தன் மக்களுக்காக அவர்கள் நலனுக்காகப் போராடிய ஒரு தலைவன், ஒரு போராளி தீவிரவாதியாக, பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டு அவனது மரணம் துரோகக் கும்பல்களின் கூட்டணியால் நிகழ்ந்தேறியது. மர்மம் நிறைந்த அந்த மரணத்தின் பின்னணியில் நிகழ்ந்ததாகப் பல விஷயங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இன்றுவரை எதுவுமே தெளிவற்றுத் தான் இருக்கிறது. அந்தத் துயரச் சம்பவத்தால் ஏற்பட்ட ரணம் மனத்தின் அடியில் ஒரு வடுவாக இருந்துகொண்டிருக்கிறது. அதைக் குறித்து எதுவும் பேசப்படாமல் எழுதப்படாமல் அதைக் கடும்பாறையான மௌனம் மூடிக்கொண்டுவிட்டது. எனவே அது குறித்த சிறு உதட்டசைவுகூட ஆசுவாசத்தைத் தருகிறது.

கண்ணாடியை முகத்தில் மாட்டிக் கொண்டே சமயத்தில் அதைத் தேடி அங் குமிங்கும் அலைவோம். தற்செயலாகத் தான் கண்டுபிடிப்போம் அதை முகத்தில் அணிந்திருப்பதை. எப்படிக் கவனிக் காமல் போனோம். நினைக்கையில் சிரிப்பாக இருக்கும் அடுத்த கணம் அந்த அபத்தம் காரணமான வருத்தம் மனதில் கவியும். இப்படியான பல அபத்தங்களை தினந்தோறும் கடந்து வருகிறோம். தலைவனின் மரணம், கடந்து வரும் சிறு சிறு அபத்தங்கள், எதற்குமே வாய் திறக்காத மக்கள் திரளின் மேல் குவியும் கோபம் இவற்றோடு சிறுவயதில் படித்த காமிக்ஸ், பார்த்த கௌபாய் படங்கள் போன்ற பல்வேறு சிந்தனைகளாலான விநோதக்கலவை மனத்தில் உருவாக அதனடிப்படையில் கருவான சித்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாக வரைந்து அதை அப்படியே அசையும் படக்காட்சிகளாக மாற்ற இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் நம் கண்முன்னே விரிந்து நிற்கிறது. வழக்கமான படங்களிலிருந்து சற்று வித்தியாசப்பட்டிருப்பதே போதும் என நினைக்கவைத்துவிடுகின்றன பெரும்பாலான படங்கள். அந்த வகையில் முழுக்க முழுக்க படத்தின் கலர் டோனிலிருந்து அரங்க அமைப்பு, நடிகர்களின் உடலசைவு, வசனங்களை வெளிப்படுத்தும்விதம் ஆகியவை வழக்கமான தடத்திலிருந்து சிறிய வித்தியாசத்தைத் தன்னளவில் கொண்டுள்ளது. தமிழ்ச்சமூகத்தின் பெருங்கதையாடலை, முதலாளித்துவக் கொடுமையைச் சொல்வதாகச் சொல்லி திரைக்கதைக் காகிதங்களில் கிளிசரின் தடவித் தடவி உருவாக்கப்பட்ட படம் எழுப்பிய செண்டிமெண்ட் புகையால் மூச்சு முட்ட சுட்டெரிக்கும் வெயில் நேர ரெங்கநாதன் தெரு வெம்மையை உணர்ந்த சம்பவம் சமீபத்தில்தான் நடந்து முடிந்திருந்தது. அந்த வெம்மைக்கு ஆறுதலாக இருந்தது இ.கோ.மு.சி.யின் திறந்தவெளி.

நிறைய விஷயங்களைச் சொரணையோடு சொல்லிச் செல்கிறார் இயக்குநர். புரட்சி, சுய உரிமை, சுதந்திரம் எனத் தமிழன் குழி தோண்டிப்புதைத்துவிட்ட விஷயங்கள் எல்லாம் படத்தில் பேசப் படுகின்றன. அணுகுண்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் முன்பு வீரராகவன் கேட்கும் அந்தக் கேள்வி சுதந்திரத்தை விரும்பும் சுயமரியாதையுள்ள ஒருவனின் மனக்குமுறல். மொழிபெயர்ப்பின் அபத்தம் அழகாக நகைச்சுவையாக்கப்பட்டிருக்கிறது. அப்படியே டிட்டோவாக ஆத்ரிகேசாவின் ஒவ்வொரு சொல்லையும் அசைவையும் ட்ரான்ஸ்லேட்டர் லீ மொழிபெயர்ப்பது. இறுதியில் பள்ளத்தில் தவறி விழுந்து தொங்கும் போது ஆத்ரி கேசா வெளிப்படுத்தும் அலறலைக்கூட மொழிபெயர்க்கிறார் லீ, எதற்குச் செய்கிறோம் என்ன செய்கிறோம் என்பது புரியாமலே.

