உலகத்தையே தன் உள்ளங்கைக்குள் வைத்திருக்கும் இன்றைய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் தொலைத் தொடர்பு காலத்தில் புளுவேல் என்னும் கொடூரமான விளையாட்டிலிருந்து மீள்வதற்குள் மோமோ என்னும் விளையாட்டு நம் உயிரை வாங்க வந்து விட்டது. உலகையே உலுக்கி எடுக்கும் இது போன்ற விளையாட்டுகளில் இருந்து தமது பிள்ளைகளை காப்பதுதான் இன்றைய பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். அதேபோல் இன்றைக்கு பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திய பிறகு குப்பைகளில் வீசி எறியப்படும்போது அது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய பாதிப்பையும் அடுத்தத் தலைமுறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலையும் தருகிறது. இது போன்ற பிரச்சனைகள் உள்ள நேரத்தில்தான் நமது தமிழர் விளையாட்டுகளின் அருமை தெரியும். பனை நுங்கை உண்டபின் பயன் இல்லை என்று தூக்கி எரிந்த பனங்காயில் இருந்து தயாரிக்கப்படுவது தான் நுங்கு வண்டியாகும். தமிழ் நாட்டின் கிராமத்துத் தெருக்களில் குழந்தைகள் விளையாடிய பனை நுங்கு வண்டி விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

பனைமரம் உலகத்தில் உள்ள 108 நாடுகளில் இருந்தாலும் அது தமிழரின் மரம் தமிழ் மாநிலத்தின் மரம் என்ற தனித்த அடையாளத்தோடு விளங்குவதற்குக் காரணம் உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழியின் எழுத்துகள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான் என்பதாலும் மேலும் இங்குள்ள வறட்சியைத் தாங்கி வளர்வதாலும் பனையைப் போற்றிப் பாதுகாத்தான் தமிழன். பனைமரம் தான் தமிழரின் அடையாளம் என்பதால் தமிழன் வாழ்ந்த மலேசியா, ஈழம், மொரீசியஸ் தீவு, தென்னாப்பிரிக்கா, தமிழகம் என தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் பனைமரத்தையும் வளர்த்தான்.

தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமையும் கடுமையான வறட்சியையும் தாங்கி வளரும் தன்மைகொண்டதுமான பனை மரத்திலிருந்துதான் குளிர்ந்த பனை நுங்கும், கள்ளும், பதநீர் அல்லது தெளுவும் கிடைக்கின்றன. மேலும் பதநீரிலிருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற மருத்துவ குணம் நிரம்பிய பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இது கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தருவதோடு அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் கைகொடுக்கிறது. இவை அனைத்தும் பெரியவர்களின் பிரச்சனை, ஆனால் குழந்தைகள் மற்றும் சிறுவர்களைப் பொறுத்தவரையில் பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பனை நுங்கைக் கடும் கோடை வெய்யிலில் ருசித்து உண்பதும் பனை நுங்கு எடுத்த பின்பு உள்ள பனங்காயைக்கொண்டு பனை நுங்கு வண்டி அல்லது பனை வண்டியை ஓட்டி மகிழ்தலும்தான் அவர்களுக்கு பனை மரத்தோடு உள்ள உறவை பலப்படுத்துகிறது. ஒருவேளை பனை நுங்கை மனிதன் மரத்தின் மீது ஏறி வெட்டவில்லை என்றால் அது மேலும் வளர்ந்து பனம்பழமாக மாறித் தானாக மரத்திலிருந்து விழுகிறது. அதையும் இளைஞர்களும் சிறுவர்களும் பெரியவர்களும் உண்டு மகிழ்வதுண்டு.

நகரத்தில் வாழும் குழந்தைகள் விளையாட ஏதோ ஒரு விளையாட்டுப் பொம்மைகளையோ அல்லது விளையாட்டுப் பொருட்களையோ கடையிலிருந்து வாங்கி விளையாடுகின்றனர். ஆனால் கிராமத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அங்கு கிடைக்கும் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு பிள்ளைகள் விளையாடுவார்கள். நகரத்துத் தாக்கம் ஏதுமின்றி, சில கிராமத்துச் சிறுவர்கள் பனை நுங்கு வண்டி, டயர் வண்டி, மாட்டு வண்டி போன்ற விளையாட்டுப் பொருட்களை தயார் செய்து, மண்வாசனை மாறாத கிராமத்துத் தெருக்களில் ஆடு, மாடுகளுக்கு நடுவே கிராமங்களில் விளையாடுவதைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது.

