தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டி லிருந்து ரயில்வே ஸ்டேஷன் போகிற வழியில் ஆற்றுப் பாலத்திற்கு முன்னதாக ஒரு சின்னஞ்சிறு கடை. வெளியே வெயில் மறைப்புக்கு ஒரு படுதா தொங்கும்.அதுதான் ஆசானின் ரப்பர் ஸ்டாம்பு கடை.கடையில் எப்போதும் கூட்டம் இருக்கும். அவர்கள் ரப்பர் ஸ்டாம்புக்கு ஆர்டர் கொடுக்க வந்தவர்களோ வாங்கிப் போக வந்தவர்களோ அல்ல.அவர்களை உற்றுப் பார்த்தால் எழுத்துலகின் ஓரிரண்டு பிரபலங்களும் உங்கள் கண்களில் படக்கூடும்.

வியாபார ஸ்தலமான அந்தக் கடையில் உட்கார்ந்து,வியாபார விரோதமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த பலர் அங்கே இருந்தார்கள்.இத்தகைய கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் அங்கிருந்த புராதனமான மேசையில் உட்கார்ந்து கொண்டிருந்த அக்கடையின் முதலாளியாக அறியப்பட்ட ஆசான் ஆவார்.பெரிய வழுக்கை. பெரிய கண்கள். கன்னங்கரேல் என்ற தாடி

அந்தக் கடையைத் தாண்டித்தான் என் அலுவலகம் போக வேண்டும்.என்னுடைய மதிய உணவு இடைவேளை களும் மாலைப்பொழுதுகளும் அங்கேதான் கழிந்தன.ஆசானுடைய இலக்கியப் பேச்சைக் கேட்பதற்கும் இலக்கிய வாதிகளை சந்திப்பதற்குமான கூடுதுறையாக அந்தக் கடை விளங்கியது. இந்தக் கதை ஆசானைப் பற்றியது அல்ல. ஆசானின் இலக்கியக் கும்பலைச் சேர்ந்த எஸ்.கே.யைப் பற்றியது.

ஆசான் இல்லாத சமயங்களில் எஸ்.கே.தான் கடையை நிர்வகித்து வந்தார்.அதாவது அவருக்குப் பதிலாக கல்லாவில் உட்கார்ந்திருப்பார். அவ்வளவு தான்.

ஆள் பார்ப்பதற்கு ஒல்லியாக கருப்பாக இருப்பார்.டெரிகாட்டன் வேட்டி.வெள்ளை அரைக்கைச் சட்டை.பெரும்பாலும் மௌனம்.கையில் எப்போதும் சிகரெட் புகையும். அசப்பில் முகம் வள்ளலார் மாதிரி இருக்கும்.

ஆன்மிகம்,தத்துவம் பற்றிய பேச்சில் தானாக வந்து கலந்து கொள்வார். சித்தர்கள், யோகிகள், சித்து வேலைகள் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருந்தார். பெரும்பாலும் ஆசான் இல்லாத சமயங்களில் எஸ்.கே.யின் அமானுஷ்ய உலகத்தில் நாங்கள் சஞ்சரிப்போம்.

"சாமியார்கள், மாயமந்திரங்கள் பற்றியெல்லாம்அவரிடம் ரொம்பப் பேசாதே. தான் மாட்டிக் கொண்டது போதாது என்று உன்னையும் மாட்டி வைத்துவிடப் போகிறார்...''என்று ஒருமுறை ஆசான் என்னிடம் சிரித்தபடி சொன்னார்.

ஒரு மாதமாக எஸ்.கே.யை கடைப் பக்கம் காணோம்.ஒரு நாள் கடை வாசலில் வேகமாக வந்து நின்ற ரிக்ஷாவில் இருந்து எஸ்கே.இறங்கினார்;ஆளே மாறிப் போயிருந்தார்! ரிக்ஷாவுக்குள் தாடியும் மீசையும் அழுக்கு காவிப் போர்வையுடன் ஒரு உருவம் கை ஆட்டியது சிரித்துக் கொண்டே. அப்பப்பா அந்த உருவத்தின் கண்கள் அப்படியே தணல்போல் ஜொலித்தன.

எஸ்.கே.யைப் பார்த்ததும் ஆசான் கேட்டார்.

