காலை பத்துமணி அளவில் தோழர் பெ. மணியரசனை தஞ்சாவூரில் உள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அலுவலகத்தில் நேர்காணலின் பொருட்டு சந்தித்தோம். சிறிய எளிமையான அலுவலகம். அலுவலகத்தின் எதிரே மகிழுந்து செப்பனிடும் பட்டறைகள். கட்சியின் அலுவலக வெளிச்சுவரில் கட்சியின் பொதுக் கூட்டங்கள் குறித்த சுவரொட்டிகள். அலுவலகத்தின் உள்ளே ஒரு கூடம், அதை ஒட்டிய ஓர் அலுவலக அறை. கூடத்தில் பெரியமேசை, சுற்றிலும் நாற்காலிகள். மேசையின் மேல் சில நாளிதழ்கள். ஆறேழு கட்சித் தோழர்கள், பொறுப்பாளர்கள் நாளிதழ்கள் வாசித்துக் கொண்டும், தமக்குள் விவாதித்துக் கொண்டும் இருக்க, தோழர் பெ.ம. அலுவலத்திலிருந்த ஒரே அறையில் ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

மேசையின் மீது சிறிய அளவிலான லெனின் சிலை ஒன்று, ஒரு நாளிதழ், பேனாகூடு, அவரின் மூக்குக் கண்ணாடி, இரண்டு ராக்கைகளில் நிறையப் புத்தகங்கள், அலுவலகத்தைவிட எளிமையாக அவர். கதர்வேட்டி, கதர்சட்டை, கருமையான நிறம், சவரம் செய்யப்பட்ட மெல்லிய மீசை, புன்முறுவலுடன் எழுந்து நின்று ‘வணக்கம். வாங்க’ என்றார். அமர்ந்த பிறகு அமர்ந்தார். அந்தத் தமிழ்ப்பண்பு எமக்கு அவரின் செயல்பாடுகளின் மீதும், அவரின் இனவுணர்வின் மீதும் மிகுந்த நம்பிக்கையை ஊட்டுவதாக இருந்தது.

சந்திப்பு: பாண்டியன், பரிதி

பொதுவான உரையாடலுக்குப் பின்னர் நேர்காணலுக்கு ஆயத்தமானார். எங்களின் வினாக்களை அவர் பெரும்பாலும் புன்முறுவலுடன் எதிர்கொண்டு விடையளித்தார். சில நெருடலான வினாக்களின் மீது தமது ஆவேசத்தையும் தயக்கமின்றி வெளிப்படுத்தினார். எந்த வினாவிற்கும் யோசித்து யோசித்துப் பதிலளிக்காது உடனடியாக அவற்றை எதிர்கொண்டவிதம், அவரின் தமிழ்த் தேசம் குறித்த உறுதிப்பாட்டையும், எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காது தமது கொள்கையில் அவர் காட்டிவரும் உறுதியையும் எடுத்துக்காட்டுவதாக இருந்தது. ஒரு எளிமையான அதே சமயம் வலிமையான கொள்கையில் ஊன்றி நிற்கும் ஒரு அரசியல் தலைவனை அல்ல ஒரு தன்மானம் மிக்கப் போராளித் தமிழனை சந்தித்தோம் என்ற நிறைவு எமக்கு ஏற்பட்டது.

உங்களின் அரசியல் பிரவேசம் குறித்துக் கூறுங்கள்.

மாணவர் பருவத்திலிருந்தே என்னுள் தமிழ்உணர்வு மேலோங்கியிருந்தது. அன்றைய அரசியல் சூழலில் தமிழ்மொழி, இனம், எனப் பேசிக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின்பால் ஈர்க்கப்பட்டேன். தி.மு.க.வில் உறுப்பினராகவும் சேர்ந்து செயலாற்றிக் கொண்டிருந்தேன். தி.மு.க. தலைவர்களின் சொற்பொழிவுகளால் கவரப்பட்டு, அக்கட்சியினரால் அன்று நடத்தப்பட்ட பல ஏடுகளைப் படிக்கும் ஆர்வம் ஓங்கியிருந்த காலம் அது. எனது தமிழ் இலக்கிய ஆர்வத்திற்கு அவை ஓரளவுக்கு ஈடு கொடுத்தன. நூலகங்களும் எனது தமிழ் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்தன. தூய தமிழ்ச் சொற்களை நான் அறிமுகம் செய்து கொண்டது, பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’ இதழின் வாயிலாகத்தான். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நூலகங்களுக்கு ‘தென்மொழி’ போன்ற நல்ல தமிழ் ஏடுகள் வந்து கொண்டிருந்தன. என்போன்ற தமிழ் உணர்வாளர்கள் அவற்றை ஆவலுடன் படித்துப் பயன்பெற்றனர். ஆனால் தமிழ், தமிழ் என்று கூறி ஆட்சிக் கட்டிலில் ஏறினார்களே, அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் ‘‘தென்மொழி’’ போன்ற தூய தமிழ் ஏடுகள் நிறுத்தப்பட்டன.

எனது மாணவப் பருவத்தில் பாவாணர் அவர்களும், பெருஞ்சித்திரனார் அவர்களும் கலந்து கொண்ட ‘உலகத் தமிழ்க் கழக அமைப்பு’ மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அம்மாநாடு திருச்சி தேவர் மன்றத்தில் 1968ல் நடைபெற்றது. அம்மாநாட்டில் மாணவப் பிரதிநிதியாக எனக்குப் பேச வாய்ப்புக் கொடுத்தார்கள். சி. அறிவுறுவோன், மன்னர்மன்னன் போன்ற தோழர்களும் நானும் சேர்ந்து உலகத் தமிழ்க் கழகக் கிளையைத் திருக்காட்டுப் பள்ளியில் தொடங்கினோம். அக்கழகத்தின் மூலம் எனக்கு பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகிய தமிழ் அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அண்ணாவின் பேச்சு எழுத்து ஆகியவற்றின் மூலமே எனக்கு கம்யூனிசம் என்ற சொல்லும் காரல்மார்க்சு என்ற சொல்லும் அறிமுகமாயின.

இந்தியப் பிரதமர் நேரு “சனநாயக சோசலிசம்” என்று ஒரு கருத்தை வலியுறுத்திய காலம் அது. இதனை மறுத்த அண்ணா, “காகிதப் பூ மணக்காது, காங்கிரஸ் சோசலிசம் இனிக்காது’’ எனக் கிண்டலடித்தார். இதற்கு மாற்றாக, தி.மு.க. ‘விஞ்ஞான சோசலிசத்தை’ முன்வைக்கிறது என்று சொன்னார். எனக்குள் விஞ்ஞான சோசலிசம் பற்றிய தேடுதல் தீவிரப்பட்டது. காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் நூல்களை என்சிபிஎச் புத்தக நிலையத்தில் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன்.

1967ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்குக் கேட்டு நான் பணியாற்றினேன். 1969 பிப்ரவரியில் அண்ணா காலமானார். எனக்குப் பெரும் துயரம் ஏற்பட்டது. சென்னைக்குச் சென்று அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டேன்.

அவர் மறைவுக்குப் பிறகு அண்ணாவின் மீதிருந்த பக்தி மெல்ல மெல்ல குறைந்தது. தி.மு.க.வின் கொள்கைகள் சோசலிசத்தை நிறுவக்கூடியவை அல்ல என்ற புரிதல் வளர்ந்தது. அதே வேளையில் கண்ணதாசன் எழுதிய ‘வனவாசம்’ என்ற நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்கெனவே தி.மு.க.வின் மீதிருந்த எனது விலகல் மனநிலையை அந்நூல் அதிகப்படுத்தியது.

