வணக்கம்.

     நானும் நீண்ட நாள் இனிய நண்பர் பரிதியும் அன்றிலிருந்து (1970) இன்று வரை பெரும்பான்மையான இலக்கிய இதழ்களை வாங்கி வாசித்து, அது பற்றி கருத்துப்பரிமாற்றமும் செய்து கொள்வோம், தொலைபேசியிலோ, நேரிலோ.

     பெரும்பான்மை நேரங்களில் என்னைப் போன்றே அவரும் "நவீன' எழுத்துக்களைப் புரிந்துகொள்ள இயலாமல் மண்டை காய்ந்து... மீண்டும் மீண்டும் படித்து... மேலும் குழம்பி... "உங்களுக்காச்சும் ஏதாவது விளங்குதா?' என்று பரஸ்பரம் கேட்டு "நமக்கும் புரியலை; அவருக்கும் புரியலை; ரொம்ப சந்தோஷம்'னு எங்க முதுகுல நாங்களே தட்டிக் கொடுத்துக்குவோம். கட்டுரை களிலும், சிறுகதைகளிலும், கவிதைகளிலும் இப்போக்கு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது, இன்றுவரை.

     சரி நமக்குத்தான் புரியலை போலிருக்குன்னு சில நேரங்களில் எங்களைவிட மெத்தப் படித்தவர்களையும், எழுத்துலகில் "கொடி'கட்டிப் பறக்கும் சமகால எழுத்தாளர்களையும் கூட அணுகி, "என்ன சொல்ல வர்றாங்க'ன்னு கேட்டிருக்கோம். அவுங்களும் படிச்சுப் பார்த்துட்டு உதட்டைப் பிதுக்கியும், "ஏதோ சொல்ல வர்றாங்கன்னு தெரியுது; ஆனா என்னன்னு விளங்கலே' என்றும் "இதுக்கெல்லாம் ஞானம் வேணும்'னும் சொல்லக்கேட்டு தலை சுத்திப்போய் ஞானமில்லாத நம்மையும் ஞானம் ஊட்டாத(?) சமூகத்தையும் நொந்துகிட்டு கெடந்திருக்கோம். வேறென்ன செய்ய முடியும் எங்களால?

     தமிழின் மிகச்சிறந்த இயக்குநர் களில் ஒருவராக மதிக்கப்படுகிற மகேந்திரன் அவர்களிடம் சமீபத்திய "கல்கி' இதழில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது:

     நவீன இலக்கியங்களை வாசிக் கிறீர்களா? அது குறித்து உங்களது பார்வை?

     “நவீன இலக்கியங்கள் என்னதான் சொல்ல வருதுன்னு எனக்குப் புரியலை. நான் யாரையும் குறிப்பிட விரும்பலை. தமிழைவிட மலையாளத்தில் இலக்கியம் வலுவா இருக்கு...”

     உலகத் திரைப்படங்களில் பரிச்சயமும், இலக்கிய ஈடுபாடும் மிக்க ஒரு இயக்குநரே சொல்ல வருகிற விஷயங்கள் புரியவில்லை என நவீன இலக்கியம் குறித்து குறிப்பிடுகிறார் என்றால், இது ஏதோ நமக்கு மட்டுமே நேர்ந்துவிட்ட அவலமல்ல; அனுபவமல்ல என்று புரிந்து கொள்ள முடிகிறது இல்லையா?

     "கலை கலைக்காக' என்று சிலரும், "இல்லை. கலை, மக்களுக்காக' என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் ரெண்டு பேருமே இந்த குழப்பி கும்மியடிக்கிற நவீனத்தை மட்டும் கண்டுக்கிடறதே இல்லை. இது பத்தி கருத்துச் சொன்னால் தங்களை இலக்கியவாதி லிஸ்ட்லேர்ந்து விலக்கிடுவாங்களோங்கிற பயம் போலிருக்கு...! ஆனால் நாங்கள் மட்டும் “கருக்கல் விடியும்” துவங்க எண்ணிய போதே ரொம்ப தெளிவா இருந்தோம் - இந்த மாதிரி நவீன எழுத்துக்களை தவிர்ப்பது அல்லது எதிர்ப்பது அல்லது நம்மைப் போன்ற வாசக, எழுத்தாளர்களை குறைந்த பட்சம் இந்தப் படுகுழியி லிருந்தாவது காப்பாற்றுவது!

