ச.தமிழ்ச்செல்வன், தமிழக அரசியல் பண்பாட்டுத் தளத்தில் பிரசித்தமான ஒரு பெயர். மதுரகவி பாஸ்கரதாசின் மகள் வயிற்றுப் பேரன் இவர். விருதுநகர் மாவட்டம் நெள்மேனி மேட்டுப்பட்டி பிறப்பிடம். பெற்றோர் சு.சண்முகம் - சரஸ்வதி. அப்பாவும் ஒரு எழுத்தாளர். இவருடைய சகோதரர்கள் கோணங்கி, முருகபூபதி. இந்த இரண்டு பெயர்களுமே இலக்கியம் மற்றும் நாடக வெளியில் பிரபலமானவை. தமிழ்ச்செல்வன் தமிழின் மிக முக்கியமான சிறுகதைக் கலைஞர். வெயிலோடு போய், வாளின் தனிமை இரண்டும் மிகுந்த கவனம் பெற்ற இவருடைய சிறுகதைத் தொகுப்புகள். இவை நீங்கலாக பண்பாட்டு அரசியல் சூழலில் தமிழ்ச்செல்வன் எழுதிக் குவித்தவை ஏராளம். தொடர்ச்சியான பயணங்களும், எழுத்தும், களச்செயல்பாடு களுமாக இடைவெளியின்றி இயங்கிக் கொண்டிருக்கும் இவர் ஒரு வலுவான இடதுசாரி இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்; மற்றுக்கல்வி செயல்பாட்டாளர். "வலையில் விழுந்த வார்த்தைகள்' என்னும் இவருடைய கட்டுரைத்தொகுப்பு விரைவில் வெளிவர உள்ளது.

சந்திப்பு : கீரனூர் ஜாகிர்ராஜா

பட்டப்படிப்பை முடித்து இராணுவத்தில் பணி புரிந்தீர்கள். இராணுவ அனுபவம் உங்களுக்குத் தந்தவை என்ன?

                உடலின் முக்கியத்துவம் புரிந்தது. உடல் பற்றிய பிரக்ஞையும் ஏற்பட்டது. என் உடலின் எல்லை பிடிபட்டது. நாட்டுக்காக உடலையும் உயிரையும் தரச்சித்தமான மனநிலை அங்கு பயிற்சிக்காலத்தில் உருவானது. பின்னர் காலப்போக்கில் அங்குதான் நாடு என்பது எது என்கிற தெளிவும் ஏற்பட்டது போர்க்கலையின் அறிமுகமும் - 303 ரைஃபிள் துவங்கி லைட் மிஷின் கன் வரை சுடப்பயிற்சி கிடைத்தது - யுத்தத்துக்கு எதிரான மனோபாவமும் ஒரே நேரத்தில் வாய்த்தது அங்குதான்.

                இந்தியாவை முழுதாகச் சிந்தித்து மீள ஓர் அறிய வாய்ப்பாக இராணுவ வாழ்வைச் சொல்லலாம். எத்தனை மொழி பேசும் மக்கள், எத்தனை பண்பாட்டு வேறுபாடுகள் உள்ள மக்களுடனெல்லாம் அறைத்தோழனாக வாழ எனக்கு வாய்த்தது. மராட்டிய சதாவர்த்தியும் காஷ்மீரத்து ஆர்.எஸ்.ஷர்மாவும் அதிக நாட்கள் என் அறைத்தோழர்களாக இருந்தார்கள். ஒருவர் தலித். ஒருவர் பார்ப்பனர். மூவரும் ஒரு மனதோடும் மூன்று உடல்களோடும்தான் வாழ்ந்தோமென்று சொல்ல வேண்டும். இதைச் சொல்லும்போதே என் கண்கள் கலங்குகின்றன. இளமை எங்கள் பொது மொழியாக இருந்தது. என்ன மாதிரியான நாட்கள் அவை. சதாவர்த்தி அம்பேத்கரிய இயக்கத்தோடும் ஷர்மா ஆர்.எஸ்.எஸ். úஸôடும் தொடர்புடையவர்களாக இருந்தார்கள். நான் இடது சாரியாக மொட்டவிழ்ந்து கொண்டிருந்தேன். ஆனாலும் எங்களைப் போன்ற நெருக்கமான நண்பர்கள் அந்த ராணுவ டிவிசனிலேயே இருந்திருக்கவில்லை. பிரியும் நாள் வந்தபோது நாங்கள் எப்படிக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதோம்.

                ஷர்மாவுக்கு நான் 200 ரூபாய் கடன் தர வேண்டும். குளிரைச் சந்திக்க ஒரு ஸ்வெட்டர் கூட இல்லாத வறுமையில் நான் இருந்தேன். (மாலை வேளைகளில் ராணுவ உடுப்பைக் களைந்துவிட்டு சிவில் உடைக்கு மாறும்போது சொந்தமாக ஸ்வெட்டர் வேண்டுமல்லவா?) ஷர்மா தான் என் தேவைகளுக்கு பணம் கொடுப்பான். 1970களில் 200 ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை. அவன் கடைசி வரை என்னிடம் கடனைக் கேட்கவே இல்லை. நானும் கொடுக்கவில்லை... என்னிடம் பணம் இருக்கவில்லை. சம்பளம் முழுவதையும் அப்பா பேருக்கு எழுதிக்கொடுத்துவிட்டதால் அங்கே என் கையில் எப்போதும் காசு இருக்காது.

