தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் "கி.ரா.'என்று அழைக்கப்படும் கரிசல் காட்டு கதை சொல்லி கி.ராஜநாராயணன். மானம் பார்த்த பூமியான இடைச்செவலில் (கோவில்பட்டி அருகிலுள்ள சிற்றூர்) பிறந்தவர், இப்போது 90 வயதில் நிறைந்த மகிழ்வோடு புதுச்சேரி அரசின் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசதி இல்லாதவராகத்தான் தன் இல்லத் துணைவியார் கணவதி அம்மாளுடன் வசித்து வருகிறார்.வெக்கை மிகுந்த கரிசக்காட்டு மண்ணை விலாவாரியாக எழுத்தில் படம் பிடித்துக் காட்டிய முதல் மனிதர் இவராகத்தான் இருப்பார்.

"மக்கள் தமிழ் வாழ்க' என்று மக்களோட மொழிக்கு ஜே போட்டவர் கி.ரா. சொலவடைகளும், பழமொழிகளும்,மண் மணமும் வீசும் எழுத்து இவருக்கு தண்ணீர் பட்டபாடு. மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்;அப்படி ஒதுங்கிய போதும் கூட மழையையே பார்த்து ரசிச்ச மனசுக்குச் சொந்தக்காரர். புதுவை பல்கலைக்கழக சிறப்புப் பேராசிரியராக பணிபுரிய நேரிட்டது, நாட்டுப்புற இயலின் இயக்குநராக இருந்தது, இவரது வாழ்வியலின் இரண்டாம் அத்தியாயம்.

ஒவ்வொரு ஆண்டும், தனது பிறந்த நாளன்று தன் வாசிப்பில்,ஆகச் சிறந்ததாகக் கருதும் ஒரு சிற்றிதழுக்கு,கரிசல் கட்டளை விருதும் 5000ரூபாய் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்து வருகிற இவரை நேர்காணல் செய்ய வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் அவா. விடாப்பிடியாக அவரை நேர்காணலுக்காக நச்சரித்து வந்தபோதும்,மனுசர் பிடிகொடுக்கமாட்டேன் என்று நழுவியே வந்தார். ஒரு சூழலில் தொலைபேசியில் எங்கள் தொல்லை பொறுக்க மாட்டாமல் "நான் ஏற்கனவே நெறைய நேர்காணல்ல எல்லாத்தையும் சொல்லிட்டேனே' என்றவரை, "எங்களிடம் உங்களுக்கு கேட்க நிறைய கேள்விகள் இருக்கே' என்று மடக்கிப் பிடித்த போது, "சரி, ஒன்னு செய்யுங்க. நீங்க கேக்க விரும்புற கேள்விகளை தபால்ல எழுதி அனுப்புங்க.

எனக்கு சரின்னு பட்டா பதில் சொல்றேன்'  என்று ஒரு வழியாக வழிக்கு வந்தார்.
 உடனே இங்கிருந்து, தபாலில் கேள்விக் கணைகளைத் தொடுத்தோம். கூடவே, ஒரு கடிதம் எழுதினோம்.

"அன்புள்ள கி.ரா.,

கேள்விகளை இணைச்சிருக்கோம்.நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க. புடிக்காத இல்ல ஏற்கனவே நெறைய இடத்துல பதில் சொன்ன கேள்வியை விட்டுடுங்க. இதுல நீங்க பதில் சொல்ல விருப்பப்படுற கேள்விகள் இருந்துச்சுன்னா,எங்களுக்கு எப்போ பதில் கிடைக்கும்னு போன்லயோ, இல்ல கடுதாசி வழியாவோ தகவல் சொன்னா சந்தோஷப்படுவோம். நன்றி''.

என்ன ஆச்சர்யம்!26.05.12-ல் அனுப்பிய கேள்விகளுக்கு 30.05.12-ல் பதில் எழுதி அனுப்பிவிட்டார்.என்ன ஒரு வருத்த மென்றால்,எங்கள் கேள்விகள் நீண்ட நெடியதாய் இருந்தாலும், அவரது பதில்கள் என்னவோ, ரத்தினச் சுருக்கமாகவே அமைந்திருந்தன. இனி நீங்கள் படிக்கப் போவது, நேர்காணலுக்காக நாங்கள் அனுப்பிய கேள்விகளையும், அதற்கு அவர் அனுப்பிய பதில்களையும்...

கேள்வி விடுத்தோர் :

பாண்டியன், பரிதி

நாற்பது ஐம்பதுகளில் புதுமைப்பித்தன்,கு.அழகிரி சாமி,ஜெயகாந்தன் முதலியவர்களின் சிறுகதைகளில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது. கதைகள் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் பட்டது. அதன் மூலம் வாசக மனம் விசாலப்பட்டது. ஆனால் இன்றைய சிறுகதைகளில் கதைகள் காணாமல் போய் விட்டதே,இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எவையும் ஏதோ ஒரு செய்தி சொல்ல வருபவைதான். சொல்லத் தெரியாததும் முடியாததும் கூட ஒரு செய்தி தான். திரும்பவும் குழாயில் தண்ணீர் வரும்.

உங்கள் கதைகளில் சாதிய உணர்வு தூக்கலாகத் தெரிகிறதே.அது குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

எனது சாதியே உசந்தது, சிறந்தது என்று அதில் நான் சொல்லியிருந்தால் தவறுதான்.

