கம்பநாடனின் "செழுமணிக் கொடிகள்', பாரதியின் "தாயின் மணிக் கொடி' எனும் பதப்பிரயோகங்களின் லயிப்பில் வாய்த்த பெயரே "மணிக்கொடி'. பாரதியின் "இந்தியா' வ.வே.சு.அய்யரின் "பாலபாரதி' முதலான தேசிய இயக்கத் தீவிரவாத ஏடுகளின் தொடர்நீட்சியான புத்தொலியாகவும், அக்காலத்தில் லண்டனில் இருந்து வெளியான "பிர்பிரஸ் ஜெர்னல்' மற்றும் "ஸண்டே அப்சர்வர்' என்னும் ஞாயிற்றுக்கிழமைச் செய்தி இலக்கிய இதழின் ஆதர்சத்திலும் 17.9.1933இல் ஸ்டாலின் கு.சீனிவாசன் மணிக்கொடியை வெளிக்கொணர்ந்தார். முதலிதழ் சீனிவாசன், வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகிய மூவர் ஒப்பந்தத்துடனும் வெளியானது. ஏ.என்.சிவராமனும் உறுதுணையானார். அப்புறம் "பி.எஸ்.ராமையாவொடும் ஐவரானோம்' என்பார் சீனிவாசன். "மணிக் கொடிக்காலம்' என்பது 1933-1939க்கு இடைப்பட்ட ஏழாண்டுக் காலப்பகுதி யாகும். ஆசிரியத்துவ அடிப்படையில் அது மூன்று கட்டங்களாகப் பகுக்கப்பட்டது. நான்காவது கட்டமாக மீண்டும் வந்த போதிலும் அதுபற்றிக் குறிப்பிடத்தக்கதாக ஏதுமில்லை.

காந்திய ஈர்ப்பு, காங்கிரஸ் சார்பு, சோதனைப் பாங்கு என வாங்கு ஒருசேரத் தம் வித்தியாசங்களின் முரணழகோடு ஒரு வானவில் கூட்டணியாய், கலந்துகட்டிய அவியலாய் இயங்க நேர்ந்த பாரதி பரம்பரையினரான காவிரி நதி தீரப் பார்ப்பன அறிவு ஜீவிகளே மணிக்கொடியின் ஆதார சுருதி எனலாம்.
தமிழில் மணிக்கொடி இதழே சோதனைப் போக்குச் சிற்றிதழ் மரபின், ஆதி வெள்ளி முளைப்பாகும். இன்றளவும் பலப்பலவாய்த் தொடரும் சிற்றிதழ்களின் மாறிமாறிக் கையளிக்கப்பட்ட தொடரோட்டமே சிற்றிதழ் இயக்க வரலாறாகும்.

“மணிக்கொடி என்றுமே பட்டொளி வீசிப் பறந்ததில்லை'', “அது ஒரு குறுகிய சுயபுராணக் குழு'' என்பதான ச.கைலாசபதி நிலைபாடுகள் ஒருபுறம். நவீன தமிழின் மறுமலர்ச்சி இயக்கம் என மணிக்கொடிப் போக்கை வரையறுக்கும் மணிக் கொடியாளர் தரப்பு மறுபுறம். “இந்தப் போக்கு இலக்கியத்தின் சமூகப் பயன் பாட்டைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படாத ஆளும் வர்க்க இலக்கியப் போக்கே'' என்னும் அ.மார்க்ஸ் நிலைபாடு ஒருபுறம். நவீன தமிழிலக்கிய ஆக்கமையங்களில் ஒன்றாகவும், அதன் இலக்கிய விமர்சன நோக்கு தமிழிலக்கியப் பயில்வின் புதிய ஓர் உணர்திறனைக் கொணர்ந்ததாகவும் இனம் காணும் கா.சிவத்தம்பி நிலைபாடு மறுபுறம். மணிக்கொடியின் ஆதர்சத்தில் ஈழத்தில் "மறுமலர்ச்சி' எனும் இதழ் வெளிவந்ததெனவும், அறிந்தோ அறியாமலோ தாம் பின்பற்றியவர்களில் அனேகமானோர் மணிக்கொடிப் பரம்பரையினரே எனவும் இதற்காகத் தாம் பெருமைப்படுவதாகவும் கே.டானியல் பதிவு செய்துள்ளார். (மணிக்கொடிகாலம் : முற்றுப்புள்ளிகளும், காற்புள்ளிகளும்...)

