தமிழர்கள், தமிழக தமிழீழத் தாயகங்களில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர். தனித்த மொழி, பண்பாடு, மரபு, கலை இலக்கியம், வரலாறு, சமயம், மெய்யியல் எனத் தனக்கான தனித்தன்மைகள், நாகரிகங்கள் கொண்ட மக்கள் சமூகம் தான் தமிழர்கள். இனங்களின் சமூகமான மாந்த சமூகத்தில் மூத்த இனங்களில் ஒன்றாகவும் மூல மரபினங்களில் ஒன்றாகவும் உள்ளனர். தமிழர்கள் அவர்களின் தாயகங்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்த்தாலே நம் இனத்தைப் புரிந்துகொள்ள உதவும். பாவாணர் முன்வைத்த மாந்தம் பிறந்தகம் குமரிக்கண்டம் என்னும் ஆய்வும், இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை என்ற வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்பெறும் ராபர்ட் புரூஸ்பூட்ட-ஆல் அன்றைக்கு இருந்த சென்னை மாகாணத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த 459 பகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும் 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை.

இன்று சென்னையில் உள்ள பல்லாவரம்; திரிசூலம் மலைப்பகுதிளில் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரி களையும்; திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அருகே அத்திரப்பாக்கம் ஓடை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும் அவர்கள் வாழ்ந்த குடியம் குகையையும், திருநெல்வேலி மாவட்டம் தேரி பகுதியில் நுண் கற்காலக் கருவிகளையும் அதை உருவாக்கும் தொழிற்சாலைகளையும் கண்டு பிடிக்கப்பட்டது. இவர் சேகரித்த பழங்காலப் பொருட்கள் எல்லாம் திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி அருகே அருங்காட்சியகத்திலே உள்ளது.

தமிழர்கள் மூல மரபினங்களில் ஒன்று என்று அறிவுலகத்துக்கு ஒரு பிரிவினர் தங்கள் ஆய்வுகளை முன்வைத்துள்ளனர். இத்துணைக் கண்டத்தின் தொல்குடிகள் தமிழர்கள்தான் என்பதை நவீன மரபியல் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. அதையே அறிஞர் அம்பேத்கார் அவர்களும் தன் ஆய்வில் பதிவு செய்கிறார். தமிழர்களிடம் காணப்படக்கூடிய தாய்வீட்டில் தலைப்பிரசவம் என்ற மரபும்; சேய்வழி அழைத்தல் (பிள்ளையின் பெயர்கூறி அவரின் தந்தை என்று அழைப்பது) அப்பா பெரியப்பா சித்தப்பா என அனைவரையும் ஒரே மாதிரி அழைக்கும் வழக்கம், தமிழ் சமூகத்தில் காணப்படும் உறவு முறைகளும்; தாய்வழிச் சமூகத்தின் எச்சங்களாக, மக்களினங்கள் குறித்து ஆய்வு செய்த மார்கனும், பிரடெரிக் ஏங்கெல்சும் பதிவு செய்கின்றனர். இதன்மூலம் மனித குலத்தின் தொடக்கமான தாய்வழி சமூக நிலையிலிருந்தே தமிழர்கள் நீடித்து வருகின்றனர் என்பது உறுதியாகின்றது.

சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை அங்கு கிடைத்த எழுத்துக்கள் சின்னங்கள் பிற ஆதாரங்களைக் கொண்டு அஸ்லோ பர்போலா உறுதிப்படுத்துகிறார். அசோகரின் சமகாலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் (கி.மு.250) கலிங்க மன்னர் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு 113 ஆண்டுகள் தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு நீடித்து வந்ததை சுட்டுகின்றது.

அதுபோலத் தமிழகத்தில் நடைபெற்ற அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர்..... அகழ்வாராய்ச்சிகள் இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், சுவடிகள், தமிழர்களின் தொன்மையையும் நாகரிகத்தையும் உறுதிப்படுத்துகின்றன.

நமக்குக் கிடைத்ததிலேயே மிகவும் பழைமையான தேர்ந்த செம்மையான சிந்தனை தொகுப்பாக உள்ள தொல்காப்பியம் அதன் வடிவத்திலேயே ( தமிழ் மொழி, தமிழ் எழுத்து, தமிழ் எண்) தமிழ் வளர்ச்சியின் அடையாளமாக உள்ளது. நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என உலகம் கடவுள் படைப்பு அன்று; தானே தோன்றியது, மண், நெருப்பு, தண்ணீர், காற்று, வானம் ஆகிய ஐந்து இயற்கைப் பொருள்களும் கலந்து உருவாகி இருப்பதே இவ்வுலகம் எனப்பாடும் தொல்காப்பியப் பாடல் இவ்வுலகத் தோற்றம் பற்றியும்,

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மன்னே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

என உயிர்களின் அறிதல் வேறுபாடு குறித்த தொல்காப்பியர் பாடலும், சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்ற குறள் மூலம் உலகம் உருண்டை என்பதையும் அது சுழல்கிறது என்பதையும் சுட்டும் குறளும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்று பிறப்பால் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் குறளும் தமிழர்களின் அறிவு வளர்ச்சி மற்றும் உலகக் கண்ணோட்டம் குறித்த சான்றுகளாக உள்ளன.

