நடப்புச் செய்திகளில் பெருநகர் நீள் ஊர்தி சேவை தொடங்கி வைக்கப்பட்டதும் அதில் மக்கள் பயணித்துக் களித்த கதைகளும் இடம்பெறத் தொடங்கி விட்டன. தலைவர்கள் சிலரும் மக்களோடு மக்களாகப் பயணித்துத் திரும்பி இருக்கின்றனர். அங்கு மக்கள் வைத்த வேண்டுகோளை சுமந்து வந்து அரசின் கவனத்திற்கு சேர்த்திருக்கின்றனர். அத்தலைவர்களின் கோரிக்கை பயணக் கட்டணத்தின் விலை பற்றியது. அரசுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் முன் நீள் ஊர்தி சேவைத்துறையின் தலைமை அலுவலர்களிடம் கட்டணக் குறைப்புத் தொடர்பாக பேசிப் பார்த்திருக்கின்றர். அதிகாரிகள் குழாம் அதற்கு வாய்ப் பில்லை என்றும் எதனால் அந்த வாய்ப்பில்லை என்று தலைவர்களிடமும் அடுத்து வந்த நாட்களில் செய்தியாளர்களிடமும் விளக்கி இருக்கின்றனர். செய்தியாளர்களும் எந்த குறுக்கு, மறுப்புக் கேள்விகளும் எழுப்பாமல் நல்ல வண்ணம் செய்திகளைச் சுமந்து வந்து நாட்டுக்கு ஒப்படைத்து விட்டனர்.

இதனிடையே முன்னாள் இந்நாள் முதல்வர்களிடையே யார் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் என்ற உரிமைப் போட்டி செய்தியாக மேலெழுந்து வரவே அதை இந்த வாரத்திற்கான உந்து விசையாகக் கொண்டு செய்தி வணிகம் செய்வோர் தங்கள் வாசகர்களுக்கு அரங்க ஏற்பாடுகளை (பேட்டி காண) செய்யத் தொடங்கி விட்டனர். மெய்யாக தேவைப்படும் இந்தத் தெளிவு நீளூர்தி சேவை யாருடையது அதிகாரி குழாமுடையதா? (மெட்ரோ ரயில் கழகம்) மாநில அரசுடையதா? நடுவண் அரசுடையதா? என்பதே ஆகும்.

ஏனெனில் மக்கள் நலன் சார்ந்து பயணக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை மறுத்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் குழாம் பதிலளிப்பது அவர்களுக்கு வழங்கப்பட்டிக்கிற அதிகாரப் பொறுப்பிற்கு உட்பட்டதா என்பது தெளிவாக்கப்பட வேண்டும். அவர்கள் ஊதியம் பெற்றுக்கொண்டு தம் பணித்திறனை ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு வழங்கும் ஊழியர்களே அன்றி அதன் முதலீட்டு வழி உரிமையாளர்கள் அல்லர். ஆனால், அவர்கள் வழங்கியுள்ள விளக்கம், ஏன் கட்டணக் குறைப்பு செய்ய முடியாது? எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது? அது எங்கெங்கிருந்து பெறப்பட்ட கடன் என்றெல்லாம் போகிறது. கடைசியாக மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேண்டுமானால் கட்டணக் குறைப்பு பற்றி யோசிக்கலாம் என்று தன்னிலை தூக்கலாக நின்று ஆறுதல் அளித்திருக்கின்றர்.

நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பின் மூலம் உருவாகி உள்ள பிரதிநிதிகள் பிரதமர், முதல்வர், ரயில்வே அமைச்சர் போன்றோர் யாரும் பதிலளிக்காமல் (தேர்தல் தேவைகளுக்காகக் கூட) அதிகாரிகள் குழாம் பதிலளிப்பது பொதுத்துறை முறைக்குள் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டல அணுகுமுறையாக உள்ளது. உண்மையில் பெருந்திரளான மக்களோடு தொடர்புடைய ஒரு சேவையில் அதிகாரிகள் குழாமை முதன்மையாகக் கொண்டு இயங்க வேண்டிய தேவை என்ன வந்தது? நடுவண் அரசும் மாநில அரசும் சம தொலைவில் விலகி நின்று கொள்ள அதிகாரிகள் குழாம் அனைத்து ரிமையோடு பேசுவதைப் பார்த்தால் மிகத் தீவிரமான லாபமீட்டும் நிறுவனமாக அதை வளர்த்தெடுக்கத் திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் இயங்குமுறை என்பது லாபமீட்டலுக்கு அப்பால் சமூக வளர்ச்சியில் நேர்முக மறைமுகப் பங்களிப்பை வழங்க வேண்டும். இதுதான் வரலாறு ஆனால் புதிய பொருளாதார நியமங்களுக்குப் பிறகு எல்லா மரபு வழி மதிப்பீடுகளும் சமூக வாழ்வியலும் தூக்கி வீசியடிக்கப் பட்டிருக்கின்றன. அதில் ஒன்று போலும் இந்த பெருநகர் நீளூர்தி சேவைத்துறையின் பொறுப்புடமை (புஉஉலிற்ஐமிழிணுஷ்யிஷ்மிதீ)யிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் விலக்கி வைக்கப்பட்டிருப்பது.