                இது தவிர என் அற்புதமான இளம் பருவத்தின் (20 வயது முதல் 25 வயது வரை) கனவுக்காலத்தை இந்திய-சீன எல்லைப்பகுதியில் கழித்தேன். நத்துல்லா செக்டார் எனப்படும் எல்லைப் பிராந்தியத்தில் இருந்தேன். சில காலம் டெபுடேசனில் சிக்கிம் மாநிலத்தில் காங்டோக் ராணுவ முகாமிலும் பணி யாற்றினேன். எல்லாவகையிலும் ஒரு ரொமண்டிக்கான மனநிலையோடு அலைந்த காலம் அது. நக்சல்பாரிச் சிந்தனைகளால் மன எழுச்சி கொண்ட - வசந்தத்தின் இடிமுழக்கத்தை நாள் தோறும் கேட்கத்துவங்கிய ஒரு பருவமாகவும் அதைச் சொல்ல வேண்டும். கமலாதாசின் சஸ்தி பிரதாவின் தொண்டரடிப்பொடியாகப் போதையேறித் திரிந்த காலமும் அதுதான். 12000 அடிக்கு மேல் உடம்பு இருக்கு, மனம் அதற்கு மேல் உயரப்பறந்து கொண்டிருந்தது. காந்தியவாதியாக - நா.பா.வின் அரவிந்தனாக அங்கே போய் அப்புறம் குடிக்கப்பழகி கொஞ்ச நாளில் குற்றமனம் கொண்டு அங்கேயே அதை ச்சீ என்று விட்டொழித்துவிட்டு வரவும் முடிந்தது.

                இன்றைய என் மனக்கட்டமைப்பின் பல கூறுகள் அங்கே செதுக்கப்பட்டவை தாம்.

"ஜிந்தாபாத்' தைத்தொடர்ந்து சுயவரலாறு எழுதும் எண்ணம் இருக்கிறதா?

                நண்பர் ஞாநி கொடுத்த நிர்ப்பந்தத்தின் காரணமாக தீம்தரிகிட இதழில் என் தொழிற்சங்க அனுபவங்களை ஜிந்தாபாத் ஜிந்தாபாத் என்று எழுத நேர்ந்தது. மற்றபடி சுயவரலாறு எழுதுகிற அளவுக்கு என்ன இருக்கு நம்மிடம். தவிரவும் பெரும்பாலும் புனைவற்ற எழுத்தென இதுவரை வந்துள்ள என் கட்டுரைகள் பெரும்பாலும் என் அனுபவங்கள்தானே. சொல்லப்போனால் எழுதுவதெல்லாம் சுயவரலாற்றின் கூறுகளோடுதான் இருக்கின்றன.

பல்வேறு நேர்காணல்களில் உங்கள் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ், பெற்றோர், சகோதரர்களைப் பற்றிக் குறிப்பிட் டுள்ளீர்கள். உங்கள் துணைவியார், குழந்தைகளைப் பற்றிப் பேசவில்லையே?

                யாரும் கேட்டதில்லை. கேட்ட போது சொல்லித்தான் இருக்கிறேன். அவர்கள் இலக்கிய உலகத்துக்குள் இல்லாததால் யாரும் கேட்காமலிருந் திருக்கலாம்.

சளைக்காமல் பயணம் செய்கிறீர்கள். பிரயாணம் உங்களுக்கு சலிப்பூட்டிய தில்லையா? அப்புறம் பயண அனுபவங் களைப் பற்றியும் எழுதவில்லையே?

                பயணங்கள் ஒருபோதும் சலிப்ப தில்லை. நின்று கொண்டும் இடித்துக் கொண்டும் தொங்கிக் கொண்டும் போகிற பஸ் பயணங்களைத் தவிர மற்ற பயணங்கள் எல்லாமே மனதுக்குள் பயணிக்க உதவுவதால் அவை சலிப்பதில்லை. தொடர்ந்து பயணத்தில் இருப்பவன் வேரற்ற மனிதனாக - ஒரே இடத்தில் நின்றால் உண்டாகும் உடமை உணர்வு இல்லாதவனாக - மிதக்கும் தக்கையைப் போல லேசானவனாக - சாய்மானம் இல்லாதவனாக - ரொம்ப நல்லவனாக - பெருந்தன்மை உள்ளவனாக - மன்னிக்கும் குணம் வாய்த்தவனாக ஆகிவிடுவான். இன்னொரு பக்கமா மனம் சதா ஓய்வை கெஞ்சிக் கொண்டே இருப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது.

அவ்வப்போது பயணங்கள் பற்றி எழுதியிருக்கிறேன். எனக்கு எல்லாத் தையும் எழுத்தாக்கி விடணும் என்று தோன்றுவதில்லை. சிலவற்றை எழுதலாம். மற்றவை நமக்கே நமக்கான அனுபவங்களாக இருக்கட்டுமே என்று நினைப்பேன். தவிர நெருக்கடி இருந்தால் மட்டுமே எழுதுகிறவனாக நான் இருப்பதாலும் பயணங்கள் பற்றி எழுத வில்லை போலும்.

ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது வாஸ்தவம்தான். நளபாகத்தில் நீங்கள் வல்லவரா? சிறப்பாக என்னவெல்லாம் சமைப்பீர்கள்?

                சிறப்பாக எதையும் சமைக்கத் தெரியாது. ஆனால் சமைப்பது என்னுடைய வேலை என்று முழுசாக நம்புகிறேன். தினசரி வீட்டில் இருக்கும்போதெல்லாம் சமைப்பது நான்தான். துணைவியாரை அடுப்படிக்குள் நுழைய விடுவதில்லை. அவர் படித்துக்கொண்டிருப்பார். ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பெண்களை சமையலறைகளில் தள்ளிப் பெரும் துரோகம் இழைத்து விட்டோம் என்கிற குற்ற உணர்வு அழுத்தமாக இருக்கிறது. அதை கழுவத்தான் அந்தப் புத்தகத்தை எழுதினேன். தொடர்ந்து ஆண்கள் சமைப்பது பற்றி பேசி வருகிறேன். ஆனால் இளைஞர்கள் நான் பேசி முடித்ததும் இது ஒரு அழகிய கனவு சார். நடைமுறைக்கு வருவது சிரமம் சார் என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மன வலியையும் தோற்ற மனநிலையையும் தருகிறது.

எல்லோரையும் அனுசரிக்கிறவராக, எல்லோருக்கும் நல்லவராக, ஒரு புன் சிரிப்புடன் எதையும் எதிர்கொள்கிற உங்கள் மனநிலையை எங்கிருந்து பெற்றீர்கள்?