""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு'' என்ற தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தின் மூலம் வட வேங்கடம் தென் குமரி தமிழ்உலகின் எல்லை என்பதையும், அதில் தமிழ் மொழி பேசப்படுகிறது என்பதையும், அதைப் பேசிய தமிழர்கள் அங்கு வாழ்ந்தனர் என்பதையும் தெளிவு படுத்துகிறது. இதையே பிந்தைய சங்க இலக்கியங்களும் தெளிவுபடுத்துகின்றன.

ஆறாம் நூற்றாண்டில் பாடப்பெற்ற தேவாரத்தில் உள்ள தமிழன் கண்டாய் ஆரியன் கண்டாய் என்ற வரி தமிழர்கள் இருப்பை உறுதி செய்வதோடு ஆரியரின் பரவலையும்; ஆரியர் தமிழருக்கு இடையிலான இனப்போராட்டத்தையும் உறுதிப்படுத்துகிறது.

செப்பு வினாவும் வழா அல் ஓம்பல் என்ற தொல்காப்பிய வரிக்கு 12-ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய நச்சினார்க்கினியர் வினாவும் விடையும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக உன் நாடு எது என்று வினா எழுப்பினால் தமிழ்நாடு என்று கூறுவதே தெளிவான விடையாக இருக்கும் என விடையிறுக்கிறார். இதுவே தமிழ் மக்களின் வரலாறாக உள்ளது.

ஒருபுறம் தமிழர்கள் ஓரினம் என்ற நிலையில், அவர்களின் மொழி, மரபு, பண்பாடு, வரலாறு, கூட்டு நினைவு, பரஸ்பர உறவு, சார்பு என்பது பொது நிலையாகவும், மறுபுறம் அவர்களின் சமூக அரசியல் வாழ்வு பல்வேறு தேச நிலைகளில் கட்டப்பட்டு, வேறுபட்ட நெருக்கடிகளையும் வேறுபட்ட சமூக அரசியல் அடிப்படைகளையும் கொண்டவர்களாக உள்ளார்கள். வரலாற்று வழியில் ஓர் இனம் என்ற வரையறுப்பு கொண்ட தமிழர்கள் அவர்களின் தேசிய சமூக அரசியல் இருப்பு நிலையைக் கொண்டு ஐந்து வகையாகப் பகுக்கலாம். 1. தமிழ்த்தேசிய இனம், 2. தேசிய இனச் சிறுபான்மையர், 3. மொழிச் சிறுபான்மையினர், 4. அகதிகள், 5. தேசங்கடந்து பணிபுரிவோர். முதல் இரண்டு நிலைகள் நிலைத்ததாகவும் மூன்றாவது நிலை ஒப்பீட்டளவில் நிலைத்ததாகவும், நான்கு மற்றும் ஐந்தாவது நிலைகள் தாயகத்தில் ஏற்படும் சமூக அரசியல் மாற்றங்களைச் சார்ந்தாகவும் உள்ளன.

ஒரு தேசியம், தேசிய இனம் என்பதற்கான தோழர் ஸ்டாலின் 1912இல் வகுத்தபடி 1. ஒரு பொதுமொழி, 2. பொது வரலாற்றுப் பிரதேசம், 3. பொதுப் பொருளாதாரத் தொடர்பு, 4. பொது மன இயல்பு ஆகிய வரைவிலக்கணங்களின்படியும் இதில் மாறுபட்ட, வேறுபட்ட இலக்கணங்களின்படியும் தமிழகத் தமிழர்கள் தமிழீழத் தமிழர்கள் தனித்த தேசிய இனத்திற்குரிய தகுதி நிலையில் உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரிசீயஸ், ரீ யூனியன், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, அந்தமான், கர்நாடகா, கேரளா, ஆந்திரத்தின் உள்ளகப் பகுதிகள் என பல தேசங்களில் அத்தேசத்தின் தேசிய இனத்தை விட சிறுபான்மை எண்ணிக்கையில் உள்ளதால் இவர்கள் அத்தேசத்தில் தேசிய இனச் சிறுபான்மையினராக உள்ளனர்.

தமிழர்கள் தாயகத்தோடு கொண்டு கொடுத்தலையும் பொருளாதார உறவுகளையும் தனது தாயகத்தினையே நிலையானதாகக் கருதி வாழும் தேசங்களில் கலக்காமல் தன் மொழி இன அடையாளங்களைக் காத்துக் கொண்டு உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் மொழி இனச் சிறுபான்மையராக வரையறுக்கலாம்.

முதன்மையாக தமிழீழத்தில் நடந்த கட்டமைக்கப்பட்ட இனக்கொலையின் விளைவாக உலகம் முழுவதும் தஞ்சம் கோரி இன்றும் அந்நாடுகளில் குடியுரிமை பெறாத தமிழர்களை அகதி என்றும், இதே நிலையில் உள்ள வேறு தேசத் தமிழர்களையும் குறிக்கவும் இது பொருந்தும்.

தன் பிழைப்பிற்காக தேசம் கடந்து பணிபுரியும் தமிழர்களை தேசம் கடந்து பணிபுரிவோராக அழைக்கலாம்.

இனி ஒவ்வொரு நிலையாகப் பார்ப்போம்.

