செழித்தோங்கி நிற்கும் தமிழ்க்கவி மர(பில்)ங்களில் புதிய கீதமிசைக்கின்றன குக்கூப் பாடல்கள்.

இயற்கையின் எழில் கொஞ்சும் அழகையும், மனிதப் பேராசை இயற்கையை சூறையாடுவதி லிருந்து அதனை மீட்க வேண்டும் என்கிற பொருண்மை

யோடு, தமிழ் வாழ்வியல் சூழலில் ஒவ்வொரு தனிமனிதனையும் செதுக்குகிற / சிதைக்கிற சமூக - பொருளாதார - அரசியல் விழுங்கியங் களையும், தமிழ் மரபில் என்றும் கலந்தேயிருக்கிற காதலையும் சேர்த்தே தான் தமிழ் ஹைக்கூ கவிதைகள் குக்கூப் பாடல்களாய் கூவி வருகின்றன.

                மகாகவி பாரதியாரின் "ஜப்பானிய கவிதை' என்கிற குறுங்கட்டுரை வழி, தமிழுக்கு முதல் அறிமுகமான (சுதேச மித்திரன் - 16.10.1916) ஹைக்கூ கவிதைகள், தமிழ் வாசகப் பார்வையில் பதிவாகி, இன்னும் மூன்றாண்டுகளில் நூற்றாண்டைத் (1916-2016) தொடவிருக்கின்றன.

                ஒரு நூற்றாண்டு என்பதை விடவும், தமிழில் தனியாய் ஹைக்கூ கவிதை நூல்கள் வரத் தொடங்கி, கால் நூற்றாண்டு காலம் தான் ஆகிறது.

                ஓவியக்கவிஞர் அமுதபாரதியின் "புள்ளிப் பூக்கள்' (ஆகஸ்ட்-1984), கவிஞர் அறிவுமதியின் "புல்லின் நுனியில் பனித்துளி' (நவம்பர்-1984) இவ்விரு நூல்களுமே தமிழில் வெளியான முதல் ஹைக்கூ கவிதை நூல்கள்.

                பாரதியின் அறிமுகத்திற்குப்பின் 68 ஆண்டுகள் கழிந்த பிறகுதான், தமிழில் ஹைக்கூ கவிதை நூல்கள் வெளிவரத் துவங்கின.

                அறிமுகக் கட்டுரை வெளியான 50 ஆண்டுகளுக்குப்பின், எழுத்தாளர் சுஜாதா, சில ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து, "கணையாழி' (ஜனவரி-1966) இதழில் வெளியிட்டார்.

                கவிஞரும், மொழிபெயர்ப் பாளருமான சி.மணி (பழனிச்சாமி) ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து "நடை' (அக்டோபர்-1968) இதழில் வெளியிட்டார்.

                1970-க்குப் பிறகே தமிழில் மொழி பெயர்ப்பில்லாத தமிழ் ஹைக்கூ கவிதைகள் எழுதப்பட்டன. இதில் முதன்மையானவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

                தமிழில் ஹைக்கூ கவிதைகள் பற்றிய பரவலான அறிமுகத்தையும், பலரும் எழுதுவதற்கான தூண்டுதலையும் வெகுஜன இதழ்களில் கவிக்கோ அப்துல் ரகுமானும், எழுத்தாளர் சுஜாதாவும் எழுதிய கட்டுரைகள் உண்டாக்கின.

                கவிக்கோ அப்துல்ரகுமான் "சிந்தர்' எனும் தலைப்பிட்டு, தமிழ் ஹைக்கூ கவிதைகளை எழுதினார். அவரது "பால்வீதி' எனும் தொகுப்பில் இக்கவிதைகள் இடம் பெற்றன.

                அதிலொரு பதம்.

                                “இரவெல்லாம்

                                உன் நினைவுகள்

                                கொசுக்கள்'

                வெறும் மூன்று வரிக் கவிதையாக இல்லாமல், ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்புது அர்த்தத்தைத் தருவதாலேயே இவை ஹைக்கூ கவிதைகள் என்கிற கவனிப்பைப் பெறுகின்றன.

                முதல் தமிழ் ஹைக்கூ கவிதை நூல் வெளிவந்து முப்பதாண்டுகளைத் தொடவுள்ள இந்நிலையில், இதுவரை (மார்ச் 2013) என் சேகரிப்பில் மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதை நூல்களும், கட்டுரை நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் என நெஞ்சம் மகிழும் வகையில் நல்ல பல வரவுகள் வெளி வந்திருக்கின்றன.

                தமிழில் ஹைக்கூ கவிதைகளுக்கு ஆரம்பத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு ஒன்றும் கிடைத்துவிடவில்லை. மாறாக, விமர்சனம் என்ற பெயரில் கேலியான குற்றச்சாட்டுகளும், தவறான ஹைக்கூ பற்றிய தகவல்களையும் பரப்பினர். இதில், பல மூத்த தமிழ்க் கவிஞர்களும் அடங்குவர்.

