நகரத்தின் ஆரவாரத்திலிருந்து விலகியிருந்தது அந்த அரசு அலுவலகம்.

                பழைய கட்டிடம். கட்டிட விரிசல்களில் வளம் பெற்றிருந்தன அரச மரங்கள், பச்சைபசேலென்று கட்டிடத் திற்குக் கிரீடம் வைத்ததுபோல. காற்றுடன் அவை ஏதோ தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டது போல அசைவு காட்டிக் கொண்டிருந்தன. நாலைந்து சிட்டுக் குருவிகள் அவற்றின் மேலமர்ந்து அசைவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மீண்டும் எழுந்து பறந்தன.

                நாராயணன் பேருந்தைவிட்டு இறங்கி நடந்துதான் போனான்.

                மனம் முழுக்க வெறுமை மண்டிக் கிடந்தது. இதுபோன்ற தருணங்கள் வருமென்று அவன் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் மனம் செத்துக் கொண்டிருந்தது. உயிர்க்காற்று செலுத்தப் படும் நோயாளியின் போராட்டத்தில் இருந்தான். எப்படியும் பிழைத்துக் கொள்வார் என்று எதிர் பார்க்கும் உறவுகளைப்போல ஒரு நம்பிக்கை அவனுள் படர்ந்து கிடந்தது. தவிரவும் மாற்றாக ஒரு நிறைவும் அவன் மனதில் உருக்கொண்டிருந்தது.

                அந்த அரசு அலுவலகக் கட்டிடம் மிகப்பெரிதாக இருந்தது. உயரமானதாக இருந்தது. அதிலிருந்து நீளமான பாம்புகளைப் போல அந்தக் காலத்து மின்விசிறிகள் அவற்றுக்கேயுரித்தான ஒலி யெழுப்பியபடி சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால் சீரான காற்றுப் பரவல் இருந்ததை இவன் உணர்ந்தான். பெரிய ஹாலில் ஏராளமான நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. ஒருவருக்கொருவர் எதிரில் பார்த்துக் கொள்வதைப்போல போடப் பட்டிருந்தன. மேசைகள் தோறும் கட்டுக் கட்டாய் கோப்புகள். பேசிக் கொண்டும் எழுதிக்கொண்டும் பக்கத்தில் நிற்பவர் களுக்குப் பதில் சொல்லிக்கொண்டும் அந்த அலுவலகம் இயக்கத்தில் இருந்தது.

                யாரும் இவனை இலட்சியம் பண்ணவில்லை. அங்கங்கே யாரோ யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்கள். தட்டச்சு இயந்திர ஒலிகள் கேட்டன.

                எதிரில் ஒருவன் வந்தான். நாராயணன் அவனைத் தடுத்து “சியாமளான்னு...''

                “தெரியாது. உள்ளே போய் கேளுங்க...'' என்றபடி தடுக்கப்பட்டவன் பதில் சொல்லிவிட்டு பதிலுக்கு இவனுடைய நன்றியைக் கேட்காமல் போனான்.

                ஹாலின் நடுவில் தடுப்பு இருந்தது. தடுப்பிற்கு அப்பால் ஒரு பெரிய மரமேசை போடப்பட்டிருந்தது. அதில் ஒரு நடுத்தர வயது மனிதர். கறுப்பும் நரையும் இணைந்த தலையுடன். குங்குமப்பொட்டு. வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்து வெற்றிலை போட ஆரம்பித்திருந்தார்.

                அவரிடம் போய் நின்றான். நிமிராமலே “என்ன வேண்டும்?'' என்றார்.

                “சியாமளான்னு...'' என்றான்.

                “மாடியிலே ரெண்டாவது ரூம். வலது பக்கம். பொதுபிரச்னைகள் பிரிவு''.

                “தேங்ஸ்''

                “நீங்க எங்கேர்ந்து வர்றீங்க?''

                “கமர்சியல் டாக்ஸ் ஆபிஸ் சார். சியாமளாவுக்கு தெரிஞ்சவன். உறவு முறை''.

                “போங்க சார்''. அதற்குமேல் கேட்க வில்லை அவர். மறுபடியும் காம்பு கிள்ளத் தொடங்கினார்.