                இதையே என் மீதான கடுமையான விமர்சனமாகவும் பல நண்பர்கள் சொல்லி வருகிறார்கள். நம்ம குணம் அதுதான். எப்படி வந்ததுன்னு யார் கண்டது. ரொம்ப காலமா இப்படித்தான் இருக்கேன்.

60 வயதைத்தொட்டு விட்டதாக கூறு கிறீர்கள். 40 வயதுக் காரராகத்தான் தோற்ற மளிக்கிறீர்கள். உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடு உண்டா?

                ராணுவத்தில் செய்த உடற்பயிற்சி காப்பாற்றுவதாக நினைக்கிறேன். உடற் பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் இருந்தால் நல்லா இருக்கும்.

ஒரு காலத்தில் தமிழகக் கிராமங்களில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அறிவொளி இயக்கச் செயல்பாடுகள் ஸ்தம்பித்துபோனது ஏன்?

                அறிவொளி இயக்கம் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்திய ஒரு கால அளவு நிர்ணயிக்கப்பட்ட இயக்கம். மக்கள் பங்கேற்பு அதில் இருந்ததாலும் நம் போன்ற இயக்கத்தோழர்கள் அதில் முன்கை எடுத்ததாலும் அது வீச்சாக நடந்தது. கால அளவு முடிந்ததும் அரசின் திட்டம் நிற்கத்தானே செய்யும். அதில் பங்கேற்ற நம் தோழர்கள் அதை அறிவியல் இயக்கத்தின் மூலமாக துளிர்கள், மலர் போன்ற பல சுய உதவிக்குழுக்கள் மூலமாக வேறு வடிவங்களில் நம் சக்திக்கேற்பத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

அறிவொளி இயக்கத்துக்கும் உங்களுக்கு மான அனுபவங்களை கருக்கல் வாசகர் களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்....

                200 பக்கத்துக்கு ஒரு புத்தகமே (இருளும் ஒளியும் - பாரதி புத்தகாலய வெளியீடு) எழுதியிருக்கிறேன். அதை யெல்லாம் இங்கே எப்படிச் சுருக்கிச் சொல்ல முடியும். என் இலக்கியக் கொள்கையிலும் பார்வையிலும் மிகப் பெரிய மாற்றம் அக்காலத்தில் ஏற்பட்டது. மக்களுக்கான எழுத்து எதுவாக இருக்கும் என்பது குறித்த துல்லியமான பார்வையை அறிவொளி இயக்கம் கொடுத்தது. பாவ்லோ பிரையர் என்னை நிறைய மாற்றினார். பேராசிரியர் ச.மாடசாமி இன்னும் மக்களுக்கு நெருக்கமாக என் எழுத்தை கொண்டு செல்லப் பழக்கினார். மக்களின் மூச்சுக்காற்று எங்கள்மீது படும் தூரத்தில் நின்று பணியாற்றிய அந்த அனுபவம் மிகப்பெரிது.

மாநிலம் தழுவிய ஒரு பெரிய இலக்கிய அமைப்பின் தலைவராக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக உருவாகிய பிறகு மீண்டும் அந்தப் பழைய கிராமங்களுக்கு புழுதி மண் கிளம்ப சைக்கிளில் சுற்றிவர விரும்புவீர்களா?

                தலைவர் என்பதெல்லாம் பதவி உயர்வு அல்ல. அது ஒரு வேலைப் பிரிவினை மட்டுமே. எப்போதும் கிராமங் களுக்குப் போவதை நிறுத்தவில்லை. அதே கிராமங்கள் அல்ல.வேறு வேறு ஊர்கள். ஆனால் சைக்கிளில் அல்ல பைக்கிள். அறிவொளியில் தினசரி கிராமங்களுக்குப் போனதுபோல இப்போது போக முடியாது. மாவட்ட அளவில் ஆற்றும் பணிக்கும் இப்போது மாநில அளவில் ஆற்றும் பணிக்குமான வேறுபாடு இருக்குமல்லவா.

தூர்ந்துபோன மரப்பெஞ்சுகள், ஒட்டடை படர்ந்த வகுப்பறைகள், ஏழை நடுத்தர வர்க்கத்து மாணவர்கள் என்று பார்த்துப் பழகிய உங்களால் பெரிய கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பேச முடிவது எப்படி?

                ஏற்கனவே நான் பல கல்லூரிகள் பல்கலைக் கழகங்களுக்கு சென்று பேசிக் கொண்டிருப்பவன்தான். கிடைக்கும் வெளியையெல்லாம் பயன்படுத்த வேண்டியதுதான். நம்முடைய அடிப் படைகளை விட்டுவிட்டுப் போனால்தான் தப்பு.

கல்வித்துறை அவலங்களைக் குறித்து வெற்றிகரமான திரைப்படங்களையே நம்மவர்கள் எடுக்கத்துவங்கிவிட்டனர். அவலங்கள் தொடர்ந்தபடியே இருக் கின்றன. எதிர்ப்புக் குரல்களின் எதிரொலியும் நம் காதுகளை எட்டு கின்றன. மாற்றம் எப்போது வரும்?

                கல்வி குறித்து நம் திரைப்படங்கள் பேசுவதை வரவேற்போம். இன்னும் நம் சமூகம் கல்வி பற்றித் தன் கவனத்தைத் திருப்பவில்லை. மிகமிக மெலிதான குரல்கள்தாம் எழும்பியுள்ளன. கல்வி முக்கியம் என்கிற அளவில்தான் நிற்கிறது. கல்வியின் உள்ளடக்கம் குறித்த விவாதம் தொடங்கப்படவே இல்லை. ஆசிரியர் - பெற்றோர் - மாணவர் - அறிவாளிகள் - எழுத்தாளர்கள் என எல்லோரும் கூட்டாகச் சிந்திக்கும்போதுதான் மாற்றங்களை நோக்கி நகர்வோம்.

தீவிர மின்வெட்டின் காரணமாக நீங்கள் நேரடியாக எவற்றையெல்லாம் இழக்க நேரிடுகிறது?

                தூக்கம், மன அமைதி, எழுதும் மனநிலை, நாம் விரும்பும் விதமான அன்றாடம்.