‘‘சோப்பு டப்பா விக்க வந்த நம்ம ராபர்ட் கிளைவுக்கே நூத்தம்பது வருஷமாக கழுவி விட்டவனுக தான இவனுஹொ, இந்த ஊரில் தானே பாதிக்கப்பட்டாலொழிய பாதிக்கப்பட்டவனுக்கு குரல் கொடுக்க மாட்டானுஹொ, நடுத்தெருவில் நின்னாலும் சரி நடுக்கடலில் நின்னாலும் சரி அதுல கூட ஆதாயம் தேடுவானுஹொ...'' என்பதைப் போன்ற வசனங்கள் பல அர்த்தங்களை உள்ளடக்கியது.

உதாரணங்களாகச் சிலவற்றைப் பார்க்கலாம். ‘‘இது நாள்வரை நீ எல்லார் காலிலும் விழுந்தது உனது குலத்தொழிலாகக் கூட இருக்கலாம்.'' என்னும் வசனம், பாஸ் நாங்க மோசம் போயிட்டோம் என அடியாள்கள் நால்வர் ஓடிவந்து சொல்லவும் அடுத்த கணம் உலக்கை நீங்க இரும்புக்கோட்டை ஆளுங்கன்னு தெரிந்தபின்னும் உங்களைக் கற்பழித்தது யார் எனக் கேட்க, இல்ல பாஸ் நாங்க ஒருத்தன்ட்ட தோத்துப்போயிட்டோம் என்று சொல்ல, அப்புறம் ஏன் மோசம் போயிட்டோம்னு சொன்னா வேற அர்த்தமில்ல. ட்ரேடிஷனல் டயலாக்கை மாத்தக்கூடாது என்பது.

இரும்புக்கோட்டையில் நீதி கேட்க வந்த தந்தை அங்கே உள்ள கோட்டைத் தாண்ட அடுத்த கணம் காவலாளி அவனைச் சுட்டுவிடுவான். ஏனெனில் அந்தக் கோட்டைத் தாண்டுபவன் சுடப்படுவான் இது அந்தக் கோட்டையில் ரூல். ரூல்களை அப்படியே உள்வாங்கிச் செயல்படும் வேலையாட்கள் கொண்ட இடம் அது. அதன் தலைவன் கிழக்குக் கட்டை. அவனைக் குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு வசனம் ‘‘ஒரு கூட்டத்தில் தலைவன் ரிட்டயர் ஆகாட்டி இதுதான் பிரச்சினை.'' கிக சொல்லும் ஒரு வசனம் ‘‘கால்குலேஷன்ஸ்தான் நம்ம ஹிஸ்ட்ரி.'' ‘‘இந்த உலகத்துல எந்த ஜீவராசிக்கும் இல்லாதது நமக்கு மட்டும் இருப்பது சிரிப்பு மட்டுமல்ல நம்பிக்கைத் துரோகமும் தான்'' எனத் துரோகியாக மாறிய டக்ளாண்டி வசனம் பேசுவது. ‘‘உங்க சிங்கத்தோட பொணம்தான் எனக்கு வேணும் அப்பத்தான் அந்த ஆட்டு மந்தை கூட்டத்தை அடக்க முடியும்'' எனக் கிக வசனம் பேசுவது. இப்படி வசனங்கள் ஒவ்வொன்றும் சம கால நடப்புகளின் சாளரத் திறப்புகள்.

வெஜ்ஆண்டி புரத்துக்காரர்கள் பழங்குடியினர். அவர்கள் மாமிசம் சாப்பிடுவதில்லை. சுத்த சைவம். அவர்களது பெண் ஜும்பல ஜும்பல எனப் பாட்டுப்பாடி ஆடவில்லை. க்ளாசிக் பாட்டுக்குப் பரதம் ஆடுகிறாள். சுய உரிமை தமிழில் எங்களுக்குப் பிடிக்காத இரண்டாவது வார்த்தை என உலக்கை ஒரு காட்சியில் கூறுவான். அப்படியென்றால் முதல் வார்த்தை என்ன? இயல்பான சந்தேகம் எழத்தானே செய்யும். விடை உண்டு. அந்த வார்த்தை புரட்சி. அதைச் சொல்வார் கிழக்குக் கட்டை அடுத்த காட்சியில். இது தான் விஷயம். இதைப் போன்ற சிறு சிறு நகாசு வேலைகள் படமெங்கும் விரவிக்கிடக்கின்றன. புதையலைத் தேடிச் செல்லும் இடத்தில் வெளிப்புறச் சிலையின் பராமரிப்பு பப்பி ஜவுளி ஸ்டோர், பனகல் பார்க் சைடுல என விளம்பரம் இருப்பது. அதைப் படித்த உடன் உலக்கை, ‘‘அடச்சீ பொறம்போக்குங்க எதுஎதுக்கு ஸ்பான்சர் பண்ணனும்னு விவஸ்தை இல்ல கட்டயால அடிக்கனும்'' என்பான். எல்லாவற்றையும் நுகர்வோன் தலையில் கட்ட காத்திருக்கும் உலகமய சூழலில் விளம்பரங்களின் மடத்தனங்கள் மண்டையில் உறைக்குமோ உறைக்காதோ?

