Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

முதல்முதலில் ஜனநாயகத்தை பிறழ உணர்ந்தவர்கள் காலனி ஆதிக்க ஆங்கிலேயர்களே என்பது வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்கான கருத்தல்ல. ரயில் வண்டிகளையும் தபால் தந்தி அலுவலகங் களையும் போலவே ஜனநாயகத்தையும் அரசாணையின் பேரில் நிர்மாணிக்கப்படும் ஒரு எந்திரக் கட்டமைப்பாக அவர்கள் விளங்கிக் கொண்டிருந்திருப்பது இப்போது தெளிவாகிறது. இல்லையயன்றால், ஜனநாயகத்தை பிரதிநிதிகளின் அமைச்சரவை மற்றும் முதல்வர் ஆகியோரை மட்டும் மக்கள் அடையாளம் காணும் வாய்ப்பாக சுருக்கி விட்டு அந்த அமைப்புக்கு மேல் அமர்ந்து கொண்டு கண்காணித்து கட்டளை செய்து வரும் அமைப்பாக காலணி ஆதிக்கம் இருந்திருக்க முடியாது. இந்த நடைமுறையின் ஆழ்ந்த பொருள் என்னவென்று யோசித்தால் வரலாற்று வழி வல்லமை வாய்ந்த ராணுவ பலம் சார்ந்த ஒரு அலகே (யூனிட்) ஜனநாயகத்தையும் வழிநடத்தும் உரிமை பெற்ற பேரொழுங்கு பொறி அமைவாக காலணிய வாதிகளால் முன் மொழியப்பட்டுள்ளது. ஜனநாயகத்தையே மேய்ப்பாளனாக நின்று கண்காணித்து வழிநடத்தும் இந்த வாய்ப்பு பிரிட்டிசாருக்கு ராணுவ பலம் சார்ந்து கிடைத்ததென்பதால் தன்னை எதிர்க்கும் எத்தகைய ராணுவ அமைப்பையும் காலணி ஆதிக்க இந்தியாவில் அவர்கள் அனுமதிக்கவில்லை.

இந்தியாவிடம் சுதந்திரத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறும் நிர்ப்பந்தம் வந்தபோது ராணுவம் அல்லாத குடிமை சமூகத்தில் பெரும்பாண்மை வாதமாக (மெஜாரிட்டிசம்) நிலவி வருகிற திரளிடம் (இந்து) ஒப்படைத்து விடுவது ஜனநாயத்துக்கு பிரிட்டிசாரின் நன்கொடையாக இருக்கட்டும் என்று எண்ணி இருப்பது போல் தெரிகிறது.

ஒரு மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அமைப்பில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற வாக்குகள் சார்ந்த பெரும்பான்மைக்கும் வரலாற்று ரீதியில் பண்பாட்டுத் தளத்தில் மதம் சார்ந்து அமைகிற எண்ணிக்கை பெரும்பான்மை வாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது வெளியேறும் அவசரத்திலிருந்த பிரிட்டிஷாரால் உணரப்பட்டதாக தெரியவில்லை.

எனவேதான், மக்கள் தொகை அடிப்படையில் அமைந்த பெரும்பான்மைவாதத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஜனநாயகம் எளிதாக இன்று பெருமத அரசியல் ஒன்றிடம் சிக்கி மூச்சுத் திணற நேரிட்டுள்ளது. சுதந்திரம் அடைதல் என்ற அந்தப் புள்ளியிலிருந்து இன்றுவரை ஜனநாயகத்தை பேணி வளர்ப்பதை விட அதையே வழிநடத்தும் வல்லமை மிக்க பெரும்பான்மைவாதம் கட்டுக்குலையாமல் காத்து வரப்படுகிறது. இதனால் பல்வேறு வகைப்பட்ட ஜனநாயகக் கேடுகள் பல துறைகளில் வளர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது. அதில் ஒரு துறை சமயத் துறை. குறிப்பாக, பெருமத அடையாளத்துக்குள் மூழ்கடிக்கப்பட்ட பல்வேறு வழிபாட்டு முறைகளும் வணக்க முறைகளும் தங்கள் தங்கள் அடையாள மரபை பேணிக்கொள்ளவோ வளர்த்தெடுக்கவோ வழியில்லாமல் போகிறது.

