குறிஞ்சி

                திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று தங்க நேர்ந்தது பாக்கியமா துர்பாக்கியமா? கிரிவலத்துக்காக பேருந்து நிலையங்கள் மாற்றிவிடப்பட்டு, ஆட்டோக் காரர்களும், சிறு கடைக்காரர்களும் "அடித்த தொகையில்' "ரெண்டு அண்ணாமலை'யை விலைக்கு வாங்கலாம்!

                எம்மாங் கூட்டம்! எம்மாங் கூட்டம்! இதில் என்ன வேடிக்கையென்றால் தி.மலையின் உள்ளூர் வாசிகள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் "இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல்' "சொகம்மா' இருக்க என்னைப் போன்ற எதிலும் பட்டுக் கொள்ளாத லாட்ஜ் வாசிகளுக்குத் தான் அண்ணாமலையார் அருளும் இரவு உணவும் கிடைக்கவேயில்லை!

                கிரிவலம் சென்ற பக்த கோடிகள்(!) உரத்த குரலில் சொல்லிச் சென்ற "அரோகரா' என்னைப் பார்த்து சொன்னதாகவே இருந்தது! மனசுக்கு ஆறுதலாய் தங்கப்பதக்கம் வசனம்.

                “ஒரு நாளைக்கு சாப்புடலன்னா உயிரா போயிடும்?” சர்தாம்பா! நேக்கு ஒரு சந்தேகம்! ராமேஸ்வரம், கும்மோணம், திருணாமல... கஞ்சிவரம் போன்ற "புனித ஸ்தலங்களில்' ரேஷன் கார்டுடனும் வாக்காளர் அட்டையுடனும் வாழ்கிற ஜீவராசிகளுக்கு ஏதாவது புண்ணியம் அட்லீஸ்ட் சின்ன சின்ன சந்தோஷ சங்கதி ஏதுமுண்டா? அந்தந்த புனிதப் பிரதேச வாசகர்கள் தங்கள் அனுபவங்களை எழுதலாம்!

முல்லை

                தமிழில் பாமரனுக்கு அப்புறம் சூடு சொரணையுடன் எழுதுகிற ஓர் ஆள் கெடச் சுட்டார்ப்பா... கெடச்சுட்டார்ப்பா!

                கவின்! பாரதிராஜா வாய்ஸ்ல சொல்லணும்னா... “யார்யா இந்த ஆளு... எங்கய்யா ஒளிஞ்சிகிட்டு இருந்தான்...”

                "ஒரு டீ சொல்லுங்கள்' கவின் பொழிந்துள்ள புத்தம் புது சென்ரியூ-க்களின் தொகுப்பு. அப்பப்பா...! கிறிஸ் கேய்ல்-ன் 20-20 செஞ்சுரி போல - அரசியல், ஆன்மீகம், சினிமா, இலக்கியம் என எல்லாத் திசைகளிலும் சிக்ஸராக விளாசுகிறார் கவின்!

பதச்சோறு பார்க்கலாமா...?

“அழகு நிலையம்

ஹேங்கரில் தொங்குகிறது

தாலி”

நம்ம கமெண்ட்:

“சர்தாம்பா

பொருளிலா

இருக்கிறது

புனிதம்”.

“ஒரு பக்கம் பச்சை

மறு பக்கம் மஞ்சள்

நர்தனமாடும் சிவப்பு”

“சீட்டுங்க

தோழர்

சீட்டு”

“அடக்கவிலை 17 ரூபாய்

விற்பனைவிலை 100 ரூபாய்

பதிப்பாளர் = வியாபாரி”

“இந்த புத்தகத்தின்

விலையும் ரூ.100

தான்”

“தோழி தோழி என்றே ஏய்த்து

உரசத் துவங்குகிறான்

இலக்கியப் பொறுக்கி”

“அவனா... இல்ல

இவனா...

எவனாயிருக்கும்?”