ஆனால் இந்த நீளூர்திக் கட்டமைப்புக்காக பெறப்பட்டுள்ள நிதி ஆதாரம் அதன் பொறுப்புடமைக்கான உரிமையாளர் யார் என்பதை ஓரளவுக்கு தெளிவுபடுத்தவே செய்கின்றன. நடுவண் அரசின் பங்கு 15 சதவீதமும் 5 சதவீத கடனும் மாநில அரசின் பங்கு 15 சதவீதமும் 5.78 சதவீதம் சார்நிலைக் கடனும் என அமைந்திருக்கிறது. ஜப்பானின் (மூணூளீபு) வங்கியிலிருந்து 59 சதவீதம் கடன் பெறப்பட்டிருக்கிறது. பங்குத் தொகையும் கடன் தொகையும் சற்றேறக்குறைய சமமாகவே அமைந்துள்ள நிலையில், பெறப்பட்டுள்ள அந்நிய நாட்டுக் கடனை எந்த அரசு திரும்ப செலுத்தும் பொறுப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறதோ, அந்த அரசுதான் அந்த நீளூர்திக் கட்டமைப்பின் மீது கூடுதலான அதிகாரம் படைத்த அரசாக இருக்க முடியும். அந்த சட்டகத்திற்கு உட்பட்டுப் பார்க்கும்போது தமிழக அரசே இதில் கடனை அடைக்கும் பொறுப்பில் இருப்பதாக அறிய முடிகிறது எனில் நடுவண் அரசின் 5 சதவீதமும் ஜப்பான் வங்கியின் 59 சதவீதமும் சேர்ந்துகிட்டத்தட்ட 64 சதம் கடன் தொகை தமிழக அரசு மற்றும் மக்களின் மீதே ஏற்றப்பட்டுள்ளது. எனவே இதில் தமிழக அரசுப் பிரதிநிதிகள் தங்களுக்கு எந்த உரிமையும் இல்லாதது போல் அதிகாரிகள் குழாமிடம் போய் விசாரித்து விட்டு விலகலாக நின்று விளக்கம் தருவது மோசமான தமிழக விரோத அரசியலாகும்.

டெல்லி மெட்ரோ ரயில் கழகம் மத்திய அரசு, ஜப்பான் வங்கி என்று பல பெயர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், இது ஒரு குழப்பமான நிறுவன வடிவமாக பொதுமக்களிடம் பூச்சாண்டி ஆக்கப் பட்டுள்ளது. ஆனால், இவ்வணைவரின் துணையோடும் உருவாக்கப்பட்டிருப்பது சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டட் என்கின்ற சிறப்பு வகை பொதுப்பணித்துறை நிறுவனம்தான். இந்திய கம்பெனிகள் சட்டத்தின்கீழ்தான் அது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தமிழகத்தின் ஒரு பொது வளம். தமிழக மக்கள் பிரதிநிதிகளுக்கு பயன்பாடு சார்ந்த நோக்கில் கருத்துரைக்க உரிமை உள்ள களமே ஆகும். மேலும் இதில் பணியேற்க இருக்கின்ற ஊழியர்களும் சமூக நீதி ஒதுக்கீட்டின்படியே வாய்ப்பைப் பெற வேண்டியவர்களாவர். அதுமட்டுமில்லாமல் அதிதிறன் மிக்க சி.இ.ஓ பாணியிலான தலைமைப் பொறுப்பாளர்கள் இந்த நிறுவனத்தை ஆக்கிரமிப்பது பொதுத்துறை நிறுவனத்திற்குள் அனுமதிக்கத்தக்கதல்ல. விலை நிர்ணயம் பற்றி எல்லாம் பேசும் உரிமை எல்லாம் துப்புவாக அவர்களுக்குக் கிடையவே கிடையாது. வேண்டுமானால் புதிய பொருளாதார யுகத்தில் விலை நிர்ணயிக்கும் வாய்ப்பை அத்து மீறலாக ஜப்பானிய வங்கி வேண்டுமானால் கேட்டுப் பெறலாம். அதற்கு உலக வங்கி பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் முந்தைய அத்து மீறல்கள் முன்னுதாரணமாகக் காட்டப்படலாம். ஆனால் அதுவும் இன்று சாத்தியமில்லை. உலக வங்கிக்கும் பன்னாட்டு நிதியத்திற்கும் இருந்த கடனளிப்புக்கு அப்பாற்பட்ட அரசியல் உள்நோக்கங்கள் ஜப்பானின் வங்கிக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே விலை நிர்ணயம் செய்தும் அத்தகைய அத்துமீறலை செய்ய ஜப்பானிய அரசிற்கு வாய்ப்பில்லை. மீதமிருப்பது நடுவண் அரசுதான் அது மாநில அரசுகளை எப்படிக் கையாளுகிறது என்பதற்க 65 ஆண்டுகளான சாட்சிகளும் உண்டு. அதிலும் இன்று பழைய அணுகுமுறை பலிக்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

இந்தப் பிண்ணனியில்தான் யார் பொறுப்புடமையாளர்கள் என்பது பற்றிய தெளிவின்மையும் அந்தக் குழப்பத்தின் நடுவே அதிகார குழாமின் அத்துமீறலான விளக்கங்களும் நடந்தேறி இருக்கின்றன.