மாறும் என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர அனைத்தும் மாற்றத்திற்குரியன என்றார் காரல்மார்க்ஸ். இவ்வார்த்தைகள் வேறு எதற்கும் பொருந்துகிறதோ இல்லையோ கவிதைகளுக்கு அட்சர சுத்தமாய்ப் பொருந்திப் போகின்றன. கவிதைகளின் முகம் நாளுக்கு நாளாய் மாறிக்கொண்டே வருகிறது. நேற்றுப் பேசிய பழங்கதைகள் இன்றைக்கில்லை. புதிய முகம், புதிய தளம் கவிதையைச் சோர்வடையச் செய்யாமல் உயிர்ப்புடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவும் நிரந்தரமல்ல. நாளையும் மாறும். அதற்கடுத்த நாளும் மாறும். மாறும்...மாறிக்கொண்டே இருக்கும்.இந்த மாற்றமே கவிதையை தொடர்ந்து மறுமலர்ச்சியுடன் புன்னகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பெண் கவிஞர்கள் பரவலான கவனிப்புக்கு உள்ளாகியிருக்கும் இலக்கியக் காலம் இதுவெனலாம். நல்ல விதமாகவோ, கடுமையான விமர்சனத்திற் குள்ளாகவோ பெண் கவிஞர்கள் இலக்கிய வாதிகளால் மேடைகள் தோறும்,இதழ்கள் தோறும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இது ஒருவகையில் நல்ல அறிகுறியாகவேபடுகிறது. இலக்கிய உலகத்தில் கவனிப்புக்கு உள்ளாவதே பெரும்பாடாய் இருக்கிறது.ஆகவே தான், கவனிப்பிற்காகவே பெரும் கலகங்களையும் செய்ய பலர் துணிந்து விடுகிறார்கள். இப்போது தரமானவைகள்கொண்டாடப்படவும்,போலிகள்,புரட்டுகளைத்தூக்கியெறியவும்தேர்ந்தவர்களாக நம்மவர்கள் தங்களை தகுதி உயர்வு செய்து கொண்டு வருகிறார்கள்.

இருவாட்சி -இலக்கியத் துறைமுகம் வெளியீடாக வந்திருக்கும் புதிய மாதவியின் ஐந்திணை கவனிப்பிற் குள்ளாகியிருக்கிற,கவனிக்கப்பட வேண்டிய தரமானத் தடயங்கள் பலவற்றையும் கொண்ட கவிதைத் தொகுப்பாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்டிருக்கிற புதிய மாதவி தற்சமயம் மும்பையில் வேர்பதித்து வாழ்பவர். கவிஞர், கதைஞர், கட்டுரையாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என்று பல தளங்களில் இயங்கினாலும் கவிதையே இவரின் ஆதாரசக்தி என்பதை அறிய முடிகிறது. கவனிப்பிற்காகக் "கலகம்' செய்யாமல் கவிதைகளின் மூலம் புதிய "உலகம்' செய்யும் வித்தையை இவர் கற்றிருக்கிறார்.

அழகான பளபளப்பான கரைகளுடன்
எனக்காக நீ எழுப்பிய
புதிய சமுத்திரம்
அலைகளோ வலைகளோ
என்னை
விலை பேசிட முடியாத
புதிய சாம்ராஜ்யம்!

மீன்தொட்டி என்னும் தலைப்பில் அமைந்த முதல் கவிதையின் முதல் பத்தி இது. பாவத்திலேயே பெரியபாவம்,தாம் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம் என்பதையே அறியாமலிருப்பதுதான்.மேலும்,எவன் ஒடுக்கினானோ அவன் செய்யும் மாயைகளில் மயங்கி அவனைப் போல நல்லவன் உலகத்திலுண்டோ என்று எண்ணிக் கிடப்பது அதைவிடப் பெரியவேதனை.

தேர்தல் வாக்குறுதிகள்,பணத்திற்காக வாக்கை விற்கும் பரிதாப மனிதர்கள்,அடிமைப் படுத்துவதற்காகவே உயர்வு நவிற்சியில் பேசி,மயக்கி எங்கும் நகராமல் செய்வது, பெண்கள், மலம் அள்ளுவோர், கூலிகள், உழைப்பாளிகள், தொழிலாளர்கள், "உங்களைப் போலுண்டோ? நீங்கள் செய்யும் தன்னல மற்றப் பணியை வேறு எவரும் செய்ய முடியுமோ?'என்ற கணக்கில் வார்த்தைகளால் வசீகரித்து ஒடுக்குவதைக் கவிஞர் கண்ணாடித் தொட்டி மீன்கள் வழி நேர்த்தியாக படம்பிடிக்கிறார்.

குறியீட்டு உத்தியில் அமைந்த இக்கவிதை அவரவர் மனநிலை,வாழ்வுச் சூழலுக்கேற்ப பலவாறாக விரித்துக்கொள்ள வாய்ப்பைப் பெரிதாய் வழங்கிச் செல்கிறது.தனக்குச் சிறையாய் அமைந்த கண்ணாடிச் சுவரைப் பளபளப்பான கரைகள் என்றும்,கண்ணாடித் தொட்டியில்கிடக்கும் நீரை பெரும் சமுத்திரமென்றும்,அலைகளுமில்லை, வலைகளுமில்லை எனது சாம்ராஜ்யத்தில் என்று மகிழ்ச்சி கொள்ளும் அப்பாவி மீன்களைப் போலவே மனிதர்கள் பலரும் வாழ்ந்து வருவதைக் கவிஞர் கவிதை வழி நிறுவுகிறார்."என்முகம்' கவிதை நிகழ் வாழ்வில் கேடுகள் சூழ்ந்து நிற்பதைக் குறிப்பிடும்படி அமைந்துள்ளது.