                தனக்கு சரளமாகப் பொய் வருவதை எண்ணி லேசாக கலக்கமுற்றான் நாராயணன்.

                மாடிப்படியேறிப் போனான். எல்லாம் தேக்கு மரப்படிகள். இரும்புக் கம்பி வளைந்து மேலே போனது. அழகான படிகள். வளவளவென்று மனிதப் பாதங்கள் பட்டு இளகிக்கிடந்தன. சியாமளாவை எளிதில் கண்டுபிடித்தான். அவள் இவனை ஒருமுறைப் பார்த்தாள்.

                இவனே பேசினான். “என் பேரு நாராயணன்''.

                “சொல்லுங்க... சார்... என்ன வேணும்?'' என்றாள்.

                “உங்ககூட பேசணும்''.

                “என்ன விஷயம்?''

                “உங்க கணவர் குமரவேலு பத்தி''.

                சியாமளா ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டாள். முகம் மாறியது.

                “வாங்க கேண்டீன் போகலாம்''. இருவரும் வெளியே வந்து படியிறங்கி கேண்டீன் நோக்கிப் போனார்கள். அந்த அலுவலகத்திற்குப் பின்புறம் செம்மண் நிலத்தில் கேண்டீன் இருந்தது. கேண்டீன் அருகே பெரிய வேப்பமரம். மிகப் பழைய மரம். ஏராளமான நிழலைப் போர்வை போல விரித்து வைத்திருந்தது. வெயிலின் உக்கிரம் தெரியாமல் குளிர்வாக இருந்தது. மனசுக்கும் இதமாக இருந்தது. நாராயணன் அதை அனுபவித்தான்.

                பெரிய கேண்டீன். நிறைய டேபிள்களும் சேர்களும் கிடந்தன. ஒதுக்குப்புறமாகப் போய் உட்கார்ந்தார்கள். தயிர்வடையும் காபியும் சொன்னாள் சியாமளா.

                “சொல்லுங்க சார்'' என்றாள்.

                அவள் முகத்தை ஒருமுறை பார்த்தான். அமைதியான முகம். தப்பு செய்யத் துணியாத முகம். வாழ்க்கையில் அடிபட்ட குடும்பத்திலிருந்து பொறுப்பாக வேலைக்கு வந்தவளின் முகமாக அது இருந்தது. அவள் முகத்தைப் பார்க்க ஒரு நம்பிக்கையும் நாராயணன் உள்ளுக்குள் கிளைத்தது.

                நேரடியாகப் பேச்சை ஆரம்பித்தான்.

                “என்னோட மனைவி வசுந்தராவும் உங்க கணவர் குமரவேலுவும் பக்கத்துப் பக்கத்து சீட். ஒரே ஆபிஸ். உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். இல்லே தெரியாமக்கூட இருக்கும்''.

                சியாமளா பேசாமல் இருந்தாள்.

