Hanuman-350நாளும் பல நல்ல செய்திகளைத் தேடிச் சொல்லும் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தன்னுடைய மேடைப் பேச்சுகளையும், தான் எழுதிய சில கட்டுரைகளையும் தொகுத்து “மொழியும் வாழ்வும்” என்ற நூல் வடிவில் தந்திருக்கிறார். 11 கட்டுரைகள் இந்நூலுள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் - மொழி, சமூகம், வரலாறு எனப் பல்வேறு தளங்களில் நின்று பேசுகின்றன என்றாலும், அனைத்தையும் உள்ளடக்கிய மையக்கூறாக மொழியே இருக்கிறது என்பதை நூலாசிரியர் நூல் நெடுகிலும் நிறுவிச்செல்கிறார்.

மொழியறியாத மனித இனம் பூமிப்பந்தில் எங்குமே இருக்க முடியாது. விலங்குகள், பறவைகள் கூட ஒலி வடிவத்தில் தங்களுக்கான மொழியை உருவாக்கிக் கொண்டுள்ளன. வாழ்க்கையின் எந்த ஒரு நொடியிலும் மனிதன் மொழியைவிட்டுத் தன்னை விலக்கிக் கொண்டுவிட முடியாது. காரணம், மொழியின்றி மனிதனால் சிந்திக்கவே முடியாது. சிந்திக்காத மனிதன் உயிர் வாழவே முடியாது. அதனால்தான், மொழியையும் வாழ்வையும் இணைத்து, தன் நூலுக்கு ‘மொழியும் வாழ்வும்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் பேராசிரியர்.

முதல் கட்டுரையிலேயே மொழி குறித்த ஒரு செய்தியை, அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துவிடுகிறார். செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு கருவிதான் மொழி. அதற்கு மேல் அதற்கு முக்கியத்துவம் தர என்ன இருக்கிறது என்னும் அதிமேதாவித்தன மான கருத்துக்கு, அமெரிக்க மொழியியலாளர் நோம்ஸ்சாம்ஸ்கியின் நூலில் இருந்தும், ஜெனீவாவில் தனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்திலிருந்தும் சிறப்பானதொரு விளக்கத்தைத் தந்திருக்கிறார்.

ஒரு மக்கள் கூட்டத்தினுடைய இயற்கையான விளைபொருள் மொழி ; எனவே மொழி என்பது மனிதனின் அகத்தில் இருப்பது. ஆனால் கருவி என்பது புறத்தில் - வெளியே உள்ளது. எழுதுகோலும், கத்தியும் கருவிகள்தான். அவற்றைப் பிரிந்தோ, அவை இல்லாமலோ மனிதனால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் மொழியைப் பிரிவது என்பது மனிதனுக்கு இயலாத காரியம். உயிர் பிரிந்து மூளை செயலற்ற நிலையில் மட்டுமே ஒரு மனிதன் மொழியற்றவனாகிறான் என்பதை அழுத்தமாகவும், அசைக்க முடியாதபடியும் பதிவு செய்திருக்கிறார்.

அதே கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வரும்போது, மொழி சமத்துவம் குறித்தும் தனக்கே உரிய அழகான நடையில் சொல்கிறார். இந்தியாவின் தலைமை, சமற்கிருத்தைத் தூக்கிப் பிடித்து, இந்தியைத் திணிப்பதற்கு முண்டிக்கொண்டிருக்கும் இச்சமயத்தில், மொழி சமத்துவம் குறித்த நூலாசிரியரின் கருத்துகளைத் தாய்மொழியை நேசிக்கும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம். சுபவீ சொல்கிறார், “ நம் தமிழில் மட்டுமின்றி, ஒவ்வொரு மொழியிலும் இத்தகைய அழகுகள் உள்ளன. அவரவர்க்கு அவரவர் மொழி அழகுதான். அவரவர்க்கு அவரவர் மொழி சிந்தனைகளின் ஊற்றுதான்.

மனிதர்கள் வேண்டுமானால் ஒருவருக்கொருவர் பகையாகலாம். மொழிகளுக்குள் பகையில்லை. உறவும் தொடர்பும் மட்டுமே உண்டு.” ஆம், இந்த உண்மையை உணர்ந்தால், உலகில் மொழிச் சண்டை, இனச்சண்டைகளுக்கு இடமிருக்காது என்பது உறுதி.

2ஆவது கட்டுரையில், மொழி என்னும் அழகான போர்வைக்குள் பொதிந்து வைக்கப்பட்டுள்ள புராணக் குப்பைகளையும் போட்டுடைக்கிறார். ‘பெண் விடுதலை’ குறித்த அக்கட்டுரையில், பெண் சமூகத்தில் காலப் போக்கில் நிகழும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் ஆணாதிக்க சமூகத்தைப் பற்றியும், திரௌபதியை சூதாட்டத்தில் ஒரு பந்தயப் பொருளாக வைத்துச் சூதாடிய, மகாபார தருமனின் தரும சிந்தனையையும் குறித்துப் பேசும் அதே நேரத்தில், பெண்ணை, ‘பிறன் பொருளாள்’ என்று சொல்லும் வள்ளுவரையும் கேள்விக்குட்படுத்துகிறார். இராமாயனத்தின் சூர்ப்பனகைப் படலத்தில் இருந்து நூலாசிரியர் எடுத்துக்காட்டும் பகுதியைப் படிக்கும் போது, அடக்கமுடியா சினம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

‘ஏக பத்தினி விரதன்’ இராமன் எத்தகைய கேவலமான சிந்தனை உள்ளவன் என்பதை, இதுவரை கம்பன் விழாக்களில் கூடச் சொல்லப்படாத சூர்ப்பனகைப் படலத்தின் முழுமையான பக்கத்தை எடுத்துக்காட்டிச் சொல்கிறார். சூர்ப்பனகையை ஆண் மோகம் கொண்டவள் என்றும், அதனால்தான் இலக்குவனால் மூக்கறுக்கப்பட்டாள் என்றும் மேடைகள் தோறும் பேசப்படுகின்றன-.

