ஈழத் தமிழர்களைக் காக்க - ‘சோனியாவே போரை நிறுத்துங்கள்’ என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து ‘ஈழத் தமிழின அழிப்புக்கு எதிரான பெண்கள் அமைப்பை’ச் சார்ந்த 20 பெண்கள் சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தி முடித்துள்ளனர். 13 நாட்கள் நீடித்தது. தமிழக வரலாற்றில், பெண்கள் இதுபோன்ற ஓர் உறுதியான போராட்டத்தை நடத்தியது, இதுவே முதல்முறையாகும். உண்ணாவிரதம் என்ற போராட்ட வடிவம் பெரியார் ஏற்காதது என்றாலும் போராட்ட வடிவங்களை காலமும் சூழ்நிலையுமே தீர்மானிக்கின்றன. மிக மோசமான இனப் படுகொலை தமிழ் ஈழ மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் வேறு வழியின்றி தங்களையே அழித்து இனத்தைக் காக்கத் துடித்தார்கள் இந்தப் பெண்கள். 13வது நாளில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவரும், இடதுசாரி சிந்தனையாளருமான மீனா கிருஷ்ணசாமி (96 வயது) பழச்சாறு அளித்து போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தை நிறைவு செய்து பேராசிரியர் சரசுவதி விடுத்த அறிக்கை சோனியாவின் துரோகத்தை உறுதிப்படுத்துவதாக இருந்தது. அறிக்கை விவரம்:

“தமிழ் ஈழத்தில் அப்பாவி தமிழ்ப் பெண்கள், குழந்தைகள், பொது மக்கள் ஒவ்வொரு நாளும் சிங்கள ராணுவத்தால் நூற்றுக் கணக்கில் இனப் படுகொலைக்கு உள்ளாகி வரும் அவலச் சூழ்நிலையில் - பெண்கள் ஆகிய நாங்கள் எதை செய்தாவது இதைத் தடுக்க வேண்டும் என்ற உணர்வோடு உடனடியாக தொடங்கிய சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இன்று 13 (ஏப்.25, 2009) ஆவது நாளை எட்டியுள்ளது. உடல் குலைந்தாலும் உறுதி குலையாமல் தொடர்ந்த இந்த போராட்டம் அரசின் - காவல்துறையின் வெவ்வேறு அடக்குமுறைகளையும் சந்தித்தது. ‘சோனியா அம்மையாரே போரை நிறுத்துங்கள்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை முன் வைத்து பெண்களாகிய நாங்கள் நடத்திய இந்த போராட்டத்தை சோனியா காந்தி தாயுள்ளத்தோடு செவி சாய்ப்பார் என்று நம்பினோம். ஆனால், அவரிடமிருந்து எந்த அசைவோ, சலனமோ இல்லை என்பது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. தமிழக காங்கிரசின் சட்டப் பேரவை தலைவர் திரு. சுதர்சனம் அவர்கள் எங்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இன்னும் இரு நாள்களில் சோனியாவிடமிருந்து உரிய பதிலை பெற்றுத் தருவதாக கூறியதை ஏற்று ஐந்து நாட்கள் வரை காத்திருந்தும் பதில் ஏதும் வர வில்லை.

எனவே, தமிழ் இனத்தின் மீதான படுகொலையை தடுப்பதில் அவருக்கு எந்தக் கவலையும் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டோம்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கவனத்தைத் தேர்தலை நோக்கி முழுமையாக திருப்பிய நிலையில் நாங்கள் தொடங்கிய இந்த போராட்டம் தமிழகத்தின் கவனத்தை தமிழ் இன அழிப்புக்கு எதிராக திருப்பி இருப்பது எங்களுக்கு நிறைவைத் தருகிறது. மீண்டும் தமிழ் நாட்டில் பல்வேறு நிலைகளில் உருவான அழுத்தங்களால் முதல் முறையாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி போர் நிறுத்தம் வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கிறது. இது மக்களை ஏமாற்றும் வெற்றுச் சொல்லாகிவிடாமல், உண்மையான அர்த்தம் ஏற்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பமும், வேண்டுகோளும் ஆகும். தமிழகத்தின் மனசாட்சியாக நாங்கள் முன் எடுத்த போராட்டத்தை சோனியா காந்தி அலட்சியப்படுத்திவிட்டதாக கருதலாம். ஆனால், ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளையே அவர் அலட்சியப்படுத்தி இருக்கிறார் என்பதைக் காலம் அவருக்கு உணர்த்தவே செய்யும். தமிழினப் படுகொலை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது எங்களை துடிக்கச் செய்கிறது. தமிழ கத்தின் வரலாற்றில் முதல் முறையாக எந்த அரசியல் கட்சியையும் சாராத பெண்களாகிய நாங்கள் 13 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சினையை நோக்கிய கவனத்தைத் திருப்பி இருப்பதாகவே கருதுகிறோம். தேர்தல் அரசியல் பரபரப்புகளுக்கிடையே தமிழினப் படு கொலை மூழ்கிப் போய் விடாமல் மக்களின் கவனத் திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதும் எங்களின் கவலையாக இருந்தது.

கலை உலகமும், பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையில் களம் இறங்கியுள்ள நிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்கள் எங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறோம். ஈழத் தமிழின அழிப்புக்கு எதிரான அனைத்து இயக்கங்களோடு இணைந்து பல்வேறு போராட்ட வடிவங்களில் பெண்களின் போராட்டத்தைத் தமிழகம் இந்தியா - உலகு தழுவிய அளவில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களின் இந்த போராட்டத்திற்கு இடம் கிடைக்க விடாமல் காவல்துறையினர் கெடுபிடி செய்த நிலையில் முதல் மூன்று நாட்கள் வெவ்வேறு பகுதிகளில் நாங்கள் அலைக்கழிய வேண்டிய இருந்தது. அந்த நிலையில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் தாயகத்தில் தாமாகவே இடம் ஒதுக்கித் தர முன் வந்த திரு. வைகோ அவர்களை நன்றியோடு நினைவு கூறுகிறோம். ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் பேராதரவை நல்கிய பெண்கள் அமைப்புகள், அரசியல் - சமூக அமைப்புகள், கலை இலக்கிய அமைப்புகள், எங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டினிப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திய அனைவருக்கும் நன்றி கூறுகிறோம். அவர்கள் தங்களின் சமுதாயக் கடமையை ஆற்றி இருக்கிறார்கள். ஒட்டு மொத்தத் தமிழினமும் களமிறங்கி தமிழினப் பேரழிவைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்தப் போராட்டத்தை நிறைவு செய்கிறோம்.

பட்டினிப் போர் நடத்திய பெண்கள் பேராசிரியர் சரசுவதி, நீலவள்ளி, பாண்டிமாதேவி, ஷீலு, கவிதா, சசிகலா, பி. சசிகலா, உஷாராணி, காமேசுவரி, பழனியம்மாள், லித்துவின்மேரி, பிலுமினா, பொன்னுத்தாய், லாரனஸ் செல்வி, சாந்தி. இது தவிர ஜெயமணி, தங்கமணி, லோக நாயகி, சித்ராதேவி, சுமதி ஆகியோர் உடல் ஆபத்தான நிலையில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டம் முடிவுக்கு வந்த நாளில் தான் அவர்களும் போராட்டத்தை முடித்தனர்.