                தமிழில் ஹைக்கூ கவிதைகள் பற்றிய தெளிவான பார்வையையும், சரியான புரிதலையும் தந்தவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

                1985 பிப்ரவரியில் வெளியான அவரது "சூரியப் பிறைகள்' ஹைக்கூ கவிதை நூலும், அதில் கவிஞர் முன்னுரையாக எழுதிய "வாசல் ஓர வாசகம்' எனும் கட்டுரையும் இளைய கவிகளுக்கு கைவிளக்கானது.

                ஹைக்கூ பற்றி எள்ளி நகையாடிய பலரும் குட்டிய முதல் குட்டு:

                “தமிழில் "எல்லாம்' இருக்க, இது எதுக்கு ஜப்பானிய சரக்கு...?”

                இந்த வாதத்தில் இருக்கிற உண்மையை மறுப்பதற்கில்லை. தமிழில் உலகு போற்றும் ஒன்றே முக்கால் வரி "திருக்குறள்' இருக்கிறது. ஏன்... ஒற்றை வரியில் வாழ்வியல் தத்துவத்தைச் சொன்ன "ஆத்திச்சூடி' இருக்கிறது. இதிலில்லா வேறென்ன ஈர்ப்பு ஹைக்கூவில் இருக்கிறது...? என்று கேட்கலாம்.

                "பிறநாட்டு கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...' என்று பாரதி வெறுமனே பாடவில்லை. அதற்கான வரவுப் பாலமாகத்தான் வசன கவிதை (ஊழ்ங்ங் ல்ர்ங்ம்), சிறுகதை (நட்ர்ழ்ற் ள்ற்ர்ழ்ஹ்), கேலிச் சித்திரம் (இஹழ்ற்ர்ர்ய்) என பல புது வகைகளை அறிமுகம் செய்தது போலவே, தமிழில் ஹைக்கூ கவிதை களையும் மகாகவி பாரதி அறிமுகம் செய்தார்.

                "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல், ஜப்பானிய கவிதையில் விஷேசத் தன்மை' என்று சிலாகித்துப் பாராட்டும் பாரதியார், "ஒரேயடியாய் கவிதை சுருங்கி விடுதலும் நல்லதன்று' என்கிறார்.

                இவ்விரு கருத்துக்களையும் மனதில் கொண்டே, தமிழில் ஹைக்கூ வேர்ப்பிடித்து இன்றைக்கு வளர்ந்து நிற்கின்றன.

                இன்னொரு வாதம். "17 அசை களோடு எழுதப்படுகிற ஜப்பானிய மரபுப் பாவகையான ஹைக்கூ, தமிழில் சாத்திய மில்லை' என்பதாகும்.

                இதற்கு கவிக்கோ அப்துல்ரகுமான் தருகிற பதிலே சரியானது, போதுமானதுங் கூட.

                "தமிழில் ஹைக்கூ எழுதுகிறபோது, அதன் எல்லா மரபுகளையும் தூக்கிக் கொண்டு வர வேண்டியதில்லை. ஜென் பார்வையில் தான் நாமும் இந்த உலகத்தைப் பார்த்தாக வேண்டும் என்று கட்டாயமில்லை' (புல்லின் நுனியில் பனித்துளி, பக்.7).

                எந்த ஒரு கவிதை வடிவமும் அந்த மொழியின் சிறப்பையும், வாழும் மனிதர்களின் பண்பாட்டுக் கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டு எழுதப்பட்டால் மட்டுமே உயிர் வாழ முடியும்.

                "ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளில் காதல், அரசியல் கூடாது'. இந்தக் கருத்தை "கலை கலைக்காகவே' என்கிற கூட்டம் உறுதியாய் பிடித்துக் கொண்டது.

                ஜப்பானிய ஹைக்கூ கவிதை களிலேயே காதலும், அரசியலும் பாடு பொருளாக எழுதப்பட்டுள்ளன. மேலோட்டமாக வாசித்துவிட்டு சொல்லப் படுகிற இப்படியான கருத்துகளில் துளியும் உண்மையில்லை.

                இவர்களின் ஆதங்கம் உண்மையில் ஹைக்கூ கவிதைகள் மீதா, அல்லது எல்லோரும் எழுத வந்துவிட்டார்களே என்கிற உள்எரிச்சலின் பொருட்டா என்கிற கேள்வி இப்போதும் எனக்குள் உண்டு.

