அறுபதுகளில் நிறைய "டப்பிங்' படங்கள் தியேட்டர்களில் ஓடிக் கொண்டி ருந்தன. பெரும்பாலும் தெலுங்கு டப்பிங்குகள். என்.டி.ராமராவ், காந்தராவ், ரங்காராவ் என நிறைய ராவ்கள். ராஜநாளா, முக்கமாலா என்று வில்லன்கள், கூடுதல் கரகரப்பான ராம்சிங் குரலில் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். ராஜாராணி கதைகள் மாயஜால மந்திரங்கள் என வேடிக்கையாக இருக்கும்.

கனல் பறக்கும் சண்டைகள், மாயமந்திரக் காட்சிகள் நிறைந்த படமென்று மாட்டு வண்டிகளில் "டிரம்' அடித்து நோட்டீஸ் விநியோகம் நடந்து கொண்டிருக்கும். கதாநாயகர்களின் உடை அலங்காரம் வினோதமாக இருக்கும். உரித்துதான் எடுக்க வேண்டியிருக்கும் என்ற அளவில் டைட்டான பேண்ட், ஜிகினா வேலைப்பாடுகள் நிறைந்த உயரக் குறைவான சட்டை போட்டுக் கொண்டு ராஜகுமாரர்கள் குதிரை ஏறி பறப்பார்கள். கத்தி சண்டை போடுவார்கள், மல்யுத்தம் போல கதாநாயகிகளுடன் கட்டிப் புரளு வார்கள். பள்ளிக்கூட நடன நிகழ்ச்சிகளில் மாணவிகள் அணிந்து கொண்டிருப்பது போன்ற உடை அலங்காரத்தில் ராஜ குமாரிகள் நந்தவனத்தில் தோழிப் பெண் களுடன் நடனமாடுவார்கள். ஓடிப்பிடித்து "கெக்கே பிக்கே' என்று சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

மந்திரவாதி கடத்த வரும்போது, புறங்கையை வாயருகே வைத்து "வீல்' சப்தமிட்டு மயங்கி, பின்னர் மந்திரவாதியின் படுபயங்கர பாதாளக் குகையில் கண்விழித்து, மீண்டும் வீறிடு வார்கள். மந்திரவாதிக்கு "அசட்டுப் பிசட்டு' என்று இரு சீடர்கள் மோதிக் கொண்டு விழுந்தடித்து ஓடி காமடி காண்பிப்பார்கள். “சொரூபவல்லியே... சொப்பன சுந்தரியே... உந்தன் அழகில் மயங்கிவிட்டேனடி... என்னை ஏற்றுக் கொள்ளடி பஞ்சவர்ணக் கிளியே” என கொஞ்சிக் கொண்டும், பயமுறுத்திக் கொண்டுமிருப்பான் மந்திரவாதி; ராஜகுமாரன் குதிரை ஏறி பறந்து வந்து கொண்டிருப்பான். அநேகமாக, எல்லாப் படங்களும் அலுப்பு சலிப்பில்லாமல் இதே ரீதியில் எடுக்கப் பட்டிருக்கும். ரசிக மகா ஜனங்கள் பார்த்து பரவசப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

                அப்படி பரவசத்துடன் சிறுவயதில் பார்த்தப்படம் தான் "பாதாள பைரவி'. சமீபத்தில் இந்தப் படத்தின் ஸ்டில் போட்டோவை வார இதழ் ஒன்றில் பார்த்தேன். என்.டி.ராமாராவ் சிறுவயதில் அவ்வளவு அழகாகவும், துருதுருவென்றும், குறும்புத்தனமான புன்னகையுடனும் இருப்பார். (இந்த இமேஜை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தன் ரசிக மகா ஜனங்களிடம் தக்க வைத்துக் கொண்டு ஆந்திராவின் முதலமைச்சரும் ஆகிவிட்டார். அது வேற கதை)

                பாதாள பைரவியில் ரங்காராவ் படுபயங்கர மந்திரவாதி. அவர் எதற்கோ தன் எதிரே நிற்கும் என்.டி.ஆரைப் பார்த்து “என்னடா... சொல்லடா...” என்பார். என்.டி.ஆர். மிகுந்த ஸ்டைலாக தன் கைகளைக் கட்டிக் கொண்டு “உள்ளதைச் சொல்லவா, உள்ளதை இல்லை என்று சொல்லவா?” என்பார். இந்த வசனம் படத்தில் நான்கைந்து முறைவரும். படம் பார்த்து வீட்டுக்கு வந்து அப்பாவோ, அம்மாவோ எது சொன்னாலும் என்.டி.ஆர். போல கையைக் கட்டிக்கொண்டு “உள்ளதைச் சொல்லவா, உள்ளதை இல்லை என்று சொல்லவா?” என்று வசனம் பேசி உதைபட்டதெல்லாம், அந்த ஒரு போட்டோ கிளர்த்திவிட்டது. ஐம்பது வருஷமிருக்குமா?... இருக்கும். இவ்வளவு காலத்திற்குப் பிறகும் ஒரு திரைப்படத்தின் வசனம் நினைவிலிருப்பதுதான், தமிழ்ப் படத்தின் பலமும் பலவீனமும்.