“வணிக இதழ்களில் இன்னொரு வகை இதழாகவே மணிக்கொடி செயல் பட்டது. பி.எஸ்ராமையா அவ்விதழைச் சிறுகதை வெளியீட்டுக்கு முதன்மை கொடுத்து மாற்றினார். அவ்வளவே இதற்குமேல் எவ்விதமான தத்துவப் பின்புலமோ, சமூக அக்கறையோ கொண்ட இயக்கமாக மணிக்கொடியைக் கருத இயலாது. பிரித்தானியர்களுக்கு எதிராகவும் தமிழக மிராசுதார்களுக்குச் சார்பாகவும் இவ்விதழ் செயல்பட்டது. சிறு பத்திரிக்கைக்குத் தேவையான அடிப் படைகள் இல்லாது செயல்பட்ட மணிக் கொடியைத் தமிழ்ச் சிறு பத்திரிக்கை மரபின் முன்னோடி எனப் பதிவு செய்வது வரலாற்றுப் பிழையாகும். ஆனால் இவ்விதழில் எழுதிய பலர் சிறு பத்திரிக்கை மரபு உருவாக்கத்தில் பிற்காலத்தில் முனைப்பாகச் செயற் பட்டனர் என்பதை மறுக்க முடியாது'' எனக் குறுக்கீடு நிகழ்த்துகின்றார் வீ.அரசு. ("சிறு பத்திரிக்கை அரசியல்' ப.9)

“மணிக்கொடிப் போக்கு என இன்று இங்கு சுட்டிக் காட்டப்படுகிறதான நவீன முயற்சிகளை அங்கீகரிக்கிற, இறுக்கமான கட்டுக்கோப்பும் வடிவப் பொலிவுமுடைய இலக்கியப் போக்கு என்பதாக புதுமைப் பித்தன், மௌனி, கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி போன்றோர் மணிக்கொடியிலும் அதற்கு அப்பாலும் நின்று உருவாக்கிய போக்குத் தான் என்பதையும் மணிக்கொடியின் மொத்த நோக்கும் போக்கும் இதுதான் என எடுத்துக்கொள்வது தவறு என்பதையும்... கவனத்தில் இறுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் போக்கை தமிழ் மறுமலர்ச்சிப் போக்காகக் கொள்வதன் பொருத்தமின்மையை ஆராய்வதற்கு இது ஏற்ற தருணமன்று'' என (மணிக்கொடி காலம் : முற்றுப்புள்ளிகளும்... ப.153) மாற்றுத் தரப்புகளையும் இனிக் காண்போம்.

“மணிக்கொடி தோன்றியிரா விட்டால், தமிழ் மறுமலர்ச்சி இன்னும் பல ஆண்டுகள் பிற்பட்டிருக்கலாம், அல்லது திசைமாறிப் போயிருக்கலாம், அல்லது தமிழ் இலக்கியம் பண்டிதர்களின் தனியுடைமையாகப் பழைய நிலைக்கே திரும்பி இருக்கலாம். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியில் மணிக்கொடிக்குள்ள இந்தச் சிறப்பான அந்தஸ்த்தை யாரும் பறித்துக் கொண்டு போய்விட முடியாது'' என இந்திய மொழிகள் யாவற்றிலும் மறுமலர்ச்சி ஏடுகள் பல உருவான சூழலில், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு ஒரே பிரதிநிதியாகத் தோன்றியதே, மணிக் கொடியின் தனிப்பெருஞ்சிறப்பெனவும் வலியுறுத்துவார் எம்.வி.வெங்கட்ராம். (முற்சுட்டிய நூல் - ப.123-124)

அக்காலத்தில் நிகழ்ந்த மணிக் கொடி, ஆனந்தவிகடன் மனோபாவ இருமை எதிர்விற்கு ஊடாக இதனை இனம் காணலாம். ஆனந்தவிகடன் சனவிருப்புவாத நோக்குடன் செயற்பட்ட வணிக இதழ். அதன் சகலகலாவல்ல சரக்கு மாஸ்டர் கல்கி. விகடன் வணிக நோக்கில் பகுத்தறிவுக் குறுக்கெழுத்துப் போட்டிச் சூதாட்டத்தை நிகழ்த்தியது. அப்போட்டியின் பங்கேற்பாளர்களுக்கு உதவிடும் முகமாகவே ஆனந்தவிகடன் அகராதியைக் கூட அதுவே வெளியிட்டது.