சத்தியமாக இதப்படிச்சிட்டு யாரும் வாங்கப் போறதில்ல ஆனாலும் நூல் விவரம்:

“ஒரு டீ சொல்லுங்கள்”

கவின்

விலை ரூ.100-

வெளியீடு - பதியம்

252, பல்லடம் சாலை,

திருப்பூர் -4

போன் : 0421 2213593

கவினை பாராட்ட / திட்ட : 9942050065

மருதம்

                மிக சுவாரஸ்யமான நண்பர் ஒருவரை சந்தித்தேன்! இணைய உலகில் பல்வேறு சாதனைகளைச் செய்துவிட்டு "சய்லேண்ட்டாக' இருக்கும் அவர் பெயர் முனைவர் மு.இளங்கோவன்.

                கையளவு IPAD-ல் (actually அது கைபேட்) பல்வேறு நூல்களின் PDF வடிவங்கள். "இணையம் கற்போம்' என்ற நூலின் வழியாக இணைய உலகுக்குள் நுழையும் வழிகளை – Facebook, Blogs, Twitter - என பாதைகளைக் கண்டு சொல்லும் நன்னம்பிக்கை முனை.

                இணையத்தில் இணைய விருப்ப முள்ளவர்கள் இந்த நூலை பையில் / கையில் வைத்திருங்கள். நண்பர் இளங்கோவனை தொடர்பு கொள்ள

> 9442029053

>இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நெய்தல்

கூடுகிறார்கள்

சித்திரைத் திருவிழாவில்...

கிரிவலப்பாதையில்...

மாமல்லபுரம் முழுநிலவு இரவில்...

குவாகத்தில்...

கலைகிறார்கள்

சிதறிக் கிடக்கின்றன...

ஒற்றைச் செருப்புகள்

காலி மதுப்புட்டிகள்

வெற்று சிகரெட் பெட்டிகள்

கசங்கி காய்ந்த மலர்கள்

சுருங்கி வீசிய ஆணுறைகள்

எச்சில் பருக்கைகளுடன் நெகிழித்தாள்கள்

தமிழனென்று சொல்லடா

தலை குனிந்து நில்லடா...!

சித்திரை நிலவுக்குள் நமுட்டு சிரிப்பூ

“மனுசக் குப்பை!”

“குப்பை மனிதர்” 

பாலை

                அகமதாபாத் நகரின் தாகம் தீர்ப்பது சபர்மதி நதி! மாநகரின் மய்யத்தில் வெள்ளிக் கோடாக ஓடும் நதியின் இரு கரைகளிலும் மிகச் சிறப்பான கான்கிரீட் சுவர்கள் அமைத்தும், ஆற்றினை ஆழப்படுத்தியும் நதி நீரை நல்லமுறையில் பயன்பாட்டுக்குட்படுத்தி வெற்றி கண்டுள்ளனர் குஜராத்தி சகோதரர்கள்!

                நம்ம ஊர் திருச்சியில் அகண்ட காவிரியின் நிலையைப் பாருங்க சார்! அந்தோ பரிதாபம்!

                மதுரையில் கள்ளழகர் ஆற்றில்(!) இறங்க வைகையிலிருந்து "போனாப் போவட்டும்' என்று கொஞ்சம் ஜலம் விட்டார்கள்!

                மருதக்காரவுகளுக்கு இப்போ செரம தசதான்! என்னண்ணே சொல்றீக!

                தென்பெண்ணையில், பாலாற்றில் மணல் கொள்ளையிடும் லாரித் திருடர்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களை விட அதிகமுங்கண்ணா!

                நீராதாரங்களை அழித்துவிட்டு "மினரல் வாட்டரிலா மிதக்கப் போகிறது தமிழனின் வாழ்க்கைப்படகு?'

                நதிகளெனும் செல்வங்களைக் கொள்ளையிடுபவர்களுக்கு எப்போதும் கிடைக்காது ஜெயம்!

கொசுறு:

“குழைந்து கொதிக்கும் பருப்பு

இணைந்து மிரட்டும் மிளகாய்

கிள்ளிப் போட்ட சாம்பார்”

                                                - அன்பாதவன்

Pin It