குறிப்பாகப் பள்ளி கோடை விடுமுறை தொடங்கும் போது பனை மரத்தில் இருந்து நுங்கு கிடைக்கும் அதிலிருந்து சிறுவர்கள் விளையாட நுங்கு வண்டி கிடைக்கும்.

கிராமத்தில் ஏரிக்கரை குளக்கரை சாலை ஓரம் என பொது இடங்களில் உள்ள பனை மரத்தில் இருந்து பனங் குலையை பெரியவர்கள் இறக்கி வந்தவுடன் அவர்களைச் சிறுவர்கள் சூழ்ந்து கொள்வார்கள். இந்தச் சிறுவர்களுக்கு பதமான நுங்கை பனங்காயின் மேல்பகுதியைச் சீவி கொடுக்க, அதை அப்படியே வாயில் வைத்து ஆட்காட்டி விரல் அல்லது கட்டை விரலால் குத்தி நுங்கை உதட்டோடு ஒட்டி உறிஞ்சி சாப்பிடும் சுவையே தனி. அப்போது நுங்கில் இருந்து வெளிப்படும் சுவையான நுங்கின் இளநீர் முகத்தில் பீச்சியடிப்பதும் தனிசுகம்.அப்படி நுங்கை உண்ட பின்னர், சக்கர வடிவில் மீதமாகும் நுங்கு குதக்கைகள் இரண்டை எடுத்துக் கொண்டு ஒரு அரை அடி முதல் முக்கால் அடி நீளமுள்ள ஒரு குச்சியை அச்சாகக் கொண்டு இரண்டு குதக்கைகளை அதன் மையப் பகுதியோடு இணைத்துக் கொள்ளவேண்டும். அதை இயக்குவதற்கு அருகில் இருக்கும் ஏதோ ஒரு மரத்தில் கிளை பிரியும் இடமாக பார்த்து Y வடிவத்தில் கவட்டை அல்லது கப்புக்கோலை நீளமானக் குச்சியைக்கொண்டு தயார் செய்துகொள்ளவேண்டும். 

இரண்டு நுங்கு குதக்கையை இணைத்த வண்டியை கப்புக் கோல் அல்லது கவட்டை குச்சியை நடுவில் பொருத்தி நகர்த்தும் போது நகரத் தொடங்குது சிறுவர்களின் நுங்கு  வண்டி. நுங்கு வண்டியில் இருந்து சத்தம் வருவதற்கென நுங்கு வண்டியின் சக்கரத்தில் ரப்பர் பட்டையை கார முள்ளின்  உதவியால் பொருத்தியும் ஓட்டுவதுண்டு. அப்படி இல்லை என்றால் சிறுவர்கள் தாங்கள் ஒட்டும்போதே வாயிலிருந்து சத்தம் எழுப்பிக்கொண்டே வண்டியை ஓட்டுவார்கள். சிறுவர்கள் தங்களுக்கான வண்டியை தாங்களே உருவாக்கிக்கொண்டு அந்த வண்டி ஓட்டும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

வண்டி ஒட்டுவதோடல்லாமல் யார் வண்டி வேகமாக முந்திச் செல்லும், யார் செய்த வண்டி நன்றாக இருக்கிறது என்று அவர்களுக்குள் ஆரோக்கியமானப் போட்டிகளும் நடைபெறும். நுங்கு வண்டி என்றாலும் சிறுவர்கள் நடந்தே தான் அந்த வண்டியை ஓட்டுவார்கள். அப்படி ஓட்டுவது அவர்களுக்கு வண்டியில் ஏறிச் செல்வது போன்றதொரு மகிழ்ச்சியைத் தருவதை அருகிலிருந்து பார்த்தாலோ அல்லது அனுபவித்தாலோ தான் புரிந்துகொள்ள முடியும். சாதாரணமாக சிறுவர்களை கடைக்கு அல்லது ஏதாவது உறவினர் வீட்டிற்குச் சென்று ஏதாவது வாங்கி வரச்சொன்னால் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்கள் கூட, இவர்கள் தயாரிப்பில் உருவான நுங்கு வண்டி இருந்தால், மறுப்பேதும் செல்லாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு ஆனந்தமாகச் சென்று வருவார்கள்.

நுங்கு வண்டி பெரும்பாலும் இரண்டு சக்கரம் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது சில நேரங்களில் ஒரே சக்கரத்தைக் கொண்டும் தயாரிக்கப்படுகிறது. மேலும் அதிக எண்ணிக்கையிலான சக்கரத்தைக்கொண்டு தயாரிக்கும் போது அதன் உருவம் மற்றும் அதை இயக்கம் முறைகளும் மாறுபடுகிறது. 

