"ஜீ... வணக்கம்''

"அடடே... வாங்க தம்பி. நல்லா இருக்கீங்களா?''

"இருக்கேன்ஜீ. சமீபத்தில நீங்க எழுதி பிரசுரமாகியிருந்த கதையை படிச்சேன். கதையைவிட அந்தக் கதைக்கு கொடுத்திருந்த ஓவியம் படு ஜோர்''.

"ஹி ஹி ஹி...''

"அடுத்து நீங்க எழுதப்போற கதை என்னஜீ?''

"பிராமிஸ்''

"அதுவும் எ சர்ட்டிபிகெட் கதை தானா?''

"இப்ப அது மாதிரி கதை தானுங்களே வாசகர்கள் விரும்பி படிக்குறாங்க''.

"உங்க காட்டில தான்ஜீ விடாம மழை பெய்யுது''.

"கண்ணு வைக்காதீங்க தம்பி''."வயசுக்கு தகுந்த மாதிரியா கதை எழுதுறீங்க?''

"இளவட்டத்திற்கு பிடிக்கிற மாதிரி எழுதவேண்டாமா தம்பி''.

"அது சரி. அப்ப நான் தொடங்கப் போற இதழுக்கும் அதுமாதிரி கதை ஒன்னு எழுதித் தாங்கஜீ?''"என்ன சொல்றீங்க தம்பி. நீங்க இதழ் ஆரம்பிக்க போறீங்களா?''

"ஏன் கூடாதா?'' "அடடே... என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. தாராளமாக ஆரம்பிங்க. என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்''

"நன்றிஜீ. வாழ்த்துக்கள் மட்டும் போதாது. உங்க படைப்புகளையும் தந்து உதவணும்''.

"நான் அடுத்து எழுதப்போற கதைய உங்க இதழுக்கே தந்திடுறேன். ஆமாம்... நீங்க ஆரம்பிக்கிற இதழ் வார இதழா? மாத இதழா?''

"வார இதழ்''. "இலட்ச கணக்குள முதலீடு போடணுங்களே''.

"போட்டாலும் ஒரு வருசத்துல போட்ட முதலீட எடுத்திறலாம்ஜீ''.

"தமிழ்நாட்டுல இருக்கிற வார இதழ்கள் போதாதுனு உங்க இதழ் பேறா?'

"நம்ம இதழ் முற்றிலும் மாறு பட்டது''.

"எப்படி?'' "பல உண்மைகளை உடைச்சி காண்பிக்கப் போகும் இதழ்''. "அரசியல் இதழா?''

"ஊகூம்''

"பின்னே?''

"விளம்பர இதழ்''.

"என்னது விளம்பர இதழா? என்ன சொல்றீங்க தம்பி...?''

"ஆமாம்ஜீ. இன்றைய பெட்டிக் கடைகளில தொங்கும் அத்தனை வார இதழ்களுமே விளம்பரமில்லாம இயங்கு வதில்லைங்களே....''

"அதனாலே...?''

"முழு விளம்பர இதழா கொண்டு வரலாமுனு இருக்கேன்''.

"விளம்பர இதழா? நீங்க சொல்றது நல்லா தெரியலையே''.

"விளம்பர இதழ்னா முழுக்க விளம்பரமே கிடையாது. இடையிடையே குட்டி கவிதை, குட்டி சிறுகதை, குட்டி ஜோக்ஸ், குட்டி கட்டுரை எல்லாம் இடம் பெறும்''.

"போடுறதுதான் போடுறீங்க. அது என்னது குட்டி? பெரிய படைப்பா போடுங்களே தம்பி''.

"ஜீ. குட்டினா இத்துனூண்டுனு அர்த்தம் கிடையாது''.

"பின்னே?''

"நீங்க எழுதுறீங்களே அது மாதிரியான படைப்புக''.

"ஹி, ஹி, ஹி... நீங்க சொல்றது நல்லா இருக்கு தம்பி''.
 "".................'' அட்டைப்படத்தை எப்படி கொண்டு வரலாமுனு இருக்குறீங்க?''

"நம்மளது விளம்பர இதழ், அதனாலே ஒரு நடிகையோ, நடிகரையோ அட்டைப்படமா கொண்டு வந்தா பத்தோட பதினொன்னு, அத்தோட இது ஒன்னு ரகமாகிவிடும்''.

