அழுக்காறாக ஓடிக்கொண்டிருக்கிறது
அந்நதி
நகரின் ஒட்டுமொத்தக் கழிவையும்
தன் மேல் சுமந்து
பெரும் சாக்கடையாக
மாறிப் போயிருந்தது அது.

தாயின் முலைப்பாலினைப் போன்ற
தூய்மையிருந்தது
அப்போது

இன்று -
உண்ணா முலையாகிவிட்டது
நீர் உண்ணும் காலங்கள்
இனி சாத்தியமன்று

நம்மின் எல்லா கைகளும்
அதன் முகத்தில்
கரியைப் பூசியுள்ளது

தண்டனையற்ற குற்றம்
தவறு செய்ய ஏதுவானது

அதன் மணலாடைகள்
களையப்பட்டன
அரணாக நின்ற மரங்கள்
களவாடப்பட்டன

நதியின் உயிரிழையறுக்கப்பட்டு
இரசாயனக் கலவைகள்

அதன் வாயில் கொட்டப்பட்டன

நஞ்சை சுமந்த நதி
சாவு ஏந்திற்று

நம் பிள்ளைகளுக்குக் காட்ட
இன்று நதியில்லை

நாதியற்றுப் போனது
நீயும் நானும்
நீர் குடித்து வளர்ந்த
இந்நதியும்.

Pin It