விளம்பர மயமாகிப்போன நகர்ப்புற விளையாட்டுகளுக்கு மத்தியில் சுயமாக உருவாக்கி விளையாடி மகிழ்ந்த நுங்கு வண்டி இன்னும் நகரத்தின் வாசம் வீசாத ஒரு சில கிராமங்களில் விளையாடுவதும் நுங்கு வண்டி உயிர்ப்புடன் ஓடுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நுங்கு வண்டி விளையாட்டு நம் குழந்தைகளுக்கு பல வாழ்க்கைப் பாடங்களை சொல்லிக்கொடுக்கிறது. குறிப்பாக சிறுவர்களே அவர்களுக்கான நுங்கு வண்டியைத் தயாரிப்பதால் அவர்களின் படைப்பாற்றலும், சிந்தனைத் திறனையும் வளர்க்கிறது.

இன்றைக்கெல்லாம் பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் இடங்கள் காலியாக உள்ளது என செய்தியைப் பார்க்கிறோம். அதற்கு போதுமான வேலை வாய்ப்பின்மையே காரணம் என்கிறார்கள். இது போன்ற விளையாட்டுகளை அவர்கள் சிறுவயதில் விளையாடி இருந்தால் அவர்கள் இயந்திர தளவாடப் பொறியியல் துறையில் படிக்கும்போது நவீன புதிய கருவிகள் கண்டுபிடிப்பதற்கோ அல்லது தயாரிப்பதற்கோ இந்த விளையாட்டுத் தூண்டுகோலாக அமைந்திருக்கும்.

வீணாகும் பொருட்களைக் கொண்டு புதிய பொருட்கள் தயாரிக்கும் அறிவுத்திறனை  வளர்க்கும் வேலையை இந்த நுங்கு வண்டி விளையாட்டு லாவகமாக சொல்லிக்கொடுக்கிறது.

பனைமரத்திலிருந்து கிடைக்கும் ஓலையில் இருந்து   பெரியவர்கள் வீட்டுக் குடிசையையும் மாட்டுக்குடிசையையும் கட்டுகிறார்கள் ஆனால் சிறுவர்களோ காய்ந்த ஓலையில் இருந்து காத்தாடி செய்து விளையாடுகிறார்கள். அந்த தத்துவத்தில்தான் இன்றைய காற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் காற்றாலை மின் நிலையங்கள் இயங்குகின்றன. தமிழன் விளையாட்டாகச் செய்தவற்றை அறிவியலும் தொழில் நுட்பமும் கண்டு பிடிப்பாக நிகழ்த்திக்காட்டியுள்ளன.

ஒரு பனை மரம் உயிர்நீத்து தலை வீழ்ந்து பட்டுப்போன நிலையிலும், பனை மரம் பல பறவைகளுக்கு கூடுகளை அமைத்து முட்டையிட்டு குஞ்சுகள் வளர்க்கச் சிறந்த பாதுகாப்பான இடமாக விளங்குகிறது என்பதை தற்போதைய கவிஞன் ஒருவன் அழகாகக் கூறுகிறான் 

“பட்டுப்போன ஒற்றைப் பனைமரம்

என நினைக்காதே!

அது ஒற்றை குருவியின் சிம்மாசனம்”

இப்படி பனைமரம் வாழும் காலத்திலும் தன் மீது இடி வீழ்ந்து பட்டுப்போன பிறகும் பல உயிரினங்கள் வாழ உதவும் பனை மரம், இன்று அழிவின் விளிம்பில் இருப்பதாகப் பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன, எனவே அரசு பனைமரத்தைக் காக்க முயற்சி எடுக்க வேண்டும். அதனால் தமிழத்தின் மாநில மரம் காக்கப்படுவதோடு அதிலிருந்து கிடைக்கும் மருத்துவ குணம் நிரம்பிய பதநீர், பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி போன்றவையும் காக்கப்படும் சிறுவர்களின் பனை நுங்கு வண்டி விளையாட்டும் காக்கப்படும்.

பனை நுங்கு வண்டியை இப்ப உள்ள நகரத்துப் பிள்ளைங்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை. கிரிக்கெட்டும் கணிப்பொறியும் அவர்களுக்கு அளவில்லா சந்தோசம் கொடுப்பதாக நினைக்கிறார்கள். உண்மையான சந்தோஷம் நாம் ஓட்டி மகிழ்ந்த டயர் வண்டி, நுங்கு வண்டி, கோட்டிபுல்லு, கபடி போன்ற விளையாட்டில்தான் இருந்தது. ஆகவே அவற்றை நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொடுப்போம்.

- இன்னும் விளையாடலாம்

Pin It