1964ஆம் ஆண்டிலிருந்து திருக்காட்டுப் பள்ளி அரசு நூலகத்தில் தென்மொழி படித்து வந்ததால் ஏற்பட்ட உணர்வுகளும், 1968லிருந்து உலகத் தமிழ்க் கழகத்துடன் ஏற்பட்ட தொடர்புகளும் தனித்தமிழ், தனித்தமிழ்நாடு என்ற கருத்துகளை என்னுள் வளர்த்திருந்தன. தமிழ்நாடு விடுதலை பெற்றபின் அது ஒரு சோசலிசத் தமிழ்நாடாக விளங்கவேண்டுமென்ற ஆர்வம் இப்போது எழுந்தது. அண்ணா குறிப்பிட்ட விஞ்ஞான சோசலிசத்தின் மூலவரான காரல் மார்க்சு பற்றியும் மார்க்சியம் பற்றியும் கூடுதலாக அறிய முனைந்தேன். கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டு மார்க்சிய நடைமுறைகளை புரட்சிகர செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

அப்போது மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோதி பாசு துணை முதலமைச்சராகவும், பங்களா காங்கிரசைச் சேர்ந்த அஜய் முகர்ஜி என்பவர் முதலமைச்சராகவும் ஆட்சி செய்தார்கள். உள்துறை அமைச்சராக ஜோதி பாசு இருந்தார். அவ்வாட்சியில் சிபிஎம் கட்சி பெரும் நிலக்கிழார்களிடமிருந்து உச்ச வரம்புக்கு மேலுள்ள நிலங்களை எடுத்து உழவர்களுக்குக் கொடுத்தது. நிலக்கிழார்களின் பினாமி நிலங்களை உழவர்கள் அடையாளம் காட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி நிலமற்ற உழவர்களுக்கு அந்தந்த இடத்திலேயே பட்டா கொடுக்கிறார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்தது.

அரிகிருஷ்ண கோனார் என்ற சிபிஎம் கட்சியின் வருவாய்த்துறை அமைச்சர் இதில் தீவிரமாகச் செயல்படுவதும் ஏடுகளில் வந்தது. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தும் கெரோ போராட்டத்தை (முற்றுகை) அந்த ஆட்சி ஆதரித்தது. போராடும் தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. துர்காபூரில் என்று நினைக்கிறேன், நடுவண் அரசுத் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை நோக்கி நடுவண் அரசின் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். ஒரு தொழிலாளர் இறந்து போனார். அவ்வாறு துப்பாக்கியால் சுட்ட நடுவண் காவல்துறை அதிகாரியை மேற்கு வங்க மாநிலக் காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்குப் போட்டனர்.

இவ்வாறான செயல்களால் அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் நடத்தியபோது மீண்டும் அந்தக் கூட்டணியே ஆட்சிக்கு வந்தது. ஒரு கட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் அஜய் முகர்ஜி சிபிஎம் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்டித்துத் தலைமைச் செயலகத்தின் முன் அவரே உண்ணாப் போராட்டம் நடத்தினார்.

இவ்வாறான செயல்களெல்லாம் சிபிஎம் கட்சியின் மீது எனக்கு ஈர்ப்பை உண்டாக்கின. அக்கட்சியில் சேர்ந்து கற்றுக் கொண்டு பிறகு தனித் தமிழ்நாட்டிற்கான இயக்கம் உருவாக்கலாம் என்று நினைத்து நானும் மற்றும் திருக்காட்டுப் பள்ளி உலகத் தமிழ்க் கழகத் தோழர்கள் சிலரும் சிபிஎம் கட்சியில் சேர்ந்தோம். கற்றுக் கொள்வதற்கு மட்டும்; என்று போன நான் அக்கட்சியின் நடைமுறை இயக்கங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு முழு மனதோடு அக்கட்சியில் ஐக்கியப்பட்டு அதில் செயல்பட்டேன். சற்றொப்ப 15 ஆண்டுகள் அக்கட்சியில் செயல்பட்டேன்.

லெனின், ஸ்டாலின் வகுத்துத் தந்த தேசிய இனப் பார்வையுடன் அக்கட்சி செயல்படவில்லை என்பதும், காஷ்மீர், பஞ்சாப் போன்ற இடங்களில் தேசிய இன உரிமைப் போராட்டங்கள் நடந்த போதெல்லாம் அவற்றை அக்கட்சி காங்கிரஸ் கட்சியைப் போலவே எதிர்த்ததும், அக்கட்சியின்பால் எனக்கிருந்த பற்றைக் குறைத்தது. ஈழத் தமிழர்கள் 1983 சூலையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது அக்கட்சி நடந்து கொண்ட முறையானது என் மனதில் அக்கட்சிக்கு எதிரான கொந்தளிப்பை உண்டாக்கியது. ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்கக் கூட அக்கட்சி மறுத்தது. தமிழ்ச் சமூகம் என்று மட்டுமே குறிப்பிடுவார்கள். அத்துடன் தேர்தலுக்குத் தேர்தல் தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து ஒரு தேர்தல் கட்சியாகவே அது சீரழிந்து போனது எனக்குள் மனப்புழுக்கத்தை உண்டாக்கியது. இட ஒதுக்கீடு கோரிக்கைக்கான போராட்டங்களையும் அக்கட்சி எதிர்த்து வந்தது.

நான் சீர்திருத்தத் திருமணங்களில் உரையாற்றும்போது, பிராமணியம் குறித்துப் பேசுவேன். அக்கட்சித் தலைவர்கள் அதைக் கண்டித்தார்கள். ஒரு திருமண விழாவில் தோழர் வி.பி.சிந்தன் வாழ்த்துரை வழங்கிய போது இராசராசசோழனை மிகவும் கொச்சையாகப் பேசினார். திருமணம் முடிந்து திரும்பி வரும்போது ஒரு திறனாய்வு என்ற அடிப்படையில் இராசராசசோழனின் நிறைகுறைகளை நீங்கள் பேசலாம். ஆனால் ஒரு திருமண விழாவில் மக்களிடம் பெரு மதிப்புப் பெற்றுள்ள தமிழ் மன்னன் இராசராசன் குறித்து முற்றிலும் எதிர்மறையாகப் பேசியது சரியில்லை என்று சுட்டிக் காட்டினேன்.

அவர் கட்சியின் மாநிலத் தலைமை யிடம் இது குறித்து சொல்லி மணியரசன் பழமைவாதத்தில் இருக்கிறார். மன்னர் களுக்கும் முற்போக்குப் பாத்திரம் உண்டு என்று சொல்கிறார் என்று கூறியிருக்கிறார். கட்சியின் மாநிலத் தலைமையிலிருந்து என்னிடம் பிராமணியம் குறித்தும் இராசராசசோழன் குறித்தும் என் கருத்துகளை எழுதித் தருமாறு கேட்டார்கள். நான் எழுதி அனுப்பினேன்.

வர்ணாசிரம தர்மம், சாதி ஆகியவற்றின் தத்துவ ஆசானாக பிராமணியம் இருப்பது குறித்து எழுதியிருந்தேன். இரசியப் பேரரசன் மகா பீட்டரை லெனின் பாராட்டியதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். மகா பீட்டர் சில முற்போக்கு நடவடிக்கைகளை எடுத்ததற்காக அவரை லெனின் பாராட்டி எழுதியிருந்தார்.

மாநிலத் தலைமையிலிருந்து தோழர்கள் சங்கரய்யா, பி.ஆர்.பரமேசுவரன், பி.இராமச்சந்திரன், போன்றோர் ஒரு குழுவாக வந்து நான் உறுப்பு வகித்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டச் செயற்குழுவில் என்னுடைய கடிதங்கள் பற்றி விவாதித்தார்கள். என்னுடைய பதிலுக்குப் பிறகு, ‘பிராமணியம் என்பது இந்தியாவில் இல்லை என்று கட்சி முடிவு செய்கிறது. இராசராசன் குறித்த கருத்துகளைப் பரிசீலிக்கலாம்’ என்று “தீர்ப்பு’’ச் சொன்னார்கள்.