சீக்கிரம் ஒரு கதை அனுப்பவும் என்ற இதழாசிரியர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்திருக்கிறீர்களா?

செவி சாய்ப்பதும் உண்டு.

உங்களுடைய கதைகளில் வரும் சம்பவங்கள் திரைப்படங்களில் சிற்சில மாறுதல்களுடன் வரும்பொழுது உங்கள் மனநிலை என்ன?

என் எழுத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் இவர்கள் என்று நினைத்துக் கொள்வதோடு சரி.

உங்கள் கரிசல் மண்ணின் வார்த்தைகளை பயன்படுத்தி எழுதும் பிற மண்ணின் எழுத்தாளர்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?(எடுத்துக்காட்டு: வெள்ளந்தியான, சொலவடை).

வார்த்தைகள் எங்கே பிறந்தால் என்ன? போய்ச் சேர்வது என்னவோ மக்கள் என்கிற கடலில் தானே!

பிராமண வாடையுடன் இருப்பதுதான் தஞ்சை மண்ணின் மணம் என்று சிலர் எழுதுவது, பேசுவது குறித்து உங்கள் எண்ணம் என்ன?

அவரவர் வீட்டுச் சாப்பாடு, அவரவர்களுக்கு ஒஸ்தி தான்.

இன்றைய நவீன எழுத்தாளர்கள் பலர் எப்போதும் உளவியல் சிக்கலில் மாட்டிக் கொண்டது போலவே எழுதுகிறார்களே, இது சரிதானா?

எல்லாத்துக்கும் மூலம் மனம்தான். அது பண்ணுகிற கூத்துதான் எல்லாம்.

மாயா எதார்த்தவாத, பின் நவீனத்துவ, உள பிறழ்வு, மிகைப் பாலியல் வக்கரிப்பு எழுத்துக்கள் உங்களைப் போன்ற எழுத்தாளர்களை வெளியேற்றிவிட்டது. புதிய, இளைய எழுத்தாளர்களை நுழைய விடாமல் தடுக்கிறது என்பது குறித்து...

யாருடைய சாப்பாட்டையும் யாராலும் பறிக்க முடியாதுவே;ஒவ்வொரு அரிசியிலும் அதைச் சாப்பிடப் போகிறவனின் பெயர் இருக்கும் என்பார்கள்.

நவீன கதை, கவிதைகளின் இறுக்கம், புரியக் கூடாது என்றே எழுதுவது, அறிவு ஜீவித்தனம் இவைகள் குறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன?

புரியாது என்றால் விட்டுவிடலாமே.பூமியில் முளைப்பதெல்லாம் சாப்பிடத் தான் என்ற கட்டாயம் இல்லை.

ஒரு பக்கம் மண் சார்ந்த எழுத்து, வழக்குச் சொற்கள், மக்கள் தமிழ் வாழ்க என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள். மறுபக்கம் தமிழ்மொழி, தமிழினம், தமிழ் தேசியம் எனப் பெருமித உணர்வு மீண்டும் தோற்றம் கொண்டிருக்கிறது.நீங்கள் இருவரும் இணக்க முடையவர்களா, முரண்பாடுடை யவர்களா?

பெருமித உணர்வில் ஒரு ஆனந்தம் உண்டு.அதுவே மிகின் நல்லதல்ல.சிக்கல் மனசு, சிக்கலையே தேடும்.

வாழ்வின் ஓர் அங்கமாய் இருக்கிற பாலியல் தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால், பாலியல் மட்டுமே வாழ்க்கை என படைப்புக்களைத் தரும் எழுத்து வகை சரிதானா?

அது மட்டுமே என்று நான் சொன்னது இல்லை ஒரு போதும்.அதும் ஒரு வயிறு போலத்தான் என்றுதான் சொல்கிறேன்.எல்லா உயிர்ராசிகளுக்கும் இரண்டு வயிறுகள் உண்டு.

நாடறிந்த,மிகப் பெரும் வாசகப் பின்புலம் மிக்க உங்களால் ஒரு இதழ் "கதைசொல்லி' நடத்த தடுமாற்றம் நேர்கிறதே, ஏன்?

இதில் வியப்பேதும் இல்லை. இவை, அவை, அப்படித்தான்.

"நலம் நலமறிய அவா' என்று பேசிய கடிதங்கள் அருகிய நிலையில் கடித இலக்கியம் குறித்து நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

வடிவம் மாறினாலும் கடிதம் என்பது இருந்து கொண்டேதான் இருக்கும்.

நீங்கள் ஒரு காலத்தில் தீவிரமான கம்யூனிச ஆதரவாளராய் இருந்தவர்.இன்றைய கம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஏன்,இப்போவும் நான் ஒரு தீவிரவாதி தான் (பயங்கரவாதியல்ல).நடைமுறை, செயற்பாடுகளினால் கருத்துக்கள் மாறுவதும், சேருவதும் சகஜமே.

இங்குள்ள பொதுவுடைமையாளர்கள் ஈழம் மற்றும் அணு உலை பிரச்னைகளில் எடுத்துள்ள நிலைப்பாடுகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

ஈழம் வேண்டும்; மின்சாரம் வேண்டும். இவை பற்றி ஒரு சுருக்கமான கேள்வி பதிலில் விவரிக்க இடமில்லை.

Pin It