தோரணம் கட்டியது முதல்
அய்யனாருக்கு அழகாக
தோள் உயர மாலை கட்டியது வரை
காலையில் இருந்து ஓடியாடி
கண்படும் அளவிற்கு உழைத்தாயிற்று

பொழுது சாய்ந்ததும்
ஞானம் தரும் தெளிநீர்
நான்கு மடக்கு
நாக்கில் படாமல் குடித்து ஆயிற்று.

உப்பிப் பறக்கும் பலுVன்களில்
உப்புகள் கொஞ்சம் வீசி
உடைந்த சத்தத்தை ரசித்து
விற்பவன் வயிற்றிலும் அடித்தாயிற்று.

நேர்த்திக்கடன் செலுத்த வந்தோர்
சமைத்துப் போட்ட சாப்பாட்டில்
இலையோடு கொஞ்சம்
யுத்தமும் செய்தாயிற்று.

வியர்வையில் விளைந்த
கசங்கிய காகிதங்களை
சீட்டாட்ட களத்திலே
சீரழித்து முடித்தாயிற்று.

வளையல் கடையையே
விலைபேசிய வண்ணம்
வளையல்கள் வாங்கும்
யுவதிகளின் மேல் இடித்தாயிற்று.

கலைநிகழ்ச்சி காணவந்த
கயல்விழி கூட்டம் நோக்கி
கற்களையே பாணமாக்கி
கலவரமும் செய்தாயிற்று.

கூட்டம் நெருக்கியடித்த தேநீர்க்கடையில்
கொஞ்சம் சூடாய் நீர்க்குடித்து
கொடுக்காத பத்து ரூபாய் தாளை
கொடுத்ததாகச் சொல்லி
கெட்டிக்காரத்தனமாய்
சில்லறையும் சேர்த்தாயிற்று.

தள்ளுவண்டிகளில் விற்கப்படும்
இனிப்புகளை விலைகேட்டு
தரம் பார்த்த வகையிலே
குடலிலே கொஞ்சம் தள்ளியாயிற்று.

எல்லாவற்றுக்கும் மேலாய்
விடியும் பொழுது
சாம்பிராணி புகை கண்டதும்
அருள் வந்து கூத்தாடி
குறியும் சொல்லியாயிற்று.