குறுக்கீடு: ..அறவாணன் போன்ற அறிஞர்கள் இராசராசசோழன் காலத்தில் சாதி, மத பேதம் இருந்ததாகவும், ஆண்டான் - அடிமை முறை இருந்ததாகவும், செய்த வேலைக்குக் கூட சரியான கூலி கொடுக்காமல் கசையடி வழங்கியதாகவும் குறிப்பிட்டிருக்கிற நிலையில் பொதுவுடைமை என்ற பெயரில் கட்சியை நடத்தும் நீங்கள் அப்படிப்பட்ட மன்னர்களைத் தூக்கிப் பிடிப்பது சரிதானா?

இராசராசன் காலம் என்பது மன்னராட்சிக் காலம். அதாவது சனநாயகமோ, நாடாளுமன்ற முறையோ இல்லாத காலம். உலகெங்கும் அதுதான் நிலவியது. அப்படிப்பட்ட எதேச்சாதிகாரக் காலத்தில் ஒரு மன்னன் எந்த அளவு மக்களை மதித்தான், மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கி ஆட்சி செய்தான் என்பதைப் பார்க்க வேண்டும். சனநாயகத்தின் முதல்நிலை வடிவமாக ஒரு வகை உள்ளாட்சி முறை இராசராசன் காலத்தில் செயல்படுத்தப்பட்டது. தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டான். ஏற்கெனவே களப்பிரர், பல்லவர் ஆட்சியில் மேலாதிக்கம் பெற்று கொடிகட்டி ஆண்ட பிராமண ஆதிக்கத்தை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தினான். நீர்ப்பாசன முறையை மேம்படுத்தினான். தமிழர் கட்டடக் கலையின் சிகரமாக தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பச் செய்தான். தேவாரச் சுவடிகளை மீட்டான். கோயில்களில் தேவார ஓதுவார்களை அமர்த்தினான். இவை போன்ற நற் செயல்களுக்காக இராசராசனை நாம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். மற்றபடி மன்னராட்சியின் இயல்பானதாகவும் முன் தொடர்ச்சி காரணமாகவும் தொடர்ந்து வந்த கெடுதல்கள் பலவும் இராசராசன் ஆட்சியிலும் இருந்திருக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோசலிசம் வரவில்லையே என்று நாம் விமர்சிக்க முடியாது. நிலவுகின்ற சமூக அமைப்பை ஒரு அங்குலம் முன்னேற்ற ஒருவர் செயல்புரிந்தால் அதை நாம் முற்போக்கு என்று ஏற்க வேண்டும். வர்க்கப் போராட்டம் என்ற கருத்தியலை வறட்டுத் தனமாகப் பயன்படுத்தித் தமிழ் மரபுகளை முற்றிலுமாக மறுப்பது மார்க்சியம் அன்று; மார்க்சியத்தைக் கொச்சையாகப் புரிந்து கொண்ட திரிபுவாதம் ஆகும்.

சாதி, மத பேதம் இப்பொழுதும் கோலோச்சுகிறது. இந்துத்துவாவுக்கும் வர்ணாசிரம தர்மத்துக்கும் ஆதரவாக இப்பொழுது அரசமைப்புச் சட்டம் இருக்கிறது என்பதையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கின்றன என்பதையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இராசராசன் வர்ணாசிரமத் தர்மத்தை ஏன் ஒழிக்கவில்லை என்று கேட்பது இராசராசன் ஏன் பெரியாரிஸ்ட் ஆக இல்லை, கம்யூனிஸ்ட்டாக இல்லை என்று கேட்பது போல் உள்ளது. இன்னும் ஆயிரம் ஆண்டு கழித்து இப்போது நாம் கூறும் முற்போக்குக் கருத்துகள் எவ்வாறு மதிப்பிடப்படும் என்பது நமக்குத் தெரியாது.

தனிக்கட்சி அமைக்கும் நிலைக்கு நீங்களாக முன்வந்தீர்களா? சிபிஎம் கட்சி உங்களை அதை நோக்கித் தள்ளிவிட்டதா?

இருபோக்கும் ஒரே நேரத்தில் நடந்தது என்று சொல்லலாம். நான் ஏற்கெனவே குறிப்பிட்ட படி சிபிஎம் கட்சி மார்க்சிய லெனினிய அணுகுமுறைப்படி தமிழ்த் தேசிய இன உரிமைகளை வலியுறுத்தவில்லை. சாரத்தில் அது ஒரு தேர்தல் கட்சிதானே தவிர புரட்சிக் கட்சியல்ல என்ற முடிவுக்கு வந்தபின் தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்ட நானும் தோழர் கி.வெங்கட்ராமனும் சிபிஎம்-மை விட்டு வெளியேறி தமிழக அளவில் ஒரு புதிய புரட்சிகர அமைப்பைத் தொடங்குவது என்ற முடிவுக்கு வந்தோம். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலுள்ள தோழர்கள் சிலருடன் இது குறித்து விவாதித்தோம். 1985 சூன் 11, 12 ஆகிய இருநாள்கள் கல்லணையில் ஒத்த கருத்துள்ள நாங்கள் சிலர் இரகசியமாகச் சந்தித்துப் பேசினோம். தோழர்கள் தணிகைச்செல்வன், இராசேந்திரச்சோழன், தஞ்சை க. பழனிமாணிக்கம், த.கா. பரமசிவம், மா.கோ. தேவராசன் (சிதம்பரம்), புலவர் கி.த. பச்சையப்பன் உள்ளிட்ட இன்னும் சிலர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நான் எழுதிய “இந்தியாவில் தேசிய இனங்கள்” என்ற தலைப்பிலான கட்டுரையை ஓர் ஆவணமாக வைத்து 11.06.1985 அன்று விவாதித்தோம். 12.6.1985 அன்று ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஓம்கார் எங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் சிபிஎம் கட்சியிலிருந்து வெளியேறி அங்கு தனிக்கட்சி நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய கருத்துகளை அறிந்து கொள்வதற்காக அவரை அழைத்திருந்தோம்.

இவ்விருநாள்களும் விவாதித்த கருத்துகளின் அடிப்படையில் அப்பொழுது சேலத்தில் நடக்க இருந்த சிபிஎம் கட்சியின் மாநில மாநாட்டில் விவாதிப்பது என்றும் அது தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் அம்மாநாட்டிலிருந்தே வெளியேறி தனிக் கட்சி தொடங்குவது என்றும் முடிவு செய்தோம்.

கல்லணையில் நாங்கள் நடத்திய இரகசியக் கூட்டம் கட்சித் தலைமைக்குத் தெரிந்து எங்களை விசாரித்தார்கள். கூட்டம் நடத்தியதை நாங்கள் ஏற்றுக் கொண்டு கட்சியைத் திருத்தும் ஒரு முயற்சிதான் என்று வாதிட்டோம். எங்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள். நாங்களும் வெளியேறித் தனிக்கட்சி தொடங்க முயற்சிகள் எடுத்தோம். 1985 சூன் 29,30 ஆகிய நாள்களில் சிதம்பரத்தில் கூடி எம்சிபி (மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி) என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினோம். அதன் அமைப்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டேன்.