தமிழர்களின் தொன்மை சமயங்களாகிய சிவனியம் (சைவம்) மாலியம் (வைணவம்) இரண்டும் காலனி ஆதிக்க எதிர்ப்புக் காலத்தில் இந்து என்கிற புதிய பெருமத உருத்திரட்சிக்கு உதவும் பொருட்டு உட்செரிக்கப்பட்டு அவற்றின் உயிர்ப்புத்திறன் பாழடிக்கப்பட்டுள்ளது.

புதிய பெருநிலத்தை (இந்தியா) ஆள்வதற்கான பெருமதமாக (இந்து) தன்னை உருமாற்றிக்கொண்டு இஸ்லாத்தை சிறுபான்மைக்குத் தள்ளும் திட்டமாக இது அமைந்தது. இது சிவனியத்தையும் மாலியத்தையும் சமயப்பட்டியலுக்குள்ளேயே வராத அடையாள இழப்புக்கு ஆட்படுத்திவிட்டது. உண்மையில் தமிழர்களின் வரலாற்று வழிப் பார்க்கும்போது சிவனியமும் மாலியமும் முழுமையாக சமயம் என்னும் சுட்டுக்குப் பொருத்தமான தகுதிப்பாடுகளைப் பெற்றிருந்தது உறுதிப்படுகிறது.

வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தொல்பழங்காலத்தில் இவ்விரு சமயங்களும் சிறு சிறு நம்பிக்கை வெளிப்பாடுகள், வழமைகள், கடைப்பிடிப்புகள் வாயிலாகவே சமயத்தின் தாதுப் பண்புகளை வெளிப்படுத்திக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. வரலாற்றுக்கு உட்பட்ட தொல்காப்பிய பாட்டுத்தொகை திரட்டுகளின் காலத்தில் திணைவழி தெய்வங்களாக சமயத்தின் தொடக்கநிலை அமைப்பியக்கத்தைப் பெற்றிருப்பதை தரவுகள் வழி மெய்ப்பிக்க முடிகிறது. அடுத்துவந்த அற இலக்கிய காலத்தில் சமண பவுத்த ஆசீவக நெறிகளின் எதிர்முனை தாக்குதலின்போது தன்னுணர்வோடு தன்னை வரையறுத்து தற்காத்துக் கொள்வதும் எதிர்வினையாற்றுவதும் என செயல்பட்டிருப்பது தெரிகிறது.

சைவக்குரவர் நால்வர், ஆழ்வார் பன்னிருவர் காலத்தில் தெளிவும் பொலிவும் பெற்று அரசாளும் / மன்னனுக்கும் உலகியலை ஆளும் குடிகளுக்கு வழிகாட்டும் உயர்நிலை எட்டிய சமயமாக படிமலர்ச்சி அடைந்துள்ளது.

சோழப்பெருவேந்தர் காலத்திலும், பாண்டியரின் பிற்கால எழுச்சியிலும் சிவனியத்தின் விரிவையும் ஆழத்தையும் நன்குணர முடிந்தது. அதேபோல பல்லவ, நாயக்கர் ஆட்சிக் காலங்களில் மாலியம் நுணுக்கமும் பெருக்கமும் அடைவதைக் காண முடிகிறது. பண்டைய புறச் சமயங்களாகிய சமண பெளத்தத்தை எதிர்கொள்வதில் சம்மந்தர் அப்பரின் தர்க்க அறிவும் பக்தி உணர்வும் தமிழ் வாழ்விலிருந்து துறவைத் துரத்தி சமூக உறவை உறுதிப்படுத்தி உள்ளன.

ஆழ்வார்களும் ராமானுஜர் போன்றோரும் சமூகப் பாகுபாட்டை ஒழிக்க படைக்கலம் வேண்டாம் இறைவனிடம் அடைக்கலம் புகுவோம் என்று நேரிய நெறிகளை வகுத்துக் கொண்டுள்ளனர்.

இஸ்லாமின் உலகளாவிய சகோதரத்துவம், கிருஸ்துவத்தின் மன்னிப்பும் அன்பும், சிவனிய மாலிய சமயங்களால் சிறப்பாகப் புரிந்து கொள்ளப்பட்டும் முதிர்ச்சியாக எதிர்கொள்ளப்பட்டும் வந்துள்ளன.

காலணி ஆதிக்க காலத்தின் தொடக்கத்தில் கூட இவ்விரு சமயங்களின் தனித்துவம் மடம், புரலவர், குடியானவர் நன்கு பேணப்பட்டு வந்துள்ளது. ஆனால் விடுதலையை நெருங்க நெருங்க இந்து என்னும் பெருமத சொல்லாடலுக்குள் தூர்ந்து சிவனிய மாலிய சமயத் தத்துவம் ஒழிக்கப்பட்டுவிட்டது.