"என்ன நேரா ரிஷிகேசத்திலிருந்து வராப்பலயா?''

எஸ்.கே. பேசும் நிலையில் இல்லை. அவர் கால்கள் தள்ளாடின.

நேராக கடைக்கு உள்பக்கம் போய் விட்டார்!

எஸ்.கே.யிடம் புதிதாக ஒரு பழக்கம் தொற்றிக் கொண்டிருந்தது. கை நடுங்க ஒரு வெள்ளை மாத்திரையை டீயோடு சேர்த்து விழுங்குவார். நான் கவனித்தால் சிரிப்பார்.

"வெள்ளைக்குதிரை சவாரி'' என்று சொல்லி சிரிப்பார்.சமீபகாலமாக எஸ்.கே. மிகுந்த யோசனைகளில் மூழ்கியவராக காணப் பட்டார். யாரோடும் பேசுவதில்லை. திடீரென்று ஒரு நாள் எங்களிடம் சொன்னார்.

"கும்பகோணத்தில் ஒரு ஸ்து இருக்கிறார். பெரிய்ய மகான். தொழில் என்னவோ பந்தல் போடுவதுதான். ஆனால் ஜீவன்முக்தர். அவரிடம் தீட்சை வாங்கிக் கொள்ளப் போகிறேன். உங்களில் யாருக்காவது தீட்சை வாங்கிக்கொள்ள வேண்டுமானால் என்னோடு வரலாம்! அவர் கற்றுத்தருகிற தியானம் ஏழு படிகளில் அவர் குருநாதர் பச்சைப் போர்வை சுவாமிகளிடம் கற்றுக் கொண்டது...''

நாங்கள் ஆசானிடம் கேட்டோம்.

"இது புதுவிதமான தியானமாகத் தெரிகிறதே! போகலாமா?''

"எழுத்தே தியானம்தானே?'' என்றார் ஆசான்.

"தீட்சை என்றால் காவி கட்டிக் கொண்டு சாமியாராவது என்று நினைத்து விடாதீர்கள்!'' - என்றார் எஸ்.கே.

"ஒரு தடவை உபதேசம் வாங்கிக் கொண்டு தீட்சை பெற்றுக் கொண்டால் தீராத நோயெல்லாம் தீர்ந்துவிடும்.வியாபாரம் செய்யலாம்.ஆபீஸ் வேலைகளைத் திறம்பட செய்யலாம். கவிதை எழுதலாம். காதலிக்கலாம். கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். இந்தக் காரியங்களை சாதாரண மனிதர்களை விட உன்னதமாகச் செய்யலாம்!''

எஸ்.கே.பேசப் பேச எங்களுக் கெல்லாம் சாதுவைப் பார்த்து சீக்கிரம் தீட்சை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஆவல் உண்டாயிற்று.

நாங்கள் ஏழெட்டு பேர் கும்பகோணத்துக்குக் கிளம்பினோம்.எங்களில் பலருக்கு உள்ளூர சாதுவை வேடிக்கை பார்க்கும் ஆவலே இருந்தது.வழியெல்லாம் அனந்து எஸ்.கே.யை கிண்டல் பண்ணிக் கொண்டே வந்தார்.அனந்து மருத்துவக்கல்லூரி மாணவர். இலக்கிய ரசிகர். பொதுவாக சாமியார்கள் என்றாலே அவருக்குப் பிடிக்காது.

"யோகமாவது மண்ணாங் கட்டியாவது! ஏமாற்றுப் பேர்வழிகள்! மனுஷ உடம்பை அறுத்துப் பார்த்தால் தெரியும்! குண்டலினி, பாம்பு என்று சும்மா கதை விடுகிறார்கள்'' என்று சாடுவார். பேருந்தில் எங்கள் பேச்சும் கூத்தும் திமிலோகப்பட்டது.

எஸ்.கே.ஒரு கையால் வாயைப் பொத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அம்மாதிரி சமயங்களில் அவர் புன்னகை செய்கிறார் என்று பொருள். சிரிக்கும் போது அவர் ஒரு பக்க உதடு கோணுவது போல் தோன்றும். ஆகையால் வாயைக் கையால் பொத்திக் கொள்ளுவார். கண்ணைப் பார்த்தால் சிரிப்பது தெரிந்துவிடும்.