சிபிஎம் தலைமையிலிருந்து வெளியேறி எம்சிபிஐ என்ற பெயரில் பீகாரைச் சேர்ந்த தோழர் ஸ்ரீவஸ்த்தவா தலைமையில் ஓர் இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சில மாதங்கள் கழித்து அவர்களோடு இணைந்தோம். அவர்களும் சிபிஎம் கட்சியின் மறு பதிப்பாகவே விளங்கினார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தார்கள். தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை ஏற்க மறுத்தார்கள். 1990இல் எம்சிபிஐ லிருந்து வெளியேற முடிவு செய்தோம். அதன் தொடக்கமாக 1990 பிப்ரவரி 25 அன்று சென்னையில் பெரியார் திடலில் “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு” நடத்தினோம். கட்சியின் மாநாடாக இல்லாமல் அதைப் பொதுநிலையில் நடத்தினோம். பேராசிரியர் சுப.வீர. பாண்டியன் அம்மாநாட்டிற்குப் பெருந்தொண்டாற்றினார்.

நீங்கள் எம்சிபிஐலிருந்து விலக முடிவெடுத்ததற்கும் இம்மாநாடு நடத்தியதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

இந்திய தேசியத்தை முற்றிலுமாக மறுத்து தமிழ்த் தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது என்ற எங்கள் அமைப்பின் வெளிப்பாடாக இம்மாநாடு அமைந்தது. இதில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with the right to setede) தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்றும் தமிழ்நாட்டை மாநிலம் என்று அழைக்காமல் தமிழ்த் தேசம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவைத் தேசம் என்று அழைக்காமல் ஒன்றியம் என்று அழைக்க வேண்டும் என்றும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசக் குடியரசு நிறுவப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் மாநாட்டுத் தீர்மானத்தை நான் முன்மொழிந்தேன். ஒரு மனதாக அது ஏற்கப்பட்டது.

இம்மாநாடு எம்சிபிஐ தலைமைக்கு எட்டியதோ இல்லையோ தமிழ்நாட்டில் பல அதிர்வுகளை உண்டாக்கியது. ‘இலக்கு பிரிவினை, வழி வன்முறை’ என்ற தலைப்பில் துக்ளக் ஏடு மூன்று பக்கங்களுக்கு மேல் கட்டுரை எழுதி தி.மு.க. ஆட்சி இம்மாநாட்டிற்கு அனுமதி வழங்கியதன் மூலம் மறைமுகமாகப் பிரிவினையைத் தூண்டியுள்ளது என்று குறிப்பிட்டது.

அம்மாநாட்டில் கலந்து கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார், சாலை இளந்திரையனார், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் இன்குலாப் ஆகியோரின் பேச்சுகளையும் எனது தலைமை உரையையும் சிற்சில பகுதிகள் அவ்விதழில் வெளியிட்டிருந்தது. அப்பொழுது சட்டப்பேரவைத் தலைவராக இருந்த தமிழ்க்குடிமகன் மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதைச் சுட்டிக் காட்டி இம்மாநாட்டுக்குத் தி.மு.க.வின் ஆதரவு இருந்தது என்று துக்ளக் ஏடு சான்று கூறியிருந்தது. உண்மையில் தி.மு.க.வுக்கும் நாங்கள் நடத்திய மாநாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இம்மாநாட்டில் அப்பொழுது தூர்தர்சன் செய்தி வாசிப்பாளராக இருந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதை படித்தார். மாநாடு நடந்த காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து போவதற்காக அஜர்பைஜான் குடியரசு போராடிக் கொண்டிருந்தது. தமது கவிதையில் அதைச் சுட்டிக் காட்டிய தமிழன்பன் தமிழர்களுக்கு உரிமை வழங்கவில்லை என்றால் ‘அஜர்பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்’ என்று கூறி கவிதையை முடித்தார். இச்சொற்றொடரை எடுத்துப் போட்டு துக்ளக் சாடியது. தூர்தர்சன் செய்தி வாசிப்பிலிருந்து பின்னர் ஈரோடு தமிழன்பன் நீக்கப்பட்டார்.

அம்மாநாட்டில் கவிதை பாடிய கவிஞர் அறிவுமதியின் கவிதையின் ஒரு பகுதியைத் துக்ளக் எடுத்துப் போட்டு நடவடிக்கை கோரி அடையாளம் காட்டியது. அந்தப் பகுதி இதுதான் :

1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில்

நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம்.

விடிந்து பார்க்கும்பொழுது

எங்கள் கோவணங்களைக் காணவில்லை.

எங்கள் மேலே ஒரு போர்வை போர்த்தியிருந்தார்கள்

அது இந்திய தேசியம் என்றார்கள்.

கோவணங்கள் எங்கே என்று கேட்டோம்?

அதுதான் தேசியக் கொடியாய்ப் பறக்கிறது என்றார்கள்.

தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம்

விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம்.

வாருங்கள் அந்தக் கொடியை இறக்கிக் கிழித்து

அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்.

இந்தக் கவிதைக்காக அரசுக் கொடி அவமதிப்பு வழக்குப் போடப்பட்டு அறிவுமதி 8 ஆண்டுகள் எழும்பூர் நீதி மன்றத்துக்கு அலைந்தார். கடைசியில் வழக்கு விடுதலையானது.

பிரிவினை மாநாட்டை தி.மு.க. ஆதரித்தது என்றும் அதன் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது பா.ச.க. அனைத்திந்தியத் தலைவராக இருந்த முரளிமனோகர் ஜோசி செய்தியாளர் களிடம் கூறியிருந்தார். சிபிஎம் கட்சி, பிரிவினைவாத மாநாட்டை தி.மு.க. ஆதரித்தது மட்டுமல்ல, ‘கொடுமை என்னவென்றால் அம்மாநாட்டிற்கு சபாநாயகரே வாழ்த்துச்செய்தி அனுப்பினார்’ என்று தீர்மானம் நிறைவேற்றிக் கண்டனப் பரப்புரை செய்தது.

மேலே சொன்ன தீர்மானத்தை முன்மொழிந்ததற்காக என்னை 1990 திசம்பர் 25ஆம் நாள் சிதம்பரத்தில் வைத்துத் தளைப்படுத்திச் சென்னை நடுவண் சிறையில் அடைத்தார்கள். பின்னர் பிணையில் வெளிவந்தேன். 8 ஆண்டுகள் வழக்கு நடந்தது. வழக்கறிஞர் சி.விசயகுமார், தஞ்சை அ. இராமமூர்த்தி ஆகியோர் கட்டணமின்றி வழக்கு நடத்தினார்கள். தீர்மானம் நிறைவேற்றியதை நாங்கள் மறுக்கவில்லை. அது சனநாயக உரிமை என்ற கோணத்தில் வழக்கறிஞர்கள் வாதிட்டார்கள். இறுதியில் வழக்கு விடுதலையானது.

அப்போதிருந்து தமிழ்த் தேசியத்தை மேலும் மேலும் கூர்மைப்படுத்தி வளர்த்து வருவதுடன் தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதற்கான போராட்டத்தையும் கூர்மைப்படுத்தி வருகிறோம். அம்மாநாட்டிற்குப் பிறகு எம்சிபிஐ உறவைத் துண்டித்துக் கொண்டோம். கட்சியின் பெயரை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்று 1991ல் மாற்றினோம்.

திராவிட நாடு கோரிக்கைக்கும், தமிழ்த் தேசியம் என்று நீங்கள் கூறுவதற்கும் ஒன்றும் வேறுபாடு தெரியவில்லையே?

