ஆந்திர மாநிலம் சித்தூர், கர்னூல் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேசாலம் வனப்பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ஆந்திர அரசின் காவல்துறையும் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவும் இணைந்து 20 தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்தது. 2011இல் இருந்து இதுவரை வெளியே தெரிந்து 29 தமிழர்களை படுகொலை செய்தும் சுமார் 4000 தமிழர்களை கைதும் செய்துள்ளது. தற்போது படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 7 பேர் தர்மபுரி மாவட்டத்தையும் ஒருவர் சேலம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் தாயக நிலங்களில் விவசாயம் செய்ய இயலாமல் அருகில் இருக்கும் பெரிய ஊர்களுக்குச் சென்று கூலி வேலை செய்து வருகின்றனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலைக்கும் ஒரு சிலர் சொந்த தொழிலும் செய்து வந்தனர். இவர்களில் பழனி என்பவர் தையல் தொழில் செய்து வருகிறார். நூல் வாங்குவதற்காக வெளியே சென்றவர் பின்பு பிணமாகத்தான் வீட்டிற்கு வந்தார் என்பது வேதனையான செய்தி. சொந்த வேலை காரணமாக வெளியே சென்றவரை ஆந்திர காவல்துறையானது வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றுள்ளது. மேலும் வேலைக்கு சென்ற பிறரை திருப்பதி செல்லும் வழியில் பேருந்தில் ஆந்திர காவலர்கள் விசாரணை என்று அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களை சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றுள்ளது ஆந்திர காவல்துறை. இதனை பேருந்தில் இவர்களுடன் பயணித்து, பெண்கள் இருக்கை பகுதியில் இருந்ததால் தப்பி வந்த சேகர் அவர்கள் அளித்த வாக்கு மூலமானது தெளிவு படுத்துகிறது.

ஏப்ரல் 5ஆம் தேதி முதலே தமிழர்கள் செம்மரம் வெட்டியதாக ஒரு சி.சி.டி.வி சாட்சியத்தை வெளியிட்டிருந்தது ஆந்திர காவல்துறை ஆனால், படுகொலை செய்யப்பட்ட வேட்டகிரிபாளையம் பெருமாள், கலசமுத்திரம் பழனி, காந்தி நகர் மனோகரன் ஆகியோரின் அலைபேசி அழைப்புகள் மூலம் ஏப்ரல் 6ஆம் தேதிதான் இவர்கள் ஊரை விட்டு வெளியே சென்றுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி இரவில் தான் ஆந்திர காவல்துறையால் தமிழக - ஆந்திர எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 7ஆம் தேதி அதி காலையில் இம்மூவரது அலைபேசிகள் ஆந்திராவின் சந்திரகிரி வனப்பகுதியில் இருந்ததாக காட்டுகிறது. சந்திரகிரி வனப்பகுதியில் செம்மரங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கூலி வேலைக்குச் சென்ற தமிழர்களை வழிமறித்து கைது செய்து சுட்டுப் படுகொலை செய்து காட்டில் வீசி இருப்பது அம்பலமாகியுள்ளது.

கூலி வேலைக்கு சென்ற தமிழர்களை சுட்டுக் கொல்லும் அளவிற்கு இவர்கள் செய்த தவறு என்ன? கூலி தொழிலாளிகளாக இருப்பதாலா? தமிழர்களாக இருப்பதாலா? 20 தமிழர்களும் செம்மரம் வெட்டினார்கள் என்று போலியாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஒரு வாதத்திற்காக ஏற்போமானால் இதே மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தெலுங்கு தொழிலாளர்கள் இவ்வகையில் தாக்கப்பட்டு உயிர் பறிக்கப்படவில்லை. பிற இனத் தொழிலாளர்கள் குறிப்பாகத் தமிழர்கள் என்பதனாலே இக்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட இன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கொலை இல்லையா?

மும்பை உயர்நீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி சுரேசு, ஒய்வு பெற்ற பாதுகாப்புப் படை அதிகாரி ராம் மோகன், முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் சத்திய பிரதாப் பால், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா, தடயவியல் நிபுணர் சேவியர், மனித உரிமை கழகத்தை சேர்ந்த யஹன்றி டிபேன் ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழு இந்தக் கொலையானது ஒரு மனிதப் படுகொலை எனத் தெரிவித்துள்ளது.

அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் அந்தக் காட்டில் 200 பேர் மறைந்து இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிணமானவர்களின் புகைப்படங்களில் சிலரின் பற்கள் உடைந்தும், கை கால் விரல்கள் வெட்டப்பட்ட நிலையிலும் உள்ளனர். இது மனித உரிமை மீறல், போலீஸ் தீவிரவாதம் என்று கூறியதோடு, கொல்லப்பட்ட இருபது பேரும் வறுமை நிலையில் உள்ளவர்கள். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆந்திர அரசு கூறுவது போல் இவர்கள் கடத்தல்காரர்களாக இருந்தால் அவர்கள் பெயரில் சிறிய வீடாவது இருந்திருக்கும் என்று கருத்து தெரிவித்தார்கள் இந்தப் படுகொலைக்கு இந்திய மனித உரிமை ஆணையமும் ஆந்திரப் பிரதேச உயர்நீதி மன்றமும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது. மேலும் உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளுக்காக ஆந்திர மனித உரிமை ஆர்வலர்கள் இப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றனர்.

இது திட்டமிட்ட படுகொலை என்று வெளிப்படையாகத் தெரிந்த பின்னும் கூட இந்தியப் பிரதமர் மோடி இதைப்பற்றி வாய் திறக்காமல் மெளனியாக இருக்கிறார். கொல்லப்பட்ட தமிழர்களை இந்தியாவின் குடிமக்களாக அவர் கருதவில்லை. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கோ இந்தப் படுகொலைக்கு எதிராக ஒரு கண்டனத்தைக் கூட தெரிவிக்காததோடு சிபிஐ விசாரணை பற்றி நிருபர்கள் கேட்டபோது சிபிஐ விசாரணைக்கு ஆந்திர அரசுதான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறுகிறார். கொலையாளிகளே கொலைப் பற்றிய விசாரணைக்கு கோரிக்கை வைக்க வேண்டுமாம். மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு இப்படுகொலைப் பற்றிக் கருத்து தெரிவித்த போது செம்மரக் கடத்தல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று கூறி இக்கொலைகளை நியாயப் படுத்துகிறார். இந்திய ஒன்றியத்தில் இஸ்லாமிய மக்கள் மீது ஏவப்படும் வன்முறைகளை எப்படி இந்திய அரசு கடந்து செல்கிறதோ அது போலவே தமிழர்களின் மீதான பிற இனத்தவர்களின் ஒடுக்குமுறையின்போதும் எளிதாகக் கடந்து செல்கிறது. அதற்கு மேலாக அவர்களுக்கு உறுதுணையாகவும் இருக்கிறது.

தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வமோ, தமிழக அரசோ கண்டனம் தெரிவிக்காததோடு இன்றுவரை அவ்வழக்கில் தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டு தமிழர் படுகொலைக்கு நீதிபெறவும், சிறையில் உள்ள தமிழர்களை மீட்கவும் முயற்சிக்கவில்லை. அவர்களுக்கு செயலலிதா ஊழல் வழக்கில் விடுதலை பெற பால்குடம், தீச்சட்டி எடுப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. தமிழால் வாழ்வு பெற்ற கருணாநிதியால் இரண்டு மாதம் கழித்தே சி.பி.ஐ விசாரணை கோர முடிகின்றது.

இந்திய அரசு, தமிழக அரசு, ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் இவர்களின் நிலையைப் பார்த்த நாம் படுகொலை குறித்து முன்வந்துள்ள சில குழம்பிய கருத்துக்களையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

1. இருபது தொழிலாளர்கள் படுகொலை, 2. அரச பயங்கரவாதப் படுகொலை, 3.இருபது தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை, 4. அதிகாரப் போட்டியில் நிகழ்ந்த கொலை, 5. பழங்குடிகள் பிற்படுத்தப்பட்டவர்கள் கொலை, 6. தமிழகத்திலே நடக்கும் திராவிட எதிர்ப்பு அரசியலுக்கு எதிராக நடந்த கொலை. இவைதான் அக்கருத்துக்கள்.

உண்மையைப் போலத் தோன்றும் போலிதான் இக்கருத்துக்கள். ஆந்திர அரசுக்கு தொழிலாளர்களைக் கொல்வதுதான் நோக்கம் என்றால் இத்தொழிலில் ஈடுபடும் ஆந்திரத் தொழிலாளர்களைக் கொன்றிருக்கலாம். இவர்களும் அவர்களும் என கலந்து கூட நடந்திருக்கலாம். ஆனால் இருபது பேரும் தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் மற்றொரு கேள்வி? ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேறு தேசத்தில் கொல்லப்படும்போது அதை வெறும் தொழிலாளர்கள் கொலை என்று சொல்ல முடியுமா? அதேபோல் தமிழ்நாட்டுக் குடிமகனை ஆந்திர அரசு கொல்வது அரச பயங்கரவாதமாக இருக்க முடியுமா? இருபது தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை உண்மைதான். தமிழ்த் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதில் தமிழக விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் நெசவாளிகளுக்கும் இளைஞர்களும் மாணவர்களும் இவர்களுக்கும் இவர்களின் கூட்டு உணர்விற்கும் பங்கம் இல்லையா? பாதிப்பு இல்லையா?

