மொத்தம்         :           அய்வர்

கருப்பொருள்   :           கேள்விகள், விவாத மேடை, தன்மானம், பகுத்தறிவு, தமிழ் மொழிச் சிறப்பு

பங்குபெறுவோர்         :           புத்தன், யாழினி, ராம், ௮க்ஷரா     

நெறியாளர்     :           திருவள்ளுவர்

தலைப்பு          :           தொன்மையான மொழி தமிழா? சமஸ்கிருதமா?

உடை  :           திருவள்ளுவர் with coat suit

உடை நிறம்    :           புத்தன் - கருப்பு உடை

                                யாழினி - வெளிர் சிவப்பு உடை

                                ராம் - காவி உடை

                                அக்ஷரா - மஞ்சள் உடை

திருவள்ளுவர் : அனைவருக்கும் வணக்கம்! இது தமிழர் தொலைக்காட்சி வழங்கும், "மெய்ப்பொருள் காண்பது அறிவு" நிகழ்ச்சி. இந்த நிகழ்வில் ஓர் அதிமுக்கியமான தலைப்பைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம். இது பரபரப்பான சூடான விவாதமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லை. ஆம்! நாம்விவாதிக்க இருப்பது, நம் ‘இனம்’ சார்ந்தது, நம் ‘மொழி’ சார்ந்தது, நம் ‘பண்பாடு’ சார்ந்தது, ‘அறிவியல்’ சார்ந்தது. நாம் விவாதிக்க இருக்கும், அந்த அதி முக்கிய தலைப்பு, "தொன்மையான மொழி? தமிழா? ஜம்ஷுகிரதமா? மன்னிக்கவும் - சமஸ்கிருதமா? அறிவியல் ஆதாரங்கள் என்ன?" விவாதிப்போம்!    நம்மோடு நான்கு ஆளுமைகள் இணைகிறார்கள். திரு. புத்தன், திருமிகு.யாழினி, திரு.ராம், திருமிகு.௮க்ஷரா

(திருவள்ளுவர் அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்கிறார். அனைவரும் திருவள்ளுவருக்கு வணக்கம் தெரிவிக்கின்றனர்)

திருவள்ளுவர் : முதலில் திரு.ராமிடம் கேட்போம், தொன்மையான மொழி என்று நீங்க எதை கருதுறீங்க? ஏன்?

ராம் : நீங்க பாத்தேள்னா, இந்த லோகத்திலேயே பேஷான பாஷைன்னாலும் தொன்மையான பாஷைன்னாலும்…… சமஸ்கிருதம்தான். ஏன்னா சமஸ்கிருதம் பல்லாயிரம் பல்லாயிரம் யுகமா இருக்கு. கடவுள் லோகத்த படச்ச, நெக்ஸ்ட் செகண்ட் சமஸ்கிருதத்த படச்சுட்டார். அதனாலதான், சமஸ்கிருதம் தேவ பாஷையாக்கும். ஆங்..புரிஞ்சுதோன்னோ?

திருவள்ளுவர் : அடுத்து, திருமிகு.யாழினியிடம் கேட்போம். உங்க கருத்து என்ன யாழினி? தொன்மையான மொழி என்று நீங்க எதை கருதுறீங்க? ஏன்?

யாழினி : தமிழ்தான்னு நான் நெனக்கிறேன். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மொழி தமிழ். தமிழ் கண்டிப்பா தேவ பாஷையெல்லாம் இல்ல. ஆனாலும், நிச்சயமாக மக்களின் மொழி.

திருவள்ளுவர் : அடுத்து, திருமிகு.அக்ஷராவிடம் கேட்போம். அக்ஷரா, உங்கள் கருத்து என்ன? தொன்மையான மொழின்னு நீங்க எதை கருதுறீங்க? ஏன்?

௮க்ஷரா : லோகம் சிருஷ்டிக்கப் பட்டவே, சமஸ்கிருதம் படைக்கப் பட்டதா பெரியவா…… சொல்றா. அதனால தொன்மையான மொழி சமஸ்கிருதமே.

திருவள்ளுவர் : அடுத்து, திரு.புத்தனிடம் கேட்போம். புத்தன், நீங்க சொல்லுங்க. உங்க கருத்து என்ன?

புத்தன் : நிச்சயம் தமிழ்தான். ஏன்னா உலகம்ன்னு ஒண்ணு உருவாகி, ஒரு செல் உயிரி உருவாகி, பரிணாம வளர்ச்சியில் உயிர் உருவாகி, பின் மனிதர் உருவாகிய பின்னர்; மனிதரிடையே ஒலிகள் பரிமாற, ஒலிகள் இயற்கையாய் பக்குவம் அடைந்து, பரிணாமம் அடைந்த மொழி 'தமிழ்' என்று மொழிச்சான்றோர் கூறுகின்றனர். ஆகையால் தமிழ் மொழியே தொன்மையான மொழி.