திராவிட நாடு கோரிக்கைக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப்போனால் இணைய முடியாத முரண்பாடுகள்தான் இரண்டிற்கும் இடையே நிலவுகின்றன. திராவிடம் என்ற பெயரில் சமூக அறிவியல் வரையறுப்பின்படி ஒரு மரபு இனமோ அல்லது ஒரு தேசிய இனமோ இல்லை. திராவிடம் என்ற பெயரில் ஒரு மொழியும் இல்லை. சிந்துச் சமவெளிக் காலத்தில் அங்கு நுழைந்த ஆரியர்கள் தமிழர்களுக்கு இட்ட திரிபான பெயரே திராவிடம் என்பது. தமிழர் என்பதை உச்சரிக்கத் தெரியாமல் ‘த்ரமிள’ என்றும் ‘திராவிட’ என்றும் அயல் இனத்தவரான ஆரியர்கள் உச்சரித்தனர். தமிழர்கள் தங்களை ஒரு போதும் திராவிடர் என்று சொல்லிக் கொண்டதில்லை. சங்க இலக்கியங்களிலோ, காப்பிய இலக்கியங்களிலோ, பக்திக் கால இலக்கியங்களிலோ, சித்தர் இலக்கியங்களிலோ தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று கூறிக் கொண்டதே இல்லை. அதே போல் இங்குள்ள திராவிட இயக்கங்கள் தவறாகச் சொல்லுகின்ற திராவிடர் என்ற இனப்பெயரைத் தெலுங்கர்களோ, கன்னடர்களோ, மலையாளிகளோ தங்களுக்குச் சூட்டிக் கொள்ளவும் இல்லை. நாங்கள் கூறும் தமிழ்த் தேசியம் இட்டுக் கட்டப்பட்ட இந்தியத் தேசியத்தை மறுப்பதைப் போலவே திரிபுவாதிகள் கூறும் திராவிட தேசியத்தையும் எதிர்க்கிறது.

திராவிடம், திராவிடர் என்ற கருத்தியல்தானே தமிழ்நாட்டில் இன்றும் பெரும் செல்வாக்குடன் இருக்கிறது? ஏன் தமிழ்த் தேசியத்திற்கு அந்த அளவுக்குச் செல்வாக்கு இல்லை?

அசல் வெள்ளியை வெள்ளி என்கிறோம். வெள்ளி போல் தோற்றம் தரும் இரும்பை “எப்பொழுதும் வெள்ளி” (எவர்சில்வர்) என்கிறோம். போலிக்குத் தனிக் கவர்ச்சி உண்டு. தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பெயரில் இயக்கம் நடத்தியவர்கள் ஆரியத்திற்கு எதிராகவும் வர்ணாசிரம தர்மத்திற்கு எதிராகவும்; போராட்டங்கள் நடத்தியதால், கருத்துகள் வழங்கியதால் தமிழர்கள் அதில் முகாமையான கவனத்தைக் குவித்து தங்களின் அசலான இனப் பெயர் மறைக்கப்படுவது பற்றிப் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

தமிழ்த் தேசியம் என்பதும் இப்பொழுதுதான் முன்னுக்குப் பின் முரணில்லாமல் சமூக அறிவியல் வரையறுப்பின்படி வடிக்கப்பட்டுள்ளது. எமது தேசிய மொழி தமிழ், எமது தேசிய இனம் தமிழர், எமது தேசம் தமிழ்த் தேசம், இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு என்பதே தமிழ்த் தேசியம் ஆகும் என்று த.தே.பொ.க வரையறுத்துள்ளது. இதில் ஒன்று குறைந்தாலும் அது தமிழ்த் தேசியம் ஆகாது. இந்த அடிப்படையில் கருத்தியல்களும் களப் போராட்டங்களும் வளரவளரத் தமிழ்த் தேசியமும் வளரும்.

தமிழ் உணர்வு கொண்ட பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவதற்கான மையப் புள்ளி எதுவும் இல்லாதபோது, உங்களின் தனித்த குரல் என்ன சாதிக்க முடியும்?

வெறும் தமிழ் உணர்வு மட்டும் போதாது. இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்டோ அல்லது திராவிடத் தேசியத்தை ஏற்றுக் கொண்டோ ஓர் அமைப்பு தமிழ்த் தேசிய அமைப்பாக இருக்க முடியாது. பொத்தாம் பொதுவாகத் தமிழின் பெருமை, தமிழனின் பெருமை போன்றவற்றைப் பேசுவதும், சில்லறை உரிமைகள் சிலவற்றைக் கோருவதும் தமிழ்த் தேசியமாகாது. நான் மேலே சொன்ன வரையறுப்பின்படி உள்ளதுதான் தமிழ்த் தேசியம்.

தமிழ்த் தேசியத்தின் சாரம் தமிழ்நாடு விடுதலை ஆகும். இந்த அடிப்படையில் செயல்படுபவைதாம் தமிழ்த் தேசிய அமைப்புகளாகக் கருதத்தக்கவை.

இந்த வரையறுப்புகள் கொண்ட மற்ற அமைப்புகள் இருக்கின்றனவா இல்லையா?

சிற்சில கூறுகளில் வேறுபட்டாலும் இந்த வரையறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய சில தமிழ்த் தேசிய அமைப்புகள் இருக்கின்றன.

அவற்றுடன் ஒற்றுமை காண உங்களின் முயற்சி என்ன?

எங்களது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஏற்கெனவே மூன்று வகையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகளில் பங்கு வகித்திருக்கிறது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தில் முறிந்து போயின. அந்தப் பட்டறிவுகளைக் கணக்கில் கொண்டு கருத்தியல் மற்றும் களப் போராட்டம் ஆகியவற்றில் உடன்பாடு உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகள் காலப் போக்கில் கூட்டாகச் செயல்படுவதைத் த.தே.பொ.க. வரவேற்கிறது.

தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலின் மீது தலித்துகள் அச்சம் கொண்டுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?

தலித் மக்களிடையே இப்படி ஓர் அச்சம் இருப்பதாகக் கூறுவது சரியன்று. எங்கள் அமைப்பிலும் வேறு சில அமைப்புகளிலும் உறுப்பினர்களாகவும், உயர் பொறுப்பாளர்களாகவும் ஒடுக்கப்பட்ட வகுப்புகளில் பிறந்த தோழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

தலித்தியம் என்று ஒரு தத்துவத்தை உருவாக்க முயலும் உதிரியாக உள்ள தனிநபர்கள்தான் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கருத்துகளைக் கிளப்பி விடுகிறார்கள். அவர்கள்தான் தமிழ்த் தேசியத்தை அவ்வப்போது கொச்சைப்படுத்துகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், தாங்கள் தமிழர்கள்தான் என்று இன உணர்வு பெற்றுவிடக் கூடாது என்பது தலித்தியம் பேசும் உதிரித் திரிபுவாதிகளின் நோக்கமாக உள்ளது. அவர்கள் தமிழ்த் தேசியத்தைக் கண்டு பீதியடைகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை என்பது தமிழக விடுதலையோடு ஒன்றிணைந்த ஒன்றாகும். வர்ண சாதி ஆதிக்கத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பார்ப்பனியத்தின் கொலுபீடம் தில்லி. இந்தியத் தேசியம் பேசக் கூடிய ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனியத்தில் கால் பதித்திருக்கிறார். இந்தியத் தேசியத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசியம் பார்ப்பனியத்தையும் வர்ணசாதியையும் எதிர்க்கிறது. தமிழர் அறம் என்பது பிறப்பொக்கும் அனைத்து உயிரும் சமம் என்பதாகும். தமிழர்களிடையே பிற்காலத்தில் புகுந்த வர்ணசாதி ஆதிக்கம், தீண்டாமை போன்ற கொடுமைகளைத் தமிழ்த் தேசிய எழுச்சி எரித்து விடும்.

தீண்டாமை மற்றும் சாதி ஒடுக்குமுறை போன்றவற்றிற்கு எதிராக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி செயல் பட்டிருக்கிறதா?