இந்திய பெரு நிலத்தை ஆள்வதற்காக உருவாக்கப்பட்ட இந்து பெருமதம் மத்திய அரசு என்னும் பென்னம்பெரிய அதிகாரத்தை குறிவைத்து நகர்ந்து இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், மறுமுனையில் சிவனியமும் மாலியமும் குறைந்தபட்சம் மாநில அரசைக் குறிவைத்து இயங்கியதாகக்கூட எந்த சாட்சியமும் இல்லை. இவ்விரு தமிழ்ச் சமயங்களும் முற்று முழுதாக சமய நோக்கும் இலக்கும் கொண்டே விடுதலைக்குப் பிறகும் தமிழகத்தில் இயங்க விழைந்திருப்பது புலனாகிறது. இந்திய விடுதலைக்கு முந்திய இருபதுகள் முப்பதுகளில் கூட தமிழ்நாட்டின் தனிநபர் சொத்து ஆவணங்களின்படி சமயம் என்கின்ற இடத்தில் சைவர் வைணவர் என்ற சுட்டுகளே இடம் பெற்றிருக்கின்றன.

கூடுதல் சான்றுகளாக நீதிமன்ற வழக்குகளின்போதும், ஊர் சார்ந்த பொது நிகழ்வுகளின்போதும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பலநூறு கலாச்சார நியமங்களின் போதும் சைவர், வைணவர் என்கின்ற பதங்களே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. விடுதலைக்கு முந்திய காலத்தில் வாழ்ந்து மறைந்த தமிழர்களின் கல்லறை எழுத்துப் பொறிப்புகளும் இவ்வுண்மையையே வலியுறுத்தி நிற்கின்றன. இன்னும் தோண்டத் தோண்ட சான்றுகள் மலைபோல் குவியுமே ஒழிய குறையாது. ஆனால் ஏதோ ஒரு பொதுநலன் கருதியும் கூட்டு நன்மை கருதியும் தமிழ் அடையாளங்கள் உள்ளடங்கிக் கொள்ளவும் இந்து என்கின்ற பொதுப்பதம் மேலெழுந்து நிற்கவும் அன்றைய தமிழக சமயவாதிகள் ஒப்புக்கொண்டனர். ஒத்துழைத்தனர் ஆனால், அந்த ஒப்புதலுக்கும் ஒத்துழைப்புக்கும் பகரமாக தமிழ்ச்சமயங்களுக்கு இந்த அறுபது ஆண்டுகளில் கிடைத்தது என்ன?

தனித்துவத்தை இழந்தது ஒன்று என்றால், செய்யாத குற்றங்களுக்கு அவப்பெயர் சுமந்து வருவது கொடுமையின் கொடுமுடியாகும். இந்து என்னும் பெருமதத்திற்கு இசுலாம் கிருத்துவம் என்னும் புறச்சமயங்களை எதிர்கொள்வதில் இருந்த அரசியல் உள்நோக்கம் மிக்க அனுகுமுறைகள் வேறு நியாயங்களுக்காக இந்துவுக்குள் உள்ளடங்கிப் போய்விட்ட தமிழ் சமயங்களுக்கான இழிசுமையாக இன்றுவரை கணத்து வருகிறது. குறிப்பாக சமயப்பொறை (மதச்சார்பின்மை அல்ல) என்பது சிவனிய மாலிய சமயங்களுக்கு உயிர்ப்பண்பு எனலாம். உடனே சிலர் எண்ணாயிரம் சமணரைக் கொன்றதை மறுப்பு வாதமாக வைக்கக் கூடும்.

சமய நிலையில் கடும் போக்கினராகிய சமண சமயத் துறவிகள் (கோட்டுபாட்டு வாதிகள்) மட்டுமே இத்தகைய கடும் எதிர்வினைக்கு ஆளாகியுள்ளதை கவனிக்க வேண்டும். தங்கள் தரப்பை மெய்ப்பிப்பது அல்லது மரணத்தை தழுவுவது என்கின்ற சூளுரையே கடும் போக்கினராகிய சமணத்தின் நிலைபாடாக இருந்துள்ளது. மென்போக்கினராகிய (மத்தியத்துவப்பாதை) பெளத்தர்கள் இந்நிலைக்கு ஆளாகாதது கவனிக்கப்பட வேண்டும். சமண சமயத்தை கடைப்பிடித்து ஒழுகும் குடிமை சமூகம் இந்நிலைக்கு ஆளாகவில்லை. கூடுதலாக ஒரு தகவல் வேண்டுமென்றால் சீவக சிந்தாமணி காப்பியமும் அதன் படைப்பாளர் திருத்தக்கத் தேவரும் எஞ்சியிருந்த சமண சமூகத்திலிருந்தே பின்னாளில் உருவாகி வந்திருக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அது களப்பிரர் பல்லவர் என்கின்ற ஆட்சியர் சார்ந்த முரண்பாட்டோடு தொடர்புடையது. நிற்க...

