என்
குடிசையின் முன்பரப்பில்
மெழுகிய
தரையில் உலவிக் கொண்டிருந்தது
தாளில் அமர அடம்பிடிக்கும்
கவிதை

அதன் பின் தொடர
எட்டிப் பார்த்து உள்நுழையும்
என்னுள்
வேடிக்கைக் காட்டி...

திரும்புகையில்
தாயுடன் விலகாமல் இருந்தன
கோழிக் குஞ்சுகள்

இலவச அரிசியெடுத்து
முன்னால் தெளிக்க குஞ்சுகள்
கொத்தித் தின்ன
முடியாமல் தவித்தன என்னைப்போல

ஒவ்வொரு அரிசியை உடைத்து
கொத்திக் காட்டியது
குஞ்சுகளுக்கு
கவிதையென அன்பை...

வருடிக் கொண்டிருந்தது கன்றை
பசு
நாவில் அன்பைத் தடவி;
கவிதையின் சொற்களென...

உண்ண அழைத்த
அம்மாவின் வார்த்தைகளில் நுழைந்து
வெளிவந்தது
கவிதையாய் அன்பு...

இப்போது
வந்து உட்கார்ந்தது தாளில்
ஒரு அன்பின் கவிதை;
முழுமை பெறாமல்...

நிறைந்த உணர்வைச்
சொல்ல முடியாமல் தவித்தது
இந்தக் கவிதை
மனசு...

Pin It