தீண்டாமைக் குற்றங்கள் நடந்த இடங்களில் த.தே.பொ.க. தலையிட்டுப் போராட்டம் நடத்தி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய வைத்த நிகழ்வுகள் உள்ளன. சாதி ஆதிக்கத்திற்கு எதிராக எங்கள் அமைப்பு உள்ள கிராமங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டையும் அங்கே பள்ளப்பச்சேரியில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவன் பன்னீர்ச் செல்வம் சாதி வெறியர்களால் கொலை செய்யப் பட்டதையும் கண்டித்து இயக்கம் நடத்தியுள்ளோம். துப்பாக்கிச் சூட்டினால் பலியான ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளுக்கும் பன்னீர்ச் செல்வம் வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறினோம். சாதி ஒடுக்குமுறையை எதிர்த்துத் தொடர்ந்து போராடுவோம். தமிழர் ஒற்றுமை என்ற பெயரில் சாதி ஒடுக்குமுறையைக் கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டோம். சாதி ஒடுக்குமுறை நீங்கும்போதுதான் உண்மையான தமிழர் ஒற்றுமை ஏற்படும் என்பது எங்கள் கொள்கை.

1997 பிப்ரவரி 22 அன்று திருத்துறைப் பூண்டியில் த.தே.பொ.க. நடத்திய “தீண்டாமை ஒழிப்பு தமிழர் ஒற்றுமை” மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் போட்டோம்:

1.     சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருந்தால் அவருக்கு அரசு கட்டாயம் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

2.     சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

3.     தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு நோக்கிலான பாடங்களைப் பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் சேர்க்க வேண்டும்.

4.     அரசு அறிவிப்புகளைப் பறையடித்து (டாம் டாம் போட்டு) அறிவிக்கும் முறையைத் தடை செய்ய வேண்டும்.

5.     சுடுகாட்டுப் பராமரிப்பு, செத்த கால்நடைகளை அப்புறப்படுத்துதல் போன்ற வேலைகளுக்கு இடஒதுக்கீட்டு அடிப்படையில் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஊராட்சிக்குக் குறைந்தது இருவர் என்ற அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்களை அமர்த்த வேண்டும்.

இவ்வாறு 20 தீர்மானங்களை நிறைவேற்றினோம். இத்தீர்மானங்களைச் செயல்படுத்த வலியுறுத்தி பரப்புரை இயக்கமும் நடத்தினோம். சமத்துவத்திற்கான ஓர் உளவியலையும் தமிழ்த் தேசியம் அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய தமிழ்த் தேசத்தையும், வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழினத்தையும் அவர்களிடமிருந்து பிரித்து, அம்மக்களை அடித்தளமற்ற உதிரிகளாக மாற்றத்தான் இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் தலித்தியம் பயன்படும்.

தமிழ் மண் எம் மண், எமது தேசம், யாம் ஆளப்பிறந்தவர்கள் என்ற உளவியல் உரத்தை ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஊட்டுவது தமிழ்த் தேசியமே.

இந்தியர் இந்தியாவெங்கும் பணிபுரியலாம், தொழில் தொடங்கலாம் என்றிருக்கும்போது அயல் மாநிலத்தவர் என இந்தியரைப் பிரித்துப் பார்ப்பதும் வெளி மாநிலத்தவர் வெளியேற வேண்டும் என்பதும் ஏற்க முடியாததாக இருக்கிறதே! நீங்கள் எழுப்பும் வெளி மாநிலத்தவர் பிரச்சினையால் வெளி மாநிலங்களில் வேலை செய்யும் தமிழர்கள் தாக்கப்படலாம் அல்லவா?

மொழிவழி மாநிலம் அமைக்கப் பட்டதன் கோட்பாடு என்ன? ஒரு மொழிவழித் தேசிய இன மக்களுக்கு உரிய தாயகம் என்ற நோக்கத்தில்தான் மொழிவழி மாநிலம் கோரி போராட்டங்கள் நடந்தன. அதன் பின் இந்திய அரசு மொழிவழி மாநிலங்களை அமைத்தது. தமிழ்நாடு தமிழர்களுக்குரிய தாயகம். இதில் வரம்பின்றி, வரைமுறையின்றி அயல் இனத்தவர் அயல் மாநிலங்களிலிருந்து வந்து குடியேறுவது மண்ணின் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலாகும். பத்து விழுக்காட்டிற்கு அதிகப்படாமல் வேற்றினத்தவர் இருக்கலாம். அதற்கும் அதிகமாக வேற்றினத்தவர் இருந்தால் அங்கு மண்ணின் மக்களுக்கு தொழில், வணிகம், வேலை, உள்ளிட்டவற்றில் பாதிப்புகளும் பண்பாட்டுச் சீர்கேடுகளும் இன அடையாள அழிப்புகளும் நடந்தே தீரும். எனவேதான், 1956 நவம்பர் 1ல் மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டபின் தமிழ்நாட்டில் குடியேறிய வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகிறது.

நாம் தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக இக்கோரிக்கையை வைக்கிறோம். ஆனால் 1970களின் தொடக்கத்தில் மராட்டிய மாநிலத்திலிருந்து தமிழர்களை வெளியேறும்படி வலியுறுத்தி சிவசேனை அமைப்பினர் தாக்கினர். 1991 நவம்பர், திசம்பர் மாதங்களில் கர்நாடகத்தில் ‘காவிரிக் கலகம்’ என்ற பெயரில் காலங்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களைத் தாக்கிப் பலரைக் கொலை செய்தனர். தமிழர்களின் வீடுகளைச் சூறையாடி, வணிக நிறுவனங்களை எரித்து,; ஆளுங்கட்சியின் துணையோடு இனவெறி கன்னடர்கள் அட்டூழியம் புரிந்தனர். கர்நாடகத்திலிருந்து இரண்டு இலட்சம் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்திற்கு ஓடி வந்தனர்.

கன்னடரான தேவகவுடா பிரதமராக இருந்தபொழுது 19 தமிழகத் தமிழர்கள் நடுவண் அரசின் தேர்வாணையத்தில் தேர்ச்சி பெற்று, கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் வேலை வழங்கப்பட்டு, பணியில் சேர பெங்களூர் போயினர். அப்போது அவ் அலுவலகத்தில் பணிபுரிந்த கன்னட ஊழியர்கள், தமிழர்களுக்கு இங்கு வேலை தரக்கூடாது என்று தடுத்தனர். கடைசிவரை பெங்களூரில் அத்தமிழர் களுக்கு வேலை கொடுக்கப்படவில்லை. வேறு இடங்களில்தான் கொடுக்கப்பட்டது.

கடந்த 2011 திசம்பர் மாதம் கேரளத்தில் அப்பாவித் தமிழர்களை மலையாள இனவெறியர்கள் தாக்கினர். ஐயப்பன் கோயிலுக்குப்போன தமிழக பக்தர்களைத் தாக்கினர். தேனி மாவட்டத்திலிருந்து கேரள எல்லைக்குள் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற தமிழ்ப் பெண்களை சிறைப்பிடித்து, மானபங்கப்படுத்தினர். இடுக்கி மாவட்டத்தில் காலங்காலமாக வாழும் தமிழர்கள், மலையாள இனவெறியினரால் தாக்கப்பட்டதால் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தனர். அதற்கு எதிர்வினையாகத் தமிழ்நாட்டில் மலையாள நிறுவனங்களை மூடச் சொல்லி த.தே.பொ.க.வும் மற்றும் பல அமைப்புகளும், இன உணர்வாளர்களும் பதிலடிப் போராட்டம் நடத்திய பின்தான் கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

இவ்வாறு மற்ற மாநிலத்தவர்கள்தான் தமிழர்களைத் தாக்குவதும், வெளியேற்றுவதும் என்ற திருப்பணியை 1970களிலிருந்து செயல்படுத்தி வருகின்றனர். அம்மாநிலங்களில் உள்ள கட்சிகள் பெரும்பாலும் அனைத்திந்தியக் கட்சிகள். இந்தியத் தேசியம் பேசும் கட்சிகள். மாநிலக் கட்சியாக இருந்தாலும் சிவசேனை இந்துத்துவாவும் இந்தியத் தேசியமும் பேசும் கட்சி. தமிழர்கள் வெளிமாநிலங்களில் பாதுகாப்பாக இருப்பதைப் போலவும், நாங்கள் வெளியாரை வெளியேற்றும் கோரிக்கை வைப்பதால்தான் அவர்களுக்கு ஆபத்து புதிதாக வரப்போவது போலவும் கருதக் கூடாது.