                "வார்த்தைகளே கவிதை, போதனை செய்வதே கவிதை, புலம்புவதே கவிதை, புரியாமல் புதிராக எழுதுவதே கவிதை என்று தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ்க் கவிதையில் ஹைக்கூ ஒரு ஒழுங்கைக் கொண்டு வரக்கூடும்' (கணையாழி ஹைக்கூ சிறப்பிதழ் மார்ச் 1991) என்று எழுத்தாளர் மாலன் எழுதிய நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதே, இன்றைய தமிழ்க் கவிதையில் ஏற்பட்டுள்ள செறிவிற்கு காரணம்.

                தமிழில் இன்றைக்கு ஹைக்கூ கவிதைகள் ஒற்றை அடையாளத்தோடு நின்றுவிடவில்லை.

                அதன் அடுத்தடுத்த வகைகளான சென்ட்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன் என்பன வற்றோடு, தமிழ் கவிஞர்களின் தொடர் முயற்சிகளில் லிமரிக் சென்ட்ரியு என்கிற புது அவதாரமும் எடுத்துள்ளன.

                இச்சூழலில் அதிரடியாய் கருத்து சொல்ல வருபவர்கள் தடாலடியாய் கூறுவது: "தமிழில் இதுவரை ஹைக்கூ கவிதைகளே எழுதப்படவில்லை'.

                இக்கூற்றின் பொய் முகத்தைத் தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளை வாசித்து வரும் எவரும் புறந்தள்ளி விடுவர்.

                இத்தகைய கருத்தினை முன் வைப்பவர்கள், வெகுசன இதழ்களில் வெறும் துணுக்குகளாக வருகிற கவிதைகளை ஹைக்கூ என்று நினைத்து ஏமாந்து போவதோடு, மற்றவர்களையும் அவ்வாறே ஏமாற வழி காட்டுகின்றனர்.

                இன்றைக்கு ஒன்றாய், நூறாய் மலர்கிற ஹைக்கூ நூல்களில் எத்தனை கவிதை நூல்களை வாசித்திருக்கின்றார்கள் என்பதை திறந்த மனதோடு விவாதிக்க முன்வர வேண்டும்.

                இவர்கள் அறிவுமதியின் "புல்லின் நுனியில் பனித்துளி'யையோ, கவிஞர் மித்ராவின் "குடையில் கேட்ட பேச்சை' யோ, சிபியின் "மகரந்த ரகசியங்களை'யோ, கவினின் "பட்டாம் பூச்சியின் நிழல்', பாரதி ஜிப்ரானின் "மழை தினம்...' இவற்றைப் படித்துவிட்டுச் சொல்லட்டும்.

                தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதப்படவில்லை என்று அரைகுறை விமர்சனங்களால் பயனேதும் விளைவ தில்லை. நேரான - சரியான - அக்கறையான விமர்சனங்களை எப்போதும் உள்வாங்கிக் கொண்டே ஹைக்கூ கவிஞர்கள் இயங்கி வருகிறார்கள்.

                கவிக்கோ அப்துல்ரகுமான் சென்னையில் நடைபெற்ற "ஹைக்கூ கவிதைத் திருவிழா'வில் மனம் மகிழ்ந்து பகிர்ந்ததைப் போன்றே "தமிழில் வானம் பாடிகளுக்குப் பிறகு கவிஞர்கள் ஒரு இயக்கமாய் கூடி, உற்சாகத்தோடு இயங்கி வருவது இந்த ஹைக்கூ கவிதைகளில் தான்' என்பதை இன்றைக்கு காலம் கண்கூடாய் கண்டு வருகிறது.

                பெருகியோடும் காட்டாற்று வெள்ளத்தில் எல்லாமும் தான் சேர்ந்து வரும். இது எல்லா இலக்கிய வகைமை களுக்கும் பொருந்தும். ஹைக்கூவிற்கு மட்டுமென்ன விதிவிலக்கா?

                "சரியானது வென்றே தீரும்' என்பது தான் காலநியதி. தமிழில் புது அழகும், செறிவும் பெற்று மிளிர்ந்துவரும் ஹைக்கூ கவிதைகள் பலரையும் எழுதத் தூண்டியதே கூட, நல்ல சமூக மாற்றத்திற்கான முன் விளைவாகப் பார்க்கின்றேன்.

                நேற்று அஞ்சலில் வாசல் வந்த "அருவி' (இதழ் எண்.16) ஹைக்கூ சிறப்பிதழில் (2013) அட்டையிலேயே மனசைப் பற்றியெரியச் செய்தது காவனூர் ந.சீனிவாசனின் ஹைக்கூ ஒன்று.

                "சந்தன மணங்களைச் சுமந்து

                காற்று வந்து சொன்னது

                காடு பற்றி எரிவதை'

                இன்னும் புத்தெழுச்சியோடும் உற்சாகத்தோடும் தொடரும்... குக்கூப் பறவைகளின் பாட்டுப் பயணம்.

Pin It