தொடர் மின்வெட்டு, விலைவாசி ஏற்றம் என அத்தனை பாதிப்புகளையும் மக்கள் சகித்துக்கொள்ளப்பழகி விட்டாற்போலத் தெரிகிறது. இந்த எல்லையற்ற சகிப்புத் தன்மையை எதன் அறிகுறியாக உணர்கிறீர்கள்?

                முதலாளித்துவத்தின் வெற்றிப் பயணம் தொடர்கிறதன் அறிகுறிதான்.

காங். அஸ்தமனமாகி வெகுகாலமாயிற்று. திராவிட இயக்கங்களின் அந்திம காலம் இது. இருந்தும், மக்கள் பிரச்னைகளுக்காக நேரடியாகக் களமிறங்கிப் போராடுகிற இடதுசாரி இயக்கங்களால் தமிழக அரசியலில் தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்க முடியாமல் போவது ஏன்?

                நான் அப்படி கருதவில்லை. காங்கிரஸ் ஆதரவாளர்கள் இப்போதும் கணிசமாக தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். திராவிட இயக்கம் சித்தாந்த ரீதியாகத் தோற்றுவிட்டது என்றுதான் சொல்ல முடியும். மக்கள் ஆதரவு திராவிடக்கட்சி களுக்குத்தான் இப்போதும் அதிகம். இடது சாரிகள் தனிப்பெரும் சக்தியாக வராமல் போனதற்கு இடதுசாரிகளும் காரணம். சூழலும் மிகப் பெரிய காரணம்.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடும் எண்ணம் உண்டா? மக்களுடன் நெருக்கமான தொடர்புள்ள கலை இலக்கியப் பண்பாட்டு ஆளுமைகள் மக்கள் பிரதிநிதிகளாகச் செல்வது நல்லதுதானே?

                பண்பாட்டு அரசியல்தான் எனது களம்.

திராவிட இயக்கங்கள் தமிழ் சினிமாவைத் திறம்படப் பயன்படுத்திக்கொண்டன. பொதுவுடமை இயக்கங்கள் அந்த உத்தியைக் கடைப்பிடிக்கத் தயங்குவது ஏன்? இன்றைக்கு சினிமாவுக்கு வருகின்ற பெரும்பாலான இளைஞர்கள் முற்போக்கு மனோபாவமுள்ளவர்களாகத்தானே இருக்கி றார்கள்?

                திராவிட இயக்கக் கருத்துக்கள் சினிமா மூலம் சென்றால் நல்லது என்று பட முதலாளிகள் நினைத்தார்கள். ஆகவே பணம் போட்டு தி.மு.க. வளரப் படங்கள் எடுத்தார்கள். பொதுவுடமைக்குப் பணம் போட எந்த முதலாளி வருவான்? நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. படம் எடுக்கத் தான் போராடிக்கொண்டு வருகிறோம்.

ஈழம் தொடர்பான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறைகளில் மாற்றம் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் அதே பழைய நிலைபாட்டுடன் தான் இருக்கிறதா?

                ஆம், அதே பழைய சரியான நிலை பாட்டுடன்தான் இருக்கிறது.

எழுத்தாளரும் உங்கள் சகோதரருமான கோணங்கியின் மாயமொழி வெளிப்பாடு உங்களை மயக்கியிருக்கிறதா? மிரட்டி யிருக்கிறதா?

                வருத்தப்பட வைக்கிறது.

மற்றொரு சகோதரரான முருகபூபதியின் நிகழ்த்துகலைச் செயல்பாடுகளைக் குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன? அவருடைய எந்த நாடகம் உங்களை ஈர்த்தது?

                தமிழின் மிக முக்கியமான நாடகக் கலைஞன் முருகபூபதி. அவருடைய எல்லா நாடகங்களாலும் நான் ஈர்க்கப்பட்டிருக் கிறேன். இன்னும் பரவலான மக்களுக்கான ஒரு நாடக மொழியை அவர் கைக் கொண்டால் மகிழ்வேன்.

அப்பா இன்னும் எழுதிக் கொண்டிருக் கிறாரா?

                எழுதி எழுதித்தான் அவர் தன் முதுமையையும் தனிமையையும் சமாளித் துக்கொண்டிருக்கிறார்.

அப்பாவும் சித்தப்புக்களும் அசத்திக் கொண்டிருக்கையில், உங்கள் மகன் இலக்கியத்தின் பக்கம் வரவில்லையே?

                வாசித்துக் கொண்டே இருக்கிறார். அது எழுதுவதை விட முக்கியமான தில்லையா? நாளை எழுதவும் கூடும். எழுதாவிட்டாலும் ஒன்றுமில்லை.

எழுத்தாளர் சுந்தரராமசாமி மீது மற்ற இடதுசாரி எழுத்தாளர்களைக் காட்டிலும் அபிமானம் உள்ளவர் நீங்கள். ஒரு எழுத்தாளன் இயக்கம் அல்லது கட்சி சார்ந்து இயங்குவதைப் பிற்காலத்தில் விமர்சித்தவர் சு.ரா. அவருடைய இந்தக் கொள்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

                ஒரு பத்திரிக்கை நடத்துவதும் அமைப்பு சார்ந்த பணிதான். ஒரு நகரத்தில் வாழ்வதும் கூட நகராட்சி போன்ற அமைப்புகளுக்குள் வாழ்வதுதான். குடும்பம் ஒரு அமைப்புத்தான். அதைப் போலத்தான் கட்சி என்பதும் இயக்கம் என்பதும். அமைப்பே கூடாது என்று யாரும் வாழவில்லை. இந்தக் கட்சி பிடிக்க வில்லை. இது சரியில்லை என்றுதான் சொல்ல முடியும். அது அவரவர் அனுபவம் மற்றும் கண்ணோட்டம் சார்ந்த விஷயம். சு.ரா.வுக்குப் பிடிக்காத பல வேலைகளில் முழு மன ஈடுபாட்டுடன் நான் இருக்கிறேன். அவர்மீது கொண்ட அபிமானம் இலக்கிய ரீதியானதும் தனிப் பட்ட முறையிலானதுமாகும். கொள்கை ரீதியில் முக்கியமான முரண்பாடுகள் உண்டு. அது அவருக்கும் தெரியும். என்னைவிடவும் அவர்மீது அபிமானம் கொண்ட இடது சாரிகள் இருக்கிறார்கள்.

இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் பின் நவீனத்துவத்துக்கும் என்ன பிணக்கு? பின் நவீனத்துவத்தின் அறிமுகத்துக்குப் பிறகு தானே தமிழ் எழுத்து புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது?

                மைய நீரோட்டம், விளிம்பு நிலை மற்றும் பெருங்கதையாடல், சிறு பகுதிகள் எனப் பேசிய பின் நவீனத்துவ வாதிகள் மார்க்சியத்தைப் பெருங்கதையாடல் என்று புறக்கணித்தார்கள். ஒன்றுபட்ட போராட்டம் என்பதே பெருங்கதையாடல் என்று சொல்லும் ஒரு தத்துவத்தோடு முரண் படாமல் இருப்பது தப்பல்லவா? பொருளாதாரச் சுரண்டலைப்பற்றி பின் நவீனத்துவம் என்ன சொல்கிறது? தவிர பின் நவீனத்துவம் தமிழ் இலக்கியத்தில் ரொம்பத்தான் பேசப்பட்டதே ஒழிய - பிரதிகளோடு விளையாடியதைத்தவிர - உருப்படியாக அது ஒரு ஆணியும் புடுங்க வில்லை என்பதுதான் என் கணிப்பு.

தமுஎகச.வின் பல்வேறு பொறுப்புகளில் நீண்ட காலம் பணியாற்றி இப்போது தலைவராகியுள்ளீர்கள். தமுஎகச இன்னும் அடைய வேண்டிய இலக்குகள் குறித்துப் பேசுங்கள்...

                தமுஎகச படைப்பாளிகளை இன்னும் படைப்புத்திறன் மிக்கவர்களாக ஓர் அமைப்பு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதும் இன்னும் பல்வேறு கலை இலக்கியப் பண்பாட்டுத் தளங்களுக்கு விரித்துச் செல்வதும்தான் கனவு. கல்வெட்டிலிருந்து கணினி வரை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடனும் தேடலுடனும் பயணிக் கிறோம். நாட்டுப்புறவியல், உள்ளூர் வரலாறுகள், கவின்கலைகள், திரைப் படங்கள், குறும்பட / ஆவணப்படங்கள், மாற்றுத் திரையரங்குகளை உருவாக்கும் தெரு சினிமா இயக்கம், ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக நின்று படைத்தல், திருநங்கையர் வாழ்வோடு இணைந்து நிற்றல் என பல தளங்களில் காலடி எடுத்து வைத்துள்ளோம். அவற்றில் எல்லாம் மேலும் முன்னேறிச் செல்லப் பெருங்கனவு களோடு திட்டமிடுகிறோம்.

சுதந்திரமான எழுத்துப்போக்குகளைக் கண்டு (பாலியல் உள்ளிட்டவை) முகம் சுளிக்கிற போக்கு இன்னும் முற்போக்கு முகாம்களில் நீடிக்கிறதே?

                சுதந்திரம் என்றால் என்ன என்பது பற்றி அழுத்தமான கருத்து முற்போக் காளர்களுக்கு இருப்பதுதான் காரணம். இதுபோன்ற எழுத்துக்களைக் கண்டு முகம் மலர்கிற போக்கும் இருக்கிறது. சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு ஹரி கிருஷ்ணனின் மயில்ராவணனுக்குக் கொடுத்தோம். "சுதந்திர'மாக எழுதும் ஜாகிர்ராஜா தொடர்ந்து தமுஎகச விருது களைப்பெற்றதோடு அவர் எங்கள் மாநில அமைப்பிலும் இருக்கிறார்.

சோவியத் யூனியன் பின்னடைவிற்குப் பிறகு அதை ஈடுகட்டும் விதமாகக் குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடைபெறுகின்றனவா?

                உலகம் முழுவதும் கம்யூனிஸ்டு கள் கடுமையான பணிகளை ஆற்றிவரு கின்றனர். இந்தியாவிலும் நெருக்கடிமிக்க இக்காலத்திலும் இடையறாது மக்கள் போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். உள்ளுக்குள்ளும் தத்துவார்த்த ரீதியான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

சோவியத் இலக்கியங்களில் உங்களை மிகவும் ஈர்த்த நூல் எது?

                பல. வெண்ணிற இரவுகள், ஆறாவது வார்டு, முமூ, மேல்கோட்டு, தாய், 26 ஆண்களும் ஒரு பெண்ணும், ஜமீலா, அன்னா கரீனினா... என நிறையச் சொல்லலாம்.

செம்மலர் இதழின் பொறுப்பாசிரியரான நீங்கள் அந்த இதழில் பரீட்சார்த்தமான நவீன முயற்சிகளுக்கு இடமளிக்கத் தயங்கு கிறீர்களே?

                செம்மலர் வாசகர்களில் 80 சதவீதம் பேர் உழைப்பாளி மக்கள். வாசகர்களில் நவீன இலக்கியவாதிகள் பத்து சதம் இருப்பார்கள். சோதனை முயற்சிகளுக்கு ஒவ்வொரு இதழிலும் 5-6 பக்கங்கள் ஒதுக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசிரியர் குழுவின் முடிவாக இருக்கிறது. அவ்வளவு போதும் இப்போதைக்கு.

செம்மலரில் உடனுக்குடன் சினிமா விமர்சனங்களை எழுதுகிறீர்கள். எப்படி இத்தனை படங்களையும் பொறுமையாகப் பார்க்க முடிகிறது.

                கடமை. வேலைப்பிரிவினை.

குறைந்த பக்க அளவில் நீங்கள் எழுதிய வெயிலோடு போய் சிறுகதை பூ என்கிற திரைப்படமாக விரிந்தபோது ஒரு கதைக் காரராக அதை எப்படி அனுபவித்தீர்கள்? தொடர்ந்து திரைப்படத் துறையில் இயங்குகிற எண்ணம் உள்ளதா?