தமிழக தமிழ்த்தேசிய இனப் போராட்டம்

தமிழர்கள் உலகின் பல இன மக்களோடு வணிகம், அரசியல், பரிமாற்ற உறவுகளைக் கொண்டு இருந்தது போல், பிற இனத்தார்களும் தமிழகத்தோடு இவ்வுறவுகளைக் கொண்டிருந்தனர். இப்படி தமிழர்களும் தமிழகமும் உலகின் தனித் தீவாக இல்லாமல் உறவுகளோடு இருந்தாலும் தனக்கான தனித் தன்மைகளை உருவாக்கி வளர்த்து, பாதுகாத்துக் கொண்டு இருந்தனர். இவர்களோடு வேறுபட்ட எல்லாரோடும் உரையாடி உள்ளனர். இந்த உரையாடலில் சமணம் பவுத்தம், வேத மதத்தின ரோடான உரையாடல் முக்கியமானது. சமண பவுத்த வேத மதத்தினரோடான உரையாடலில் சிலவற்றை ஏற்றும் அடிப்படையில் மறுத்தும் உள்ளனர். வேத மதத்தைச் சேர்ந்த ஆரியர் குடியேற்றமும் அதன் செல்வாக்கும் பெருகும்போது அதற்கு எதிரான கருத்துப் போராட்டம் இனப்போராட்டமாகவும் மாறியது. 12ஆம் நூற்றாண்டு வரை கருத்தாக உலா வந்த ஆரிய பார்ப்பனியம், இசுலாமிய அரசுகளின் தெற்கு நோக்கிய பரவலுக்கு எதிராக ஆரிய பார்ப்பனிய தர்மங்களைக் கட்டிக் காக்க உருவாகிய விஜயநகரப் பேரரசிடம் தன் அரசதிகாரத்தை இழந்த தமிழ் இனமும் தமிழ் நிலமும் இன்றுவரை அரசதிகாரத்திற்காகப் போராடி வருகின்றன.

விஜயநகர ஆட்சி, நாயக்கர்கள் பாளையக்காரர்கள் ஆட்சியில் செழித்து வளர்ந்த பார்ப்பனிய அரசதிகாரத்திற்கு எதிராக இங்கு சித்தர் மரபுகள் தமிழர்களின் இனப்போராட்ட அடையாளமாக உள்ளன. தமிழகம் பிரிட்டிஷ் காலனியாக மாற்றப்பட்ட பிறகு எழுந்த பூலித்தேவன், மருதிருவர், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், குயிலி, வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா, சிங்காரவேலர், ஜீவா போன்றோரின் தாயக விடுதலைப் போராட்ட மரபும் இதே காலத்தில் உருவாகி வளர்ந்த ஆரிய பார்ப்பனிய இந்துமத உருவாக்கம், இந்திய உருவாக்கத்திற்கு எதிராக எழுந்த வள்ளலார் மரபும், தமிழ் பவுத்த மரபை முன்னிறுத்திய அயோத்திதாசப் பண்டிதர், நாத்திக பகுத்தறிவு மரபை முன்னிறுத்திய அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர், சி.தாமோதரம் பிள்ளை, உ.வே.சா. ஆகியோரின் தமிழ் நூல்கள் தொகுத்து பதிப்பித்த பணியும், தனித்தமிழ் மரபை முன்னிறுத்திய மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கமும், சாதி ஒழிப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக ஜனநாயகத்தை வலியுறுத்திய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவு நாத்திக இயக்கமும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தமிழ் இஸ்லாமியர் உரிமை இயக்கங்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் விடுதலையையும், காலனிய எதிர்ப்பை முன்வைத்த பொதுவுடமை இயக்கமும் உருவாகி வளர்ந்தன.

வள்ளலார் தொடங்கி... பெரியார் வரையிலான சமயம் மொழி சமூகத் தளத்தில் நடந்த இயங்குதலும் பூலித்தேவன் தொடங்கி பொதுவுடமை இயக்கங்கள் வரையிலான காலனிய எதிர்ப்பு இயங்குதலையும் தொகுத்து, பகுத்து சாரப்படுத்தினால் அன்று உருவாகி வந்த ஆரிய பார்ப்பனிய, இந்து, இந்திய எதிர்ப்பு என்ற பொதுத்தன்மையை வெளிப்படுத்துவதையும் பல்வேறு சிந்தனைப் போக்கின் முரண் இயக்கத்தில் தமிழ்த்தேசியம் வளர்ந்ததையும் காணலாம்.

இதன் வெளிப்பாடாக நவீன தமிழ்த்தேசிய விடுதலைக் கருத்தாக 1938இல் இந்தி எதிர்ப்பு இனப்போரில் அனைத்து போக்கினராலும் இணைந்து எழுப்பிய தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் பிறந்தது. இச்சசூழலையும் அதன் நவீன பொதுத்தன்மையையும் பற்றிப் பிடித்து முன் நகர்த்தியிருந்தால் காலனிய வெளியேற்றத்தின்போதே தமிழ்த்தேசம் மலர்ந்திருக்கும். ஒரு தேசிய இயக்கத்தின் மைய அச்சான தேசிய இன இயக்கம் இல்லாததன் காரணமாக அப்பொதுப்போக்கு அரசியல் அமைப்பு உருவாக்கம் நடந்தேறாமலே உருத்திரிந்தது. இப்பொதுப்போக்கின் துணைக்கூறுகளாக விளங்கிய சில சிந்தனைப் போக்கினரைத் தவிர பல்வேறு சிந்தனைப் போக்கினரும் பங்கு அரசியலில் மூழ்கியதும், திராவிடமாகவும், இந்தியமாகவும் திரிந்து போயினர்.