திருவள்ளுவர் : மிகவும் சுவாரசியமான வாதங்களை எடுத்து வைத்துள்ளார்கள் முதல் சுற்றில். விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம். சரி, உணர்வின் அடிப்படையில் கருத்துகளைப் பகிர்ந்தீர்கள். அடுத்து மொழியியலில் சொல்லாய்வைச் சார்ந்து சில கருத்தை இந்த சுற்றில் கூறுங்கள். சொல்லுங்கள் திரு.ராம்

ராம் : உதாரணமாக “லோகம்” அப்டிங்கற சமஸ்கிருத சொல்லில் இருந்தே “உலகம்” அப்படிங்கற தமிழ் சொல் வந்தது. மறுக்க முடியுமா?

புத்தன் : ஏன் முடியாது? “லோகம்” அப்டிங்கற சமஸ்கிருத சொல்லுக்கு வேர் சொல் என்ன ?

ராம் : அது வந்து வந்து வந்து …….. (தலையை சொறிகிறார் ராம்)

புத்தன் : அது என்னங்க வந்து போயின்னு இ..........ழுவை? தமிழில் “உலகம்” எனும் சொல்லுக்கு "உல்", “உலம்” அப்படின்னு வேர்ச் சொற்கள் இருக்கின்றன. சமஸ்கிருதத்தில் இருக்கிறதா? இல்லையே!

உல் - உலம் = உருட்சி, திரட்சி, உருண்ட கல்.

உலக்கை = உருண்டு நீண்ட பெருந்தடி.

உலண்டு = உருண்டு நீண்ட புழு.

உலம் - உலவு. உலவுதல் = சுற்றுதல், திரிதல்.

ராம் : அது…. அது…. (முழிக்கிறார்)

யாழினி : அது சரி “நாவாய்” அப்படிங்கிற தமிழ்ச் சொல் சமஸ்கிருத சொல்லா தமிழ் சொல்லா ?               

௮க்ஷரா : சந்தேகம் என்ன? சமஸ்கிருத சொல்தான். சமஸ்கிருத மொழியிலேந்துதான் தமிழ் மொழியே பிறந்தது. அப்ப நாவாய் சமஸ்கிருத சொல்தானே! (தலையை குதூகலத்தில் ஆட்டுகிறார்)

யாழினி : அதான் இல்லை. சமஸ்கிருத கலாச்சாரத்தில் கடல் பிரயாணம் செல்வதே பாவம். அதாவது ‘தோஷம்’. ஆனால் தமிழர்கள் கடலோடிகள். கப்பலில் கடல் கடந்து வாணிபம் செய்துள்ளார்கள். கடல் கடந்து நாடுகளை வாகைச் சூடி உள்ளனர். கட்டுமரம் அப்படிங்கற சொல்லிலே இருந்தே catamaran அப்படிங்கற ஆங்கில சொல்லே வந்துள்ளது. ‘நாவாய்’ என்கிற தமிழ் சொல்லில் இருந்தே NAVY என்று ஆங்கிலத்தில் வந்துள்ளது. இதற்கு என்ன சொல்கிறீர்? (கை விரல்களை விரித்து கேள்வி கேட்கிறார்)

திருவள்ளுவர் : பலே பலே!! விவாதம் சூடு பிடிக்கிறது. சரி தொல்லியற் துறையையும் தொட்டு பார்ப்போம். தொல்லியற் ஆதாரம் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் எவ்வளவு இருக்கிறது?

ராம் : சமஸ்கிருத இலக்கியங்கள் மிகத் தொன்மையானவை. பல செப்பேடுகள் கல்வெட்டுகள் சமஸ்கிருதத்தில் இருப்பதாக சொல்வதாக நம்புவதாக கருதப்படுகிறது?

புத்தன் : யார் கூறினார்கள்? (கையால் கேள்வி கேட்கிறார்)

ராம் : அது….. வந்து…. வந்து (முழித்துக் கொண்டே) யாரோ சொன்னாங்க?

புத்தன் : இந்தியாவில் இது வரை கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் கல்வெட்டுகளில் 60 விழுக்காட்டுக்கும் மேலான கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள் என இந்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறையே சொல்கிறது. அப்படின்னா, தமிழ் மொழியின் தொல்லியல் சான்று எவ்வளவோ இருக்கிறது என்பது இதிலேந்து தெரியலியா? அது மட்டுமா!