பேருந்துக்கு வெளியே பச்சைப் பசேல் வயல்கள்.அதில் கொக்குகள் நடை பயின்றன. காற்றில் சேற்றுமணம்.அய்யம்பேட்டை தாண்டிவிட்டோம்.பண்டாரவாடையில் ஒரு பெட்டிக் கடையில் கைலி கட்டிக் கொண்டு வாழைப்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ஒரு ஆள்.இதற்கப்புறம் காட்சிகள் கட்புலனுக்கு தோன்றினாலும் மனதில் பதியவில்லை. தூங்கியே போய் விட்டேன்.

கும்பகோணம் வந்ததும்தான் விழித்தேன். பூ, வெற்றிலைபாக்கு, ஸ்வீட், பழம், பெப்பர்மிண்ட்டு பொட்டலம் என்று "குருதட்சணை' வாங்கிக் கொண்டு வந்தார் எஸ்.கே.

குறுகலான சந்து.கூரை வீடுகள்.சந்தின் முடிவில் ஒரு குடிசை.குனிந்து தான் உள்ளே நுழைய வேண்டி இருந்தது.

கயிற்றுக் கட்டிலில் சாது உட்கார்ந்து கொண்டிருந்தார்.நரைத்த வெண்சிகை தோளில் புரண்டது. இறுகக் கட்டிய வேட்டி மேல்துண்டு கூட இல்லை. கரணை கரணையான உடம்பு. முகம் செதுக்கி வைத்த மாதிரி இருந்தது.

"வாங்க'' என்றார்.

வாங்கி வந்த பூ,பழம்,பெப்பர்மின்ட் பொட்டலம் எல்லா வற்றையும் அவர் முன்னால் வைத்து எஸ்.கே. விழுந்து வணங்கினார். நாங்கள் வெறுமே வேடிக்கை பார்த்தோம்.

சாது அவரை ஒருமுறை உற்றுப் பார்த்தார்.பிறகு எங்கள் ஒவ்வொரு வரையும் பற்றி விசாரித்தார்.

அவர் உட்கார்ந்திருந்த கட்டிலைச் சுற்றி என்னென்னவோ சீசாக்கள்.எங்கு பார்த்தாலும் விசித்திரமான மருந்து நெடி.

சாதுவின் கண்கள் ஈட்டி மாதிரி எங்கள்மீது பாய்ந்து பாய்ந்து திரும்பின. குரலில் என்ன ஒரு காத்திரம்.

"ஒளி உடம்பு பெற்றுக் கொள்ள வந்துவிட்டீர்கள். உங்களுக்குக் கொடுப்பதற் காகத்தான் என்னை உட்கார்த்தி வைத்திருக்கிறது.ஆனால்யாருக்கு எப்போது கொடுக்க வேண்டுமென்று நான் தீர்மானிப்பது கிடையாது.உங்களில் யாருக்காவது இப்போது தீட்சை கிடைக்க வில்லை என்றால் வருத்தப்படாதீர்கள்...''சாது எதற்காக அப்படிச் சொன்னார் என்று புரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது.

அன்று எங்கள் ஒவ்வொருவருக்கும் தீட்சை கொடுத்தார்.காதருகே மந்திரம் போல் ஏதோ முணுமுணுத்தார்.பிருஷ்டத்தி லிருந்து பிடரிவரைத் தொட்டு நீளமாக நீவிவிட்டார். உடம்புக்கு உள்ளே இருந்து

மின்னல் போன்று ஏதோ ஒரு நரம்பை உருவி எடுத்த மாதிரி இருந்தது.

சாது சொன்னார்:

"உங்களுக்கு எல்லாம் ஒளி உடம்பு ஏற்பட்டுவிட்டது! இனி நீங்கள் நான் ரகசியமாகச் சொல்லிக் கொடுத்ததை அப்பியாசம் பண்ணிக்கொண்டு இருங்கள்!தலைக்கு நல்லெண்ணெய் வைத்துக் கொள்ளாதீர்கள்!உங்கள் மரணம் மரணமாக இருக்காது என்பதால் சொல்லுகிறேன்! இதுவரை படித்ததை எல்லாம் தூக்கிப் போட்டுவிடுங்கள்...''