இந்து பெருமதத்தில் கரைந்தபிறகு சிவனியமும் மாலியமும் இழந்தவை ஏராளம் பெற்றவை சொற்பம் சான்றாக சைவத்தின் பக்திக் கருவூலங்களாகிய தேவாரம் திருவாசகம் இந்துப் பரப்பு (இந்தியா) முழுவதும் கொண்டு சேர்க்கப்படவே இல்லை. அதற்கு முதல்கட்டமாக சமஸ்கிருதத்திலும் இந்தியிலும் அது மொழிபெயர்ப்போ மறு படைப்பாக்கமோ ஏதும் செய்து கொள்ளப்படவே இல்லை. இதே நிலைதான் பன்னிரு ஆழ்வார்கள் படைத்த நாலாயிரத் தீஞ்சுவைப் பாக்களுக்கும் நேர்ந்துள்ளது. இவ்விரண்டு அடிப்படைகளே தவற விடப்படும் போது பன்னிரு திருமுறைகள் பதினான்கு சாத்திரங்கள் பிற்கால சைவ சிற்றிலக்கியங்கள் வைணவ உரைநடை ஆக்கங்கள் எவையும் தமிழகத்தை தாண்டவில்லை. இதே நிலையை வைணவத்தில் அடுத்துடுத்து வெள்ளமெனப் புறப்பட்டு வந்த பா´யக்காரர்களின் (வியக்கியானக்காரர்) படிநூல்களுக்கும் நேர்ந்துள்ளது ஆனால் இதே அறுபது ஆண்டுகளில் இந்தியாவின் தத்துவ நூல் என்றால் பகவத் கீதை தனிப் பிரதிநிதித்துவம் பெற்று வந்திருக்கிறது. திருமந்திரத்திற்குள் இருப்பவை தமிழறிந்த உலகில் மட்டுமே தத்துவம் எனக் கொள்ளப்படுகிறது.

வைணவத்தின் வைரங்களை ராஜஸ்தானிய வியாபாரிகளும் குஜராத்திய வணிகர்களும் இந்து மரபின் ஈடில்லா செல்வங்களாக அறிந்திருப்பதற்கு எந்த வாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை. இதிகாசங்களான பாரதமும் ராம சரிதமும் தமிழ் சமயவாதிகளால் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மறு ஆக்கம் செய்துகொள்ளப் பட்டாகிவிட்டது. ஆனால் திருத்தொண்டர் மாக்கத்தை ( பெரியபுராணம்) திருப்பதியைத் தாண்டவில்லை. திருவாய்மொழி ஈடுகளை இந்து பெருநிலப்பரப்பில் நாத்திக நூல் என்று நாடாமல் இருந்து விட்டார்களா என்றும் தெரியவில்லை. இந்த தமிழ் மரபின் நூல்களை அங்கீகரிப்பதும் அனைத்துலகிற்கும் கொண்டு செல்வதும் இந்து பெருமத அரசியலுக்கு ஒவ்வாததாக இருக்கக் கூடும். சிவத்தலங்கள் ஏராளமானவை இருக்க வைணவ திவ்ய தேசங்கள் மலிந்திருக்க பெருநில இந்துக்கள் ராமேஸ்வரத்திற்கு ( ராமன் பாதம் பட்டதால்) மட்டும் ஆண்டு முழுவதும் ஆதரவளிக்கின்றனர்.