ஓர் ஆடையைக் களைவதற்குள்
ஓராயிரம் ஆடைகள்
ஓடிவந்து ஒட்டிக் கொள்கின்றன.

காட்சி ஊடகம்,அச்சு ஊடகம் வழி இன்றைய இளைய சமுதாயம் தறிகெட்டுப் போய்க்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். வன்முறையும், வேறுபட்டச் சிந்தனைகளும், மதுவும், பாலியல் வெறியும் மிகைபட சூழ்ந்து நிற்க, வெம்பும் பிஞ்சுகளை நினைத்து விம்மத் தான் முடிகிறது.ஒன்றை விட்டொழித்து திருப்புவதற்குள் ஓராயிரம் வந்து ஒட்டிக் கொள்கின்றன. நாகரிக மனிதனின் கவசமாகக் கை கொண்ட ஆடைகளே அறுவெறுப்பை உமிழச் செய்தால் என்ன செய்வது?இவ்வாறாக பல வினாக்களையும் கிளறுகின்றது கவிதை.

மராட்டிய மாநிலம் கயர்லாஞ்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடுமைக்கு பெண் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கிறார்.மனதில் பதட்டமும், அச்சமும், வெட்கமும், வேதனையும், மண்டித் தின்ன அவர் வடித்திருக்கும் வார்த்தைகள் பாண்டியன் நெடுஞ்செழியனை குற்றவாளியாக்கி கோபக்கனலோடு வாதிட்டு மதுரையை எரித்த கண்ணகியின் கோபத்தை விடவும் பலமடங்கு கூடுதலானது. உக்கிரமானது.

உங்களைப் போலவே
நாங்களுமிருப்பதாய்
எத்தனை முறைச் சொல்லியும்
நம்ப மறுத்தீர்கள்
நிர்வாணமாய்

உங்கள் ஆண்கள்
எங்களை
இழுத்து வரும்போதெல்லாம்
உங்கள் முலைகள்
உங்கள் யோனி
எங்களிடம் இருப்பதை
பார்க்க மறுத்தீர்கள்...
.................................
................................
என்று தொடர்கிறது கவிதை. உயர்குலமோ, தாழ்குலமோ நாங்களும் பெண்கள் என்பதையும் மறந்து, மரத்துப் போய் நின்ற பெண்களே! தறிகெட்டு ஆடிய உங்கள் கணவனையும், சகோதரனையும் தடுத்து நிறுத்த தவறிவிட்டக் குற்றமிழைத் தவர்கள் நீங்கள் என்று சீறுகிறார்.

இனிஎன்ன செய்யப் போகிறீர்கள்
உங்கள் படுக்கையில்
தொடரும்
எங்கள் யோனிகளை?

என்று பெண் குலத்தை மட்டுமல்ல, மனிதக் குலத்தையே குற்றமிழைத்தக் குறுகுறுப்போடு தலை கவிழச் செய்கிறார். இந்தத் தொகுப்பிற்கே மகுடம் சூட்டிய கவிதை இது.

நடப்புகளை மட்டுமே பேசாமல்,நம்பிக்கையைக் கொப்பளிக்கச் செய்யும் கவிதைகளும் தொகுப்பிற்கு அணி சேர்க்கின்றன. காதலும், காமமும், தோழமையும், நட்பும், நடப்பும், பெண்ணியமும், அரசியலும் என பல தளங்களிலும் கவிதைகள் சுற்றிச் சுழல்கின்றன.

உடைந்த சிலை
சிதைந்த ஓவியம்
எரிந்தக் கரித்துண்டு
என்னைப் போலவே
எதையும் சொல்வதில்லை என
வாடலாம் பூக்கள்
வாடுவதில்லை பூமி
என்று சோர்வுற்ற இதயங்களைத் தட்டி எழுப்புவதோடு நில்லாமல்,
எட்டுத் திசைகளிலும்
எழுதப் பட்டிருக்கும்
ஸ்ரீராம ஜெயத்தின்
மகிமையை
ஒரு நொடியில்
புரட்டிப் போடுகிறது
ஒன்பதாவது திசையிலிருந்து
சீதை எழுதும்
ஸ்ரீசிராவண காவியம்  என்றும்

என் கவலை எல்லாம்
சாவைக் குறித்தல்ல
என் சாவுக்குப் பின்
அனாதையாகப் போகும்
அலமாரியின்
புத்தகங்களைப் பற்றித்தான்

என்றும் படைத்து நிமிர்கிற புதிய மாதவியைக் கொண்டாடாமல் இருக்க முடியாது. அவரோடும் அவர் கவிதை களோடும் மாச்சரியமற்று இணைந்து நிற்க நம்மையுமறியாமல் உந்தித்தள்ளப் படுகிறோம். அங்கங்கே சில ஒற்றுப் பிழைகள், மிகக் கூடுதலானச் சொற் பிரயோகம் சற்றே அலுப்பைத் தருகின்றன. நேர்த்தியான வடிவமைப்பு, நவீன அச்சு, அன்பாதவனின் முன்னுரை, புதிய மாதவியின் தன்னுரை தொகுப்பிற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.கவிதைக்கும் நமக்கும் என்ன சம்மந்தமிருக்கிறது என்று எவரையும் எண்ணவிடாத,அச்சு அசலான வாழ்க்கையின் யதார்த்தப் பதிவாகக் கவிதைகள் மிளிர்கின்றன.

ஐந்திணை - மனித சமூகத்திற்காக காலமறிந்து கூவிய கவிதைச் சிந்தனை.

ஐந்திணை
ஆசிரியர் : புதிய மாதவி
வெளியீடு : இருவாட்சி
41, கல்யாண சுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை - 11
விலை : ரூ.60/-
தொடர்புக்கு : 9444640986

Pin It