                முதல் காட்சியில் என் கதையும் கதா பாத்திரங்களும் திரையில் வந்தபோது மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் இருந்தேன். தொடர்ந்து இயங்கித்தானே ஆக வேண்டும். அவ்வளவு பெரிய ஊடகத்தின் மூலம் மக்களைச் சந்திக்கணும் அல்லவா?

எழுத்தில் உங்கள் அடையாளம் சிறுகதை. ஏன் சிறுகதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டீர்கள்? மொத்த மாவு இவ்வளவு தான் என்று சொல்வதெல்லாம் சரியா?

                சில செடிகள் பூத்துக்கொண்டே இருக்கும். சில செடிகள் திடீரென பூப்பதை நிறுத்திக்கொள்ளும். காரணம் சொல்லத் தெரியவில்லை. படைப்பு என்பது உயிரியல் நடவடிக்கை. உள்ளுக்குள் ஏதோ பிரச்னை . அது தெளிவாக இன்னதென்று என்னால் சொல்ல முடியவில்லை. உட்காராமல் அலைந்து கொண்டே இருப்பது மட்டும் காரணமல்ல.

சமகால தமிழ்ச்சிறுகதைப்போக்கு குறித்த உங்கள் அவதானிப்பு...?

                விடாமல் தொடர்ந்து வாசித்து வருகிறேன். 70களில் வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பா.செயப் பிரகாசம் என்று வந்தார்களே, அதுபோன்ற காலம் தமிழில் திரும்ப வரவே இல்லை. இப்போதைய சிறுகதைகளில் மெலிதான உற்சாகமும் பெரிதான ஏமாற்றமும்தான் எனக்கு.

கவிதைகளில் மிகுந்த நாட்டமுடையவர் நீங்கள். புதுக்கவிதை என்கிற இடத்தைக் கடந்து இன்றைக்கு தமிழ் நவீன கவிதை அடைந்துள்ள வளர்ச்சி திருப்தி அளிக்கும் படியாக உள்ளனவா?

                கவிதையைச் சில காலம் பின் தொடராமல் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். கவிதையைப் பொறுத்தவரை தலித் படைப்பாளிகளிடமும் பெண் களிடமும் என் கவனம் மையம் கொள்கிறது. திருப்தி என்ற இடத்துக்குப் போக வேண்டியதில்லை. பிற வடிவங் களைப் பார்க்க, கவிதையில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் படத்தின் ட்ரையிலரை யூ டிவியில் பார்த்தீர்களா? பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இந்து மதக் கடவுள்களைக் கிழி கிழியென்று கிழித்திருக்க, இயேசு கிறிஸ்து மீதும் பரவலாக விமர்சனங்கள் வைக்கப் பட்டுள்ளன. இஸ்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மதமாக உருவெடுக்கிறதா? சகிப்புத்தன்மையற்ற போக்கும் விமர்சனங் களை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்ளாமல் புறக்கணிப்பதும் சரியாகுமா?

                சரியல்ல. பொறுமையும் நிதானமும் தேவை. உலக அளவிலும் இந்திய அளவிலும் ஒரு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகமாக இஸ்லாமிய சமூகம் இருப்பதும் காயங்களுக்கு மருந்து கிடைக்காத சமூகமாக அது இருப்பதுவும் இத்தகைய கோபங்களுக்குக் காரணமாக அமைவதாக நான் கருதுகிறேன்.

உங்களுடைய சிறுகதை வெளிப்பாடுகளில் சிவராணி, ஏவாளின் குற்றச்சாட்டுகள், வெளிறிய முத்தம் போன்றவை வித்தியாச மானவை. இளமையில் காதலித்த அனுபவம் உண்டல்லவா?

                காதல் ஒரு குறிப்பிட்ட பருவத்துக்கு உரியது மட்டுமல்ல. ஒவ்வொரு பருவத்திலும் அதன் வாசனையும் வண்ணங்களும் வடிவங்களும் மாறுபடும். கி.ராஜநாராயணன் சொன்னதைப் பாருங்கள்.

பெண்ணெழுத்து வலுப்பட்டிருக்கும் நிலையில் பெண்கள் இன்னும் தொட்டுக் காட்டாத விஷயங்கள் எவையெல்லாம் இருக்கின்றன என்று உங்களால் கூற முடியுமா?

                பெண்தான் இவ்வுலகின் தலைமை ஏற்கச் சரியானவள். தன்னுடைய தலைமைத் தகுதியை உணர்ந்து இந்த "சோதா' ஆண்களுக்கும் சேர்த்து அவள் சிந்திக்க வேண்டும். அந்த இடத்தை நோக்கி நம் பெண்ணெழுத்து விரைய வேண்டும்.

கடவுள் நம்பிக்கை இல்லாத உங்களால் "சாமிகளின் பிறப்பும் இறப்பும்' எழுத முடிந்தது. அந்த நூல் இன்னும் விரித்து எழுதப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.

                அது குழந்தைகளுக்காக (8,9 வகுப்பு) எழுதப்பட்டதால் அந்த அளவு போதும். விரித்து யாராவது ஆய்வாளர்கள் எழுதட்டும். எழுதுவார்கள்.

கோவில்பட்டி நிறைய படைப்பாளிகளைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறது. இலக்கி யத்தில் புதிய தலைமுறை ஒன்று அம்மண்ணில் உருவாகியிருக்கிறதா?

                சபரிநாதனும் கறுத்தடையானும் வந்திருக்கிறார்கள். காத்திருந்து பார்க் கலாம்.

பாய்களுக்குப் பெயர்பெற்றது பத்தமடை என அறிந்திருக்கிறேன். பத்தமடைப் பாயை நிலத்தில் விரித்து சுகமாக உறங்கிய அனுபவம் உண்டா?