தமிழ்ச்சமயக் கடைபிடிப்பாளர்கள் கேதர்நாத் அமர்நாத் என்ற பனிச்சிகரங்கள் வரை பயணித்துவிட்டு வருகிறார்கள். இதிலிருந்தெல்லாம் சாரமாக பிழிவாகப் பெற்றுக் கொள்வது என்ன? இந்து பெருமதத்திற்கு கிடைத்திருக்கின்ற இந்திய அதிகாரமும் பொருளாதாரமும் உலக அங்கீகாரமும் எதுவும் தமிழ் சிவனியத்திற்கும் மாலியத்திற்கும் கிஞ்சிற்றும் கிட்டவில்லை. ஆனால் குடும்பத்தின் உறுப்பினராக இரு குரல் இழந்து குடித்தனம் நடத்து என்னும் வழிகாட்டு நெறியே வரலாற்றை முற்றுகை இட்டிருக்கிறது. இஸ்லாமியர் ஆன்மீகக் கடமையாக ஹஜ் செல்வதற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு மானியத்திற்குப் போட்டியாக இந்து புனிதத் தலங்களுக்கு செல்லும் இந்து யாத்ரீகர்களுக்கு மானியம் பெற்றுத் தரப்படுகிறது மகிழ்ச்சி. நெல்லையிலிருந்து சென்னை மயிலைக்கு சிவதல பயணம் செய்ய விரும்பும் தமிழ் சிவனியருக்கு மிகச்சிறிய தொகை கூட மானியமாக கொடுக்கப்படுவதில்லை. எல்லாம் சொந்த செலவே அல்லது கடனே. இந்த நிலையே கூட படிப்படியாக பொருளாதார நெருக்கடிகள் முற்றும் பொழுது அந்தப் பழக்கத்தையே கைவிடும் நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது. ஆனால், அரசு மானியம் பெறும் கூட்டத்தை எந்த பொருளாதாரப் புயலும் வீழ்த்தி விடுவதில்லை இதே போல்தான் இதுவரை அச்சில் ஏற்றப்படாத பனை ஓலைச் சுவடிகளில் இருக்கும் தமிழ்ச்சமய இலக்கியங்களுக்கும் ( தஞ்சை சரஸ்வதி மகாலில் இருப்பவை) நேர்ந்துள்ளது. அச்சியற்றப்பட்டு மறுபதிப்பு காணப்படாத புத்தகங்கள் பலவற்றுக்கும் நிதிப்பற்றாக்குறை முக்கிய காரணியாக விளங்குகிறது.

பல நேரங்களில் இந்து பெருமதத் தரப்பிலிருந்து இதற்கு பதிலளிக்கப்படும்போது தமிழகத்தில் அமைந்து விட்ட 50 ஆண்டுகால திராவிட அரசுகளே தமிழ்ச்சமய வீழ்ச்சிக்கு காரணம் என்பது போல சுட்டிக்காட்டப் படுகிறது. உண்மையில் (இறைமதங்களான) இசுலாத்தையும் கிறித்துவத்தையும் கையாளுவதில் சிவனிய மாலியத்தின் முதிர்ச்சி வரலாற்று ஆய்வாளர்களுக்கு தெள்ளென புலப்படக்கூடியதாகும்.

அதைவிட இறைமறுப்பு மதங்களான சமண பெளத்த மதங்களை அணுகுவதில் மிகந்த தேர்ச்சி மிக்கது எனவே 20ம் நூற்றாண்டின் நாத்திக பகுத்தறிவு இயக்கங்களை எதிர்கொள்வதில் தமிழ்ச் சமயங்களுக்கு எந்த தடுமாற்றமும் இருந்ததும் இல்லை இருக்கப் போவதும் இல்லை. உண்மையில் இந்துப் பெருமதம் முன்வைத்த சமஸ்கிருத தேவபாஷை வாதமும் இந்தி ராஜ்ஜிய பாஷை வாதமும் தான் இன்றைய நாத்திக பகுத்தறிவு இயக்கத்தினரை நெட்டித் தள்ளி மரபான சமயப் பொறைக்குப் புறம்பாக செல்லும் சூழலை உருவாக்கித் தந்து விட்டது. தமிழ் மண்ணின் மதியில், தமிழ் மக்களின் நிதியில் உருவான அன்றைய அரசாங்கங்கள் இந்து (!) அறநிலையத்துறை என்ற பெயரில் உருவாக்கிய அரசுத்துறை இந்து மதத்தை விட சிறப்பான ஒப்புரவையே தமிழ்ச் சமயங்களுக்கு காட்டி வந்திருக்கின்றன.

மாறாக இந்துப் பெருமதத்தின் புத்துறவு எந்த விதத்திலும் தமிழ்ச் சமயங்களுக்கு ஒப்புரவாக அமையவில்லை என்பதே ஒரே பெரும் மெய்.