நிகண்டு அமைப்பைத்தழுவி வீரமாமுனிவர் நால்வகைப் பிரிவாய் அமைத்த சதுரகராதியை, ஒரு நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்த அகராதிச் சங்கிலியின் இறுதிக் கண்ணி - மதுரைத் தமிழ்ப் பேரகராதி என்பார் பா.ரா.சுப்பிரமணியன். அதன் பதிப்புரையில் இ.எம்.ஜி. எனப்பட்ட அதன் பதிப்பாளர் இ.மா.கோபாலகிருஷ்ணக் கோன்னும் இதனைத் தம் அகராதிப் பயன் பாட்டில் அடக்கிக் குறிப்பிடுகின்றார். “ஆனந்தவிகடன், தமிழ்த்தினசரி முதலிய பத்திரிக்கைகளில் வெளிவரும் விடுகதை, பந்தயம், சித்திரப்போட்டிகளாகிய மனம் குதூகலமடையும் போட்டிப் பந்தயங்களில் கவர்ச்சியுள்ளவர்களுக்கும் மிக இலகுவாக விடையளித்தற்குரிய சாதனமாக உள்ளதாகும்''. ("மதுரைத் தமிழ்ப் பேரகராதி', பதிப்புரை)

மணிக்கொடிக்கும் விகடனுக்கு மான வேறுபாடுகளை அ.மார்க்ஸ் விதந்தோதுவதும் இங்கே நோக்கத்தக்கது. “இரண்டிற்குமிடையேயான வேறுபாடு களைத் துல்லியமாக வரையறுத்துக் கொள்வது அவசியம். சூதாட்டப் போட்டி உட்பட வணிக நோக்கை மையமாகக் கொண்டே ஆனந்தவிகடன் நடத்தப்பட்டது. மணிக்கொடியைப் பொருத்தமட்டில் விற்பனையைப் பெருக்குவதற்காக எதையும் செய்வது என்கிற நிலையை இறுதிவரை எடுத்ததில்லை என்பது வெளிப்படை. சாதனையாளர்களின் சோதனை முயற்சிகள் அனைத்தும் மணிக் கொடியில் தங்குதடையின்றி அனுமதிக்கப் பட்டன. வாசகர்களுக்குப் புரியாது என்றோ, விற்பனையைப் பாதிக்கும் என்றோ சோதனை முயற்சிகள் தடுக்கப்பட வில்லை''. (முற்சுட்டிய நூல் - ப.156)

சிற்றிதழ் என்பதன் சொல்லமைதி மற்றும் வரையறைகள் பற்றி இனிக் காண்போம். அடிக்கும் படிகளின் எண்ணிக்கை, படிக்கும் வாசகர் எண்ணிக்கை, இட்ட முதலீட்டின் அளவு, விதிக்கப்பட்ட இதழின் வாழ்நாள் நிகழ் தகவு என்பனவற்றை எல்லாம் உள்ளடக்கியே "சிற்றிதழ்' என்பதன் "சிறு' எனும் முன்னொட்டு அமைந்து கிடக்கின்றது. இச்சிறு என்பது வழங்கெல்லை மற்றும் புழங்கு முதலீடு ஆகியவற்றையும் சுட்டி நிற்பதே. சிறு தொழில், குறுதொழில், கைத்தொழில் என வரும்போதும் புழங்கு முதலீடு மற்றும் பொருட் செலாவணி பற்றியதே சிற்றின்பம், சிறுதெய்வம், சிறுகதை எனவாங்கு வரும் போதும் சிறு எனும் முன்னொட்டு ஒப்பீட்டளவில் இருமை எதிர்வை உடன் நோக்கி வழங்கெல்லை பற்றிய வரையறையாகவே அமைந்து கிடக்கின்றது. சிற்றிதழ், சிறுகதை, சிறுதெய்வம் என்கையில் சிறு என்பதனைச் சிறிய என்ற அளவிற்கொள்ள வேண்டுமே அல்லாமல் "சிறுமை' என மயங்கலாகாது. சிறுமை எனப் பிறழக் கருதியே தி.மா.சரவணன் சிற்றிதழ் என்பதனைச் சீரிதழ் எனவும், ஆ.சிவசுப்பிரமணியன் சிறுதெய்வம் என்பதனைக் கொலையில் உதித்த தெய்வமெனவும் வழங்கலாகின்றனர். யாதொரு அமைப்பு சார்ந்தும் வெளிவரும் இதழ்கள் சிற்றிதழ் வகைமைப்பாட்டின்பாற் பட்டடங்க மாட்டா.

