நையாண்டி தர்பார் நடத்திய நகைச்சுவை மன்னன்!

 ஜஸ்பால் பட்டி (Jaspal Batti)! அப்பாவியும் வெள்ளந்தியுமான பஞ்சாபி முகம்! குறும்பு எட்டிப்பார்க்கும் கண்கள்!தொலைக்காட்சி யுகத்தின் கறுப்பு வெள்ளைக் காலத்தில் ஜஸ்பாலின் நையாண்டி தர்பாரை கண்டு கேட்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது!

அரசு தொலைக்காட்சியிலேயே அரசாங்கத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிண்டலடித்தவர் அவர்! எளிய இந்தி மொழி வசனங்களில் நக்கலும் நையாண்டியும் சுளீர் சுளீர் தான்!

ஓர் சிறிய குழுவை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியின் அரை மணிக்கூரில் கூரான விமர்சனங்களோடு குறையாத எள்ளல் சுவையைத் தந்து காணொலி நேயர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜஸ்பால்பட்டிக்கு ஓர் முட்டாள் வாகனம் முடிவைத் தந்தது!

ஆம்! ஜஸ்பால் பூவுலகைப் பிரிந்திருக்கிறார்! ஒருக்கால் எமலோகம், சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் இருக்குமானால் அங்கும் தொடரும் சீக்கிய சிங்கத்தின் சிரிப்பு மழை!

நல்ல ரசிகர்களின் ரசனையின் நினைவுகளில் உங்கள் நையாண்டி தர்பார் நீண்ட நாள் வாழும் ஜஸ்பால்!வழக்கமாக கண்ணீரோடுதான் வழியனுப்பி வைப்போம். உங்களை மட்டும் சிரித்தபடி அனுப்பி வைக்கிறோம்!

(பி.கு.) ஒருவேளை வானுலகில் நரசிம்மராவை சந்தித்தால் சிரிக்க வைக்க முடியுமா! முயற்சியுங்கள் ஜஸ்பால். All the Best!

படித்ததில் பிடித்தது! சிலம்பம் ஆடும் சலம்பகம்!

நண்பர் உதயக்கண்ணன் ஓர் நடமாடும் மின்னல்!திடீரென அலுவலகம் வருவார்!சில நூல்களைத் தருவார்! சென்று விடுவார்!

சென்ற வாரம் தந்ததில் வித்யாசமான வடிவமைப்பில் சலம்பகம் 4, 5, 6 என்னும் தொடர் தொகுப்புகள்! படைப்பாளி அரவிந் அப்பாசாமி! பிரான்சில் வசிக்கிற ஈழந்தமிழரின் உரைகவித் தொகுப்புகள்!

வாசிக்க வாசிக்க சுவையூட்டும் கவிதை ஊறிய உரைத்துண்டங்கள்!சின்னச் சின்ன சிந்தனைப் பதிவுகள்!

"தமிழகத்தில் எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும்
அழுகை சத்தம் கேட்கின்றது
இரவு பகலாக அழுகை சத்தம் கேட்கின்றது
டி.வி. சீரியல்களை ஓடவிட்டு, அதில் அழும்
பெண்களின் குரல் தெறிக்கும் தரித்திர ஓசைகளால்
தம் இல்லத்தை நிரப்பிக் கொண்டு வாஸ்து,வாஸ்து என்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?
வீட்டில் ஓயாமல் அழுகை சத்தம் கேட்கக்கூடாது... அது டி.வி. யிலிருந்து வந்தாலும் சரி
ரேடியோவிலிருந்து வந்தாலும் சரி
கணினியிலிருந்து வந்தாலும் சரி''.

எளிய எள்ளலை,மெல்லியக் கவி மணம் வீசும் உரையை ரசிப்பவர்கள் ""சலம்பகம்'' படிக்கலாம்!

"சலம்பகம்' - கவிதைகள்
அரவிந் அப்பாதுரை
வெளியீடு
பாலம் பதிப்பகம்
25, அபிராமி அபார்ட்மெண்ட்ஸ்
3வது பிரதான சாலை
தண்டிஸ்வரர் நகர்
வேளச்சேரி, சென்னை-42.

Pin It