தது.

"இன்றைக்குத்தான் இந்த விதியின் அர்த்தம் எனக்குப் புரிந்தது" என்று, தயக்கமின்றி அவர் கூறினார். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றிய பொறுப்பு அப்போது அவரிடம் இருந்தது.

4.3.1982 அன்று மீண்டும் தனியே அவரைக் கண்டு, இரகசியமாகவே பேசினேன். "மண்டல் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் வெளியிடுவேன்" என்று எனக்கு உறுதி அளித்தார். அவ்வாறே அவரே அதனை வெளியிட்டார்.

3. "பிற்படுத்தப்பட்டோரின் நிலை என்ன? WHITHER BACKWARD CLASSES?" என்னும் ஒரு குறுநூலை உருவாக்கி 15.2.1982 இல் 790 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலவசமாக விடுத்து வைத்தோம்.

ஆனால், மண்டல பரிந்துரையின்படி, நடுவண் அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன்முதல் இட ஒதுக்கீடு தரப்பட்டது. 1994 இல் தான். அது வெறும் 27% தான்.

1982-க்குப் பிறகு, இன்று வரையில் - மா.பெ.பொ.க. மட்டுமின்றித் தமிழகத்திலும் இந்தியா முழுவதிலும் உள்ள பெரியார் - அம்பேத்கர் - லோகியாவாதிகளும் - சி.பி.அய் - மார்க்சிய - லெனினியக் கட்சிகளும் இயக்கங்களும் இதில் பெரிய அளவுக்கு நாட்டம் கொண்டு செயல்படுகின்றன.

ஆயினும் என்ன? 1. 1956இல் மத்திய அரசிலும், 1950இல் எல்லா வட மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 38 ஆண்டுகள் கழித்து - 1994 இல் தான், வேலையில் மட்டும் நடுவண் அரசில் இட ஒதுக்கீடு வந்தது. உயர் கல்வியில் இன்னும் இட ஒதுக்கீடு வரவில்லை.

1978 -க்குப் பிறகு தான், வட மாநிலங்களில் - மா.பெ.பொ.க.வின் போராட்டத்தால், முதன் முதலாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வந்தது.

எந்தக் கட்டத்திலும் தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும், நடுவண்அரசிலும் கல்வியிலோ, வேலையிலோ பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாச்சார இட ஒதுக்கீடு தரப்படவில்லை. இது அடாதது; அநீதியானது. நம்மால் அடையப்பட வேண்டியது.

இந்த நிலையிலும் மேற்குவங்க இடதுசாரி அணி அரசு, வருகிற 2010 - 2011 கல்வி ஆண்டு தொடங்கித்தான், மேற்குவங்கப் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசுக் கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் 17% இடஒதுக்கீடு தரப்போவதாக 23.12.2010இல் அறிவித்துள்ளது. ("The Hindu", 24.12.2010)

அறிஞர் அம்பேத்கர் பட்டியல் வகுப்பாருக்கு நடுவண் அரசு வேலையில் மட்டும் முதன்முதலாக 11.8.1943இல், 8.33% இட ஒதுக்கீடு பெற்றார். அவரே 1947இல் அதை 12.5% ஆக உயர்த்திப் பெற்றார். இன்று நடுவண் அரசில் 15% இட ஒதுக்கீடு விகிதாசாரப்படியும்; 1950 முதல் வட மாநிலங்களிலும் உள்ளது. மற்ற மாநிலங்களிலும், மக்கள் தொகைக்கு ஏற்பவும் இடஒதுக்கீடு தரப்படுகிறது.

பழங்குடியினருக்கு 1950இல் 5% ஒதுக்கீடு முதன்முதலாகத் தரப்பட்டது. இப்போது 7.5% தரப்படுகிறது.

பட்டியல் வகுப்பார்க்கும் பழங்குடியினருக்கும் விதி (16-4B) இன் படி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தரப்படுகிறது. 17.6.1995 இலோ 9.6.2000 இலோ இந்த விதிகள் (16-4A, 16-4B) சேர்க்கப்பட்டபோது, இந்த விதியில் பிற்படுத்தப்பட்டோரும் சேர்க்கப்பட வேண்டி ஏற்ற முயற்சிகளை எவரும் எடுக்கவில்லை.

"இன்னமும் இட ஒதுக்கீடு கோருவதா? என்று நினைப்போரும் கேட்போரும் - இந்தியாவில் பார்ப்பன மேல்சாதி ஆதிக்கம் இன்னமும் எல்லாத் துறைகளிலும் இருப்பது முறையா? தகுமா? என்பதையும் - ஒவ்வொரு துறையிலும் பிற்படுத்தப்பட்டோர் (52%), பட்டியல் வகுப்பார் (17%), பழங்குடியினர் (7.5%) ஆக 76.5% வெகு மக்களுக்கு உரிய பங்கு தரப்பட வேண்டாமா? இவை பெறப்படப் போராட வேண்டாமா? என்பதைப் பற்றியும் மானமும் அறிவும் கொண்டு எல்லோரும் சிந்தியுங்கள்! சிந்தியுங்கள் என வேண்டுகிறோம்.

Pin It