ஏனெனில் சிற்றிதழ் என்றாலே நிறுவன மயமாகா, நிறுவன எதிர்ப்புத் தன்மை கொண்ட இதழ்களையே சுட்டி நிற்ப தொன்றாகும். மற்றும் சிற்றிதழ் என்றாலே அவை மாற்றுக்களைத் தேடும் மனோபாவங்கொண்டனவே. போன வழியே போகாமல் சோதனை அடிப் படையில் பாதமிதியாத் தளங்களின் மீதும் கன்னிச்சுவடு பதிப்பனவே. தீவிர முனைப்பு, சோதனைப்பாங்கு, நிறுவன எதிர்ப்பு, ஆவணப்பாடு, பன்முகப் பரிமாணம், சமூக ஓர்மை இன்னபிற யாவும் சிற்றிதழ்ப்போக்கின் ஆக்கக் கூறுகளாகும். கா.சிவத்தம்பி விதந்தோதி விளக்கிச் சொல்லும் அம்சங்கள் சில இங்கே அவதானிக்கத் தக்கனவாம்.

“மக்கள் இலக்கியம்  எனும் கோட்பாடும், வெகுசன இலக்கியம் எனும் கோட்பாடும் பிரித்தறியப்பட வேண்டியன வாகும். வெகுசனப்பண்பாடு  முதலாளித்துவத்தின் சிசு. அது நுகர்வு முறைமையின்  வெளிப்பாடு... சனரஞ்சக வாதத்துக்கு சனவிருப்பு  வாதத்துக்குமான வேறுபாட்டை இன்னும் தான் நமது எழுத்தாளர்களும் பத்திரிக்கையாளர்களும் நன்கு விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை'' (ப.46-33)

வ.ரா. காலத்தில் ஓர் ஆக்க இலக்கியச் சஞ்சிகையாகவும் அதே வேளையில் கருத்துரைச் சஞ்சிகையாகவும்  மணிக்கொடி நடத்தப்பட்டதெனவும், சமூக நேர்மையுடமை, இலக்கிய ஆழத்துடனும், தரமலினத்துக்கு இடங் கொடுக்காமலும் மணிக்கொடி குழுவினர் எழுதினரெனவும், விகடன் உருவகப்படுத்தி நின்ற சனவிருப்பு இலக்கிய நோக்கினை வன்மையாகக் கண்டித்தனர் எனவும் குறிப்பிடுவார். (ப.47-45)

'பட்ங் கண்ற்ற்ப்ங் ஙஹஞ்ஹக்ஷ்ண்ய்ங்' என்றே ஓர் ஆங்கிலச் சிற்றிதழும் வெளிவருகின்றது. ஆங்கில இலக்கியக் கையேடு ஒன்று சிற்றிதழ் என்பதனை எவ்வாறு வரையறுக் கின்றது எனக் காண்போம் .

புதுமைப்பித்தன் தாம் நடத்த விரும்பிய இதழிற்கென வைத்திருந்த பெயர்கூட "சோதனை' என்பதே. இத்தகைய சோதனை அம்சமே சிற்றிதழ்களின் முகாமையான அடையாளமாகத் தொடர்ந் திடக் காணலாம்.

“மணிக்கொடியின் மனப்பான்மை புரட்சி; வாழ்க்கையிலும், சமூகத்திலும், ரசனையிலும் புரட்சி "புராண மித்யேவ நசாது சர்வம்' (பழைமையானது என்பதனாலேயே எதுவும் சிறந்ததென்பதற் கில்லை) என்று காளிதாசன் சொன்னதுதான் அதன் கொள்கை'' என்பார் கு.ப.ரா.

(அடுத்த இதழில்...)

Pin It