இம்மாதத்திய (அக்டோபர் 2013) ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் கவிஞர் சல்மா பற்றி " The Three Faces of Salma" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் இறுதியில் பாலியல் ரீதியாக எட்டு ஆண்டு காலம் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்த சாந்தா என்ற பெண், தான் சல்மாவினால் காப்பாற்றப்பட்டு அரவணைக்கப்பட்டு இன்று ஒரு கண்ணியமான நிம்மதியான வாழ்வைப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றார். பல வருடங்களுக்கு முன்பாக தனது சுதந்திரத்திற்கு ஏங்கியவராக வீட்டுக் குள்ளே அடைபட்டவராக சல்மா இருந்தார் எனக் கூறியதைக் கேட்டு சாந்தா அதனை நம்ப மறுத்து “நீங்கள் தவறாகக் கூறுகிறீர்கள், நீங்கள் யாரைப்பற்றியோ கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். சல்மா மேடம் பயம் என்பதையே அறியாதவர்'' என்று கூறுகிறார்.

                இந்த பயமறியாத துணிச்சல்மிக்க சல்மா அன்று சிறுவயதில் ராஜாத்தியாக தனது சகோதரி நஜ்மாவுடன் வீட்டிலிருந்த ஒரு சிறு சன்னலின் வழியாக உலகைப் பார்க்கத் துடித்துக்கொண்டிருந்தார். (அந்த சன்னலின் புகைப்படம் வெளியிடப் பட்டிருக்கிறது) ரொக்கையாவாக கணவர் வீட்டில் எவ்வளவு காயம்பட்டிருக்கிறார், கவிதை எழுதுவதற்கு எவ்வளவு போராடி யிருக்கிறார், இன்று வென்றிருக்கிறார் என்று அந்தக் கட்டுரை ஆச்சரியப்படுகிறது. “எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்'' என்று பாரதியுடன் இணைந்து கும்மி கொட்டத் தோன்றுகிறது.

                இன்று நிறைய பெண் கவிஞர்கள் வந்து விட்டார்கள். ஆனால், அவர்களில் எவராலும் சல்மாவின் கவிதை அருகில் நெருங்க முடியாது என்ற கவிஞர் தேவி பாரதியின் வரிகள் பொருத்தமாக கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அப்படிக் கூறுவதில் பெண் கவிஞர்களுக்கு ஒரு சரியான செய்தி இருப்பதாக நான் கருதுகிறேன்.

                அவ்வாறே அருள் எழிலன் என்ற பத்திரிக்கையாளர் சல்மாவின் புகைப் படத்துடன் கூடிய நேர்காணலை வெளியிட்டது, அதற்காக அவர் பட்ட சிரமங்கள் எனப் பதிவாகியுள்ளது.

                மிகச் சிறிய வயதில் தன்னுடைய கவிதை ஒன்றை “காலச்சுவடு'' எழுத்துப் பிழை நீக்கி வெளியிட்டதை, (உண்மையில் “காலச்சுவடு'' இந்த ஒரு செயலுக்காகவே பாராட்டப்பட வேண்டிய இதழ்தான்) பின்னர் பஞ்சாயத்துத் தலைவராக உயர்ந்ததை, சட்டமன்றத் தேர்தலில் எதிர்நின்றவர்களின் அழுக்குப் பிரச்சாரத்தினால் வெற்றி வாய்ப்பை இழந்ததை, பின்னர், தி.மு.க. தலைவர் கலைஞர் மூலம் சமூக நலத்துறையில் தலைமைப்பதவியை ஏற்று அதன் மூலம் மகளிருக்கு தொண்டுகள் ஆற்ற முடிந்ததை என சல்மா நினைவு கூர்வது கட்டுரையாக விரிந்து செல்கிறது.

                எல்லாவற்றையும்விட தன் சின்னஞ்சிறிய மகள் ராஜாத்தியின் கவிதையை காலச்சுவடுக்கு அனுப்பி வைத்து, தனது சுதந்திர சிந்தனைகளுக்குத் துணையாக இருந்தவர் தந்தை என நினைவு கூர்கிறார் சல்மா. (பெண் கல்வி குறித்த மலாலாவின் போராட்டங்களுக்கு துணை நின்ற மாலாலாவின் தந்தையைப் போன்றவராக சல்மாவின் தந்தையும் தெரிகிறார்.)

                சமீபத்தில் அமெரிக்காவில் நடை பெற்ற சூடானிய திரைப்பட விழாவில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய சல்மா பற்றிய ஆவணப்படம் வெளியிடப்பட்டு பாராட்டப் பட்டதையும் அந்த ஆவணப்படம் நான்கு சர்வதேச விருதுகள் வென்றுள்ளதையும் பற்றி இந்தக் கட்டுரை பதிவு செய்திருக்கிறது.

                ஒரு இறுகலான சமுதாயத் தளைகளை அறுத்தெறிந்து இன்று நிமிர்ந்து நிற்கும் சல்மா தமிழ்ச் சமூகத்தினையும் தலைநிமிரச் செய்துள்ளார் என்பது சந்தோஷமான விஷயமாகப்படுகிறது.

Pin It