அதிகாரப் போட்டியில் நிகழ்ந்த கொலை என்றால் எதிர் அதிகார மையம்தானே கொல்லப்பட்டிருக்க வேண்ம்? அதிகாரமற்ற தமிழர்கள் ஏன் கொல்லப்பட வேண்டும்? கொல்லப் பட்டவர்கள் பழங்குடிகள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுவது எப்படிப் பொருத்தமாக இருக்கும்? அது சமூக வளர்ச்சிப் போக்கில் அழிந்து வரும் அடையாளம் இல்லையா? அவர்கள் தமிழர் என்ற தேசிய இனம் வளரும் அடையாளம் தானே பொருத்தமாக இருக்கும்? அதே போல் அயல் தேசத்தில் அவர்கள் பழங்குடிகள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அழைப்பது எப்படிப் பொருத்தமாக இருக்கும். ஆறாவது கருத்து குறித்து திராவிட ஆட்சியாளர்களின் தெலுங்கு சாய்வினால் எற்பட்ட ஐயம் மற்றும் நம்பிக்கையின் மையிலிருந்து வெளிப்படுகிறது.

முதல் ஐந்து கருத்துக்களையும் தொகுத்துப் பார்த்தால் அதன் உண்மை புலப்படும். இக்கருத்தை வெளியிடுவோர், தாங்கள் இந்தியர் தங்கள் தேசம் இந்திய தேசம் தங்கள் மதம் இந்து மதம் என்கின்ற தன்மையினாலேயே இந்தியாவை மொத்தமாகக் கருதி பகுக்கும் முறையைப் பயன்படுத்தி கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதனால்தான் அவர்கள் ஒருபுறம் பழங்குடியினர், பிற்படுத்தபட்டவர்கள் என்று கூறுவதும் மறுபுறம் அதற்குப் புறம்பாக தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று கூறும் நிலையும் உள்ளது.

இந்தியம் பேசிக்கொண்டும் திராவிடம் பேசியும் தமிழர் தாயகப் பகுதிகளை 56இல் ஆந்திரத்திடம் தாரை வார்த்தார்களே அதற்கெதிராகப் போராடிய அங்குள்ள தமிழர்கள் அங்குள்ள தெலுங்கர்களால் தாக்கப் பட்டார்களே, தற்போது நடந்த ஆந்திரா தெலங்கானா பிரிவினையின் போது 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களைத் தாய்த்தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்களே அந்தப் பகுதியிலும் அதை ஒட்டியுள்ள வனங்களையும் தான் தமிழர்கள் கொள்ளை யடிப்பதாகவும்; தமிழர்கள் ஒவ்வொருவரும் வீரப்பன் போன்றவர்கள் என்றம் ஆந்திர அரசும் அதன் பிரதிநிதிகளும் ஆந்திராவில் கருத்துருவாக்கம் செய்து அவர்களைச் சுட்டுப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு இருபது தமிழர்கள் கடத்தி சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டிருக் கிறார்கள். பயங்கரவாதிகளைக் கொல்கிறோம் என்று காஷ்மீர் இளைஞர்களை இந்திய அரசு கொல்வதும், அதைக் காரணம் காட்டி பொது சமூகத்தைத் தன் பின்னே திரட்டிக் கொள்வதும், அச்சமூகத்தையே கட்டுப்படுத்துவதும் போல் தமிழர்களைப் பகைவர்களாக, கொள்ளையர்களாகச் சித்தரித்து ஆந்திர வனத்தினைக் கைப்பற்றவும், ஆந்திர உள்நாட்டு அரசியலைக் கட்டுப்படுத்த இனவெறியன் சந்திரபாபு நாயுடு செய்யும் உத்திதான் இது. இது திட்டமிட்ட இன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட படுகொலையே.

தமிழர்களைக் கொள்ளையர்களாகச் சித்தரிப்பது உண்மையா? 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய விஜயநகரப் பேரரசு நாய்க்கர்கள், அவர்களைத் தொடர்ந்து அவர்களின் வாரிசுகள் தமிழத்தை கொள்ளையிட்டார்களே? கொள்ளையிடுகிறார்களே? இது போதாது என்று ஆந்திரத்தில் இருந்துகொண்டு தற்போது தமிழகத்தில் குடியேறியும் சினிமா, மருத்துவத் தொழில், கட்டுமானம், மொத்த வணிகம், நில வணிகம், உணவு விடுதி என தமிழர் தாயகத்தைக் கொள்ளையடிக்கும் ஆந்திர தெலுங்கு முதலாளிகள் கொள்ளையர்களா? தமிழர்கள் கொள்ளையர்களா? தற்போதைய சூழலே இக்கேள்வியை நம்முன் வைக்கிறது.