சாது பேசியது புரிந்தமாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது. அவருடைய பேச்சும் செயலும் எங்களை பெரும் திகைப்பில் ஆழ்த்தியது என்னவோ நிஜம்!

எங்களுக்கு எல்லாம் இன்னொரு பெரிய ஆச்சரியம்!எஸ்.கே.க்கு சாது தீட்சை கொடுக்கவில்லையே ஏன்? ஆசான் கேட்டேவிட்டார்.

சாது சிரித்தார். எஸ்.கே.யைப் பார்த்தார். மௌனமாக இருந்தார். ""இப்போது வேண்டாம்'' என்று மெதுவாகச் சொன்னார். எஸ்.கே.யின் முகத்தில் ஈயாட வில்லை.

இந்த சம்பவத்துக்குப் பிறகு எஸ்.கே.மேலும் சிலரை அழைத்துக் கொண்டு சாதுவைப் பார்க்கப் போனதாகவும் சாது எஸ்.கே.யைத் தவிர்த்து மற்றவர்களுக்கு மட்டும் தீட்சை அளித்ததாகவும் கேள்விப்பட்டோம்.

அனந்துவை அதற்கப்புறம் இரண்டு மூன்று தடவை பார்த்தேன்.கையில் என்னவோ பிளாஸ்டிக் பை. அவரிடம் என்னவோ மாறுதல் தெரிந்தது. என்ன மாறுதல் என்று சொல்ல முடியவில்லை.

"சத்குருவைப் பார்த்துவிட்டு வருகிறேன்'' என்றார் அமைதியாக. கழுத்தில் "ஸ்டெத்' தொங்கியது.

"யாரை? அந்த கும்பகோணம் சாது சாமியாரையா?''

அனந்து தலையாட்டினார்.யோகாப் பியாசம் தொடர்ந்து செய்கிறார் என்று தெரிந்தது. என்னால் முடியவில்லை.சாது சொன்ன மாதிரி எவ்வளவு நேரம் உட்கார்ந்து மந்திரம் சொல்லியும் எதுவும் எனக்குள் நிகழவில்லை. அதில் ஆர்வம் விட்டுப்போய் விட்டது.

திடீரென்று என்னை சென்னைக்கு மாற்றிவிட்டார்கள்.குடும்பத்தோடு போனவன்தான். ஆசானோடு கொஞ்ச நாள் கடிதப்போக்குவரத்து இருந்தது.எஸ்.கே.பற்றி ஆவலோடு விசாரித்து எழுதுவேன். இருக்கிறார். உன்னை ரொம்ப விசாரித்தார் என்று பட்டும்படாமலும் பதில் வரும்.

ஒரு நாள் என் அலுவலக முகவரி இட்டு என் பெயருக்கு ஒரு கார்டு வந்திருந்தது. சரியான முகவரி எழுதாததால் எங்கெங்கோ சுற்றியதற்கு அடையாளமாய் ஏகப்பட்ட தபால் முத்திரைகள்.அழுக்குக் கார்டு.கிறுக்கல் வாக்கியங்கள்.எனக்குப் பரிச்சயமில்லாத கையெழுத்து. அசுவாரசிய மாகப் படித்தேன்.

"சத்குரு சொன்னபடி யோகம் செய்து வருகிறீர்களா? எத்தனாவது படியில் இருக்கிறீர்கள்? உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் சொல்ல வேண்டும். ரகசியம். நம்முடைய ஆன்மிகப் பயிற்சி சம்பந்தப் பட்டது. உடனே புறப்பட்டு வரவும்... உங்கள் பிரியமுள்ள எஸ்.கே.''

தபால் அட்டையின் அஞ்சல் முத்திரையை கூர்ந்து கவனித்தேன்.தஞ்சாவூரில் மூன்று மாதங்களுக்கு முன்னால் தபாலில் சேர்க்கப்பட்டிருந்தது.

எனக்கு எஸ்.கே.யை உடனே சந்திக்க வேண்டும்போல் இருந்தது.அந்த சமயம் பார்த்து அலுவலக விஷயமாக தஞ்சாவூர் வரை உடனே போய்வர முடியுமா என்று அலுவலகத் தலைவர் கேட்டபோது உற்சாகமாகத் தலை யாட்டினேன்.