1942இல் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை முன்வைத்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு மக்களைத் திரட்டிய காங்கிரஸ் இயக்கம் பின்பு அதனைக் கைவிட்டது. காங்கிரஸ் தான் சொன்னபடி தேசிய இன அடிப்படையில் இந்தியாவை மறுசீரமைக்கத் தயாராக இருந்தால் தன்னுடைய பாகிஸ்தான் கோரிக்கையை கைவிடத் தயாராக இருந்தார் ஜின்னா. காங்கிரஸ் இக்கோரிக்கையை மறுக்கவே அரசியலாகவும் அமைப்பாகவும் மக்கள் திரட்டப்பட்டு இருந்ததால் பாகிஸ்தான் கோரிக்கை வென்றெடுக்கப்பட்டது. மற்ற இந்தியப் பகுதிகளில் தேசிய இனங்கள், தனித்தனியாக திரட்டப்படாததால் ஆளும், பிரிட்டிஷார் அன்று பல்வேறு அரசுகளாக இந்தியாவைப் பிரிக்கத் தயாராக இருந்தும் ஆரிய பார்ப்பன இந்து மத, இந்தி சக்திகளின் அரசியல், அமைப்பு செல்வாக்கும் நேரு பட்டேலின் தலைமையால், இந்து, இந்தி பெருமுதலாளிகளின் நலன்களுக்காக இந்திய தேசியம் உருவாக்கப்பட்டது.

இத்துணைக் கண்டத்தில் தேசிய இன வழிப்பட்ட பல தேசங்கள் முகிழ்ந்திருக்க வேண்டிய நிலையில் இந்து இஸ்லாமிய மத முரணைக் கட்டமைத்து, சாதி முரணைக் கட்டிக்காத்து ஆரிய பெருமையையும்? இந்தி பெரும்பான்மையையும் பயன்படுத்தி இன்று நிலவும் ஒற்றை ஆதிக்க இந்தியா கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் ஒற்றை ஆதிக்கக் கட்டமைப்பை தமிழத்தேசிய இனம் ஏற்றுக் கொண்டதா? 1947 ஆகஸ்ட் 15 (இந்திய விடுதலை நாள்) துக்க நாளாக அறிவிப்பு செய்தார் பெரியார். இச்சூழலிலேயே தமிழகத்திற்கு சுய நிர்ணய உரிமையும் கூட்டாட்சியும் கோரினார் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த ம.பொ.சி. 1949இல் திராவிடநாடு கோரிக்கையோடு அண்ணா தலைமையில் திமுக தொடங்கப்பட்டு 1967 இல் ஆட்சியைக் கைப்பற்றியது. இதில் தமிழ்த் தேசிய இனத்தின் ஆற்றலே செயல்பட்டது. (திராவிட தத்துவம் மற்றும் அதன் தலைமையின் திரிந்த தன்மையும் இரட்டை குணாம்சமும் இன்றைய சரணாகதி அரசியலாக உள்ளது.)

தட்சணப் பிரதேச எதிர்ப்புப் போராட்டம், தேசிய இன அடிப்படையில் தாயகத்தைத் திருத்தி அமைக்கக் கோரிய போராட்டம் ( மொழிவழி மாநில உரிமைக்கான போராட்டம், வடக்கு தெற்கு எல்லை மீட்புப் போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் போராட்டம்,) தமிழரின: முகவரியாக மாறிப்போன பாவேந்தரின் வரிகளும், ஈ.வி.கே.சம்பத்தின் தமிழ்த் தேசியக் கட்சி உருவாக்கமும் சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி உருவாக்கமும், தேசிய மொழிக்கான உரிமைப் போராட்டம் (இந்தி எதிர்ப்புப் போராட்டம்) தேசிய இன சுயநிர்ணய உரிமையைக் கோட்பாட்டு அடிப்படையில் ஏற்ற இ.க.க (மா.லெ) கட்சி உருவாக்கமும், தனித்தமிழ்நாடு கோரிய பெருஞ்சித்திரனாரின் உலகத் தமிழின முன்னேற்றக் கழகமும், தமிழகத்தில் நடந்த அவசர நிலைக்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராட்டமும், தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு விடுதலைப்படை உருவாக்கமும் அதன் தொடர் செயல்பாடும், அவர்களின் ஈகமும், இந்தியப் படை தமிழீழத்தை ஆக்கிரமித்ததற்கு எதிராக தமிழகத்திலே எழுந்த ஈழ ஆதரவுப் போராட்டமும், சமூக நீதி, இட ஒதுக்கீட்டிற்கான போராட்டமும், அதன் பிறகு தமிழகத்தில் உருவான தன்னுரிமை, தமிழ்த்தேச விடுதலை, தமிழ்த்தேசிய விடுதலைப் புரட்சி ஆகிய லட்சியங்களோடு உருவான தமிழர் தேசிய இயக்கம், (தற்போது தமிழர் தேசிய முன்னணி) தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி (தற்போது தமிழ்த்தேசியப் பேரியக்கம்) தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ் தமிழர் இயக்கம் (தற்போது தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்) இப்படியாக இந்தியாவின் ஒற்றை ஆதிக்கத்தின் எதிர்ப்பு வரலாறாக தமிழகம் வினையாற்றியது.