                “காலேஜ் படிக்கும்போது எனக்கு சின்னதா ஒரு விபத்து. சரியாயிடிச்சி அப்புறம். அப்படியே விட்டுட்டேன் சரியாயிடிச்சின்னு. ஆனா அது ரொம்ப பாதிச்சது தெரியாது. கல்யாணத்திற்கு அப்புறம்தான் அதுவும் தெரிஞ்சது. பத்து வருஷமாச்சு எங்களுக்குப் பிள்ளையில்லே. பேருக்கு நாங்க வாழ்ந்திட்டு இருக்கோம். ஆனாலும் அவமேல எனக்கு இருக்கும் அன்பு குறையாம இருக்கு. அனுசரிச்சு போறேன். அவ விருப்பம் எதையும் தடுக்கறதில்லே. ஆனா இப்போ உங்க கணவரோட என் மனைவியை வச்சி பேசுறாங்க. என் காதுபடவே பேசுறாங்க. என் மனைவி சம்மதிக்காம இது நடந்திருக்காது. ஆனாலும் உங்க கணவரோட தூண்டலும் இருக்கு. தப்பு என் மேலதான். ஆனால் அது நான் செஞ்ச தப்பு இல்லே. விதி அனுபவிக்கிறேன். செக்ஸ்ம் குழந்தையும் மட்டும் வாழ்க்கையில்லே. அது வாழ்க்கைக்கு தேவைங்கறது வேற. நானும் அதை விரும்பறேன். ஆனா அது என் வாழ்க்கையிலே இல்லேங்கறது என்னால ஏற்பட்டது இல்லே. இயல்பாக ஒரு விபத்தை ஏற்படுத்தி அதுல என்னை சிக்கவச்சி கடவுள் போட்ட கணக்கு இது. ஆனால் நான் தெளிவா இருக்கேன். ஆனா உங்க வாழ்க்கை பாதிக்கக்கூடாது. உங்களுக்கு குழந்தைங்க இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதுங்க பாதிச்சிடக் கூடாது. என்னடா இது வித்தியாசமாக இருக்கேன்னு யோசிக்காதீங்க. என்னோட தங்கச்சி வாழ்க்கையும் இப்படித்தான் ஆயிடிச்சி. இருபது வருஷம் போராடியும் பலனில்லே... அவ வாழ்க்கையும் வேற பெண்ணாலதான் கெட்டது. ரெண்டு குழந்தைங்களோட ரயில்லே விழுந்து செத்துப்போனா... இப்பவும் மனசுலே நிக்குது அந்தக் காட்சி. நான் அவளோட பேசினா பிரச்சினை வரும். எல்லை மீறுவா. இல்லே வெளியே கிளம்பிடுவா. தடுக்க முடியாது. எப்போ உடம்புக்கு அலையற மனசு இருக்கோ அது யாருக்கும் கட்டுப்படாது. அது நெருப்பு மாதிரி எரிஞ்சுதான் அணையும்; இல்லே எதையாச்சும் எரிச்சுப்புட்டுதான் அடங்கும். அவளுக்கான தண்டனை நிச்சயம் உண்டு. எப்படி அவளை என்னால தடுக்க முடியலியோ... அதுமாதிரியே அவ அனுபவிக்கபோற தண்டனையையும் தடுக்க முடியாது. யாரும் யாருக்கான வாழ்க்கையை வாழ முடியாது. அவங்க அவங்களுக்கான வாழ்க்கையை யாராலும் பறிச்சுக்கவும் முடியாதுங்க சியாமளா... இது புரியணும். உங்க கணவருக்கும் புரியல்லே... என்னோட மனைவிக்கும் புரியல்ல... வெகு சீக்கிரம் புரிஞ்சுக்கு வாங்க... ஆனா உங்க வாழ்க்கையும் புள்ளங்களும் முக்கியம். புள்ளங்கள பாதிச்சிட்டா அப்புறம் வாழறது அர்த்த மில்லாத வாழ்க்கை. எங்கம்மா படிக்காத கைநாட்டு. நாம கஷ்டப்பட்டாலும் அடுத்தவங்க கஷ்டப்படணும்னு நினைக்கக் கூடாதுன்னு சொல்லி வளர்த்தவங்க... அதான் மனசு கேக்கல்லே... உங்களை தேடி வந்திட்டேன்''.

                காபி தயிர் வடை வந்தது. மனசு இறங்கியது போல இருந்தது. நிதானமாக தயிர் வடையை சுவைத்து சாப்பிட்டு, காபியைக் குடித்தான். உடம்பும் மனசும் அடங்கிப்போனது.

                வெளியே வந்தார்கள்.

                “நான் வரேங்க சியாமளா... என்னோட பாரம் இறங்கிடிச்சி''.

                விறுவிறுவென்று நடந்து போய் ரோட்டில் ஏறினான்.

                சியாமளாஅவன்போவதையேபார்த்துக்கொண்டிருந்தாள். மனசுக்குள்அவள்பிள்ளைகள்வந்துபோனார்கள். யோசிக்கஆரம்பித்தாள். எல்லாவற்றிற்கும்ஒருதீர்வுஇல்லாமல்இருக்காதுஎன்கிறநம்பிக்கைவந்தது. நாராயணனின்அணுகுமுறைஅவளைமேலும்யோசிக்கவைத்தது. தன்இருக்கைநோக்கிமாடிப்படியேறினாள்.

Pin It