                பேசாத ஊமைப்படங்கள் பேச ஆரம்பித்தவுடன், நிறைய பேசவில்லை, நிறைய பாடிக் கொண்டிருந்த நாடக மேடையின் தாக்கம் திரைப்படத்தின்மீது இருந்தது. நன்கு பாடத்தெரிந்தவர்களே நடிக்கவும் செய்தார்கள். நிறைய பாகவதர்கள் நடிகர்களாக மாறினார்கள். நடிப்பு என்பது இரண்டாம் பட்சம்தான். ஒரு திரைப்படத்தில் ஐம்பது, அறுபது பாடல்கள் இருந்ததாகக் கேள்விப் படுகிறோம். நாயகர்களாகட்டும், நாயகி களாகட்டும் பேசும் பொழுது நிரந்தர வயிற்று வலிக்காரர்கள் போல முக்கி முனகி வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கமோ உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற வகையிலோ பேசத் தெரியாதவர்களாகவும், பள்ளிக்கூட பிள்ளைகளின் நாடக வசனம் போலவும் பேசிக் கொண்டிருந்தார்கள். நேக்கு, நோக்கு என பிராமண பாஷை வேறு கலப்படமில்லாது பேசப்பட்டது. பெரும் பாலும் புராணப்படங்கள்தான் "ஸ்வாமி... நாதா... ப்ரியே” என்று இருந்தது.

                பி.யூ.சின்னப்பா கோவலனாகவும் கண்ணாம்பா கண்ணகியாகவும் நடித்து இளங்கோவன் வசனம் எழுதிய கண்ணகி படத்தில்தான் தூய்மையான தமிழ் உரை யாடல்கள் இடம் பெற்றதாக அறிகிறோம். எனவே தமிழ்ப்பட வசனத்தில் புதியதொரு திருப்பமும் புத்துயிர்ப்பும் அளித்தவர் இளங்கோவன்தான்.

                பிறகு அண்ணா வந்தார். "சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு' என்பது போன்ற தூய தமிழ் நடை மலர்ந்தது. அடுக்கிவரும் வசனங்கள். குணாளா, குலக்கொழுந்தே, குடிகேடி, சண்டாளி, சதிகாரி, குல்லுகப்பட்டர், மதோன்மத்தன் என புதிய புதிய வார்த்தைகள் பவனி வந்தன. "அம்பாள் எப்போதடா பேசினாள்' என பூசாரியை கலைஞர் விரட்டினார். நீள நீளமான வசனங்கள், அடுக்குமொழி, ஆவேசநடை, அத்தான், கண்ணே போன்ற வசனங்கள். திரைப்படத்துக்குள் ஒரு நாடகம்... கோர்ட் சீன்... மூச்சைப் பிடித்துக் கொண்டு பேசினார்கள்; ஆனால் தெளிவாகப் பேசினார்கள். உணர்ச்சிகளை வெளிப் படுத்தினார்கள். வசனத்தின் தாக்கம் பாடல்களிலும் "எங்கள் திராவிடப் பொன்னாடே', "அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என வசனமும் பாடலும் அரசியல் பேசின, பாடின.

“யாரைக் கேட்கிறாய் வரி? யாரைக் கேட்கிறாய் கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா... நாற்று நட்டாயா...” என கேள்வி மேல் கேள்வி கேட்டு வெள்ளையனை பயமுறுத்திய வீரபாண்டிய கட்ட பொம்மன்... தாயின் பாசத்தில் கரைந்து... தங்கையின் வாழ்விற்கு நெகிழ்ந்து... காதலில் குழைந்து எம்.ஜி.ஆர்., "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி' என பல்லை நறநறவெனக் கடித்து வசனம் பேசிச் சிரிக்கும் பி.எஸ். வீரப்பா, நயவஞ்சகமாக பேசும் நம்பியார். ஒரே வரி வசனத்தை மூன்று குரலில் பேசும் எம்.ஆர்.ராதா, துள்ளி வருகுதுவேல் என்பது போல துள்ளிக்குதித்துப் பேசும் எஸ்.எஸ்.ஆர். தலையை இடது புறம் சாய்த்து தோளைக் குலுக்கிப் பேசும் ஆர்.எஸ்.மனோகர். மிகை நடிப்பில் சர்வாங்கமும் அதிரப்பேசும் அசோகன். தலையை ஆட்டி ஆட்டிப் பேசும் ராகவன்... பணிவோ பணிவு எனவும் நிமிர்ந்து கண்கள் அகலவிழித்து "என்னடி... அபிராமி' என அதட்டும் எஸ்.வி.சுப்பையா, செவி கிழிக்க கத்தும் வி.கே.ராமசாமி... நாகையா... பாலையா... ரங்காராவ் என எவரை விட்டுவிட முடியும். ஏ.வி.எம்.ராஜன், சிவக்குமார், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல் என எல்லோரும் கண்முன் வருகிறார்கள்.

"ய்இது எப்படி இருக்கு?' "பேரக் கேட்டால சும்மா அதிருதில்ல...' "நீங்க நல்லவரா? கெட்டவரா? நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எது செஞ்சாலும் தப்பில்ல' என்ற நியாயம்... "என்வோ... போடா... மாதவா' என ஜனகராஜ்... "என்னத்த' என இழுக்கும் கன்னையா... "வரும்... ஆனா... வராது'. இதோடு "சாமி... எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்' என்ற சாமிக் கண்ணுவின் பரிதாபக்குரல்... "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா' ...ஷ்... அப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே.

                இனி பேசலாம் திரைப்படத்தின் வசனம், சூழல், நடித்தவர், எழுதியவர் என நிறையப் பேசலாம்.

                இதையெல்லாம் எழுத உனக்கு என்ன தெரியும். என்ன தகுதி இருக்குன்னு நீங்க நெனைக்கலாம்... நான் என்ன அகிரா குரோசோவா, பைசைக்கிள் தீவ்ஸ், பதேர் பாஞ்சாலி... எலிபத்தாயம் ரேன்னா பேசப் போறேன். நேக்கு யாரத் தெரியும் நான் தமிழ் சினிமா பார்க்கிறவன். தமிழ் சினிமா ரசிக்கிறவன், தமிழ் சினிமா பேசறவன். என்ன... இப்ப எழுதலாம்ல...

Pin It