                சுகமாக உறங்கினோமோ இல்லையோ கடந்த 33 ஆண்டுகளாக பத்தமடைக்குக் குடிபோனதிலிருந்து பாய் விரித்துத்தான், தரையில்தான், படுத் துறங்கிக் கொண்டிருக்கிறோம். கட்டில், மெத்தைகள் நமக்கு எப்போதுமே சரிப்பட்டு வந்த தில்லை. எப்போதும் தரை தான்.

இத்தனை அனுபவங்களையும் வைத்துக் கொண்டு எழுத்தாளராகவும் இருந்து கொண்டு இன்னும் எப்படி உங்களால் நாவல் எழுதாமல் இருக்க முடிகிறது? விரைவில் பெரிய நாவல் முயற்சியை எதிர்பார்க்கலாமா?

                சிறுகதைக்கே வழியைக் காணோம். தவிர நாவலாசிரியர் என்கிற எண்ணமே எனக்கில்லை. தொடர்ந்து சிறுகதையில் எவ்வளவோ செய்ய வேண்டும் என்று மட்டும் மனசில் இருக்கிறது.

புத்தகம் பேசுது இதழில் எழுதிவரும் என் சகபயணிகள் தொடரில் இன்னும் யாரெல்லாம் இடம் பெறப்போகிறார்கள்? லிங்கன் போன்ற மறக்கப்பட்ட எழுத்தாளர் களைத் தொடர்ந்து அடையாளப்படுத்து வீர்களா?

                இத்தொடர் ஒரு வாசகனாக என்னை பாதித்த படைப்பாளிகளைப் பற்றி மட்டும் எழுதவே துவக்கப்பட்டது. என் வாசிப்புக்கு வராத மறக்கப்பட்ட படைப் பாளிகளும் இருக்கக்கூடும். எனக்கு சலிப்பு வந்ததும் தொடரை நிறுத்திவிடுவேன். அதுதான் என் பழக்கம். இன்னும் நாலைந்துபேர் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். நாஞ்சில், பிரபஞ்சன், தஞ்சை பிரகாஷ் போல... அப்புறமாக ஒரு இடைவெளிக்குப் பின் என் முன்னோடிகள் என்று மாயூரம் வேதநாயகம்பிள்ளை முதல் என் வாசிப்பு அனுபவத்தை எழுத ஆசைப் படுகிறேன்.

சமீபத்தில் உங்களை முணுமுணுக்க வைத்த தமிழ்ப்பாடல் எது?

                அந்த ஏரியா நமக்கு ரொம்ப வீக். பழைய தமிழ்ச்சினிமாப் பாடல் வரிகள் தான் எப்போதும்.

"அரசியல் எனக்குப்பிடிக்கும்' எழுதிய உங்களுக்கு இலக்கியவாதி தமிழ்ச் செல்வனை, அரசியல்வாதி தமிழ்ச் செல்வனை இருவரில் எவரைப் பிடிக்கும்?

                நான் எப்போதும் இலக்கியவாதி மட்டும்தான். பண்பாட்டு அரசியல் தளத்தில் இயங்கும் ஓர் இலக்கியவாதி தான். இலக்கியவாதி எழுதிய புத்தகம்தான் "அரசியல் எனக்குப் பிடிக்கும்'.

க.நா.சு ஒரு கம்யூனிஸ்ட் எதிரி என வர்ணிக்கப்படுகிறார். சாகித்ய அகாதமி ஏற்பாடு செய்திருந்த க.நா.சு. நூற்றாண்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினீர்கள்?

                க.நா.சு. கம்யூனிஸ்ட் எதிரி என்று முதலில் சொன்னது கம்யூனிஸ்டுகள் அல்ல. க.நா.சு. தான் அப்படி வெளிப் படையாகப் பேசினார். எழுதினார். அரையணா காலணா புஸ்தகங்களை இலக்கியம் என்ற பேரில் கம்யூனிஸ்ட்டு கள் நம் தலையில் கொட்டுவதாக எழுதினார். அவர் ரசிகமணி டி.கே.சி. வழி வந்த ஓர் ரசனைவாதி என்று கைலாசபதி கணித்தார். அதெல்லாம் இப்போதும் சரிதான். அதே சமயம் க.நா.சு. தாத்தா இல்லாவிட்டால் நமக்கு உலக இலக்கியத்தின் பல முக்கியமான பகுதிகள் தெரிந்திருக்காது. அப்படி ஒரு மகத்தான பங்களிப்பை அவர் செய்திருக்கிறார். நாங்கள் அவரை அதற்காகக் கொண்டாடு வோம். விமர்சனம் எப்போதும் இருக்கும். அவரே வெளிப்படையாக கம்யூ. எதிர்ப்புக் கருத்துக்களை சொல்லும்போது நாங்கள் வாயைப் பொத்திக்கொண்டா இருக்க முடியும். இதைத்தான் சாகித்ய அகாதமி கருத்தரங்கிலும் பேசினேன். அவருடைய 19 நாவல்களையும் இப்போது மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன்.

முழுக்கைச்சட்டை அணிவதை தவிர்ப்பது ஏன்? அது உங்களுக்குப் பொருந்தாது என்கிற எண்ணமா?

                ராணுவத்தில் எந்நேரமும் முழுக் கைச்சட்டை அணிந்து சலித்துப்போனதால் திரும்பி வந்ததும் இப்படி ஆகிவிட்டேன். பழகிவிட்டால் அப்புறம் அதுவே பிடித்தும் போகும்.

பல்வேறு இலக்கியப் பரிசளிப்புகளில் தொடர்ந்து குழந்தை இலக்கியம் புறக் கணிக்கப்படுவதைக் கவனித்தீர்களா? மொழி பெயர்ப்பு ஆனாலும், அவற்றில் சிறந்ததை தேர்ந்து பரிசளிக்கலாம்தானே?

                சிறந்த மொழிபெயர்ப்புக் குழந்தை இலக்கியம் என்று தரலாம்.

பதிமூனில் ஒன்னு, பாவனைகள் போன்ற உங்கள் கதைகளில் குழந்தைகளின் மனவுலகம் பிரமாதமான சித்தரிப்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து அதைப்போன்ற கதைகளை எழுதும் எண்ணம் இருக்கிறதா?

                கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு போல ஒரு கதை எழுதிவிட மாட்டேனா என்பதுதான் என் நீண்ட காலக் கனா.

இதுவரை எழுதியுள்ள கதைகளில் என் கிராமத்தின் ஆன்மா இல்லாதிருப்பதை உணர்கிறேன்” என்று உங்கள் தொகுப்பின் முன்னுரையில் கூறியிருந்தீர்கள். இனி எழுதப் போகின்ற கதைகளில் அதைத் தரிசிக்கத் தருவீர்களா?

                ஆம். முயற்சிப்பேன்.

அண்மையில் மக்கள் ஒருங்கிணைந்து திரளாகக் களமிறங்கிப் போராடியது கூடங்குளம் பிரச்னையில் மட்டுமே என்று தெரிகிறது. ஒரு அரசியல்வாதியாக இதை எப்படிப்பார்க்கிறீர்கள்?

                அது ஒரு முக்கியமான - பல பாடங்களைக் கற்றுத்தரும் நீண்ட போராட்டம் என்று பார்க்கிறேன். அரசாங்கம் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அதை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்னையாக மட்டும் பார்ப்பதும் போராடும் தலைவர்களையும் மக்களையும் தேச துரோக வழக்குகளில் சிக்க வைப்பதும் வன்மையாகக் கண்டனம் செய்யத்தக்க அடாவடியான செயல்கள். சர்வதேச கவனம் பெறும் போராட்டமாக அது இருக்கிறது.

                உத்தப்புரம் மக்களும் விடாப் பிடியாகப் பல ஆண்டுகள் சட்டரீதியாகவும் களத்தில் இறங்கியும் போராடி சில வெற்றிகளும் பெற்றார்கள். தலித்துகள் என்பதாலும், கூட நின்றது கம்யூனிஸ்டுகள் என்பதாலும் பரவலான கவனம் அப்போராட்டத்துக்குக் கிடைக்கவில்லை.

எவ்வளவு கூக்குரல் எழுப்பியும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டைத் தடுக்க முடியவில்லையே?

                இன்னும் போராட்டம் முடிய வில்லை. தொடர்கிறது.

இப்போது எந்தப் புத்தகம் வாசிக்கிறீர்கள்?

                நேற்று வீர.வேலுசாமியின் நிறங்கள் தொகுப்பை மீண்டும் வாசித் தேன். கா.சிவத்தம்பியின் பண்டைத்தமிழ்ச் சமூகம் கட்டுரைத்தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் ஜாதிய உணர்வைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

                சாதி - மதங்களைக் கடந்த இடது சாரி மற்றும் உண்மையான ஜனநாயக சக்திகள் வளர வேண்டும். இந்தியப் பிரச்னை இது.

காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுக்கும் மாற்றாக மைய அரசியலில் இடதுசாரிகள் பிரதானமாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளதா?

                உடனடியாக அப்படி வாய்ப் பில்லை என்று தான் மார்க்சிஸ்டுகள் கூறுகிறார்கள்.

காலத்தின் ரேகை படிந்த புதுமைப்பித்தன் கதைகள் தொகுத்துத் தந்தீர்கள். உங்கள் வாசக அனுபவத்தில் புதுமைப் பித்தனுக்கும் உங்களை அதிகம் ஈர்த்த கு.அழகிரிசாமிக்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?

                கு.அழகிரிசாமியின் மடியில் ஏறி உட்கார்ந்து விளையாடலாம். புதுமைப் பித்தனிடம் கொஞ்சம் அச்சம் உண்டு எனக்கு. இரண்டு பேருமே என் தகப்பன் சாமிகள்தாம்.

மேடைப்பேச்சில் உங்களுக்கென்று ஒரு இயல்பும் மென்மையுமான பாணியைக் கடைப்பிடிக்கிறீர்கள். எல்லா மேடை களிலும் இது எப்படி சாத்தியம்? உணர்ச்சி வயப்பட்டு முழங்கிய அனுபவம் உண்டா?

                தமுஎகச தோழர்கள் காவல் துறையாலும் சில இடங்களில் பாஜக குண்டர்களாலும் தாக்கப்பட்டபோது கோபவேசமாகப் பேசியிருக்கிறேன். மற்ற எல்லா மேடைகளுமே என் சக தோழர் களுக்குக் கல்வி புகட்டும் மேடைகள்தான். அதில் அவர்களை நான் ஏற்கச் செய்வது தான் முக்கியம். அதற்கான மொழிதான் தேவை. தேவையில்லாமல் பேச்சில் டென்சன் ஆவது வேஸ்ட்.

எல்லைகளை விரித்துக்கொண்டிருக்கும் புத்தகச் சந்தைகளால் வாசிப்புப் பழக்கம் அதிகரித்துள்ளதாகக் கருதுகிறீர்களா?

                கல்வியறிவு பரவலாகியுள்ளதால் வாசிக்கப் புத்தகம் தேவைப்படுகிறது. ஆகவே அந்த இடத்தை புத்தகச் சந்தைகள் பூர்த்தி செய்கின்றன. சரியான புத்தகங்கள் தான் போய்ச் சேருகின்றனவா? என்பதே அடுத்த நம் கவலையாக இருக்க வேண்டும்.

சில ஆண்டுகளாக நூலக ஆணை அறிவிக்காமல் காலங்கடத்தும் மாநில அரசுக்கு என்ன தண்டனை தரலாம்?

                ஒன்னும் செய்ய முடியாது. நாம் நூல்களை வாங்கச் சொல்லிப் போராடலாம்.

துணைவியாரைத் தவிர்த்து மிக அந்தரங்கமாக நீங்கள் உரையாடக்கூடிய நண்பர் யாரும் இருக்கிறார்களா?

                அந்தரங்கமாக உணர்கிற பல நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லா வற்றையும் பகிர்ந்து கொள்வதில்லை. அவ்வளவு கசடுகள் சேர்ந்துவிட்டன.

சக படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

                பேட்டி கொடுக்க மறுக்கப் பழகுங்கள்.

Pin It