ஆனால், இராமனின் சபல புத்தியால் வஞ்சிக்கப்பட்ட நிலையில், விசாரணையே இல்லாமல் இலக்குவன் மூக்கு, காதுகள், முலைக்காம்புகளை அறுத்துக் கோரமாக்கி, வயிற்றில் எட்டி உதைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணாக, அழுதுகொண்டே அண்ணன் இராவணனிடம் ஓடுகின்ற சூர்ப்பனகையை வெளிச்சமிட்டுக் காட்டி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார் சுபவீ. தன் அன்புத் தங்கை உதிரம் சொட்டச் சொட்ட அழுதுகொண்டே வந்து நிற்பதைப் பார்த்த பின்னரும், “நீயிடை இழைத்த குற்றம் என்னகொல்” என்று கேட்ட நியாயவானாக இராவணனை நமக்கு அடையாளம் காட்டுகிறார்.

‘சிலப்பதிகாரச் சேயிழையார்’ என்னும் கொஞ்சுதமிழ்த் தலைப்பிலான கட்டுரையில், சிலப்பதிகாரத்தில் வருகின்ற பெண் பாத்திரங்களைப் பற்றிப் பேசுவதோடு, தாய் வழிச் சமூகத்தைப் பற்றிய சமூக அறிவியல் வரலாற்றையும், சங்க காலம் தொடங்கி இன்றுவரை பெண்களின் கல்வி, சமூக நிலை குறித்த செய்திகளையும் அழகாகத் தொகுத்துக் காட்டுகிறார்.

‘ஒரு நாடும் நான்கு துறைகளும்’ என்னும் தலைப்பின் கீழ், எந்த ஓர் நாடானாலும், இனமானாலும் மேம்பாடடைய வேண்டும் என்றால் குறைந்தது நான்கு துறைகளிலாவது முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று சொல்லி, அத்துறைகள் எவை என்பதையும் பட்டிலிடுகிறார். பொருளியல், அறிவியல், சமூகநீதி, இலக்கியம் போன்றவை பட்டியலில் சுட்டப்படுகின்றன. இத்துறை களில் பிற நாடுகளின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைச் சொல்லி, தமிழ்நாடு அத்துறைகளில் இருந்த நிலை, இன்று இருக்கின்ற நிலையை எடுத்துக்காட்டுகிறார். வானூர்தியைக் கற்பனை செய்த சீவகசிந்தாமணியையும், அணுவைத் துளைத்து என்னும் தொடரைத் தந்த அவ்வைப்பாட்டியையும், யானையால் யானை யாத்தற்று... என்னும் திருக்குறளில் காணப்படும் அறிவியல் சிந்தனைகளையும் தொட்டுக்காட்டி, தமிழரின் அந்த அறிவியல் சிந்தனை மத வழிக் கருத்துகளால் மறிக்கப்பட்டுள்ள வேதனையையும் பதிவு செய்கிறார்.

தன்னுடைய பள்ளிப்பருவத்தை ஒரு சிறுவனுக்குரிய துள்ளலோடு பதிவு செய்துள்ள, ‘துள்ளித் திரிந்த காலம்’ கட்டுரையில்கூட, 1901ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவில் 5 பல்கலைக்கழகங்களும், 106 கல்லூரிகளும், சற்றேறக்குறைய 500 பள்ளிகளும் இருந்தன என்ற வரலாற்றையும் சொல்லி முடிக்கிறார். கட்டுரை, பேச்சு என்னும் இரண்டு வகையிலும் அடங்காத ஒரு தலைப்பும் இந்நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ளது. ஒரு நூலுக்கு அவர் அளித்துள்ள அணிந்துரையே, ‘வெளிநாட்டுக் கல்வி, பணம், பண்பாடு’ என்ற தலைப்பில் அமைந்துள்ள அப்பகுதி.

அதில், அணிந்துரைக்கான நூலில் இடம் பெற்றிருந்த கருத்துகளில் சிறந்தவற்றை மனந்திறந்து பாராட்டியும், உடன்பட்டும் நிற்கும் இடங்களாகட்டும், தனக்கு உடன்பாடில்லா கருத்துடைய பகுதிகளை மறுத்து, விமர்சிக்கும் இடங்களாகட்டும் - இந்நூலின் 11 தலைப்புகளின் கீழ் வரும் அனைத்துப் பகுதிகளிலும் ஆசிரியரின் எழுத்து நயம் படிப்பதற்கு மேலும் சுவை கூட்டுவதாக இருக்கிறது.

செய்திக் குவியலான இதுபோன்ற நூல்கள் நம் வீட்டு நூலகத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டாமா?

மொழியும் வாழ்வும்

ஆசிரியர் : சுப. வீரபாண்டியன்

விலை : ரூ. 95/-

கிடைக்குமிடம் :

வானவில் புத்தகாலயம்

10/2, காவலர் குடியிருப்பு சாலை

தியாகராயர் நகர், சென்னை - 17

தொலைபேசி : 24342771, 65279654

Pin It