திருவள்ளுவர் : ஓ! இன்னும் தொல்லியல் சான்றுகள் வேறு இருக்கிறதா?

புத்தன் : ஆமாம். உலகத்தின் தலை சிறந்த ஆராய்ச்சியாளர் திரு. அஸ்கோ பார்ப்போலா (Asko Parpola), சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் (தமிழர்) நாகரிகம் என்றும், சிந்து சமவெளி நாகரிக எழுத்துகள், திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான தமிழ்தான் என்றும் அறிவியல் சான்றுகளுடன் நிறுவி உள்ளார். அது மட்டுமா? தமிழ் ஈழத்தில் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில், பூம்புகாரில் ஏராளமான அகழாய்வுகள் தமிழ் மொழிச் சான்றைத் தாங்கி நிற்கிறது. மிக மிக சமீபத்தில் கீழடி எனும் ஓர் ஊரையே அகழ்வாய்வில் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு சமஸ்கிருதச் சான்றுகள் உள்ள ஊர்கள் அகழ்வாய்வில் எங்காவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதா? அதற்கு அறிவியல் சான்றுகள் உள்ளதா?

ராம் : அஅஅஅ..... து ( தடுமாறுகிறார்)

௮க்ஷரா : சமஸ்கிருதத்தில் பல சுவையான இலக்கிய சாரம் இருக்கிறது.

யாழினி : எப்படிப்பட்ட இலக்கிய சாரம்? பிறப்பால் ஒருவர் மேல், ஒருவர் கீழ் என்பதெல்லாம் ஒரு இலக்கியமா? தமிழிலே இலக்கிய சாரம் என்றால் எவ்வளவோ இருக்கிறது. எடுத்து காட்டுக்கு, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' , 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' போன்ற இலக்கிய சுவை மற்றும், மானுட மாண்புகள் நிறைந்து உள்ளன. இவற்றிற்கு இணையான அல்லது இதைக்காட்டிலும் சிறந்த கருத்துகள் ஏதாவது சமஸ்கிருதத்தில் உள்ளனவா? வேதத்தில்தான் இருக்கிறதா? மணு ஸ்மிருதியில்தான் இருக்கிறதா? அல்லது இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையிலாவது இருக்கிறதா? சொல்லுங்கள்!

௮க்ஷரா : அ......து, அ......து (விழிக்கிறார். யோசிக்கிறார்)

ராம் : அது சரி. அதெல்லாம் இருக்கட்டும் … பெரும்பாலான தமிழர்கள், தமிழ் தமிழ்ன்னு வாய் கிழிய பேசறாங்களே, ஆனா, ஏன் அவங்க வாழ்வியல் சடங்கு எல்லாத்தையும், அதாவது திருமணச் சடங்கு, வீட்டு மனை பூஜை, கிரகப்பிரவேச பூஜை, கோவிலில் பூஜை, சொல்லப் போனா, ஏன் இறந்த பிறகு, திதி கொடுப்பதையும் தாய்மொழி தமிழிலா செய்கிறார்கள்? சமஸ்கிருதத்தில் தானே செய்கிறார்கள்? அப்ப தமிழ விட சமஸ்கிருதத்துக்கு தானே மதிப்பு கொடுக்கறாங்க.

புத்தன் : அது என்னவோ உண்மைதான். அது சில தமிழரின் அறியாமை. அறியாமை நிலையானது அல்ல. 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்று உணரும் போதும், ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பதையும் உணரும் போது, நிலைமை மாறும், தன்மானமும் பகுத்தறிவும் நிறைந்த மகிழ்ச்சியான தமிழ்ச் சமூகம் நிச்சயம் உருவாகும்.

புத்தன் + யாழினி : இது உறுதி! உறுதி !!! (உரத்த குரலில்)

திருவள்ளுவர் : அருமை! நல்ல ஆரோக்கியமான உணர்வு பூர்வமான, ஆழமான அறிவியல் சான்றுகளுடன் கூடிய விவாதம். தமிழ் செம்மொழி ஆகும். அப்படிப்பட்ட உயர்தனி செம்மொழி பற்றி பலச் செய்திகளையும், பல்வேறு பார்வைகளையும் அறிவியல் துணை கொண்டும், அனுபவம் துணை கொண்டும் பார்த்தோம். மீண்டும் இன்னொரு அமர்வில் வேறு ஒரு தலைப்பில் விவாதிப்போம்.

இது, "மெய்ப்பொருள் பொருள் காண்பது அறிவு”.

எட்டு திக்கும் எட்டட்டும் பகுத்தறிவு !

அனைவரும் உரத்தக் குரலில்: வாழ்க தமிழ்! பெறுக தன்மானம்!! வளர்க பகுத்தறிவு !!! 