தமிழகத்தின் பெருந்திரளான மக்கள் சிவனியம் மாலியம் என்ற தமிழிய சமயங்களுக்கு உள்ளேயே பெரிதும் திரட்சியுற்று வாழ்கின்றனர். இதற்கு அப்பால் சிற்றெண்ணிக்கையில் இயற்கை வழிபாடு முன்னோர் வழிபாடு ஆசான் வழிபாடு நாத்திக பகுத்தறிவு நெறி எனும் இவற்றுக்குள்ளேயே அடங்குகின்றனர்.

பின்பு வேறெதெற்கு இந்து மதம் எனும் பெருந்தொகுப்பு. இங்கு தேவைப்படுகிறதென்றால் பிறமொழியாளரை தமிழ் நிலத்திற்குள் எந்த உராய்வும், பிணக்கும் இல்லாமல் பொருத்தி வாழ்விக்கவே என்ற உண்மை புலப்படுகின்றது.

வரலாற்று நீரோட்டத்தில் இயல்பாக வாழ்வாதாரம் தேடி தமிழ் நிலத்திற்குள் வந்தவர்கள் எந்த பெருமத கவசமும் இல்லாமல்தான் இங்கு வந்திருக்கிறார்கள். ஆனால் மன்னராட்சி முதல் மக்களாட்சி வரையிலான அரசியல் அதிகார துணையோடு வன்குடியேற்றம் மூலம் வந்தவர்கள் இந்து என்னும் அரசியல் மதத்தின் துணையோடுதான் இங்குள்ள மண்ணின் மதங்களை ஒற்றுமைக்குள் ஒடுக்கி இருக்கிறார்கள். மொழிச் சிறுபான்மையினருக்கு பெருருமததத் துணை இருந்தால்தான் வாழ முடியும் என்பது எளிதில் விளங்கக் கூடிய பாடம் தான். மண்ணின் மைந்தர்களை, மண்ணின் மதங்களோடான இயல்பான உறவை பிணைப்பை அறுத்து பெருமதத்திற்குள்ளான ஒரு பகுதி சார்ந்த சிறு மரபாக வாழ வைத்திருப்பது பேரரசுகள் சிற்றரசுகளை கையாள்வதைப் போலவே இருப்பதை ஒப்புநோக்க வேண்டும் பேரரசு பெருநிலம் என்கின்ற பேரடையாள பித்தத்திற்கு பெருமதம் என்பது மூன்றாவது பரிமாணம் ஆகும்.

தொல்காப்பியப் பதிவுகளிலும், பாட்டுத்தொகைப் பதிவுகளிலும் முக்கட்செல்வன், கறைமிடற்று அண்ணல் என்றும் நெடுவரை நெடியோன், மாயோன் என்றழைக்கப்படும் சிவனிய மாலிய முதண்மை தெய்வங்கள் இந்து பெருமத கடவுளர்களிலிருந்து வேறானவர்கள் என்பது பல சான்றுகள் மூலம் வெளிப்படுகின்றது. முதண்மையாக சிவனிய மாலிய மரபுகள் இரண்டும் தமிழின் திணைத்தெய்வ மரபிலிருந்து சமய தெய்வ நிலைக்கு வளர்ந்திருப்பதை வரலாற்று சான்று வழி அறிய முடிகிறது. இதையே கூர்மைப்படுத்தி திணை என்கின்ற சமூக மெய்ம்மையில் வரலாற்றின் வேறொரு கட்டத்தில் சமயம் என்ற சமூக கருத்துருவமாக வெளிப்படுகிறதா? என்றும் ஆய்ந்து பார்க்க வேண்டி இருக்கிறது. ஏனெனில் தமிழிய சமயங்களின் ஐரோப்பிய அரேபிய கண்டங்களில் உருவாகிய செமிட்டிய சமய தோற்றங்கள் போல் மண்ணுலகின் மீது விண்ணுலகின் ஆட்சி போன்றோ தேவர்கள் வாழும் உலகம் மேலோகம்) போன்றோ தேவர்களின் கோன் என்றோ எந்த அதீத கற்பனைகளும் இல்லை. சிவன் விண்ணுலகத்தை சேர்ந்தவன் அல்ல. அவன் தென்னாடுடையவனே. இச்சுட்டு திசைவழி நிலத்தை தெள்ளத் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறது. அதுபோல்தான் வடவேங்கடத்து மாலவனும் குன்றுறைக் குமரக் கடவுளும் கோடைக் கொதிக்கும் பாலைக் கொற்றவையும், நிலத்தின் மீது காலூன்றி நின்று அங்கு உறையும் மக்கள் கூட்டத்தை காத்தருளுகின்றனர்.