அதன் தொடர்ச்சியாக தற்காலத் தமிழகத்தில் நடைபெற்ற நடைபெறும் அணுஉலை, மீத்தேன், நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டங்கள், தமிழர் தாயகத்தில் தமிழர்கள் அனுமதி இல்லாமல் நடக்கும் இந்நாசகர திட்டங்களை தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம் என்றே போராடி வருகின்றனர். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நீர் உரிமைகளுக்கான போராட்டங்கள், தாயகத்துக்கு சேர வேண்டிய ஒவ்வொரு சொட்டு நீரும் தாயகத்தின் பகுதியே என்ற அடிப்படையில் நீர் உரிமைக்கான போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடக்கும் தமிழீழத்திற்கான ஆதரவு, இனக்கொலை எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர்கள் சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமிழகமே தீர்மானிக்கும் என்ற அடிப்படையிலேயே போராட்டங்கள் நடைபெறுகின்றன. மூன்று தமிழர் மீதான தூக்கு, தமிழர் மீதான இந்தியாவின் தூக்காகவே கருதி, மரண தண்டனையை தமிழகம் முறியடித்தது. தமிழர்கள் அனைவரும் சம தகுதி உரிமை படைத்தவர்களே, அதற்கு மாறாக உள்ள பாகுபாட்டை ஒடுக்குமுறையை ஒழித்து சம தகுதி உரிமை உடைய சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்க வேண்டும் என்பதே இங்கு நடக்கும் சாதி ஒழிப்புப் போராட்டங்களின் சாரமாக உள்ளன. கச்சத் தீவு மீட்பு கடல் உரிமைப் போராட்டம் என தற்போது தமிழக்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்துப் போராட்டங்களின் சாராம்சமும் தமிழர் தாயகப் பாதுகாப்பு, தேசிய இன உரிமைக்கான, தேசிய விடுதலைக்கான இனப் போராட்டங்களாகவே உள்ளன.

இந்தியக் கட்டமைப்பின் மூல ஆற்றலாக உள்ள ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி வகையறா தான் இன்று ஆட்சியைப் பிடித்து தங்களது ஆரிய ஆரிய, பார்ப்பன, பாசிச நோக்கங்களின் இறுதி அத்தியாயங்களை எழுதிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கெதிரான தமிழ்த்தேசிய இனத்தின் இனப்போராட்டத்தை தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமாகக் கட்டமைத்து முன் நகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசிய இனத்திற்கும் தமிழர்களுக்கும் அவர்களின் முன்னணி ஆற்றல்களாக விளங்கக் கூடியவர்களிடமுமே தங்கி இருக்கின்றது.

தமிழீழத் தமிழர்களின் தேசிய இனப் போராட்டம்

தேசிய இன வரைவிலக்கணத்தின்படியும் ஈழத் தேசிய இனம் ஒரு தேசிய இனமாகவும் அதனைத் தன்னுணர்வுடன் முன்னெடுப்பதோடு வலியுறுத்தியும் நிற்கின்றனர். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகமும் தமிழீழமும் கடலால் பிரிக்கப்படுவதற்கு முன்பு ஒரே தாயக வரலாற்றையும் கற்கால, இடைக்கால மனித நாகரிகத்தையும் நிலம் கடலால் பிரிக்கப்பட்டாலும் குறிப்பான சில பண்புகளைத்தவிர இவர்கள் வரலாற்றில் இணைந்த பண்புகளைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழகத்திற்கும் தமிழீழத்திற்குமான குறிப்பான வேறுபட்ட பண்பு இலங்கைத் தீவில் சிங்கள பவுத்தம் யீ தமிழர்கள் என்ற வகையில் ஒடுக்கும் இனமும் ஒடுக்கப்படும் இனமும் என முரண்பாடு அமைந்ததும், தன்னுடைய ஆரியப் பார்ப்பனிய இனச்சார்பை மறைத்து மழுப்பலாக பொதுவான அரசு எனக் காட்டிக்கொள்ளும் இந்திய அரசிலிருந்து வேறுபட்டு தான் ஒரு சிங்கள பவுத்த அரசு என்பதை இலங்கை அரசு வெளிப்படையாகக் கொண்டதும்தான் அவ்வேறுபாடு பிரிட்டிஷாரின் கிறித்துவப் பரப்பலுக்கு எதிராக சிங்களப் பகுதியில் உருவான சிங்கள பவுத்தப் பேரினவாதம், தமிழீழப் பகுதியில் உருவான தமிழ்ச்சமயத் தற்காப்பும்தான். இதன் காரணமாக இன முரண்பாடும் இனப் போராட்டமும் தெளிவாக முன்னேறியது. ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதை அது எப்போதும் பற்றி இருந்தது. (தமிழகத்தில் இருந்தது போன்ற பங்கு அரசியல், திரிந்த திராவிட இந்திய அரசியல் அங்கு இல்லை.)