"அதனாலே...?'' தமிழ்நாட்டுல இருக்கிறயாராவது ஒரு பிரபலமான பெண் எழுத்தாளரை அட்டைப்படமா கொண்டு வரலாமுனு இருக்கேன்''.

"அவனவன் த்ரிஸ், நமீதானு போடுறான். நீங்க என்னடானா எழுத்தாளருடைய படத்தைப் போடுறேனு சொல்றீங்களே...''

"ஜீ அவங்களோட முழுபடத்தையும் போடப்போறதில்ல''

"பின்ன?''

"இப்ப உள்ள வாசகர்களை வசீகரிக்கிற மாதிரி கழுத்து, மார்போட நிறுத்திக்கிறலாமுனு இருக்கேன்''.

"எழுத்தாளர் ஒத்துக்கிறணுமே''.

"முகத்தைப் பார்த்து அடையாளம் கண்டுப்பிடிக்க முடியாதளவிற்கு தலையை உள்பக்கமா திருப்பி பின்புறம் மட்டும் தெரியுற மாதிரி....''

"சரிங்க தம்பி. அட்டைப்படம் ஓகே. அட்டையோட உள்படம்?''

"உள்ளாடை விளம்பரம்''.

"எல்லா இதழ்களும் அதைத்தானே போடுறான்க''.

"நான் அதுக்கும் கீழே ஒரு ஹைகூவோ அல்லது ஒரு கவிதையையோ வைக்கலாமுனு இருக்கேன்''.

"இது நல்லா இருக்கே. விளம்பரத்துக்கு எவ்வளவு வாங்கப் போறதா உத்தேசம்?''

"நல்ல விளம்பரங்களுக்கு சன்மானம் கொடுக்கலாமுனு இருக்கேன்''.இது என்னது புதுசா?''

"ஆமாம்ஜீ. நம்மோடது விளம்பர இதழாச்சே''. "அதனாலே?''

"கவிதை, ஜோக்ஸ், சிறுகதை கொடுக்கிறவங்கக்கிட்ட கட்டணம் வாங்கிக்கிட்டு பிரசுரமாக்கலாமுனு இருக்கேன்''.

"இதெல்லாம் நடக்கப் போற காரியங்களா? படைப்புகள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்''.

"அப்படியெல்லாம் சொல்லா தீங்கஜீ. உங்களுக்கு தெரியாததில்ல. தமிழ்நாட்டுல கவிதை படிக்கிறவங்கள விட எழுதுறவங்க அதிகம்''.

"ஆமாம் அதனாலே...?''

"ஆனா இப்ப இருக்கிற இதழ்ங்க பத்து பிரபலமான கவிஞர்களை கையில வச்சிக்கிட்டு அவங்களையே கட்டுரை எழுத வக்கிறதும், நாவல் எழுத வக்கிறதும், பேட்டி கொடுக்க வைக்கிறதும்...''

"நீ என்னய்யா எனக்கும் சேர்த்து உலை வைப்ப போல''.

"ஜீ நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க. பத்து இதழுக்கு பிறகு உங்களையும் அட்டைப்படத்துல கொண்டு வரலாமுனு இருக்கேன்''.

"உங்கள நான் ஒரு விசயத்துக்கு பாராட்டுறேன் தம்பி''.

"என்னதுக்கு ஜீ?''

"இதுவரைக்கும் யாரும் கொடுக்காத முக்கியத்துவத்தை ஒரு எழுத்தாளருக்கு கொடுக்க நினைக் கிறீங்களே...''

"அது மட்டுமல்லஜீ. தமிழ் நாட்டுல இருக்கிற எத்தனையோ இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு வெளியே கொண்டு வரத்தான் போறேன்''.

"சரி, சரி எங்களைப் போல பழைய எழுத்தாளருக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்க''.
"உண்டு ஜீ. ஆனா ஒன்னு''.

"என்ன ஆனா ஒன்னு''.

"நீங்க கதை எழுதுறவரு. கதை மட்டும்தான் எழுதணும். கவிதை எழுதுறேனு வரிகளை மடக்கி மடக்கி எழுதி அனுப்பி வைக்கக்கூடாது''.

"என்ன தம்பி அப்படி சொல்லீட்டீங்க?''

"கவிதை நடையில சிறுகதையோ, நாவலோ எழுதிறேனு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் நானு என் இதழ்ல பிரசுரிக்க போறதில்ல''.

"நீங்க சொல்றத பார்த்தா வளர்ற பிள்ளை மாதிரி தெரியல''.

