நீண்ட பெரும் பயணம் முடிந்தது
நீள் சதுர குழிக்குள்
நீட்டி வைத்து என்னை
புதைக்கிறார்கள்.

நான் செய்த
அநியாயங்கள் அக்கிரமங்கள்
சூதுக்கள் சூழ்ச்சிகள்
வக்கிரங்கள் வன்மங்கள்
இவைகள் எல்லாம்
எவருக்கும் தெரியாத
என் ரகசியங்கள்.

நான் எனக்குள்ளேயே
புதைத்துக்கொண்ட
அந்த சவங்களுடன் தான்
இன்று வரை
வெள்ளையும் சள்ளையுமாய்
வலம் வந்து கொண்டிருந்தேன்.

இன்றும்
எனக்குப் போர்த்தப்பட்டிருக்கிறது
வெள்ளை வெளேரென்று.

இன்னொரு நாள்
கல்லறைக் கட்டுவார்கள்
வெள்ளை அடிப்பார்கள்.

நடமாடியபோதே
பாவ ரகசியங்கள்
புதைந்த
நான்
ஒரு வெள்ளையடிக்கப்பட்ட
கல்லறையல்லவா?
எனக்கே ஒரு கல்லறையா?
நிறையப்பேர்
நிறைய அழுகிறார்கள்
இன்றொரு நாள்தானே
இவனால்
இறுதியாக அழப்போகிறோம் என்பதால்.

அந்தரத்தில் அருவமாய்
அது மட்டும் அழுகிறது
ஆத்மார்த்தமாய்.

"நானும் நீயும்
இணைந்திருந்தபோது செய்த
பஞ்சமா பாதகங்கள்
படையெடுத்து வந்து
தேள் கூட்டமென
கொட்டுகின்றன.

பரிகாரம் செய்யலாம்
பாவங்களைக் கழுவலாம்
நான்கு நாட்களுக்காவது
ஒரு
நான்கு பேர்களுக்காவது
நல்லவனாய் வாழலாம்
வாயேன்!' என்று.

பால் கெட்ட பிறகு
பால் பாயாசம் வேண்டுமாம்
நான்
நன்றாகவே புதைக்கப்பட்டேன்.

Pin It