உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும் “சுஜாதா விருதுகள் -2013”இல் தமிழகத்தின் சிறந்த சிற்றிதழாக “கருக்கல் விடியும்” தேர்வு செய்யப் பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வெற்றியை சாத்திய மாக்கிய அனைவருக்கும் இதய பூர்வமான நன்றி. திருவாளர்கள் தமிழவன், கழனியூரன், அ.முத்துகிருஷ்ணன் ஆகியோர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். மொத்த புள்ளிகள் பத்து (3 ஷ் 10 = 30) என்ற அடிப் படையில் வழங்கிய புள்ளிகளைக் கொண்டு இறுதித் தேர்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழகத்தின் “கருக்கல் விடியும்” இதழும், இலங்கையின் “ஞானம்” இதழும் அதிக புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்ததால் இருவருக்கும் இவ்விருது பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது.

                விருதுகள் பரிசளிப்புவிழா 3.5.2013 வெள்ளி மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓரியண்ட் லாங்க்மேன் மேல்தளத்தில் நடைபெற்றது. கவிஞர் மனுஷ்யபுத்திரன் வரவேற்றார். தேர்வுக் குழுவிலிருந்து திருவாளர்கள் பாரதிமணி, கலாப்ரியா, அழகியபெரியவன், இமையம், அ.முத்துகிருஷ்ணன், இயக்குநர் ராம் உரையாற்றினார்கள். பரிசுகளை திருமதி சுஜாதா ரங்கராஜன் வழங்கினார். சிற்றிதழ் தேர்வு குறித்து அ.முத்துகிருஷ்ணன் பேசும் போது “கருக்கல் விடியும் சிறந்த சிற்றிதழாக தேர்வு செய்ய அநேக காரணங்கள் இருந்த போதும், அதில் வெளிவந்த கல்வி குறித்தான ஆயிசா நடராசனின் நேர்காணல் ஒன்றுக் காகவே கூட விருதுதரத் தகுதியானது என நாங்கள் கருதினோம். தனி வெளியீடாக தரவேண்டிய அளவு அதில் கல்வி சம்பந்தமான விஷயங்கள் ஆழ்ந்து பேசப் பட்டிருந்தது” என்று தெரிவித்தார். விருதினை உங்கள் அனைவரின் சார்பாக இதழாசிரியர் அம்ரா பாண்டியன் பெற்றுக்கொண்டார். இறுதியில் சுஜாதாவின் ஆளுமைகள் குறித்து திரு.பாரதி கிருஷ்ணகுமார் நீண்டதொரு உரை ஆற்றினார்.

Pin It