தமிழிய சமயங்கள் உருவாக்கிய தெய்வங்கள் அண்ட சராரசங்கள் அனைத்துக்கும் தெய்வங்களும் அல்ல. தாங்கள் முன்பின் அறிந்திராத மக்கள் கூட்டத்தையும் தங்கள் தெய்வமே படைத்து, பாதுகாத்து வருகிறது என்று கடவுள் வரைவை ஆக்கிரமிப்புணர்வின் அருவ வெளிப்பாடாகவும் கொண்டிருக்கவில்லை. அது திணையை எல்லையாகக் கொண்ட ஆற்றல் வரம்புக்குட்பட்ட தெய்வங்களேயாகும்.

இந்துப் பெருமதத்தின் பண்டைய புராணங்கள் கூறுவது போல் தெய்வங்களுக்குள்ளேயே சண்டையோ துரோகமோ நயவஞ்சகமோ பலப்பரிட்சைகளோ வீராப்பு வியர்த்தனங்களோ செந்தமிழ் நிலத்தின் ஐந்திணை தெய்வங்களிடையே இருந்ததாக சான்றுகள் இல்லை. ஆனால், திணை வழி தெய்வங்கள் சமய தெய்வங்களாக உருமலர்ச்சி அடையும் போது கடவுள் கொள்கையில் தத்துவ முரண் ஏற்படுகிறது. அதுவும் மேலே சொன்ன இந்து மத தெய்வங்களுக்கிடையே நிகழுகின்ற உடல்பலம் ஆளுமை ஆற்றல் சார்ந்த போட்டா போட்டிகள் அன்று. கெடுபிடி யுத்தங்களும் அன்ற அவை ஏரண (தர்க்க)முறையில் கடவுள் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து மோதல்களே ஆகும். அந்தக் கருத்து மோதலைக்கூட எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதற்கு இருவரும் ஒப்புக்கொண்ட வழிகாட்டு நெறிகள் (உரையாடல் சட்டகம்) இருந்துள்ளது. இதன் விளைவாக சிவனியத்தின் கோட்பாட்டு உச்சமாக சைவ சித்தாந்தம் - பதினான்று சாத்திரங்கள் போன்றவை தோன்றுகின்றன. மாலியத்தின் கோட்பாட்டு உச்சமாக வசிட்டாத்துவிதம் போன்றவை தோன்றுகின்றன. தென்னாடுடைய சிவன் எங்கேயும் வடவேங்கட மாலவனையோ பள்ளிகொண்டபுரத்து பதும நாபனையோ அடித்து வீழ்த்தி கீழ்மைப்படுத்தியதாகவோ தமிழிலும் அதன் கிளை மொழிகளிலும் சான்றுகள் காட்ட முடியாது.

ஆட்சியாளர்களின் வீம்பும் வீராப்பும் சமய சண்டைகளாக வலியுறுத்தப்படுகின்றன. அன்றி இந்துப் பெருமத புராணங்களும் சமய இலக்கிய வடிவங்களும் காட்டுவது போன்ற தேவ மு தேவ யுத்தம் தமிழில் கிடையவே கிடையாது. ஏன் உலகெங்கிலும் கிடையாது அங்கெல்லாம் தேவ மு அசுர யுத்தமே புனித நூல்வழி கிடைக்கின்ற சான்றுகளில் வெளிப்படுகின்றது. மேலும் தமிழிய சமயங்கள் தங்கள் தெய்வ கோட்பாட்டுக்கு இணை கோடாக அழைத்து வந்த இசைக்கலை (பண்ணிசை) கட்டடக்கலை (ஆகம நெறி) தல விருட்சம், தீர்த்தம், முதல் கருப்பொருள்கள், படிம முறை ( சிற்ப செந்நூல் வழி) புராணம், காவியம் (தொடர்நிலைச் செய்யுள்) என அனைத்தும் ஐந்திணை மரபிலிருந்து பெறப்பட்டவையே அன்றி இந்நு பெருமத, பெருநில பேரரசு பெருமொழி (தேவபாஷை, ராஜ்ஜிய பாஷை) மரபிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதல்ல, காலணியர்களின் அரியாமை சார்ந்த குவியல் குவியலான ஒரு தேசக் கட்டுமானத்தை அறிவும் தெளிவும் இருந்தும் பெருமதவாதிகள் ஒரே தேசமாக நியமம் செய்து நீடித்து வருவதற்கு ஆக்கிரமிப்பு உணர்வைத்தவிர வேறொரு காரணமுமில்லை.