தமிழர்கள் மராட்டியம்;, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்குத் தமிழர்கள் உழைப்பாளிகளாகத் தேவைப்படுகிறார்கள். அடிப்படை உழைப்பாளிகளாக உள்ளவர்கள்தான் தமிழர்கள். தமிழ்நாட்டைக் கொள்ளையடித்துத் தமிழகத் தொழில், வணிகம், ஆகியவற்றில் ஆதிக்கம் புரிந்து அத்துறைகளில் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றியுள்ளனர் மார்வாடி-குசராத்தி சேட்டுகளும், மலையாளிகளும். அப்படிப்பட்ட ஆதிக்கம் செலுத்திப் பொருளாதாரத்தைக் கொள்ளையிடும் பெரும்புள்ளிகளாகத் தமிழர்கள் வெளிமாநிலங்களில் இல்லை. கேரளாவில் நாற்றுநடும் பெண்களும், ஏர்உழும் ஆண்களும் தென்னை ஏறி தேங்காய் பறிக்கும் ஆண்களும் தமிழர்களே. தமிழ்நாட்டில் நாற்று நடும் மலையாளிப் பெண்ணைப் பார்த்ததுண்டா?, ஏர் உழும் மலையாளியைப் பார்த்ததுண்டா? தென்னை ஏறி தேங்காய் பறிக்கும் மலையாளியைக் கண்டதுண்டா? எனவே தமிழர்களின் உழைப்பு கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குத் தேவைப்படுகிறது.

ஒரு வேளை நாம் தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலத்தவரை வெளியேற்றும்போது வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்களை அவர்கள் வெளியேற்றினால் இங்கு வெளிமாநிலத்தவர் விட்டுச் செல்லும் வேலைகளையும், தொழில் மற்றும் வணிகங்களையும் வெளியிலிருந்து வரும் தமிழர்களுக்கு நாம் வழங்கலாம்.

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களான பிஎச்இஎல், பெட்ரோலியம் (நரிமணம்), நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம், வருமான வரித்துறை, சுங்க வரித்துறை, தொடர் வண்டித் துறை, படைத்துறைத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் அயல் மாநிலத்தவரே அதிக எண்ணிக்கையில் வேலை பார்க்கிறார்கள். மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு அவ்வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. எனவே தமிழர் வாழ்வுரிமையை நிலைநாட்ட வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தை த.தே.பொ.க. நடத்துகிறது.

அண்மைக் காலமாக கொள்ளை, கொலை போன்ற தீச்செயல்களில் வெளிமாநிலத்தவரே அதிகமாக ஈடுபடுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அயல் இனத்தார் மிகை எண்ணிக்கையில் ஓர் இனத்தின் தாயகத்திற்குள் புகும்போது பல்வேறு பண்பியல் சீர்கேடுகளும் உருவாகும்.

வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தின் முதல் கட்டமாகப் புதிதாக வந்துள்ள வெளி மாநிலத்தவர்க்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டையோ, குடும்ப அட்டையோ வழங்கக் கூடாது என்ற போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.

இப்பொழுது ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் குடியேறுகின்றனர். இந்த நிலை நீடித்தால் இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தமிழர்களின் மக்கள் தொகைக்குச் சமமாகப் பிற இனத்தவர் பெருகிவிடுவர். அப்போது தமிழகம் தமிழர்களின் தாயகமாக இருக்காது கலப்பினத் தாயகமாக மாறிவிடும். இந்த அபாயத்தைத் தடுக்க, தமிழர் தாயகத்தைக் காக்க ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் முனைந்து செயல்பட வேண்டும்.

ஈழத்தில் இறுதிப்போர் முடிந்துவிட்டது. இனி தமிழ் ஈழம் அமைய வாய்ப்புண்டா?

ஈழத்தில் இறுதிப்போர் முடியவில்லை. நான்காம் கட்டப் போர் முடிந்து ஐந்தாம் கட்டப் போர் நடந்து கொண்டுள்ளது. இந்த ஐந்தாம் கட்டப் போர் ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகளை எதிர்த்து அல்ல. எதிர்த்தரப்பே போர்க்களத்தில் இல்லாத நிலையில் ஒரு தலைச்சார்பாக தமிழ் ஈழ மக்கள் மீது புதுவகையான போரை இலங்கை அரசு இந்தியா, சீனா போன்ற நாடுகளின் துணையோடு இப்போது நடத்திக் கொண்டுள்ளது. தமிழர்களின் வீடுகளில் சிங்களர்கள் குடியேறுகிறார்கள். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் பெரும் எண்ணிக்கையில் சிங்களர்களை அரசு குடியேற்றுகின்றது. வடக்கு கிழக்கு மாநிலங்களில் சிங்களப் படைகள் நிரப்பப்பட்டுள்ளன. இராணுவ நிர்வாகம்தான் அங்கு நடக்கிறது. ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு படை முகாம். இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு சோதனைச் சாவடி என அமைத்து சிங்கள இராணுவத்தினர் இரண்டு மூன்று தமிழர்கள் சேர்ந்து பேசுவதற்குக் கூட தடை ஏற்படுத்திவருகின்றனர். திருமணம், இறப்பு போன்ற குடும்ப நிகழ்வுகளுக்குக் கூட இராணுவத்தின் அனுமதி பெறவேண்டிய அவலம் உள்ளது. இவை அனைத்துக்கும் இலங்கை அரசுக்கு அரணாக இந்தியா நிற்கிறது.

இந்திய அரசின் எல்லா வகை உதவிகளோடும் 2009ல் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தபோதும் தமிழகத் தமிழர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. இப்பொழுது ஈழத்தில் நடக்கும் பெரும் கொடுமைகளையும் தமிழகத் தமிழர்களால் தடுக்க முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு தேச அரசு இல்லாததால் உலகக் கவனத்திற்கு அதைக் கொண்டு போக முடியவில்லை. அண்மையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு போன தீர்மானம் கூட போர்க் குற்றங்களை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்பதுதான். ஐ.நா. மேற்பார்வையில் ஒரு பன்னாட்டு ஆணையம் இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும் போர்க் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. ஆனால் இக்கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைக் குழுவில் முன்வைப்பதற்கு தமிழ் இனத்திற்கு ஆதரவாக ஒரு நாடும் இல்லை. இந்த நிலைமையை தமிழகத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்கள இனவெறிக்குத் துணையாகவும் தமிழ் இனத்திற்குப் பகையாகவும் இலங்கையில் தலையிடும் இந்திய அரசைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் தமிழகத் தமிழர்களுக்கு வரும்போதுதான் தமிழீழ வானத்தில் விடியலுக்கான ஒளிக் கீற்றுகள் தோன்றும். அத்தகைய ஆற்றலைத் தமிழர்கள் பெற தமிழ்த் தேசிய அடிப்படையில் இன உணர்ச்சியும் இன ஒற்றுமையும் பெற வேண்டும். அதுவரை நாம் ஓய்ந்திருக்க வேண்டியதில்லை. அந்த இலக்கை நோக்கித் தொலைநோக்குப் போராட்டங்களும் மனித உரிமை அடிப்படையில் உலகக் கவனத்தை ஈர்த்து சில ஞாயங்களையாவது பெறுவதற்கான உடனடிப் போராட்டங்களையும் நடத்த வேண்டும்.