"வித்தியாசமாக சிந்திச்சிட்டா பொறுத்துக்கிறமாட்டீங்களே''.

"ஹ ஹ ஹ... தம்பி அது இருக்கட்டும். அட்டைப் படத்துக்கு அடுத்து முதல் பக்கம் எப்படி?''
 ""ஒரு நைட்டி விளம்பரம். அதுக்குள்ள தெரியுற மாதிரி ஒரு பக்கா கதை''.

"தம்பி... பக்கா கதை இல்ல. பக்க கதை''.

"ஜீ ஒரு பக்க கதை தான். ஆனா அது பக்கா கதையாக இருந்தாதான் இதழ்ல இடம் பெறும்''.
"ஜோக்ஸ் உண்டுங்களா?''

"சிலேடை ரேஞ்சில இருந்தால் வரவேற்கப்படும்''.

"ரெட்டை அர்த்தத்திலதான் இருக்கணுமா?''

"அப்படியும் இருக்கலாம். இல்ல சில ஆடை சம்மந்தப்பட்டதாகவும் இருக்கலாம்''.

"ஜோக்ஸ்க்கும் பக்கத்தில சித்திரம் போட்டாகணுமே''.

"ஒரு நல்ல ஓவியரா பார்த்து மொத்தமாக நூறு வரைஞ்சி வச்சிக்கிட்டா, மாத்தி மாத்தி அதையே போட்டுக்கிட்டு இருக்கலாம்''.

"வாசகர்கள் மனசை வசீகரிக்க முடியாதே''.

"எல்லா ஜோக்சும் அப்படி கிடையாது. கட்டணம் அதிகமாக கொடுக்கிற எழுத்தாளர்களுடைய ஜோக்ஸ்களை உள்ளாடைகளுக்குக் கீழே, மேலே, உள்ளே, வெளியே போட்டுறலாம்''.

"நீள படமா? இல்ல சின்னதா?''

"நீள படமா கொடுக்க முடியுதோ இல்லையோ. கொடுக்கிற படத்த நீல படமா கொடுத்திட்டா விற்பனையில கொடிக்கட்டி பறக்கும் பாருங்க''.

"கடைசி பக்கம் எப்படி?''

"அதை நம்பிதான்ஜீ நான் இதழே ஆரம்பிச்சிருக்கேன்''.

"என்ன சொல்றீங்க தம்பி?''

"ஆமாம்ஜீ. அந்த பக்கத்துக்கு மட்டும் அம்பதாயிரம் ரூபாய் வாங்கலாமுனு இருக்கேன்''.

"அதுல என்னத்த போடப் போறீங்க''.

"சிறுகதை''.கடைசி பக்கத்திலயா? எனக்கு என்னவோ அது நல்லதா படல தம்பி. கதைனா சாதாரண கதை இல்ல. குட்டி கதை''.

"குட்டி கதைனா?''

"நீங்க எழுதுற ரகம் தான்''.

"அப்ப ஓகே''.

"நடு பக்கம்?''

"முக்கிய செய்திகளா இடம் பெறப் போகுது''.

"அரசியல் நடப்புகள், உலக நடப்புகள், பொது அறிவு சம்மந்தப் பட்டதா?''

"அதெல்லாம் கிடையாது. நம்ம இதழ் முற்றிலும் ஒரு மாறுபட்ட இதழ்னு சொல்லிட்டு அதை எப்படி போட முடியும்?அதை போட்டாலும் நல்லாவா இருக்கும்?நான் வைக்கப்போறது முக்கியச் செய்திகள் அல்ல. முக்கிய, செய்திகள்''.

"அருமை... அருமை... அசத்துறீங்க தம்பி''.

"...................'' "முதல் இதழ்லோட எதுவும் ப்ரியா கொடுக்க விரும்புறீங்களா தம்பி''.

"பின்னே! மாறுபட்ட இதழாக இருந்தாலும் தமிழ்நாட்டு பத்திரிக்கை கலாசாரத்தை மீற முடியுங்களா?''

"என்ன ப்ரி கொடுக்கப் போறீங்க?''

"ஒரு இதழ் வாங்கினா இன்னொன்னு இலவசம்''.

"அதே இதழை ப்ரியா கொடுக்க போறீங்களா?''

"ஆமாம்ஜீ''  "ஏன்?''

"ஒரே வாரத்துல பத்து லட்சம் இதழ் விற்பனைனு மறு வாரத்துல போட்டுக்கிறலாம் பாருங்க''.