எஸ்.கே.யை சந்திக்கலாமே!

பேருந்தில் சன்னலோர இருக்கை கிடைத்தது. கும்பகோணத்தை நெருங்கிய

போது பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து கொண்டன. பேருந்து வழக்கமாகச் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து திரும்பி கும்பகோணத்தின் தெருக்களின் வழியே சென்று கொண்டிருந்தது. பிரதான நெடுஞ் சாலையில் என்னவோ வேலை நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று எனக்குள் ஒரு பரபரப்பு.அதோ அந்தத் தெருமுனை எனக்குப் பரிச்சயமானதுபோல் இருந்தது!அடடா,இதன் வழியாக அல்லவா ஸ்து வசிக்கும் தெருவிற்குப் போக வேண்டும்!

தெருமுனையில் அந்தப் பெட்டிக் கடை!அங்கே கடை ஓரம் நெருப்பின் கனலுடன் தொங்கிய கயிற்றில் சிகரெட் பற்றவைப்பது... சாட்சாத் எஸ்.கே. தான்!

அதே வெள்ளை அரைக்கைச் சட்டை. டெரிகாட்டன் வேட்டி. அகன்ற முன் வழுக்கையில் அது என்ன காயம்? பழைய காலணா அளவுக்கு சிவப்பாக தோல் பிய்ந்து... அடடா கூப்பிட எத்தனிப்பதற்குள் பேருந்து வேகம் எடுத்து நெடுஞ்சாலையை அடைந்து விரைந்தது.

தஞ்சாவூர் போனதும் முதல் வேலையாக ஆசானைத் தேடிக் கொண்டு போனேன்!கடை பூட்டிக் கிடந்தது!

பஸ் ஸ்டாண்டில் விச்சுவைப் பார்த்தேன். பரஸ்பரம் விசாரித்தபின் கேட்டேன்.

"விச்சு! என்ன கும்பகோணம் ஸôது கடைசியாக நம்ம எஸ்.கே.க்கு தீட்சை கொடுத்து விட்டாரா?''

விச்சு பேசுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார்.

"உனக்கு விஷயம் தெரியாதா?''

"என்ன?''

"எஸ்.கே. செத்துப் போய்விட்டார்!''

எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

"போதைப்பழக்கம் அளவுக்கு மீறிப் போய் மாடிப்படியில் தடுமாறி விழுந்து நெற்றியில் காயம்பட்டு - போய் விட்டார்!''

மறுபடியும் உடம்பு சொடுக்கியது.

"எங்கே காயம்பட்டது என்று சொன்னீர்கள்?''

"ஏன்? நெற்றியில்தான்! நானே பார்த்தேன்! அப்படியே காலணா அளவுக்கு ரத்தக்காயம்!''

மணிக்கூண்டுப் பக்கமிருந்த பூங்காவில் காக்கைகளின் கூச்சல் சகிக்க முடியவில்லை.

அன்று சாயங்காலமே வேலையை முடித்துக் கொண்டு ஆசானைப் பார்க்க ஓடினேன். நடந்ததைச் சொன்னேன்.

ஆசான் தாடியை நீவியபடி மெல்லச் சொன்னார்.

"எல்லாம் உன் பிரமை! ஹலுசினேஷன்! சாதுவின் வீட்டிற்குச் செல்லும் தெரு! எஸ்.கே.யை சந்திக்கும் துடிப்பு! எல்லாம் சேர்ந்து உன் உள்மனம் சிருஷ்டித்த மாயக்காட்சி!''

"அப்படியும் சொல்வதற் கில்லையே! அந்த நெற்றிக்காயம்!''

"நீ சொல்வது உண்மையோ, கற்பனையோ. ஆனால் ஒன்றை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்! எஸ்.கே. செத்துப் போய் ஆவியான பிறகும் அங்குதான் சுற்றிக் கொண்டிருப்பார்! ஏனென்றால் சாது கடைசிவரைக்கும் எஸ்.கே.க்கு தீட்சை கொடுக்கவில்லை!''-என்றார் ஆசான்.

டீ ஆறிப் போயிருந்தது. நான் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தேன். 

Pin It