அனைத்திந்தியக் கட்சிகளான காங்கிரஸ் பா... போன்ற கட்சிகளிடமிருந்து நீங்கள் விலகியிருப்பதும், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளிடமிருந்து நீங்கள் விலகியிருப்பதும் புரிகிறது. உங்களுக்கான ஞாயத்தையும் உணர முடிகிறது. ஆனால் பொதுவுடைமைக் கட்சிகளான இடது சாரிகளிடமும் நீங்கள் ஒதுக்கம் பாராட்டுவது சரியா? அதுவும் உங்கள் கட்சியின் பெயரிலேயே பொதுவுடைமையை ஏற்றுக்கொண்டிருக்கும் நீங்கள்?

நீங்கள் குறிப்பிடும் காங்கிரஸ், பா.ச.க. போலவே தமிழகத்தில் செயல்படும் அனைத்திந்திய இடதுசாரிக் கட்சிகளும் இந்தியத் தேசியவாதிகளே. இல்லாத இந்தியத் தேசியத்தை இக்கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றன. இயற்கையான தமிழ்த் தேசியத்தை மறுக்கின்றன. இந்தியத் தேசிய வெறியைப் பரப்புவதிலும் பாரத மாதா பசனை பாடுவதிலும் காங்கிரஸ், பா.ச.க. கட்சிகளுக்குச் சளைத்தவை அல்ல இந்த இடதுசாரிக் கட்சிகள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகக் கிளை ஓரளவு தமிழ் உணர்வோடு செயல்படுகிறது. ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறது. அக்கட்சியுடன் த.தே.பொ.க. அவ்வப்போது கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

கோட்பாட்டளவில் பார்த்தால் அனைத்திந்திய சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளின் தலைமையானது லெனின் வகுத்த தேசிய இனக் கொள்கையை ஏற்க மறுப்பவையே. “தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்காதவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் அல்லர் என்பது மட்டுமல்ல, அவர்கள் சனநாயகவாதிகளும் அல்லர்’’ என்றார் லெனின். லெனின் அவர்களின் இந்த வரையறுப்பின்படி பார்த்தால், சிபிஎம், சிபிஐ கட்சிகளை இடதுசாரிக் கட்சிகள் என்று வகைப்படுத்த முடியுமா? இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறைகளுக்குத் துணை போகும் இக்கட்சிகள் இந்திய ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளிகளாகவே அனைத்திந்திய அளவில் செயல்படுகின்றன. எனவே இவற்றை இடதுசாரிக் கட்சிகள் என்பது பொருத்தமல்ல.

தந்தை பெரியாரைக் கூட விமர்சிக்கிறீர்கள். பெரியாரைக் குறித்த விமர்சனம் உங்களைப் பிற்போக்குவாதிகள் என்ற தளத்தில் நிறுத்துகிறது என்பது பற்றி என்ன கூறுகிறீர்கள்.

பெரியாரை விமர்சிப்பதால் ஒருவர் பிற்போக்குவாதியாகிவிடுவார் என்று சொன்னால் அது பெரியாரின் பகுத்தறிவு வாதத்திற்கு உகந்ததாக இருக்காது. பெரியார் பக்தி மார்க்கத்திற்கே உரியதாக இருக்கும். காரல் மார்க்சிலிருந்து பெரியார் வரை அனைவரும் திறனாய்வுக்கு உட்பட்டவர்களே.

பெரியாரின் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்விடுதலை ஆகியவை குறித்த கருத்துகளும் அவற்றிற்காக அவர் நடத்திய போராட்டங்களும் தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறது. அதற்காக அவரை த.தே.பொ.க. பாராட்டுகிறது. ஆனால் இனம், மொழி, தேசியம், தேசம் குறித்த அவரின் கருத்துகள் முழுக்க முழுக்க தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எதிரானவை. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று அவர் தொடர்ந்து கூறி வந்தது, தமிழைப் புறந்தள்ளிவிட்டு ஆங்கிலத்தைப் படிக்குமாறும் வீட்டில் கூட வேலைக்காரியுடன் ஆங்கிலத்தில் பேசும் நிலை வரவேண்டும் என்றும் பெரியார் கூறிய கருத்துகள் போன்றவை மொழியியல் குறித்த அறிவியலுக்கு எதிரானவை. ஆங்கிலத்தின் மீது அவருக்கு இருந்த மூட நம்பிக்கைக்கான சான்று. ஆரியர்கள் திணித்த திராவிடம் என்ற திரிபுக் கருத்தியலை ஏற்று அவர் பரப்பியது தமிழினத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் இனத்தின் பெயரான தமிழர் என்பதையே மறுக்கவும் மறைக்கவும் பெரியாரின் கருத்துகள் துணை செய்தன. தேசியம் என்பதே பாசிசம் என்று அவர் வரையறுத்தார். அதுவும் சமூக அறிவியல்படி பிழையான கருத்து. தமக்கு மொழிப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது என்று திரும்பத்திரும்பக் கூறினார். ஆரியத்தை எதிர்த்து இன அரசியல் நடத்திய பெரியாருக்கு தமக்கான ஓர் இன அரசியல் வேண்டாமா? இனப்பற்று இல்லை என்று சொல்வது சரியா? தமிழர் மரபையும் தமிழர் இலக்கியச் செழுமையையும் முற்றிலுமாகப் பெரியார் எதிர்த்தார். இவை போன்ற அவருடைய பிழையான கருத்துகளைத்தான் த.தே.பொ.க. விமர்சிக்கிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல் பெரியார் அளித்த பங்களிப்பை நன்றியோடு ஏற்றுக்கொண்டே இந்த விமர்சனத்தைச் செய்கிறோம்.

ஊழலுக்கு எதிரான அண்ணா அசாரேயின் போராட்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அண்ணா அசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் பொதுவாக ஆதரிக்கிறோம். போராட்டக் களங்களில் இந்திய அரசுக் கொடியை உயர்த்திப் பிடிப்பதையும் இந்தியத் தேசிய வெறியை ஊட்டுவதையும் நாங்கள் ஏற்கவில்லை.

பெண்கவிஞர்கள் பெண்ணிய நோக்கில் எழுதிவரும் முற்போக்கான கவிதைச் சிந்தனைகளை நீங்கள் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?

முற்போக்கான பெண் கவிஞர்களின் முற்போக்குப் படைப்புகளை நாங்கள் எதிர்க்கவில்லை. இதுவரை ஆண் கவிஞர்கள் பெண்ணின் பாலுறுப்புகளை நுகர்வுப் பண்டம் போல் பரிமாறியதை இப்போது சில பெண் கவிஞர்கள் பரிமாறுகிறார்கள். அதைத்தான் எதிர்க்கிறோம். ஆண் கவிஞர்கள் பயன்படுத்திய காமம் தொடர்பான ஆணாதிக்கச் சொல்லாடல்களை இப்பொழுது பெண்கள் பயன்படுத்துகிறார்கள். பெண்ணியம் என்ற பெயரில் பெண்ணின் பாலுறுப்புகளை நுகர்வுப் பண்டமாக வர்ணிக்கும் பிற்போக்குத் தனத்தைத்தான் நாங்கள் விமர்சிக்கிறோம். பெண் விடுதலைக்காகப் பெண் கவிஞர்கள் பலர் நிறைய எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டுகிறோம்.