குகைக்குள் அனைவரும் ஸ்டூலில் உட்கார்ந்தால் கதவு தானே திறப்பது; அதைக் கண்டுபிடித்து எல்லோரும் ஸ்டூலில் அமர்ந்தபடி நகர்ந்து திறந்த கதவுக்குள் நுழைவது. உள்ளே சென்றபின்னும் சிறிது தூரம் அப்படியே செல்வது மந்தத் தனமின்றி வேறென்ன? பொங்கு தமிழன் என்பவன் யார் என்னும் கேள்விக்குத் தரப்படும் குத்தலான பதில் ‘‘உலகில் எங்கு தன் இனம் பாதிக்கப்பட்டாலும் அப்படியே பொங்கி எழுந்துருவாராம்'' என்பது. வெட்டி நியாயம் பேசுவது நமது கலாச்சார உரிமை என மார் தட்டுவதன் மூலம் வெட்டி நியாயம் பேசுவதன் மேல் லாரி லாரியாகக் கரி அள்ளி வீசப்படுகிறது. இறுதிக் காட்சியில் குகை இடிந்துவிடும் எனப் படித்து முடிப்பதற்குள்ளாகவே ஓடிவிடும் கூட்டாளிகள். இதைவிட நம்மை எப்படிக் கிண்டல் செய்ய முடியும்?

இந்தப் படத்தை வெறும் நகைச்சுவைப் படமாகச் சுருக்கிவிட இயலவில்லை. ஆபத்துக்கு கைகொடுக்காத இனம், இனமே அழிக்கப்பட்டாலும் அதைப் பற்றிக் கவலையின்றி தன் சுகத்தை மட்டும் பாதுகாத்துக்கொள்ளும் இனம் நாம் என்பதைச் சிரிக்க சிரிக்க சொல்லியிருப்பினும் சிரிப்பின் அடியில் கவிந்திருக்கும் வேதனை உணரும்போது சிரிக்க முடியாது. ஆனால் அதற்கு முன்பாகவே சிரித்து முடித்திருப்போம். ‘‘ஏய் ஏய் ஸ்டாப் இட் மேன். ஃபீலிங்க ரொம்ப தான் போட்டு தேய்க்கிற'' எனக் கிக வசனம் பேசுவான். அய்யோ பாவம் அவனுக்குத் தெரியாது தமிழ்ப் படங்களில் ஃபீலிங்ஸ தேய்தேய்னு தேய்ச்சா தான் வேலைக்காகும்னு.

ஈரடுக்குகளாலான இப்படத்தில் மேலடுக்குப் பலம் குறைந்ததாக இருக்கிறதோ என்னவோ ஆனால் ஆழத்தில் தென்படும் அடியடுக்கு அர்த்தம் நிறைந்தது. இரண்டையும் சில புள்ளிகளே இணைக்கின்றன. இது பதினெட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்ததான புனைவு என்னும்போது அமிதாப் அணுகுண்டு ஒப்பந்தம் போன்ற சமகால விஷயங்கள் இடம் பெறுவது குறித்த அறிவுஜீவித்தனக் கேள்விகள் இங்கே அர்த்தமிழக்கின்றன. இதற்குப் பதிலாகப் படத்தில் ஒரு காட்சியில் பேசப்படும் வசனங்களைச் சுட்டலாம். பாத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு எனக் கிக சொல்ல அவனது கூட்டாளிப் பெண் அது பாத்திரம் அல்ல ஆத்திரம் எனத் திருத்த, சொன்ன ஃபீலிங் புரிஞ்சிடுச்சில்ல ஆத்திரமாக இருந்தாயென்ன பாத்திரமாக இருந்தாயென்ன எனக் கத்துவான் கிக. இது யாருக்குப் புரிகிறதோ புரியவில்லையோ சுபத்ரா உனக்குக்கூடப் புரியவில்லையா? எத்தனை சுபத்ராக்கள் உணர்வார்களோ?