     புதிதாக எழுத வரும் இளைஞர்கள் இம்மாதிரி எழுத்துக்களை கண்டு ஆரம்பத்தில் மிரட்சியடைந்து, பின் வாங்கியதை பல நேரங்களில் கண் கூடாகவே கண்டிருக்கிறோம். அவர்களை தட்டிக் கொடுத்து "புரியும்படி எழுது; கவனிக்கப்படுவாய்' என உற்சாகப்படுத்தியு மிருக்கிறúôம். (மிகப்பலர் புரியாத சுழலில் சிக்கி மீள முடியாமல் அமுங்கிப் போனதுமுண்டு.) "ஆரம்பத்தில் முத்து காமிக்ஸ் படித்து எழுத ஆரம்பித்தோம்' என்று ஸ்டேட்மெண்ட் தரும் இன்றைய நவீன எழுத்துக்காரர்கள் இலகுவாய் ரசிக்கும்படி இருந்ததால்தான் எழுத்துத் துறைக்கே தாங்கள் கவர்ந்து இழுத்து வரப்பட்டோம் என்பதை பின்னாட்களில் ஏனோ மறந்தே போய்விடுகிறார்கள்...

     புரியாத எழுத்துக்களுக்கு எதிராகப் போரிடும் துணிச்சலை - குறைந்தபட்சம் புறக்கணிக்கும் மனோ ஆற்றலை வளர்த்துக் கொண்டால்தான் இன்றும் - இனி வரும் காலங்களிலும் தமிழ் இலக்கியத்தை மக்கள் மத்தியில் பரவலாக்கி, கவர வைத்து, வெற்றியும் காண முடியும். அதைத்தான் “கருக்கல் விடியும்” விரும்புகிறது. எனவேதான் உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும் சுஜாதா விருதுகள் - 2013இல் சிறந்த தமிழக சிற்றிதழாக உங்களின் ஒத்துழைப்போடு தேர்வு செய்யப்பட்ட “கருக்கல்” இதழ் பற்றிய சிறு குறிப்பினை உயிர்மை ஆசிரியர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கேட்ட போது, இப்படி கொடுத் திருந்தோம்:

     “கருக்கல் - இலக்கிய இருமாத இதழ். நோக்கம் - தெளிவு, நேர்மை, தூய்மை. கலை, இலக்கியம், அரசியல் என அனைத்துத் தளத்திலும் இந்த மூன்றையும் நோக்கமாகக் கொண்டு “விடியும்” என்ற நம்பிக்கையில் “கருக்கல்” வந்து கொண்டிருக்கிறது”.

     “கதை, கவிதை, கட்டுரை என அனைத்தும் தெளிவாக எளிதாக வாசகனைச் சென்றடைய வேண்டும். எது சரியோ, சரி என நினைக்கப்படுகிறதோ அதைச் சொல்வதில் துணிவுடன் கூடிய நேர்மை எதார்த்தத்தை உரைப்பதான பாசாங்கில் வேசம் கட்டி ஆடும் அருவருப்பு ஆபாசம் நீக்கிய தூய்மை என கருக்கல் விடியும் வந்து கொண்டுள்ளது”.

     “மொழி, இன உணர்வு, பண்பாடு என இம்மூன்றிலும் தமிழ் என்னும் அடித்தளம் சிதைந்துவிடாத தெளிவு, நேர்மை, தூய்மை இவைதான் இதழின் முடிந்த முடிவான கறாரான நோக்கங்கள்”.

     உண்மைதானே?