இலங்கையை விட்டு வெளியேறிய பிரிட்டிஷாரிடம் தமிழர் தரப்பு 50:50 என்ற இன அடிப்படையிலான விகிதாச்சாரத்தை முன்னிறுத்தியதை. இனம் இரண்டென்றால் நாடு ஒன்று இனம் ஒன்றென்றால் நாடு இரண்டு என்ற கருத்தை அப்போதே முன் வைத்தது. ஆனால், சிங்கள் பேரினவாத சக்திகள் தன் கைக்கு அதிகாரம் மாறியபோது தமிழர்களின் தற்காப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டக் கூறுகளை நீக்கி தன் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புப் பணியைத் தொடங்கியது. தமிழர்களை மேலும் சிறுபான்மையினராக ஆக்கும் எண்ணத்தோடு மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து நாடற்றவர்களாக மாற்றி அதன் ஒரு பகுதியினரை இந்தியாவிற்குத் துரத்தியது. சிங்கள மொழிக்கு மட்டும் அரசதிகாரம், வாகனங்களில் ஸ்ரீ எழுத்துப் பொறிப்பு கட்டாயம், இன அடிப்படையில் கல்வியில் தரப்படுத்துதல் கொண்டு வந்தது. தமிழ்ச்சமய ஆலயங்களை அழித்தது, தமிழர் பகுதியில் சிங்கள வன்குடியேற்றங்களை நடத்தியது என அனைத்து வழிகளிலும் இன அழிப்பு வேலையை முன்னெடுத்தது. 50:50 என்ற இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைக் கோரிய தமிழர் தரப்பு ஒடுக்குமுறை தொடர்ச்சியாகக் கூடவே பெரும்பான்மைத் தமிழீழத் தமிழர்களால் வாக்களிக்கப்பட்டு வெற்றிபெறச் செய்யப்பட்ட 1976 வட்டுக் கோட்டைத் தீர்மானம்தான் தனித் தமிழீழமே ஈழத்தமிழர் சிக்கலுக்கு தீர்வு என்ற அரசியல் மாற்றத்தையும் அமைதி வழியிலான போராட்டம் தீர்வு தராது, ஆயுத வழிப் போரட்டமே தீர்வு என்ற போராட்ட வழி மாற்றத்தையும் கொண்டு வந்தது.

தமிழ் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் தோன்றினாலும் தமிழீழக் கோரிக்கை மீதான பிடிப்பும் தெளிவும் தியாகமும், போராட்ட ஆற்றலும், ஆகச்சிறந்த தலைமையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே இப்போராட்டத்தின் நாயகர்களாக விளங்கினர். எதிரியைத் தாக்குதல் என்ற எளிய வடிவத்தில் தொடங்கிய இப் போராடடம் தாயகத்தின் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மாற்று அரசு அதிகார உறுப்புகளையும் முப்படைப் பிரிவுகளையும் உருவாக்கி தற்கால உலகத்தில் நடைபெற்று வரும் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் விளங்கியது.

புதிய இராணுவ அரசியல் கோட்பாட்டு உருவாக்கத்திற்கான மூல வளங்களைக் கொண்டதாக இப்போராட்டம் விளங்கியது. இப்பிராந்திய இந்திய சீன மேலாதிக்கத்தாலும், ஏகாதிபத்திய சக்திகள் சிங்களத்தோடு இணைந்து நடத்திய இன அழிப்புப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் அழிக்கப்பட்டதன்மூலம் அப்புகழ்ப் பெற்ற தேசிய விடுதலைப் போராட்டம் தமிழீழத் தாயகத்திலிருந்து உலகம் தழுவியதாக மாற்றப்பட்டுள்ளது.

தேசிய இனச் சிறுபான்மையினர், மொழிச்சிறுபான்மையினர்

மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரிசீயஸ், ரீ யூனியன், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, அந்தமான், கர்நாடகா, கேரளா, ஆந்திரத்தின் உள்ளகப் பகுதிகள் மற்றும் பல தேசங்களில் குடியேற்றப்பட்ட, குடியேறிய தேசங்களில் நிலைத்து விட்ட தமிழர்கள் அத்தேசங்களில் சமூகப் பொருளியல் அரசியல் வாழ்வில் இணைக்கப்பட்ட பகுதிகளாகவே உள்ளனர். அவர்களின் வரலாற்றுத் தாயகமாக தமிழகம், தமிழீழம் இருந்தாலும் குடிபெயர்க்கப்பட்ட அவர்களின் வாழ்வு அத்தேசங்களில் நிலைத்து விட்டாலும் அத்தேசமோ அவ்வரசுகளோ அவர்களை ஒரு சமூகமாகப் பார்த்து தேசிய இன மற்றும் மொழிச் சிறுபான்மையினராக அங்கீகரித்து அவர்களின் மொழி, பண்பாடு, சமயம், அரசியல், பொருளியல், உரிமைகள் என எதையும் அங்கீகரிக்காமல் உதிரிகளாக வைத்துள்ளது. இதன் விளைவாக அவர்கள் சிறுபான்மையினருக்குரிய எந்த உரிமைகளையும் பெறாத நிலையிலேயே உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் வாழும் தேசங்களில் கடைநிலை மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அகதிகள் மற்றும் தொழிலாளர்கள்

சர்வதேச சட்டங்களால் அகதிகளுக்கு வழங்கும் உரிமை மற்றும் பாதுகாப்பு சில நாடுகளில் மட்டுமே கிடைக்கும் நிலையில் உள்ளது. பிற தேசங்களில் அதற்காக நாம் ஒருங்கிணைய வேண்டிய நிலையில் உள்ளோம். அதேபோல் 300 ஆண்டுகளுக்கு முன் கூலி இனமாக பல மணி நேரம் பணிவாக பணி செய்யும் இனமாக அறியப்பட்டது போலவே இன்றும் உலகமெங்கும் தமிழக கிராமங்களிலிருந்து சென்ற தமிழ் இளைஞர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு தொழிலாளர்களுக்கு உரிய உரிமையோ பாதுகாப்போ ஏதுமற்ற நிலையிலேயே உள்ளனர்.