"அப்ப மூணு இதழா கொடுக்க வேண்டியதுதானே''.

"முதலில் அப்படிதான் நினைச்சேன். பிறகு பண்டிகை வாரத்துல அப்படி பண்ணிக்கிறலாமுனு மாத்திக்கிட்டேன்''.

"ஆமா.... இதழோட விலை என்ன? பத்தா, இருபதா?''

"நீங்க ஒரு ஆளு ஜீ''.

"ஏன் அதுக்கு மேல நிர்ணயிக்கப் போறிங்களா?''

"அதெல்லாம் கிடையாது''.

"பின்னே?''

"இதழ் ப்ரி''

"நீங்க விலையில்லாம கொடுத்தா அரசாங்க இதழ்னு நினைச்சுக்கிரு வாங்களே''.

"அதுக்கு தானுங்களேஜீ அப்படி கொடுக்கிறேன்''.

"ஏன்?''

"ஒரே வருசத்துல ஒத்த பைசா செலவு செய்யாம அரசு இதழ்னு பேரு வாங்கிரலாமே''.

"பொருளாதாரம் கையை கடிக்குமே''.

"ஏன் கடிக்குது. நான்தான் படைப்பாளிகளுக்கிட்டேருந்து கறந்திடுறேனே...''

"இதழோட பேரு எப்படி வைப்பதா உத்தேசம்?''

"நம்பர் ஒன் இதழ்''

"அட! அது எல்லா தமிழ்நாட்டு இதழ் பெயருக்கு மேலேயோ, கீழேயோ இடம் பெறக்கூடிய வாசகமாச்சே''.

"அதையே இதழோட பெயரா வச்சிட்டேன்''.

"நம்பர் ஒன் இதழ்?''

"ஆமாம்ஜீ. ஒரு பெயர் வச்சி அதுக்கும் பக்கத்தில நம்பர் ஒன் இதழ்னு கொடுத்திட்டா இப்ப இருக்கிற இதழுக்கும் நம்ம இதழுக்கும் வித்தியாசம் தெரியாமப் போயிரும்''.

"அதனாலே நம்பர் ஒன் இதழ்னே பெயர் வச்சிட்டீங்க''.

"ஆமாம்ஜீ'

"..................'' "என்னஜீ அமைதியாயிட்டீங்க? எப்படி இருக்கு என்னோட ஐடியா?''

"ஐடியா. பெரிய பொடலங்கா ஐடியா!''

"என்னஜீ சரியில்லையா?''

"இடத்த விட்டு காலிப் பண்ணுய்யா''.

"ஏன்ஜீ?''

"இப்ப கடைகளில தொங்கற இதழ்கள் மாதிரி தானே நீ சொல்ற இதழும் இருக்கு. என்ன ஒன்னு, நீ ப்ரியா கொடுக்கிறேங்கிறே...''

"ஜீ என்னை ஊக்கப்படுத்துங்கஜீ. ஆசிரியர் குழுவில உங்க பேரையும் சேர்த்துக்கிறேன்''.
 ""அதெல்லாம் எனக்கு பிடிக்காது''.

"ஜீ உங்களுக்கு பிடிக்கலைனா இதழ் தொடங்குறதையே விட்டுருறேன்ஜீ. இப்பவே விட்டுருறேன். ஆனா...''

"என்ன ஆனா...?''

"நான் உங்க வாசகன்ஜீ. எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணனும்''.

"என்னைய என்ன பண்ணச் சொல்றே?''

"உங்க கதைகளை படிச்சு தூக்கத்தை தொலைத்தவன்கள்ள நானும் ஒருத்தன்''.

"என்ன சொல்றே...!?''

"ஆமாம்ஜீ. உங்க எழுத்துகளை பூசித்த நீண்ட கால வாசகன் நான். தொடக்கத்தில திரும்பத்திரும்ப படிக்கிற மாதிரி கதை எழுதின நீங்க,இப்பவெல்லாம் யாரும் பார்த்திரு வாங்களோனு திரும்பி திரும்பி பார்த்துக் கிட்டே படிக்கிறமாதிரி கதை எழுதுறீங்களே ஏன்ஜீ...? சிறுகதைகளை சிறுகதைகளாகவே இருக்கவிடுங்க. அதை ""குட்டி'' கதையா மாத்தி சிறுகதை வாசகர் வட்டத்தை அழிக்காதீங்க. ப்ளீஸ்...''

Pin It