தமிழிய சமயங்களான மாலிய, சிவனியத்திற்கு இறந்தகாலத்தில் ஒரு தனித்துவ வரலாறு இருந்திருப்பதால் அந்த அறிதலே எங்களை அதே தனித்துவ வரலாறு ஒன்றை எதிர்காலத்திற்கும் அமைத்துக் கொள்ள உந்தித் தள்ளுகிறது. போலியாகவோ, மெய்யாகவோ பிற மதத்தவரிடம் (இசுலாம், கிறித்தவம்) மாறுபாடு கொள்ளும்போதும், பகுத்தறிவு நாத்திகர்களிடம் முரண்பாடு கொள்ளும்போதும், பண்பாட்டு மரபுத் தொடர்ச்சி மிக்க சமய வாழ்வு ஒன்றின் இன்றியமையாமையை இந்துப் பெருமதவாதிகள் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அதே காரணங்களும் இன்னும் வெகுசில மரபுவழிக் காரணங்களும் சேர்ந்து இனிமேலும் எங்களை ஒரு பெருமதத்தில் ஒண்டுக்குடித்தனக்காரர்களாய் வாழ முடியாதபடிக்குத் தள்ளுகிறது. எனவே இனிவரும் காலங்களில் சிவனியமும் மாலியமும் தமிழிய சமயங்கள் என்ற பெயரில் அரசு சான்றிதழாக வழங்கப்படுதல் தவிர்க்கவொன்னாததேயாகும்.

தனியொரு மனிதனின் அகநிலை (சப்ஜெக்டிவ்) வாழ்வைச் செம்மைப்படுத்தி சமூக வாழ்வை ஒத்திசைவு மிக்க கூட்டு வாழ்வாக மலரச்செய்வதில் சமயத்தின் பங்கு ஒப்புமைக்கு அப்பாற்பட்டது என்பதை நாமறிவோம். ஆகவே, இதுவரை இந்து என்ற புதுப்பெயர் (ஒரு நூற்றாண்டாக சூட்டப்பட்டவர்கள் இனியேனும் தங்களின் வரலாற்று மரபின் அடிப்படையில் தமிழ்ச் சிவனியர், தமிழ் மாலியர் என்றும் அடையாள ஆவணம் வழங்கப்பட்டு சட்டபூர்வமாகவும், அரசின் அத்துனை அலகுகளிலும் அவ்வாறே பதியப்பட்டும் அதனடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு அரசாங்க வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளிலும் முறை செய்யப்படுதல் உடனடித் தேவையாகும்.

மண்ணின் மதங்களிடம் உரிய அதிகாரமும் நிதியும் தனித்துவ தேர்வுரிமையும் வழங்கப்படுமானால் தம் எதிர்கால நல்வாழ்வை அவை சிறப்பாக அமைத்துக் கொள்ளும். மாறாக, மாநிலங்களின் பெருவாரியான அதிகாரங்களை மத்தியில் குவித்து வைத்துக் கொண்டு மாநிலங்களின் மக்கள் நல அக்கறையின்மையை கரித்துக் கொட்டுவது போல மண்ணின் மதங்களை பெருமதத்தால் முற்றுகையிட்டு செயலிழக்கச் செய்து விட்டு நாத்திக இயக்கங்களே இதற்குக் காரணம் என்பது சமயத்தின் ஆழ்நிலை மெய்ம்மைகளை உணர்ந்தவர்கள் செய்யக்கூடிய செயலல்ல.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 mariyappan 2015-07-19 22:59
where was sivaniyam in tholkappiyam ? can you remove the yagam from maliyam? mal allaged as yagaththalaivan , desandent of mal, srikirushna his another name of thiravidan!(see pavanar agara muthali) tolled geethai , can you accept geethai is tamil issam or thiravida vetham, can you refuse muy comments by evidence? try......
Report to administrator
0 #2 meera 2015-07-21 08:42
lingustics policy of diravidar kazhagam is english not tamil there fore viwres have to regieter comment in keetru only tamil. this is tctice to avoid kamts due to un unanserable and un talarable coments. this is a one typof tipe of pasisam
Report to administrator
0 #3 raj 2015-07-21 08:47
thiravidan is one name of kirushnan? oo... modi also not only thiravidan, he is pachai thiravidan like kamarajar, therefore we have to our thiravidan modi eventhough in bade party bjp. we have to follow periyar paath.
Report to administrator

Add comment


Security code
Refresh