தேசிய இனமாகவும் தேசிய இனச் சிறுபான்மையினராகவும், மொழி இனச் சிறுபான்மையானராகவும் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தகுதிக்குரிய உரிமையுடன் வாழ்கிறார்களா என்றால் இல்லை. அவர்கள் தேசத்தால் வேறுபட்டு வாழ்ந்தாலும் வேறுபட்ட ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டாலும் தாயகங்களுக்கு தேசிய விடுதலை, புறத்தில் தேசிய இன சிறுபான்மையினர் உரிமை, மொழி இனச் சிறுபான்மையினர் உரிமை அகதிகளுக்கான உரிமை என தீர்வழிகளிலும் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் மீதான ஒடுக்குமுறையின் தன்மை இன ஒடுக்குமுறை என்பதும், அதற்கு எதிரான போராட்ட வழி இனப்போராட்டமே என்பதேயாகும்.

மாந்த சமூகம் இனப்போராட்டம் வர்க்கப் போராட்டம் என்ற இரண்டுபோராட்ட வழிகளில் தான் தற்போதைய வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. இரண்டு போராட்ட வழிகளில் இனப்போராட்டமே மூத்தது. இயற்கையோடான போராட்டத்திலும் விலங்குகளுக்கு எதிரான வேட்டையிலும் பிற குழுக்களுக்கிடையிலான மோதலிலும் தன் குழுவிற்குள்ளே மொழி உள்ளிட்ட பொதுத்தன்மைகளை உருவாக்கிக் கொள்வதிலும்தான் இனமும் இனப் போராட்டமும் தொடங்கியது.

இப்போராட்டத்தின் அடிப்படை தனக்குப் புறத்திலிருந்து தன் குழுவைப் பாதுகாப்பதே. தன் குழுவைப் பாதுகாப்பதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே. தன் குழு என்ற நிலை உருவான பிறகும் அக்குழுவிற்கான மொழி பண்பாடு மரபு, கலை, இலக்கியம், இசை, மருத்துவம், நில எல்லை என ஒவ்வொன்றாக வளர்ந்து ஒரு பொதுத்தன்மை கொண்ட இனமும், அவ்வினத்தால் புழங்கக்கூடிய நில எல்லையாக தேசமும் உருவாகிறது.

இனங்கள் தோன்றி வளர்ந்து, ஆதிப் பொதுமைச் சமூகம் வளர்ந்து, வளர்ச்சியின் விளைவாக அதில் ஆளும் பிரிவு, ஆளப்படும் பிரிவு எனப் பிரிவு படுவதிலும்; போரில் தோற்ற குழுக்களை அடிமைகளாக மாற்றுவதின் வழியாகவும்தான் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் தொடங்குகின்றன. இதிலிருந்து சில தேச நிலைகளில் ஆண்டான் அடிமை முறையும், அதிலிருந்து நிலவுடைமை முறையும், சில தேச நிலைகளில் நேரடியாக நிலவுடைமை அமைப்பு முறையும் தோன்றுகிறது. இனத்தால், மொழியால், தேச எல்லைகளால் இணைக்கப்பட்ட தேசங்கள் உற்பத்தி முறையாலும் தேச அரசாலும் இறுதியாக மையப்படுத்தப்படுவது தேசிய முதலாளிய வகுப்புப் புரட்சி முதலாளியதேச உருவாக்கம் என்பதாக உள்ளது. (இதில் வேறுபட்ட சமூக வளர்ச்சி நிலைகளும் உள்ளன.) இந்த வகையிலேயே பிரெஞ்ச், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன், ருஷ்யா உள்ளிட்ட தேசங்களும் தேசிய அரசுகளும் உருவாகின. வர்க்கப் போராட்டம்தான் இவற்றை மையப்படுத்தப்பட்ட தேசிய அரசாக தேசிய சமூகமாக உருவாக்கினாலும் அதன் மொழி, நிலம், மரபு, பண்பாடு உள்ளிட்ட உள்ளடக்கங்களை இனமே தீர்மானித்தது.

இந்த முன்மாதிரிகள் தடையற்ற புறத் தலையீடற்ற சமூக வளர்ச்சியின் முன் மாதிரிகளாகவும், பிரிட்டனுக்கு எதிரான அயர்லாந்து விடுதலைப் போராட்டமும், வெள்ளை நிறவெறிக்கு எதிரான ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர்களின் போராட்டமும், ஜப்பானுக்கு எதிரான சீன விடுதலைப் போராட்டமும், பிரெஞ்ச் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான வியட்நாமிய விடுதலைப் போராட்டமும் புறத்திலிருந்து வரக்கூடிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான இனப்போராட்டத்தின் முன்மாதிரிகளாக உள்ளன.

நடைபெறுவது இனப்போராட்டமா, வர்க்கப் போராட்டமா என்பதை அத்தேசிய சமூகத்தின் வளர்ச்சி மற்றும் சுதந்திரத்தை புற மேலாதிக்கம் தடை செய்கிறதா, அக மேலாதிக்கம் தடை செய்கிறதா என்பதிலிருந்தே தெரிவு செய்யப்படுகிறது. இதில் இரண்டில் ஒன்று முன்னெடுக்கப்பட்டாலும் இன்னொன்று இல்லாமல் போய்விடுவதில்லை. மாறாக, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாக அது மாறிவிடுகிறது.