= = =

     இன்றைய மாணவர்கள் மட்டுமல்ல மெத்தப் படித்தவர்களும், மிகப்பெரும் பொறுப்பில் இருப்போரும் கூட தங்கள் துறை சார்ந்ததைத் தவிர, வேறு எதையும் அறியாதவர்களாக - குறிப்பாக செய்தித் தாள்கள், புத்தகங்கள் படிப்பதையே தவிர்ப் பவர்களாக விளங்கிவரும் செய்தி, அதிர்ச்சியை மட்டுமல்ல அவமானம் தருவதாகவும் அமைந்துள்ளது.

     தொலைக்காட்சிகளில் செய்தி களையும், அவை சார்ந்த விவாத நிகழ்வு களையுமே பெரும்பாலும் பார்க்கும் வழக்கமுள்ள நான், அண்மைக்காலமாக விஜய் டி.வி.யில் நடிகர் பிரகாஷ்ராஜ் திறம்பட நடத்திவரும் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”யை ஆர்வமாய் பார்த்து வருகிறேன். பிரகாஷ்ராஜ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களிடம் அளவளாவும்போது புத்தகவாசிப்பு மற்றும் பத்திரிகை வாசிப்பு குறித்து கேட்கிற கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்கள், அவரை மட்டுமல்ல நம்மையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கி வருகிறது. மிகப்பலரும் அதற்கெல்லாம் நேரமில்லாதது போல பெருமிதமாகப் பதில் சொல்ல, பிரகாஷ்ராஜ் தனது அதிர்ச்சிகளையும் அதிருப்தியையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

     “மிகச் சுலபமான கேள்விகள்... நீ போனால் ஜெயித்து வரலாம்” - மகள் கொடுத்த அதீத நம்பிக்கையில் இப்படி நிகழ்வில் கலந்து கொண்ட பெண் டாக்டர் ஒருவர் (குடும்பமே டாக்டர் குடும்பமாம்!) "தானும் நூல்களை வாசிப்பதில்லை' எனச் சொல்லி பிரகாஷ்ராஜை கலவரப் படுத்தினார். இவரது தந்தை ராதாகிருஷ்ணன் சிறந்த பொதுவுடமை வாதி மற்றும் தேர்ந்த புத்தக சேகரிப்பாளர் வேறு. இவர் சீக்கிரமே வெளியேற காரணமான கேள்வி : ஐ.நா.வின் கட்டுப் பாட்டில் இல்லாத அமைப்பு எது? (செஞ்சிலுவை சங்கம்)

     சமீபத்தில் தருமபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் ஸ்டாலின் இப்படித்தான் பிரகாஷ்ராஜிடம் மாட்டிக்கொண்டு விழித்தார். 50 லட்சக் கனவோடு வந்தவர், 40 ஆயிரம் ரூபாய் கேள்வியான சமீபத்தில் இறந்த வெனிசுலா அதிபர் யார்? என்பதற்கே தடுமாறி தத்தளித்து "நான் ஜி.கே. மற்றும் பாடநூல்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில்லை' என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். மனித நேய மருத்துவராக தன்னை தகவமைத்துக் கொள்ள விரும்பும் இவர், மனிதகுல வரலாறுகளை அறியாதிருப்பது, அமெரிக்காவையே நடுநடுங்க வைத்த சாவேஸ் பற்றி கூட தெரியாமலிருப்பது... அவருக்கு மட்டுமல்ல நமக்கும்கூட பேரிழப்புதான்.

     சமீபகாலமாக ஈழம் பற்றி சரியான புரிதலோடு களத்திற்கு வந்து போராடிய மாணவர்களைக் கண்டு புளகாங்கித மடைந்த நம்மால், அதே நேரம் ஸ்டாலின் போன்றோரின் "கிணற்றுத் தவளை'ப் படிப்பு, எதிர்காலம் குறித்தும் பெருங் கவலை கொள்ளாமலிருக்க முடியவில்லை.

     மாணவர்களே! படிப்பைத் தாண்டி "படிக்க' வாங்க!

 அன்புடன்,

 அம்ரா பாண்டியன்

Pin It