நிலவுடமைக்கும் போர்ப்பிரபுகளுக்கம் எதிரான சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள், தலைமையில் நடந்த வர்க்கப் போராட்டம் ஜப்பானிய எதிர்ப்பு சீன தேசிய விடுதலைப் போராட்டத்தின்போது முந்தைய வர்க்க விரோதிகளான நிலப்பிரபுக்கள் மற்றும் போர்ப்பிரபுக்களில் ஒரு பிரிவினர் கோமிங்டாங் கட்சி உட்பட தேசிய விடுதலையின் நண்பர்களாக மாறினர். சீன தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாக அவ்வர்க்கப் போராட்டம் மாறியது.

இப்படிப் புறத்திலிருந்து எழும் முரண் பாட்டிலிருந்து இனப்போராட்டமும், வளர்ச்சியின் விளைவாக அகத்திலிருந்து எழும் வர்க்கப் போராட்டமும்தான் மனித சமூகத்தை வழிநடத்தி இருக்கின்றன.

மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் விளைவாக வேறு வகையில் கூறுவதெனில் மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் தங்களுடைய முதலாளிகளிடம் தோற்றதின் விளைவாக உருவானது ஏகாதிபத்தியம். அது உருவாகி சுரண்டலை பல தேசங்களுக்கு விரிவாக்கிய பிறகு நடக்கும் போராட்டங்களும் அதன் துணையோடு உருவாக்கப்பட்ட பல்தேசிய நாடுகள் (எ.கா இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான்) உருவாகி சுரண்டலை மேலாதிக்கத்தை பல தேசங்களுக்கு விரிவாக்கிய பிறகு நடக்கும் அனைத்து போராட்டங்களும் அயல் மேலாதிக்கத்திற்கு எதிரான தேசிய இனப் போராட்டங்களே. உலக முதலாளிகள், ஏகாதிபத்தியம், பன்னாட்டு முதலாளிகள் தொழிலாளிகளிடமிருந்து சுரண்டப்படும் உபரியை விட தேசங்களிடமிருந்து சூறை யாடப்படும் வளத்திலிருந்தே அவர்களுடைய அமைப்பு முறையைக் காத்து வருகிறார்கள். உபரி அவர்களுக்கு உபரியாக மாறிப்போனது. ஏகாதிபத்தியங்களின் மற்றும் பல்தேசிய நாடுகளின் இருப்பு மற்றும் உயிர் ஒடுக்கப்படும் தேசங்களில்தான் தங்கி இருக்கிறது. அதற்கு எதிரான இனப் போராட்டத்தினால் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல பத்து தேசங்களை உருவாக்கி இருக்கிறது. ஏகாதிபத்திய ஐரோப்பிய முதலாளிகள் நேரடிக் காலணி ஆதிக்கம் சேமநல அரசு, புதுக் காலனியம், நிதி மூலதன ஆதிக்கம், சூறையாடும் முதலாளியம் என உருமாறும் உலக முதலாளியம் இன்று உலகமயம் என்ற பெயரில் மூன்றாவது உலக யுத்தத்தை ஒடுக்கப்படும் இனங்கள் மற்றும் தேசங்களுக்கு எதிராக நடத்திக்கொண்டு இருக்கிறது.

இப்போரிலேயே நம் இனம் அழிப்பிற்கும் விடுதலைப் போராட்டப் பின்னடைவுக்கும் உள்ளானது. ஈழ விடுதலை அதன் தேசியத் தளத்தில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதையும் அது சர்வ தேசத் தளத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் நமக்கு மறு உறுதி செய்திருக்கிறது. இந்த உண்மை இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் தமிழ்த்தேசிய விடுதலைக்கும் பிற ஒடுக்கப்பட்ட தேசிய இன விடுதலைக்கும் பொருந்தும்.

தமிழர்கள் உலகம் முழுவதும் பரவியதை வரலாறு தமிழர்களுக்கும் கொடுத்த நல்வாய்ப்பாகக் கருதி தமிழர்கள் தங்களுக்குள் உலக அமைப்பாக உருவாகி பிற ஒடுக்கப்படும் இனங்களோடும் சுரண்டப்படும் மக்களோடும் இணைந்த புதிய அகிலத்தை உருவாக்கி காலமும் சூழலும் நமக்கு வழங்கும் நண்பர்களின் துணையோடு இன ஒடுக்குமுறை உலக அமைப்பிற்கு எதிராக தேசிய இன விடுதலை அரசியலை முன்னெடுப்பதோடு தங்களது தாயகங்களின் விடுதலைக்கும், தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும்.

ஏகாதிபத்தியங்களை நம் ஒடுக்கப்படும் தேசங் களில் வீழ்த்தி அவர்களின் சொந்த தேசங்களுக்குத் திருப்பி அனுப்பி அவர்களின் சொந்த சகோதரர்களால் சவ அடக்கம் செய்யத் துணை நிற்பதன் மூலமும்; சோசலிச தேசங்களைப் படைப்பதன் மூலமும் உலக சோசலிச சமூகம் படைப்பதற்கான போரட்டத்தை ஒடுக்கப்பட்ட இனங்களும் சுரண்டப்படும் மக்களும் இணைந்து முன் நகர்த்துவோம்.

இதுவே தமிழர் முன்னணியின் பார்வையும் நோக்கமும் ஆகும்.

இயங்கியல் கண்ணோட்டத்தில் இனப்போராட்டக் கோட்பாட்டை ஏற்று மக்கள் திரள் வழியில் தமிழர் பணி முடிக்க அன்போடு அழைக்கிறோம்.

Pin It